சிறகு, வானூர்தி
ciṟaku, vāṉūrti
வானூர்தியின் பறக்கும் ஆற்றலுக்கு அடிப்படையாக விளங்கும் காற்றுத் தகடு, சிறகு (wing) எனப்படும்.
வானூர்தியின் பறக்கும் ஆற்றலுக்கு அடிப்படையாக விளங்கும் காற்றுத் தகடு, சிறகு (wing) எனப்படும். காற்றின் ஊடே நகரும் சிறகால் உருவாக்கப்படுகிற ஏற்றம் (lift) வானூர்தியை மிதக்கச் செய்கிறது. சிறகின் ஒரு முனையிலிருந்து மறு முனை வரையான நீளம் (span), மேலிருந்து பார்க்கும் போது தெரியும் சிறகின் பரப்பு, சிறகின் முன் பரப்புக்கும் விமானக் கட்டகத்தின் செங்குத்தான கோட்டிற்கும் இடையே உள்ள கோணம் ஆகியவை சிறகின் தன்மையைப் பாதிக்கவும், மாற்றவும் வல்ல இன்றியமையாத அலகுகளாகும். விமானத்தை இரு ஒத்த பகுதிகளாகப் பிரிக்கும் தளத்திற்கு இணையான மற்றொரு தளத்தால் வெட்டப்படும் போது ஏற்படும் சிறகின் குறுக்கு வெட்டுத் தோற்றம் மிகவும் இன்றியமையாத அலகாகும்.
சிறகால் ஏற்றம் உண்டாவதைத் தவிர, மேலும் பல வகைப் பயன்பாடுகள் உள்ளன. சில பெரிய விமானங்களில், எந்திரங்கள் வைக்கப்படும் பகுதி (nacelles) சிறகிலேயே அமைக்கப்படும். சில வகை விமானங்களில் அடிப் பகுதி சிறகுகளோடு இணைக்கப்படுகிறது. இப்பகுதியில் உள் வாங்கப்படும் சக்கரங்கள் அமைவதற்குப் போதுமான இட வசதியும் அமைக்கப்படுகிறது. (விமானம் பறக்கத் தொடங்கியதும், சக்கரங்கள் கட்டகத்தின் உள் இழுக்கப்படுவதே உள் வாங்கல் எனப்படும்). சிறகின் உட்பகுதி கூடு போல் அமைந்திருப்பதால், அது எரிபொருளைச் சேமித்து வைக்கவும் பயன்படுகிறது.
வானூர்தியின் பறப்பைக் கட்டுப்படுத்தும் கருவிகளில் பெரும்பாலானவை சிறகிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் முக்கியமானவை, சிறகிறகுகள் (ailerons) ஆகும். இவை சிறகின் பின்புறத்தில் கீலிடப்பட்டு மேலும், கீழும் நகர்த்தக் கூடியவையாய் அமைந்துள்ளன. காண்க: சிறகிறகு, வானூர்தி.
சிறகுகளின் பின்புறம் சிறகிறகுக்குச் சற்று முன்பாக இறங்கு தகடுகள் (landing flaps) அமைக்கப்பட்டுள்ளன. வானூர்தி தரையிறங்கும் போது, இறங்கு தகடுகள் நகர்த்தப்படுகின்றன. இதன் மூலம் இறங்கும் வேகத்தைக் குறைத்து, வானூர்தியை மெதுவாக இறக்க முடியும். சில வானூர்திச் சிறகுகளில், சிறகிறகைப் போன்றே இயங்கும் நிறுத்திகள் (brakes) மூலம் காற்றுத் தடை உருவாக்கப்பட்டு, வானூர்தி இறங்கும் வேகம் குறைக்கப்படுகிறது. இத்தகைய நிறுத்தி, ஏதேனும் பக்கச் சிறகில் மட்டும் பயன்பட்டால், அச்சிறகின் ஏற்றம் மட்டும் குறைக்கப் படுகிறது. இது சிறகிறகைப் போலவே செயல்பட்டு உருளலைக் (roll) கட்டுப்படுத்துகிறது.
ஒவ்வொரு விமானத்தின் தேவைக்கு ஏற்ப, சிறகுகளின் தோற்றமும், வடிவமைப்பும் வேறுபடுகின்றன. நால்வர் அமரும் தனியார் விமானங்களில், வேகமாய்ச் செல்லும் தன்மையை விட, விமானத்தின் தொடக்க விலை (initial cost) குறைவாக இருக்க வேண்டும். இதன் பொருட்டு, இவ்வகை விமானத்தின் சிறகுகள் செவ்வக வடிவில் அமைக்கப்படுகின்றன. சிறகு முழுதும் ஒரே குறுக்களவே இருக்கும். பொதுவாக, குறுக்களவைப் போல 6 அல்லது 7 பங்கு சிறகின் நீளம் அமைக்கப்படுகிறது. சிறகின் பருமன் குறுக்களவில் ஏறத்தாழ 12% இருக்கும்படி அமைக்கப்படும். கட்டகத்திற்கு அருகில், சிறகின் குறுக்களவு மிகுதியாகவும், மறுமுனையை நோக்கிச் செல்லச் செல்லக் குறைவாகவும் அமைத்தால், காற்றியக்கத் தத்துவப்படி கட்டகத்தின் எடையிலும் சில நன்மைகள் விளையும். ஆனால், சிறகின் உட்கூடுகளை ஒரே அளவாக இல்லாமல் பல அளவுகளாகத் தயாரிக்க வேண்டியிருப்பதால், தயாரிப்புச் செலவு அதிகரித்து விடும்.
காண்க: இறக்கைச் சுமை.
தற்காலக் குறை ஒலி வேக தாரை (jet) விமானங்களில் தொடக்க விலையைப் போலவே, இயக்கச் செலவும், சுமக்கும் திறனும் மிகவும் இன்றியமையாதவை. பொதுவாக, இவ்வகை விமானங்கள் தம் வாழ்நாள் முழுதும் முடக்கப்படும் தொகைக்குப் போதுமான வருவாய் ஈட்ட வல்லவையாக வடிவமைக்கப்படுகின்றன. சிறகின் பரப்பளவு, வானூர்தியின் எடை, எந்திரங்களின் தன்மை, இறங்கு தகடுகளின் வடிவமைப்பு மிகு நுட்பம் போன்றவற்றைப் பொறுத்தே இது அமைகிறது. சிறகின் பருமன் உறுதியை ஊட்டக் கூடியதாகவும், எரி பொருளை நிரப்பிக் கொள்ளப் போதுமான இட வசதி உடையதாகவும் இருக்க வேண்டும். அதே சமயம், இழுவையைக் (drag) குறைப்பதற்காக எவ்வளவு முடியுமோ, அவ்வளவுக்குப் பருமன் குறைவாக இருக்கவும் வேண்டும். இத்தகைய முரண்பாடான தேவைகளுக்கு ஈடு கொடுக்க வல்லதாகச் சிறகு வடிமைக்கப்பட வேண்டும்.
மிகை ஒலி வேக விமானங்களில் சிறகின் வடிவமைப்பு மேலும் கடினமாகிறது. இவ்வகை விமானங்கள் குறை ஒலி வேக விமானங்கள் இறங்கும் அதே நீளமுள்ள ஓடு பாதையிலேயே ஏறவும் இறங்கவும் வேண்டும். ஆனால் பறக்கும்போது மட்டும் ஒலியை விட ஏறத்தாழ இரண்டரை மடங்கு மிகு வேகத்தில் பறக்க வேண்டும். —வயி. அண்ணாமலை
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 319)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zdn478rd/
தமிழ்“சிறகு, வானூர்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zdn478rd/APA
Oliyon Research. (2026). சிறகு, வானூர்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zdn478rd/MLA
"சிறகு, வானூர்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zdn478rd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment