சூழ்நிலை இயல் என்பது இயற்கையின் அமைப்பையும், இயற்கை நிலைகளில் வாழும் உயிரிகளுக்கும், அவற்றின் சூழ்நிலைகளுக்குமிடையே உள்ள உறவுகளையும் அறிவதாகும். நிலம், பாறை போன்றவையும் சூழ்நிலையின் பகுதியாக அமைகின்றன. அனைத்து விலங்குகளும், நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தாவரங்களைச் சார்ந்துள்ளன. உயிரின உறவுகளை ஏற்படுத்தும் விளைவுகள் சூழ்நிலையில் இடம் பெற்றுள்ளன. ஒரு சமுதாயத்தில் பொதுவாகச் செயல்படும் உயிர்ச் சம நிலைத் தத்துவம் (biotic balance), உணவை உருவாக்குதல், பயன்படுத்தல் ஆகிய ஒழுங்கிற்கு, அவற்றிடையே உள்ள உறவு முறைகள் இன்றியமையாதவையாகும். வேறுபாடான உணவு உறவுகளாகிய, உணவுச் சங்கிலி (food chain). உணவு வலை (food web), சூழ்நிலைப் பிரமிடுகள் (ecological pyramids) முதலியவற்றைக் கொண்டு வாழ்க்கை வலையை அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு சமுதாயத்திலும் பல உணவுக் கோவைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும், ஒரு குறிப்பிட்ட கொன்றுண்ணியால் (predator) முடிவடையும். உணவுக் கோவையிலுள்ள தயாரிப்பவை, முதல், இரண்டு, மூன்றாம் நிலைத் தரத்திற்கேற்றவாறு ஓர் உறவு முறை உள்ளது. தயாரிப்பவை, நுகர்பவையின் உயிரி எடைக்கும், ஆற்றல் அளவுகளுக்கும் இடையே காணப்படும். இத்தகைய உறவு முறைகளை முக்கோணக் கோபுரங்களின் மூலம் விளக்கலாம். சூழ்நிலைக் கோபுரங்களை எண்ணிக்கைக் கோபுரம், உயிரி எடைக் கோபுரம், ஆற்றல் கோபுரம் எனப் பிரிக்கலாம். எண்ணிக்கைப் பிரமிடுகள். தயாரிப்பவையின் எண்ணிக்கைக்கும் முதல், இரண்டு, மூன்றாம் நிலை நுகர்பவையின் எண்ணிக்கைக்கும் உள்ள உறவு முறையை எண்ணிக்கைப் பிரமிடாக விளக்கலாம். சூழ்நிலைத் தொகுப்பில், முதல் நிலைத் தயாரிப்பவையின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். அடுத்து, முதல் நிலை நுகர்பவையின் எண்ணிக்கையும், இரண்டு, மூன்றாம் நிலை நுகர்பவையின் எண்ணிக்கையும் அமையும். தயாரிப்பவையிலிருந்து படிப்படியாக நுகர்பவையின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். எண்ணிக்கைப் பிரமிடின் அடிப் பகுதி பெரும் எண்ணிக்கையில் உள்ள தயாரிப்பவற்றைக் குறிக்கும். எடுத்துக் காட்டாக. ஒரு புல்வெளி அல்லது பயிர்ச் சூழ்நிலைத் தொகுப்பிலுள்ள தயாரிப்பவையாகிய புற்களும். பயிர்களும் பிரமிடின் அகன்ற அடிப் பகுதியாக அமையும், எண்ணிக்கையில் முதல் நிலை நுகர்பவையாகிய வெட்டுக் கிளி, முயல் முதலியன இருக்கும். புல்வெளிச் சூழ்நிலைத் தொகுப்பின் உச்சியில், உணவுக் கோவையில் கொன்றுண்ணிகளான புலிகள் குறைந்த எண்ணிக்கையில் காணப் படும். பயிர்ச் சூழ்நிலைத் தொகுப்பில் இரண்டு, மூன்றாம் நிலை நுகர்பவவையாகிய தவளை, பாம்பு முதலியவை எண்ணிக்கையில் படிப்படியாகக் குறைந்து காணப்படும். சில சூழ்நிலைத் தொகுப்பில் மேற்கூறியவற்றிற்கு முற்றிலும் மாறுபட்ட அமைப்புக் காணப்படும். சான்றாக, மரச் சூழ்நிலைத் தொகுப்பில், முதல் நிலைத் தயாரிப்பவையாகிய மரங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். அடுத்து, முதல் நிலை நுகர்பவையாகப் பறவைகளும், அவற்றின் மீது சாறுண்ணிகளாக வாழும் இரண்டாம் நிலை நுகர்பவையாகிய பூச்சிகளும் மிகு எண்ணிக்கையில் அமையும். தயாரிப்பவற்றின் எண்ணிக்கை குறைவாகவும் முதல், இரண்டாம் நிலை நுகர்பவை படிப்படியாக எண்ணிக்கையில் மிகுதியாகவும் அமைந்துள்ளன. இந்த அமைப்பிற்குத் தலை கீழ்ப் பிரமிடு என்று பெயர். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> உயிரி எடைப் பிரமிடு. பல உயிரின உணவு மட்டங்களிலுள்ள உயிரி எடைகளுக்கிடையே ஓர் உறவு முறை அமைந்துள்ளது. புல்வெளி அல்லது மரம் போன்ற தரைச் சூழ்நிலைத் தொகுப்பில் அனைத்து உயிரின மட்டங்களை விடத் தயாரிப்பவையின் உயிரி எடை மிக அதிகமாக இருக்கும். புல்வெளிச் சூழ்நிலைத் தொகுப்பில் தயாரிப்பவையிலிருந்து மேல் மட்டக் கொன்றுண்ணி வரை, எண்ணிக்கையும், உயிரி எடையும் குறைந்து கொண்டே வரும். மரச் சூழ்நிலைத் தொகுப்பில் தயாரிப்பவையிலிருந்து, நுகர்பவை வரை எண்ணிக்கை மிகுந்து கொண்டே போனாலும், அவற்றின் உயிரி எடை குறைந்து கொண்டே வரும். முதல் நிலை நுகர்பவையாகிய பறவைகளின் உயிரி எடையை விட, சாறுண்ணிகளாக வாழும் இரண்டாம் நிலை நுகர்பவையான பூச்சிகள், எண்ணிக்கையில் மிகுதியாக இருப்பினும், உயிரி எடையில் குறைவாகவே இருக்கும். நீர்ச் சூழ்நிலைத் தொகுப்பில் டயாட்டம்கள் (diatoms), தாவர மிதவை உயிரிகள் (phyto-plankton) ஆகிய முதல் நிலைத் தயாரிப்பவையின் உயிரி எடை அவற்றை உண்ணும் முதல் நிலை நுகர்பவையாகிய தாவர ஊனுண்ணியை விடக் குறைவாகும். இரண்டாம் நிலை நுகர்பவையாகிய, ஊனுண் மீன்களின் உயிரி எடை, ஏனைய உயிரின மட்டங்களை விட மிகுதி. இத்தகைய உணவுக் கோவையில் உள்ள உயிரினங்களின் உயிரி எடைகளுக்கிடையே உள்ள உறவு முறையைத் தலை கீழ்ப் பிரமிடு வடிவில் விளக்கலாம். ஆற்றல் கோபுரம். சூழ்நிலைத் தொகுப்பிலுள்ள முதல் நிலைத் தயாரிப்பவை சூரிய ஒளியின் ஆற்றலை உறிஞ்சி, வேதி ஆற்றலாக மாற்றும். இந்நிலை வேதி ஆற்றல் உணவுக் கோவையில் தயாரிப்பவையிடமிருந்து, முதல், இரண்டாம் நிலை நுகர்பவை வழியாக, உயர் நிலை ஊனுண்ணிகள் வரை செல்லும். புல்வெளிச் சூழ்நிலைத் தொகுப்பில், குறிப்பிட்ட ஓரிடத்தில், குறிப்பிட்ட கால அளவில், முதல் நிலைத் தயாரிப்பவையாகிய புற்கள் அதிக சூரிய ஒளியைப் பயன்படுத்துகின்றன. ஒரு குறிப்பிட்ட பரப்பளவிலுள்ள நன்னீர்ச் சூழ்நிலைத் தொகுப்பில் மிதவை உயிரிகள் அவற்றை உண்டு வாழும் தாவர ஊனுண் மீன்களை விடப் பெருமளவில் ஆற்றலைச் சேமித்து வைக்கின்றன. ஓராண்டில், தாவர ஊனுண் மீன்கள் குறைந்த அளவில் ஆற்றலைப் பயன்படுத்துகின்றன. சூழ்நிலைத் தொகுப்பில் ஆற்றல் ஒழுக்கு (energy flow) ஒரு வழிப் பாதையாகக் காணப்படுகிறது. சூரியக் கதிர் வீச்சிலிருந்து ஆற்றல் பெறப்பட்டுச் சூழ்நிலைத் தொகுப்பில் தொடங்குகிறது. சூரிய ஆற்றல் வேதி ஆற்றலாகத் தயாரிப்புகளில் மாற்றப் படுகிறது. இவ்வாற்றல், அடுத்துள்ள உணவு ஊட்ட நிலைக்கு (trophic level) வெப்ப இயக்க விதிகளுக்குட்பட்டு நிகழ்கிறது. இதன் காரணமாக, ஆற்றல் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்றப்படும் போது, சிறு அளவில் ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது. பல்வேறு பட்ட உணவு வாட்ட நிலைகளில் ஏற்படும் ஆற்றல் மாற்றம் உயிரின ஆற்றல் எனப்படுகிறது. —கு. பத்மநாபன் நூலோதி. E.P.Odum, Ecology, Holt Rinehart and Winston, New York, 1963.