சால்மன்
cālmaṉ
இது சால்மோனிடே என்னும் மீன் குடும்பத்தைச் சார்ந்ததாகும்.
இது சால்மோனிடே என்னும் மீன் குடும்பத்தைச் சார்ந்ததாகும். இக்குடும்பத்தில் சால்மன் (salmon), டிரவுட், கிரேலிங், ஸ்மட்ஸ் போன்ற மீன்கள் அடங்கும். பசிபிக் பெருங்கடல் சால்மன் மீன், ஆன்கோரிங்கஸ் என்னும் பேரினத்தைச் சார்ந்தது. ஆன்கோரிங்கஸ் என்ற சொல் ரஷிய மொழி வழியாகும். வட அமெரிக்காவில் அமெரிக்கர்களின் குடியேற்றத்திற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே சைபீரியா, அலாஸ்கா போன்ற இடங்களில் காணப்பட்ட இம்மீன்களின் அமைப்பினால் ரஷியர்கள் சால்மன் எனப் பெயரிட்டனர்.
சால்மன் மீனின் வாழ்க்கை முறை மிகவும் எளிமையாகக் காணப்படுகிறது. கடலில் வாழும் இம்மீன் இனப் பெருக்கம் செய்ய நன்னீர் நிலைகளை நாடிச் செல்கிறது. இச்செயல் ஓர் உள்ளுணர்வுத் தூண்டுதலால் நிகழ்கிறது. ஆற்றின் வேகத்தையும், நீர் வீழ்ச்சியின் வேகத்தையும் பொருட்படுத்தாது எதிர்த்து நீந்தி, ஆறு உற்பத்தியாகிற பகுதியைச் சென்றடைந்து, அதன் மென்மையான நீரோட்டத்தில், நீரின் அடிப்பரப்பின் மணலிலோ, கற்களின் குவியலிலோ கூடு கட்டி முட்டைகளை இடுகிறது. முட்டையிட்ட பின்பு அல்லது கடல் நோக்கித் திரும்பிச் செல்கின்ற பயணத்தில் இறந்து விடுகிறது. நீர் வீழ்ச்சிகளைக் கடந்து செல்வதற்குத் தன் ஆற்றல் அனைத்தையும் பயன்படுத்திக் குதித்துத் தாவி நீந்திச் செல்லும் வல்லமையுடையது.
உலகில் சால்மன் மீன் வகைகள் வட அட்லாண்டிக் பெருங்கடல, வட பசிபிக் பெருங்கடல் ஆகிய இரு இடங்களில் மட்டுமே காணப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியாவிலிருந்து, வட அமெரிக்காவில் அலாஸ்கா பகுதி வரையிலும், ஆசியா கண்ட சைபீரியா நாடு வரை பரவியுள்ள பசிபிக் பெருங்கடல் பகுதியிலும், பசிபிக் சால்மன் மீன்கள் காணப்படுகின்றன. வட அமெரிக்காவின் கிழக்குக் கரையோரப் பகுதியிலிருந்து, ஐரோப்பிய நாடுகளின் மேற்குப் பகுதி வரை பரவியுள்ள வட அட்லாண்டிக் பெருங்கடலில் அட்லாண்டிக் சால்மன் மீன் வகைகள் வாழ்கின்றன. இவ்விரு பெருங்கடல் பகுதிகளிலும் மித வெப்பச் சூழ்நிலைக்கேற்றவாறு நீரின் தன்மை குளிர்ச்சியாக இம்மீன்கள் வாழ்வதற்கேற்ற வகையில் உள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடல் சால்மன் மீன்கள் மெய்லி, புதிய ஹாம்சயர், வெர்மான்ட், கனடா நாட்டின் வடபகுதி ஏரிகள் போன்ற உள்நாட்டு நன்னீர் நிலைகளில் தேக்கப்பட்டு, நிலைத்து இனப் பெருக்கம் செய்து வாழ்கின்றன. இதனால், சால்மன் மீன்களின் கடல் நீர் செல்கின்ற தன்மை தடைப்பட, அவை நன்னீர் நிலைச் சூழல் வாழ்க்கையை மேற்கொள்கின்றன.
சால்மன் மீன் இலையுதிர் காலத்தில் கடலிலிருந்து தன்னுடைய நன்னீர்ப் பயணத்தை இனப் பெருக்கம் செய்வதற்காகத் தொடங்குகிறது. அப்பயண முடிவில் அமைதியான ஆனால், வேகமான நீரோட்டம் ஏற்படுத்தும் ஆக்சிஜன் கரைந்துள்ள ஆழம் குறைந்த கூழாங்கற்களின் பரப்பையோ, மணற் பரப்பையோ கூடு கட்டி முட்டையிடத் தேர்ந்தெடுக்கிறது. அவ்விடத்தில் வால் துடுப்பின் சுழற்சியால் கற்களையும், மணலையும் விலக்கிப் பள்ளம் ஏற்படுத்திக் கூடு கட்டுகிறது. இக்கூட்டின் குறுக்களவு 5—6 அடி விட்டமுடையதாகவும், தூய்மையாகவும் தென்படும்.
ஒவ்வொரு பெண் சால்மன் மீனும் சுமார் 10,000 சிவப்பு நிறமுடைய சிறிய பட்டாணி அளவுள்ள கோள வடிவ முட்டையிடுகிறது. பின்பு, ஆண் சால்மன் மீன் அம்முட்டைகளின் மீது விந்து தெளித்துக் கருவுறச் செய்கிறது. ஒவ்வொரு 5000 முட்டைகளுக்கு 50 முட்டைகள் வீதம் பொரிந்து, இளம் மீன் குஞ்சுகள் வெளி வருகின்றன. பெண், ஆண் சால்மன் மீன்கள் முறையே முட்டையிட்டுக் கருவுறச் செய்த பின்பு, செதில்கள் நிறமிழந்து, தோலின் தன்மை மாறி, துடுப்புகள் சிதைந்து இறக்கின்றன. இந்நிலையில் இம்மீன்கள் சுவையற்றனவாகவும் உண்பதற்கு ஏற்றனவாகவும் மாறிவிடுகின்றன.
முட்டையிலிருந்து 2—2½ மாதங்களில் இளம் குஞ்சு மீன், வயிற்றுப் பகுதியில் பெரிய கருவுணவுப் பையுடன் வெளி வருகிறது. இக்கருவுணவுப் பை மறைந்து, மீன் குஞ்சு மீன் உருப்பெற மேலும் இரண்டு மாத காலமாகும். மீன் குஞ்சுகள் முட்டைகளிலிருந்து வெளி வந்து, ஓராண்டு இந்நன்னீர் நிலைகளில் வாழ்ந்த பின்பு, உள்ளுணர்வுத் தூண்டலால் அவ்விடத்தை விட்டு வெளியேறுகின்றன. அப்போது, இம்மீன்கள் சுமார் ஐந்து அங்குல நீளமும், பிற சிறு மீன்களை உணவாக உட்கொள்ளும் தன்மையும் கொண்டுள்ளன. முட்டையினின்றும் வெளி வந்த இடத்தை விட்டு வெளியேறிய இம்மீன்கள், நீரோட்டத்துடன் செல்லும் வழியில், பல தடைகளைத் (நீர் மாசுபடுதல், கொக்கு, வாத்து, மீனுண்ணும் பாலூட்டி போன்ற எதிரிகள்) கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளமையால், ஒரு சில சால்மன் மீன்கள் மட்டுமே கடல் நீருக்கு வருகின்றன. இச்சால்மன் மீன்கள் எவ்வாறு கழிமுகத்தைக் கடந்து நீண்ட தொலைவிற்குச் செல்கின்றன என்பது புலனாகவில்லை.
வட பசிபிக் பெருங்கடல் பகுதி நாடுகளுக்கும், வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி நாடுகளுக்கும் மீன் பிடி தொழில் உள்ளமையால், இந்நாடுகளிலிருந்து பெருமளவில் இம்மீன்கள் ஏற்றுமதியாகி அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்றன. வளர்ந்து வரும் சமுதாயத்தில், தற்போது ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டி விடுவதால், இம்மீன்களின் நன்னீர்ப் பயணம் பெருமளவில் தடைப்படுகிறது. அதற்கேற்றவாறு, சால்மன் மீன்களின் நன்னீர்ப் பயணத்தின் போது, இம்மீன்களைப் பிடித்துச் செயற்கை முறைப் பண்ணைகளில் முட்டைகளையும், விந்தையும் திரட்டிக் கருவுறச் செய்கின்றனர். பின்பு கருவுற்ற முட்டைளில் தனிக் கவனம் செலுத்தி, மீன் குஞ்சுகளைப் பொரிக்கச் செய்கின்றனர். முட்டைகளையும், விந்தையும் திரட்டிய பிறகு அம்மீன்களை உண்கின்றனர்.
சினாக் சால்மன், சாக்கேயி சால்மன், வெள்ளிச் சால்மன், சிவப்புச் சால்மன், சம்சால்மன் போன்றவை வணிகச் சிறப்பு வாய்ந்தவையாகும். இந்தியாவில் நீலகிரி மலையிலுள்ள நன்னீர் நிலைக்கு 1867ஆம் ஆண்டு சென்னை ஆளுநராக இருந்த சர். வில்லியம் டென்னிசன் மூலம் ஐரோப்பிய நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட சால்மன் மீன் இனம் நன்கு நிலைத்து வளர்ந்து, இனப்பெருக்கம் செய்யவில்லை. இவ்வாய்வு வெற்றி பெறாமைக்கு, அம்மீனினச் சினைச் செல்களைப் பனிக் கட்டி மூலம் கொண்டு வந்ததும், நீலகிரி மலையில் காணப்பட்ட வேறுபட்ட சூழ்நிலை மண்டலமும் காரணம் ஆகும். —பா. வேல்முருகன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 138)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zmwkc2xs/
தமிழ்“சால்மன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zmwkc2xs/APA
Oliyon Research. (2026). சால்மன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zmwkc2xs/MLA
"சால்மன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zmwkc2xs/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment