இருபதாம் நூற்றாண்டு மொழியியல்
irupatām nūṟṟāṇṭu moḻiyiyal
மொழியில் கால ஒட்டத்தில் நிகழும் மாற்றங்களை விளக்குவதைக் கருப்பொருளாகக் கொண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு மொழியியல் இயங்கி வந்தது.
மொழியில் கால ஒட்டத்தில் நிகழும் மாற்றங்களை விளக்குவதைக் கருப்பொருளாகக் கொண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு மொழியியல் இயங்கி வந்தது. வேறு முறையில் கூறப்போனால், மொழியின் வரலாற்றை விளக்குவதே மொழியியலாகக் கருதப்பட்டது. ஒரு குடும்பத்தைச் சார்ந்த மொழிகளை ஒப்பிட்டு ஆய்வதும் மொழியியல் ஆய்வாக அமைந்திருந்தது. இருபதாம் நூற்றாண்டுக்குமுன் வாழ்ந்த அறிஞர்கள் மொழிகளின் ஒப்பீட்டையும் அவற்றின் வரலாற்றையுமே மொழியியலாகக் கருதினார்கள்.
சமதளப் பார்வையும் வண்ணனை மொழியியலும்
சசூர் (Ferdinand de Saussure) என்ற அறிஞரின் நுழைவு, மொழியியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. வரலாற்றோடும் ஒப்பீட்டோடும் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்ட மொழியியலுக்கு வேறொரு கோணத்தை இவர் அறிமுகப்படுத்தினார். மொழியை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால் மொழியின் அமைப்பைச் சமதளப் (Synchronic) பார்வையில் பார்க்கின்ற அணுகுமுறையை முதலில் வளர்த்தாக வேண்டுமென்று இவர் வலியுறுத்தினார். மொழியின் வரலாற்றைப் புரிந்து கொள்ள முதற் கட்டமாக மொழியின் அமைப்பைச் சமதளப் பார்வையில் விளங்கிக் கொள்ள வேண்டும். பல்வேறு கால கட்டங்களாகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொரு காலகட்டத்தின் மொழி அமைப்பையும் முதலில் தெளிவுற விவரிக்க வேண்டும். இவ்வாறு மொழியை அணுகி விவரிக்கின்ற மொழியியல் ஆய்வை வண்ணனை மொழியியல் (Descriptive Linguistics) என்று மொழியியலார் குறிப்பிடுகின்றனர். பல்வேறு கால கட்டங்களில் விவரிக்கப்பட்ட மொழியின் அமைப்பை ஒப்பிடும்பொழுது மொழியில் ஏற்பட்ட மாற்றங்கள் நன்கு தெரியவருகின்றன. தருக்க அடிப்படையில் வண்ணனை மொழியியல் வரலாற்று மொழியியலுக்கு முந்தியது. வண்ணனை மொழியியல் அடிப்படையில் மொழியின் பல்வேறு காலகட்டங்களின் இலக்கணங்களைத்தாம் வரலாற்று மொழியியல் ஒப்பிட்டு, மொழியின் வரலாற்றை உருவாக்குகிறது. இக்கால மொழியியலின் முதன்மையான பாதிப்பு மொழியைச் சமதளப் பார்வையில் அணுகி மொழியின் அமைப்பை விளக்குவது.
பேச்சும் மொழிக்கிடங்கும்
மொழியின் தன்மையை விளக்கியதில் சசூரின் பங்கு முக்கியமானது. மக்கள் ஒவ்வொருவரும் பேசும்பொழுது தனித்தனியாக வெளிப்படுகின்ற மொழியின் வடிவைப் பேச்சு (Parole) என்றும், மொழியைப் பேசுகின்ற அனைவருக்கும் பொதுவாக அமைந்துள்ள மொழிக்கூறுகளை மொழிக்கிடங்கு (Language) என்றும் அவர் பாகுபாடு செய்தார். சமூகவியல் அறிஞர் தர்க்கைம் (Durkheim கி.பி. 1858–1917) என்பவரின் செல்வாக்குச் சசூரை மிகவும் பாதித்தது. சமுதாயச் செய்திகள் (Social facts) அறிவியல் செய்திகளைப் போன்றவை; ஆகையால் அவற்றை இயற்கை அறிவியல் செய்திகளைப் போன்றே அணுக வேண்டும். தனி மனிதனின்மேல் சமுதாயச் செய்திகளும் இயற்கை அறிவியல் செய்திகளும் புறக் கட்டுப்பாட்டை விதிக்கின்றன. தனி மனிதன் சமுதாயத்தின் உறுப்பினனாக இருக்கும் பொழுது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத்தான் நடக்கவேண்டும். இக்கட்டுப்பாடுகள் சமுதாயம் முழுமைக்கும் பொதுமையானலை. சசூர் மொழியைச் சமுதாயச் செய்திகளில் ஒன்றாக நோக்கினார். ஆகையால், சமுதாயம் முழுமைக்கும் பொதுமையான மொழிச் செய்திகளை ஆய்வதில் மொழி ஆராய்ச்சி தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சசூர் வலியுறுத்தினார். இந்நோக்குச் சசூருக்கு மொழியை முற்றிலும் மாறுபட்ட கோணத்திலும் புதிய கோணத்திலும் பார்க்க உதவியது.
இரட்டை அமைப்பு
அமைப்பு மொழியியல் (Structural Linguistics) உருவாகுவதற்கு வித்திட்டவர் சசூர் என்று கூறலாம். இவர் கூறிய கருத்துகள் பின்னர்ப் பலராலும் பல்வேறு வகைகளில் வளர்க்கப்பட்டன. அமைப்பு என்ற கருத்து இக்கால கட்டத்தில் வளர்ந்த மொழி ஆய்வுக்கு அடிப்படையாக அமைந்தது. மொழியின் முக்கியமான இயல்பு இரட்டை அமைப்பு (Duality of Structure); ஒன்று, ஒலியனியல் நிலையிலான அமைப்பு (Phonological Structure); மற்றொன்று, இலக்கண அமைப்பு (Grammatical Structure). ஒவ்வொரு நிலையும் அந்நிலையில் அலகுகள் (Units) கொண்டு விவரிக்கப்படுகின்றது. ஒலியனியல் நிலையில் ஒலியன் (phoneme) என்பது அடிப்படை அலகு. ஒலியனியலின் அமைப்பு ஒலியன்களைக் கொண்டு விவரிக்கப்படுகின்றது. இலக்கண நிலையில் உருபன் (Morpheme) என்பது அடிப்படை அலகு. இலக்கண அமைப்பு உருபன்களைக் கொண்டு விவரிக்கப்படுகின்றது. ஒலியன்களைக் கொண்டும் உருபன்களைக் கொண்டும் மொழியின் அமைப்பு விவரிக்கப்பட வேண்டும் என்றால், ஒலியன்களையும் உருபன்களையும் கண்டுபிடிக்கின்ற வழிமுறைகளை முதலில் வரையறுக்க வேண்டும்.
சேர்க்கைப் பரிமாணமும் இணைவுப் பரிமாணமும்
கண்டுபிடிக்கப்பட்ட ஒலியன்களையும் உருபன்களையும் கொண்டு எவ்வாறு ஒலியனியல் அமைப்பையும் இலக்கண அமைப்பையும் விளக்குவது? அமைப்பு என்றால் என்ன? அலகுகள் ஒவ்வொரு நிலையிலும் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்பை அமைப்பு என்று வரையறுக்கலாம். இரு பரிமாணங்களில் இத்தொடர்பை வரையறுப்பதாகக் கூறலாம். ஒன்று, சேர்க்கைப் (Paradigmatic) பரிமாணம்; மற்றொன்று, இணைவுப் (Syntagmatic) பரிமாணம்; மாற்றீட்டு முறையை (Substitution Method) அடிப்படையாகக் கொண்டு அலகுகளுக்கிடையிலான சேர்க்கைப் பரிமாணத் தொடர்பு வரையறுக்கப்படுகிறது. வா– என்பதன்முன் ல், ள், ழ் ஆகியவற்றைப் பயன்படுத்தி வால், வாள், வாழ் போன்ற சொற்களை உருவாக்கலாம். இங்கு, ல், ள், ழ் ஆகிய ஒலியன்கள் சொல்லின் இறுதியில் குறிப்பிட்ட ஒரு குழலில் தங்களுக்குள் ஒருவிதத் தொடர்பைச் சேர்க்கைப் பரிமாணத்தில் ஏற்படுத்திக் கொள்கின்றன. எல்லா ஒலியன்களும் எல்லா ஒலியன்களோடும் இணைந்து வருவதில்லை. சில ஒலியன்கள் சில ஒலியன்களோடு மட்டும்தாம் இணைந்து வரும் இவ்வாறு ஒலியன்கள் இணைந்து வருகின்ற முறைமை தான் ஒலியனியல் நிலையில் காணும் இணைவுப் பரிமாணத் தொடர்பு. பையன்களை என்ற சொல்லை இலக்கண நிலையில் எடுத்துக் கொண்டால். இச்சொல்லில் மூன்று உருபன்கள் இருக்கின்றன. அவை: பையன், கள், ஐ. பையன் என்ற உருபன் முதலில் வருகிறது. கள் என்ற உருபன் பையன் என்ற உருபனையும் ஐ, என்ற உருபன் கள் என்ற உருபனையும் அடுத்து வருகின்றன. இவ்வாறு வருகின்ற உருபன்கள் தங்களுக்குள் ஒருவிதத் தொடர்பை இணைவுப் பரிமாண நிலையில் ஏற்படுத்திக் கொள்கின்றன. இதுவரை விளக்கிய இவ்விரு பரிமாணங்களின் அடிப்படையிலேயே மொழியின் இலக்கணம் உருவாக்கப்பட்டது.
சமத்துவப் பார்வை
அமெரிக்க நாட்டில் மானிடவியலாளர்கள் பழங்குடி மக்களின் பண்பாட்டை ஆராய முற்பட்டபொழுது மொழி ஒரு தடையாக இருந்தது. மேலும், பண்பாட்டின் அங்கங்களுள் ஒன்றாக மொழி நோக்கப்பட்டது. மொழியின் இலக்கண அமைப்பும் சொற்களும் அம்மொழி பேசும் மக்களின் பண்பாட்டை ஓரளவு வெளிப்படுத்துவன. ஆகையால் பண்பாட்டு ஆய்வின் பகுதியாக மொழியாய்வு கருதப்பட்டது. ஆகையால், மானிடவியலாளர்கள் எழுதுகின்ற மொழிக்கு இலக்கணம் நெறிமுறைகளைக் காண முற்பட்டனர். மானிடவியலின் செல்வாக்கையும் இக்காலகட்டத்தில் மொழியியலில் காணலாம். பண்பாடுகளுக்கும் ஏற்றத்தாழ்வைக் கற்பிப்பது தவறானது. ஒவ்வொரு குழுவின் பண்பாடும் அக்குழுவின் அமைப்பையும் பயன்பாட்டையும் ஒட்டி அமைந்தது. இதன் பின்னணியில் மொழியும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபொழுது சில கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அமைப்பை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்பொழுது ஒவ்வொரு மொழியும் அதற்கென்று தனித்த ஓர் அமைப்பை உடையது என்ற கருத்து வலியுறுத்திக் கூறப்பட்டது. அமைப்பின் அடிப்படையில் மொழிகள் எல்லாம் சமமானவை என்பதும், ஒவ்வொரு மொழியும் அதன் சமுதாயத் தேவைகளைச் சிறப்பாகவே நிறைவேற்றுகின்றது என்பதும் வலியுறுத்தப்பட்டன. மொழிகள் தங்களுக்குள் வரையறுக்க இயலாத முறைகளில் வேறுபடலாம். மொழிகளுள் சிலவற்றை வளர்ந்த மொழிகள் என்றும் வேறு சிலவற்றை வளராத மொழிகள் என்றும் கூறுவது அமைப்பு அடிப்படையில் பொருள் அற்றது. மொழியின் அமைப்பே பொதுவாகச் சிக்கலானது. மொழிகள் அனைத்தும் சமமானவை என்று பார்க்கின்ற பார்வை இந்நூற்றாண்டில் வளர்ந்த மொழியியலின் குறிப்பாக அமைப்பு மொழியியலின் பாதிப்பினால்தான் என்று கூறலாம். சமுதாயங்களுக்குள் ஏற்றத்தாழ்வை நாடிச் சமுதாயங்கள் அனைத்தும் சமமானவை என்று நோக்குகின்ற தத்துவத்திற்கு அமைப்பு மொழியியல் பக்க பலமாக நிற்கிறது.
பேச்சின் முதன்மை
இன்னொரு சிறந்த கண்ணோட்டத்தையும் இது வளர்த்தது. பல சமுதாயங்களில் மொழி பேச்சு வழக்கில் மட்டும் இருப்பதைக் காணலாம். எழுத்து வழக்கில் இல்லாத மொழிகள் உலகில் எவ்வளவோ இருக்கின்றன. வரலாற்று நோக்கில் பார்க்கும். பொழுது எழுத்து வழக்கு என்பது பேச்சு வழக்கிற்குப் பிந்தியது. பேச்சு வழக்கில் உள்ள மொழிதான் உயிருள்ள மொழி, பேச்சு வழக்கிழந்த மொழியை இறந்த மொழி என்று கூட மக்கள் கூறுவார்கள். ஆகையால், பேச்சு முதன்மையானது. எழுத்து வழக்கில் உள்ள மொழிக்குமட்டும் இலக்கணம் எழுதுகின்ற நிலைமை மாறியது. பேச்சு மொழியும் ஓர் ஒழுங்கிற்கு உட்பட்டு அமைந்துள்ளது என்றும் அதற்கு இலக்கணம் எழுத முடியும் என்னும் இருபதாம் நூற்றாண்டு மொழியியல் வலிபுறுத்தியது. இப்பின்னணியில்தான பேச்சுமொழி மொழியாய்வில் முதன்மை பெறத் தொடங்கியது.
பேச்சின் இயல்பைமட்டும் விவரித்தல்
மொழியியலின் அடிப்படையில் எழுதப்படுகின்ற இலக்கணங்களில் நோக்கத்திற்கும் பள்ளிகளில் கற்பிக்கப் பயன்படுத்தும் இலக்கணங்களின் நோக்கத்திற்கும் அடிப்படையிலேயே வேறுபாடொன்று உண்டு. மொழியியலின் முதல்நோக்கம் மக்கள் மொழியை எவ்வாறு பேசுகிறார்கள் என்பதை விவரிப்பது. ஆகையால், மொழியியலின் கோட்பாட்டில் உருவாக்கப்பட்ட இலக்கணம் மக்கள் பேசும் விதத்தை விவரிக்கின்றது. மக்கள் இப்படித்தான் பேசவேண்டுமென்று இலக்கணங்கள் விதிகளை விதிப்பதில்லை. பேச்சின் இயல்பை உள்ளவாறு விவரிப்பதோடுமட்டும் அவை நின்றுவிடுகின்றன. இது மொழியியல் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாகும் இலக்கணங்களின் தன்மை.
மொழியியல் கோட்பாடுகள் மொழியின் ஒலியனியல் அமைப்பையும், சொற்களை அடிப்படையாகக் கொண்ட உருபியலையும் (Morphology) வெற்றிகரமாக விவரிக்கப் பயன்பட்டன. தொடரியலை விளக்க எழுந்த பல்வேறு கோட்பாடுகளில் மாற்றிலக்கணக் கோட்பாடு (Transformational Generative Grammar) இந்நூற்றாண்டு மொழியியல் வரலாற்றில் சிறப்பான ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அமைப்பு மொழியியல் முன்வைத்த இரு பரிமாணங்களுடன் இது மூன்றாம் பரிமாணத்தையும் உள்ளடக்கியது.
தொடரியல் வாக்கியத்தின் அமைப்பை விளக்க முற்பட்ட மாற்றிலக்கணம் படிமநிலை (Hierarchica! Structure) அமைப்பு என்ற மூன்றாம் பரிமாணத்தை அறிமுகப்படுத்தியது. மொழி அமைப்பு இதுவரை சேர்க்கைப் பரிமாண அடிப்படையிலும் இணைவுப் பரிமாண அடிப்படையிலும் விளக்கப்பட்டது. வாக்கியத்தில் சொற்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருவதன் அடிப்படையில் மட்டும் அமைப்பை விளக்க முடியாது. சொற்கள் ஒன்று சேர்ந்து செயற்படுகின்ற தொகுதி முறையையும் விளக்க வேண்டும். வாக்கியத்தால் உணர்த்தப்படுகின்ற பொருள் சொற்கள் தொகுதிகளாகச் செயற்படும் முறையையும் பொறுத்தது. சான்றாக. புதிய மாணவர் சங்கம் என்ற தொடரை எடுத்துக்கொண்டால் இது மாணவர்கள் புதியவர்கள் என்ற பொருளையும் சங்கம் புதியது என்ற பொருளையும் அளிக்கிறது. இதை
என்றும்
என்றும் காட்டலாம். வாக்கியத்தையும் தொடரையும் விளக்கும்பொழுது இவற்றை இரண்டு இரண்டு பகுதிகளாகச் சொற்கள் நிலைவரை பிரிக்கலாம் இல்லாறு பிரிக்கும்பொழுது தொடருக்குரிய குறியீடுகளையும் இலக்கணப் பகுப்புகளுக்குரிய குறியீடுகளையும் பயன்படுத்தலாம். சான்றாக, ஆசிரியர்கள் நிதியமைச்சரைச் சந்தித்தார்கள் என்ற வாக்கியத்தை எடுத்துக் கொண்டு, இதை,
என இவ்வாறு காட்டலாம். தன்னுடைய ஆய்வைத் தீவிரப்படுத்திய மாற்றிலக்கணம் மொழியாய்வில் படிமநிலை அமைப்பின் அவசியத்தைத் தெளிவுபடுத்தியதோடு, வாக்கியத்திற்கு அக அமைப்பு என்ற ஒரு நிலையையும், புற அமைப்பு என்ற ஒரு நிலையையும் வலியுறுத்தியது. மாற்றிலக்கணம் தொடரியலை விளக்க முற்பட்ட முயற்சி மொழியியலில் புரட்சியையும், உளவியல், மானிடவியல், தத்துவம் போன்ற துறைகளில் ஒரு சலசலப்பையும் ஏற்படுத்தியது. தொடரியலை விளக்கியதோடு மட்டுமன்றிப் பொருண்மையியல் ஆய்வுநெறிமுறைகளுக்கும் ஒரு வழி கோலியது மாற்றிலக்கணம்.
மொழிப் பொதுமைகள்
தனி மொழியின் அமைப்பை விவரிப்பதிலிருந்து மொழிகளின் பொதுமைகளைக் (Language Universals) காணும் முயற்சியில் மாற்றிலக்கணம் ஈடுபட்டது. இவ்வாறு ஆய்வுகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட மொழிப் பொதுமைகளுக்கும், மனித மனத்திற்கும் உள்ள தொடர்பின் இயல்பை ஆராய வேண்டும் என்று மாற்றிலக்கணம் வற்புறுத்தத் தொடங்கியது. மனத்தின் இயல்பை மொழிவழி அறியலாம் என்ற அணுகு முறையை மாற்றிலக்கணம் வற்புறுத்தியது. உளவியலும் மொழியியலும் ஒன்றுகூடி உளமொழியியல் என்னும் துறை வளர வகைசெய்தது. மாற்றிலக்கண அறிமுகத்திற்கு முன்பே அறிஞர்கள் இத்துறையில் ஈடுபட்டிருந்தாலும், தீவிரமான ஆய்வு மாற்றிலக்கணத்தின் பாதிப்பால் ஏற்பட்டது.
மொழியும் சமுதாயமும்
இதுகாறும் விளக்கப்பட்டுள்ள ஆய்வுகளில் எல்லாம் மொழி அது பேசப்படும் சமுதாயச் சூழலிலிருந்து பிரித்து விவரிக்கப்பட்டது. ஒவ்வொரு மொழியும் அது பேசப்படுகிற சமுதாயத்தின் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. மொழியின் பயன்பாட்டிற்கும் மொழியின் அமைப்பிற்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பதை அறிஞர்கள் வலியுறுத்தினார்கள். மொழியின் பயன்பாட்டை ஆராய முற்படும்பொழுது அது பயன்படுத்தப்படுகிற சமுதாயத்தில் அமைப்பும் பின்னணியும் தேவைப்படுகின்றன. மொழிக்கும் சமுதாயத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய வேண்டும். சமுதாய மாற்றம் மொழியைப் பாதிக்கிறது. மேலும், சமுதாய வேறுபாடுகளும் அமைப்பு முறைகளும் மொழியின் அமைப்பிலும் வெளிப்படுவதைக் காணலாம். இதன் பின்னணியில் பேச்சு வழக்கை இரண்டு விதமாகப் பிரித்தார்கள். ஒரு மொழியைப் பேசுகின்ற மக்கள் பரந்த நிலப்பரப்பில் வாழும்பொழுது, அவர்களுக்கிடையே உள்ள தொடர்பின் நெருக்கம் குறைவாக இருக்கும் பொழுது, அவர்களுடைய பேச்சில் வேறுபாடுகள் அதிகமாகக் காணப்படலாம். இதற்கு நேர்மாறாக ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாமும் மக்களின் பேச்சில் ஒற்றுமை அதிகமாக இருக்கலாம். நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டு மொழி வழக்கை ஆய்கின்ற ஆய்வை வட்டார வழக்கு ஆய்வு என்று குறிப்பிடுகிறார்கள். மொழி வழக்கை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் மக்கள் தங்களுக்குள் தொடர்பு கொண்டிருந்தாலும் தங்களுடைய பேச்சு வழக்கில் வேறுபாடுகளைக் காட்டுகிறார்கள். அந்நிலப் பரப்பில் வாழும் மக்கள் பொருளாதார அடிப்படையிலேயோ சாதி அடிப்படையிலேயோ வேறுபட்டிருக்கலாம். இத்தகைய சமுதாய வேறுபாடுகள் அவர்கள் பேசுகிற பேச்சு வழக்கில் வெளிப்படுகின்றன. இவ்வாறு மக்கள் சமுதாய அடிப்படையில் வேறுபடும் பேச்சு வழக்கைச் சமுதாய வழக்கு என்னும் தலைப்பில் ஆய்வு செய்யமுற்படுகிறார்கள்.
இருபதாம் நூற்றாண்டு மொழியியல் இங்கு முழுமையாக விவரிக்கப்பட்டதாகக் கூற முடியாது. குறிப்பாகப் பல்வேறு நாடுகளில் வளர்ந்த கோட்பாட்டு மொழியியல் சிந்தனைகளை இங்கு விளக்க முடியவில்லை. மொழியியலில் பயன்படுத்தப்படும் மற்ற அறிவுத்துறைகளைப் பற்றி இங்கு ஒன்றும் குறிப்பிடவில்லை. கோட்பாட்டு மொழியியல் வளர்ச்சி, மொழிக்கும் மனித மனத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கும் உளமொழியிவல் ஆய்வு, மொழிக்கும் அது பேசப்படும் சமுதாயத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கும் சமுதாய மொழியியல் ஆய்வு ஆகியவை இங்கு முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. கி.அ.
துணை நூல்கள்
Lyons, J., Introduction to Theoretical Linguistics, Cambridge, University Press, Cambridge, 1968.
Rangan, K., Some Remarks on the Goals and Methods of Taxonomic Linguistics. Transformational Generative Grammar and Sociolinguistics in IJDL.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 220)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zgvqmvff/
தமிழ்“இருபதாம் நூற்றாண்டு மொழியியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zgvqmvff/APA
Oliyon Research. (2026). இருபதாம் நூற்றாண்டு மொழியியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zgvqmvff/MLA
"இருபதாம் நூற்றாண்டு மொழியியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zgvqmvff/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment