சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கனுள் இரண்டாவதாக எண்ணப் பெறுவது திருக்களிற்றுப்படியார் என்னும் நூலாகும். அதனை அருளிச் செய்தவர் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார். திருவியலூரில் எழுந்தருளியிருந்த உய்யவந்த தேவநாயனார் என்னும் சிவயோகி தம் மாணவராகிய திருவியலூர் ஆளுடைய தேவநாயனார் பொருட்டாகத் திருவுந்தியார் என்னும் நூலைச் செய்தார். அவர்பால் உபதேசம் மெய்யுணர்வு பெற்ற ஆளுடைய தேவநாயனார் ஒருமுறை திருக்கடவூருக்கு எழுந்தருளியபோது, அவ்வூரில் தம்மை வழிபாடு செய்த ஒருவரின் பக்குவத்தை உணர்ந்து அவருக்குத் தம்முடைய ஆசிரியர் பெயரைச் சூட்டி, தம் ஆசிரியர் அருளிய திருவுந்தியார் என்னும் மெய்ந்நூற் பொருளையும் அறிவுறுத்திச் சென்றார். ஆளுடைய தேவர்பால் உபதேசம் பெற்ற திருக்கடவூர் உய்ய வந்த தேவர் திருவுந்தியாரின் பொருளையே தம் பொருளாசுக் கொண்டு விரித்துக் கூறும் திருக்களிற்றுப் படியார் என்னும் வழிநூலைச் செய்தருளினார். திருக்களிற்றுப்படியாரில் உள்ள இரண்டு பாடல்கள் (3,96) நூலாசிரியரையும் அவருக்கு உபதேசம் செய்த குரு பரம்பரையையும் குறிப்பிடுகின்றன. இவர் நூல் செய்த காலத்து இவர் கீழ்ச்சாதி என்றும் இவரது நூலைக் கைக்கொள்ளலகாகாது என்றும் சிலர் சொல்ல, சிறிது பக்குவராயுள்ளவர்கள் அந்த நூலைத் தில்லை நடராசப் பெருமான் திருமுன் உள்ள பஞ்சாக்கர்ப் படியிலே வைத்தார்கள். அந்தப் படியிலே செய்திருந்த கல் யானை அந்நூலைத் துதிக்கையாலே எடுத்து எல்லாவற்றிற்கும் மேற்படியிலே கொண்டு போய் வைத்தது. ஆகையால் அந்நூல் அப்பெயர் பெற்றது. இவ்வரலாறு பழங்கால முதல் வழங்கி வருகிறது. திருக்கடவூர் உய்ய வந்த தேவர் தமது நூலில் சைவ சமய நால்வர் வரலாற்று நிகழ்ச்சிகளையும், கண்ணப்பூர் சண்டீசர், அரிவாள்தாயர், திருக்குறிப்புத் தொண்டர், மங்கையர்க்கரசியார், மூர்க்கர், மூர்த்தியார் முதலிய நாயன்மார் செயல்களையும் எடுத்துக்காட்டி விளக்கியுள்னார். ஆதலின், பெரிய புராணம் பாடிய சேக்கிழார் காலத்தை ஒட்டி இவர் வாழ்ந்தவராதல் வேண்டும் என்பது தெரிகிறது. எனவே இவரது காலம் கி.பி. 12–ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளுதல் பொருந்தும். திருக்களிற்றுப்படியார் பாடப்பெற்ற காலம் கி.பி. 1177 என்பது அறிஞர் துணிபு. இவர் திருவுந்தியாரிலுள்ள சொற்றொடர்களை அவ்வாறே எடுத்தாண்டு அவற்றின் பொருளை விளக்கியுள்ளார்; திருக்குறட்பாக்களையும் திருவாசக அடிகளையும் பொன்னே போல் போற்றி அமைத்துக் கொண்டுள்ளார். நால்வர் அருட்செயல்களையும் நாயன்மார் அருள்வாழ்க்கைகளையும் அமைத்துப் பாடியுள்ளார். அடியார் தொண்டுகளை மெல்வினை, வல்வினை என்று பிரித்து இவர் விளக்கியிருக்கும் முறை தனிச் சிறப்புடையதாகும். ஆ.ஆ.