இராமகிருட்டிண ஐயர், என்
irāmakiruṭṭiṇa aiyar, eṉ
இவர் வடார்க்காடு மாவட்டம் ஆரணியில் 25.9.1905–இல் பிறந்தார்.
இவர் வடார்க்காடு மாவட்டம் ஆரணியில் 25.9.1905–இல் பிறந்தார். இவர் தந்தையார் அரசாங்கத்தில் கோட்டாட்சியராகப் (Deputy Collector) பணிபுரிந்தார். இவர் தந்தையார் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டமையால் இவரது பள்ளிப் படிப்பும் பல்வேறு இடங்களில் அமைந்தது. அன்னிபெசண்டு அம்மையாரது இயக்கத்தின்போது இவர் கடலூர் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது புதுச்சேரியில் வாழ்ந்த அரவிந்தர், பாரதியார் போன்ற புரட்சியாளர்களின் தாக்கம் இவருக்கு ஏற்பட்டது. இவர் 1922–இல் மதுரையில் கல்லூரிப் படிப்பு மேற்கொண்டபோது காந்தியடிகளின் சொற்பொழிவைக் கேட்க நேர்ந்தது. அன்று முதல் காந்தியத்தில் இவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. பின்னர்ச் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் சேர்ந்து கணிதத்தில் பி.ஏ. ஆனர்சு பட்டம் பெற்றார். 1929–இல் சட்டத்தில் பட்டம் பெற்ற இவர் 1931–இல் சென்னையில் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார். இவர் 1926–இல் சட்டக் கல்லூரியில் பயின்ற போதே சுந்தரவல்லி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் சென்னையில் படித்தபோது புறநகர்ப் பகுதியாகிய ஆதம்பாக்கத்தில் தங்கி இருந்தார். அதனால், இவரது மனம் கிராமச் சூழலைப் பெரிதும் விரும்பியது. 1926–இல் இவர் காந்தியடிகளின் கொள்கைகளைப் பரப்பப் பொதுசன ஊழியர் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். தீண்டாமையொழிப்பு, முதியோர் கல்வி, கிராமப்புறத் துப்புரவு, ஏழைகளுக்கு மருத்துவ உதவி போன்ற சமூகநலத் தொண்டுகளைத் தம் தோழர்களுடன் சேர்த்து மேற்கொண்டார். விலங்குகளுக்குக் கொடுமை செய்தல், அவற்றைப் பலியிடுதல் முதலியவற்றைத் தடுப்பதிலும் முனைந்தார்.
தான் குடியிருந்த ஆதம்பாக்கம் பகுதியில் 1930–இல் ஒரு சிறிய மருத்துவமனையை ஏற்படுத்தினார். இவரும் இவர்தம் நண்பர் சிலரும் அங்கு வரும் நோயாளிகளைக் கவனித்துக் கொண்டனர். இத்தொண்டில் ஏறத்தாழ 15 ஆண்டுகள் இவர் தொடர்ந்து ஈடுபட்டிருந்தார். ஏழைகளின் அவல நிலையை உணர்ந்து கொள்வதற்கு இது இவருக்கு ஒரு நல்ல வாய்ப்பை அளித்தது. தொழுநோயால் துன்பப்படுவோருக்குத் தாமே மருத்துவம் புரிந்தார். அவர்களுடைய துன்பத்தில் தாமும் பங்கு கொண்டார். அந்நோயாளிகளுக்கு வாழ்க்கைத் தொழில், கல்வி, பொழுதுபோக்குக்குரிய நிகழ்ச்சிகள் முதலியவற்றை ஏற்பாடு செய்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் தொழுநோயாளிகளுக்குப் பல்வேறு மருத்துவ நிலையங்களை ஏற்படுத்தினார்.
இவர் 1927–இல் சென்னையில் நடந்த காங்கிரசு பேரியக்க மாநாட்டில் தொண்டராகப் பணியாற்றினார். 1941–42 ஆண்டுகளில் காந்தியடிகளின் தலைமையில் நடந்த தனிப்பட்ட சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் தீவிரப் பங்கு கொண்டார். அதனால், சிறைத்தண்டனையும் பெற்றார். காலஞ்சென்ற சி.என். முத்துரங்க முதலியார் இவருக்கு அரசியல் குரு ஆவார். 1950–1969 ஆண்டுகளில் தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியில் அமைப்பு வேலைகளை மேற்கொண்டார். இவர் சென்னைச் சட்டமன்ற உறுப்பினராகவும் (1952–1957) இந்தியப் பாராளுமன்றத்தில் மேலவை உறுப்பினராகவும் (1967–1972) இருந்துள்ளார். இவருக்குக் காந்தியடிகள் வகுத்த நிருமாணத் திட்டத்தில் (Constructive Programme) பேரீடுபாடு உண்டு. தொடக்கம் முதல் 1967 வரை மாநிலக் கதர்க் கழகத்தில் (State Khadi Board) பங்கு பெற்றார் 1954–1956–ஆம் ஆண்டுகளில் செங்கற்பட்டு மாவட்டத்தில் வினோபாபாவே தலைமையில் நடைபெற்ற பூதான இயக்கத்தில் பெரும் பணியாற்றினார். ஆதம்பாக்கத்தில் ஏறத்தாழ 40 ஆண்டுகளாகச் சிறந்த சேவை புரியும் செய லட்சுமி தாய்–சேய் நல நிலையத்தை உருவாக்கி வளர்ப்பதில் முனைந்து செயற்பட்டார். 1959–இல் ஆலந்தூர் ஏ.சே.எசு நிதியில் சேர்ந்து அங்குள்ள மக்களுக்கு உதவி புரிந்ததுடன் ஒரு சிறந்த மேல் நிலைப்பள்ளியையும் அந்நிதியின் சார்பில் தொடங்கி வைத்தார். பக்தவத்சலம் கல்வி அறக்கட்டளையில் அறங்காவலராக அதன் தொடக்கம் முதல் பணியாற்றினார்.
இவர் கருநாடக சங்கீதத்திலும் பெரிதும் ஈடுபட்டார்; கோடீசுவர ஐயரின் 72 மேளகர்த்தா இராகங்களில் தமிழ்ப் பாடல்கள் அமைவதற்கும் அவற்றை வெளிப்படுத்துவதற்கும் உதவியாக இருந்தார்.
இவர் அமைதியான இயல்புடையவர்; உண்மையான காந்தியவாதி; தற்பெருமை சிறிதும் இல்லாதவர்; அரசியல் விவாதங்களில் ஈடுபட்டபோதும் கோபமின்றி அமைதியாகப் பேசுபவர். காலஞ்சென்ற பெருந்தலைவர் காமராசர் அவர்களின் முழு நம்பிக்கைக்குரியவர். இவர் 1986 மார்ச்சு 6–ஆம் நாள் சென்னை மருத்துவமனையொன்றில் காலமானார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 94)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zqv6zfgq/
தமிழ்“இராமகிருட்டிண ஐயர், என்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zqv6zfgq/APA
Oliyon Research. (2026). இராமகிருட்டிண ஐயர், என். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zqv6zfgq/MLA
"இராமகிருட்டிண ஐயர், என்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zqv6zfgq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment