அண்ணாதுரை கா.ந
aṇṇāturai kā.na
அண்ணா என்று அழைக்கப் பெறும் இவர் 1909–ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 15–ஆம் நாள் செங்கற்பட்டு மாவட்டம் காஞ்சிபுரத்தில் நடராசன்-பங்காரு அம்மாள் தம்பதியர்க்கு மகனாகப் பிறந்தார்.
அண்ணா என்று அழைக்கப் பெறும் இவர் 1909–ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 15–ஆம் நாள் செங்கற்பட்டு மாவட்டம் காஞ்சிபுரத்தில் நடராசன்-பங்காரு அம்மாள் தம்பதியர்க்கு மகனாகப் பிறந்தார். ஆயினும், இவரை வளர்த்த பெருமைக்குரியவர், இவர் அன்போடு ‘தொத்தா’ என்று குறிப்பிட்ட இவர்தம் சிற்றன்னை இராசாமணி அம்மையார் ஆவார்.
இளமைக்காலம்
இவர் தம் கல்வியைக் காஞ்சிபுரம் மிசன் பள்ளியில் 1914–இல் தொடங்கினார். காஞ்சிபுரம் பச்சையப்பர் உயர்நிலைப் பள்ளியில் இறுதி வகுப்பு வரை பயின்றார். உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்ததும் கல்லூரியில் படிக்க விரும்பிய இவர், வறுமை நிலை காரணமாகக் கல்லூரியில் சேர இயலவில்லை காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில்
அண்ணாதுரை
சிறிது காலம் பணிபுரிந்து பின்னர் அவ்வேலையை விடுத்துச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து 1934–இல் ஆனர்சு பட்டத் தேர்வில் வெற்றி பெற்றார். கல்லூரியில் பயின்ற நாள்களிலேயே தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சிறந்த பேச்சாளராக விளங்கினார். இவர், 1930–ஆம் ஆண்டில் மாணவராக இருந்த போதே இராணி அம்மையாரை மணந்து கொண்டார். நாகரத்தினம்மாள் என்பவர் அண்ணாவின் தமக்கையாவார். பரிமளம், இளங்கோவன், கவுதமன், பாபு என்னும் இராசேந்திர சோழன் ஆகிய நால்வரும் இவர்தம் வளர்ப்புப் பிள்ளைகளாவர்.
அரசியல் நுழைவு
அண்ணாவின் ஆழ்ந்த சிந்தனை, அறிவுத்திறன், பேச்சு வன்மை முதலானவற்றை முதலில் உலகறிய உதவியவர் பாசுதேவ் என்ற தொழிற்சங்கத் தலைவர் ஆவார். தமிழில் பேசும் ஆற்றலற்று இருந்த பாசுதேவின் அழகிய ஆங்கிலப் பேச்சுகளைத் தமிழாக்கம் செய்யும் பணியில் அண்ணா முதலில் ஈடுபட்டிருந்தார். அவர்தம் தொடர்பு இவருக்கு நீதிக்கட்சியின்பால் ஈடுபாட்டை ஏற்படுத்தியது. ஆயினும், தம் சிற்றன்னையின் விருப்பப்படி வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டுச் சென்னை கோவிந்தப்ப நாயக்கன் நடுநிலைப் பள்ளியில் 1935–இல் ஆசிரியராகச் சேர்ந்து சிறிது காலம் பணியாற்றினார்.
பொப்பிலி அரசர் நீதிக்கட்சியின் சார்பில் முதல்வராகப் பொறுப்பேற்ற காலத்தில், அக்கட்சியுடன் அண்ணாவிற்கு நேரடித் தொடர்பு ஏற்பட்டது. திருப்பூரில் 1935–இல் நடைபெற்ற செங்குந்தர் இளைஞர் மாநாட்டில், முதன் முதலாகப் பெரியார் ஈ.வெ. இராமசாமி அவர்களைச் சந்தித்தார், அன்று முதல் தம் வாழ்வின் இறுதி வரை அவரையே தம் தலைவராக ஏற்றுக் கொண்டார். மாநகராட்சி உறுப்பினர் தேர்தலில் 1935–ஆம் ஆண்டில் சென்னை பெத்து நாயக்கன் பேட்டையின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பினை இழந்தார்.
சி. இராசகோபாலாச்சாரியார் 1937–இல் தமிழகத் தலைமை அமைச்சராகப் பணிபுரிந்தபோது, தமிழ் நாட்டுப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியதை எதிர்த்து நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தளபதியாக அண்ணா நியமிக்கப்பட்டார். நான்கு மாதச் சிறைத் தண்டனையையும் ஏற்றார்.
இவர் 1938–இல் பெரியாரின் ‘விடுதலை’ நாளேட்டின் துணை ஆசிரியரானார். பெரியார் தலைமையில் 1940–இல் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் அதன் பொதுச் செயலாளராக அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘திராவிடநாடு’ என்னும் ஏட்டினை 1942–இல் தொடங்கினார். சேலத்தில், 20-8-1944–இல் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் நான்கு முக்கிய தீர்மானங்களைக் கொண்டுவந்தார். அவற்றுள் ஒன்று நீதிக்கட்சியின் பெயரைத் ‘திராவிடர் கழகம்’ என்று மாற்ற வேண்டியது. இத்தீர்மானங்கள் ‘அண்ணாதுரை தீர்மானங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.
கருத்து வேறுபாடு
திராவிடர் கழகம், தனது முதல் மாநில மாநாட்டை 1945–இல் திருச்சியில் நடத்தியது. பெரியார் தம் தொண்டர்களைக் கறுப்புச் சட்டை அணியச் சொன்னதை ஏற்றுக்கொள்ளாத அண்ணா ‘கறுஞ்சட்டைப் படையினை’த் திடீரென்று அரசு தடை செய்தபோது, கறுப்புச்சட்டையினை அணிந்து கட்டுப்பாடு காத்தார். இந்திய விடுதவை நாளான 1947 ஆகசுட்டு 15–ஆம் நாளைப் பெரியார் துக்க நாள் என்று அறிவித்தபோது, அண்ணா அக்கருத்தினை ஏற்காது அந்நாளை மகிழ்ச்சிக்குரிய நாளாக அறிவித்துத் தம் நீண்ட கட்டுரையில் அதன் காரணத்தையும் விளக்கினார். பெரியார், 1949 சூலை 9–ஆம் நாள் தம் 72–ஆம் வயதில் 26 வயது நிரம்பிய மணியம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். இது அண்ணா-பெரியார் கருத்து வேறுபாடு முற்றக் காரணமாயிற்று.
புதிய இயக்கம்
பெரியாருடன் கருத்து வேறுபாடு கொண்டவர்கள், 1949 செப்டம்பர் 17–ஆம் நாள் அண்ணாவின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற சீர்திருத்த இயக்கத்தை உருவாக்கினர். அண்ணா கட்சியின் முதற் பொதுச் செயலாளர் ஆனார். தமது இயக்கமும், பெரியாரின் திராவிடர் இயக்கமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் போல் செயல்படும் என்று அறிவித்தார். மும்முனைப் போராட்டம் என்ற ஒரு போராட்டத்தினை 1952–இல் மைய அரசுக்கு எதிராக நடத்தினார். பின்னர், 1956–இல் திருச்சியில் நடைபெற்ற இரண்டாம் மாநில மாநாட்டில் தி.மு.க. அரசியல் இயக்கமாக மாறியது. இது அண்ணாவின் மக்களாட்சிக் கோட்பாட்டு நம்பிக்கையை வெளிப்படுத்தியது. இம்மாநாட்டில் அரசியலில் பங்கு கொண்டு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் செய்தனர். அண்ணாவின் தலைமையை ஏற்றுக் கொண்ட தி.மு.க. 1959–இல் சென்னை மாநகராட்சியைக் கைப்பற்றியது. பின்னர் 1962-இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அண்ணா வெற்றி வாய்ப்பினை இழந்த போதிலும், இந்தியப் பாராளுமன்றத்தில் மேலவை உறுப்பினராகித் தமிழகத்தின் குரலை எதிரொலித்தார். அனைத்து இந்திய அளவில் அண்ணாவின் சிறப்பு வெளிப்படுவதற்கு இந்தக் காலம் மிகவும் பயன்பட்டது.
திராவிட நாட்டுப் பிரிவினை
அண்ணா 1962–இல் விலைவாசி உயர்வைக் கண்டித்துப் போராட்டம்நடத்திச் சிறை சென்றார். தனித் திராவிட நாடு அமைப்பது தி.மு.க.வின் கொள்கையாக விளங்கிய போதிலும் இந்தியாவைச் சீனா ஆக்கிரமித்தபோது, இந்தியாவின் பாதுகாப்பையும் பொது நலனையும் கருத்தில் கொண்டு, திராவிட நாட்டுப் பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டு, மேலும் உயர்ந்தார். பின்னர், 1963–நவம்பர் 16–இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது, இந்திய அரசியல் சட்டத்தைக் கொளுத்தியதற்காக ஆறு மாதக் காலம் கடுங்காவல் தண்டனை பெற்றார்.
ஆட்சிக் கட்டிலில்
ஏழு அரசியல் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து 1967–இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. 138 இடங்களைப் பெற்று அண்ணாவின் தலைமையில் அரசு அமைந்தது. அரசியலில் புதிய பண்பாட்டை அண்ணா ஆட்சி அமைத்ததும் கடைப்பிடித்தார். தம்மை எதிர்த்துத் தேர்தலில் பணியாற்றிய தம் தலைவர் தந்தை பெரியாரையும் காமராசர், இராசாசி, பக்தவத்சலம் முதலான அரசியல் தலைவர்களையும் சந்தித்து அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றார்.
முதலமைச்சர் அண்ணா
அண்ணாவின் அரசியல் கருத்துகள் தமிழ் உணர்வுடன் ஒன்றிக் கலந்தவை. இந்தித் திணிப்பையும் வடவர் ஆதிக்கத்தையும் எதிர்த்து வந்தார். அண்ணா பின்வருவனவற்றை வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்தார். மே முதல் நாள் விடுமுறை நாள், பெரிய தொழில்கள் தேசியமயம், நிலச் சீர்திருத்தம், சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட பூர்வ ஏற்பு, தமிழ் ஆட்சிமொழி ஆதல், இந்தியாவின் தொடர்பு மொழியாக ஆங்கிலம் நீடித்தல், மாநிலச் சுயாட்சி முதலியன.
மேலே கூறப்பெற்ற கொள்கைகளை முதலமைச்சரானதும் நிறைவேற்ற முனைந்தார். சென்னை மாநிலம் ‘தமிழ்நாடு’ என்று பெயர் பெற்றது. உரூபாய்க்குப் படி அரிசித் திட்டமே, அண்ணாவின் அமைச்சரவை கொண்டு வந்த முதல் மக்கள் நலத் திட்டமாகும். அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் புன்செய் நிலங்களுக்கு வரி நீக்கப்பட்டது. கல்லூரியில் புகுமுக வகுப்புவரை மாணவர்கள் கட்டணம் இன்றிக் கல்வி பெற ஏற்பாடு செய்யப் பெற்றது. கலப்புத் திருமணங்கள் ஊக்குவிக்கப்பட்டன. தன்மானத் திருமணங்கள் சட்ட உருப்பெற்றன. சென்னையில் 1968–இல் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டினைச் சிறப்புடன் நடத்தினார். தமிழ்நாடு சட்டமன்றம் 1968 சனவரி 23–ஆம் நாள், தமிழும் ஆங்கிலமும் ஆகிய இருமொழிகள் தமிழ்நாட்டில் நீடிக்கும் என்ற இருமொழித் திட்டத்தை நிறைவேற்றியது.
ஏல் பல்கலைக்கழகம் (Yale University) 1968–இல் அண்ணாவிற்கு, ‘சப்-பெல்லோசிப்’ (Chubb Fellowship) விருதை வழங்கிச் சிறப்பித்தது. அதே ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. அண்ணாவிடமிருந்து மேலும் பல சாதனைகளைத் தமிழகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் அவர் 1969, பிப்பிரவரி 3–ஆம் நாள் உயிர் துறந்தார்.
அண்ணாவின் இலக்கியப் பணி
தமிழ் எழுத்துலகில் தனிப் புகழ் பெற்ற அண்ணா திராவிட நாடு, காஞ்சி ஆகிய தமிழ் இதழ்களைத் தொடங்கித் திறம்பட நடத்தினார். அன்றியும் நவயுகம், விடுதலை, குடியரசு முதலிய பிற தமிழ் இதழ்களுக்கும் சில ஆங்கில இதழ்களுக்கும் பெருந் தொண்டு ஆற்றினார். அண்ணா, ‘தம்பிக்கு’ என்ற தலைப்பில் எழுதிய கடிதங்கள் வரலாற்றுப் புகழ் பெற்றவை. ‘ஓர் இரவு’, ‘வேலைக்காரி’ அண்ணாவின் புகழ் பெற்ற நாடகங்களாகும். நாவல்களில் ‘ரங்கோன் ராதா’ புகழ் பெற்றது. ‘நாடோடி’, ‘செவ்வாழை’ முதலான சிறுகதைகள் குறிப்பிடத்தக்கவை. ‘கம்பரசம்’, ‘ஆரியமாயை’ ஆகியன சிந்தனைக்கு விருந்தளிக்கும் படைப்புகளாகும். நடிப்பிலும் வல்லவர் இவர், ‘சந்திரமோகன்’ ‘நீதி தேவன் மயக்கம்’ முதலானனவ அண்ணா நடித்த நாடகங்களாகும். திரைப்படங்களில் ‘ஓர் இரவு’, ‘நல்லதம்பி’, ‘சொர்க்க வாசல்’, ‘நல்லவன் வாழ்வான்’ இவர்தம் முத்திரை பதித்தவையாகும்.
மதிப்பீடு
அண்ணா திறமையான இதழாசிரியர்; ஆற்றல்மிகு சீர்திருத்த எழுத்தாளர்; மிகச் சிறந்த பேச்சாளர், சீர்திருத்தவாதி; சமூகக் கொடுமைக்கு எதிராகப் போராடிய தளபதி என்ற பெருமைகளை விட, மனிதப் பண்புடைய பெருந்தலைவர் என்ற அளவில் மக்கள் மனத்தில் நன்கு இடம் பெற்றவர். இறுதிவரை எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்பதனைப் பொன்மொழியாக அளித்தவர். அடக்கமும், பணிவும் அவரை உயர்த்தின. தாம் இரண்டாண்டே முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பிலிருந்தாலும், மக்கள் இதயத்தில் அழியா இடம் பெற்று, ஏழை, எளியவர் நலன் காத்த பண்பாளர் அண்ணா. இவர்தம் மறைவு தமிழக மக்களைத் துயர்க் கடலுள் ஆழ்த்தியது.
இவர் பெயரில் அமைந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திரு எம்.ஜி. இராமச்சந்திரன் தலைமையில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றது. பேரறிஞர் அண்ணாவின் நினைவாக 1985-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 15-ஆம் நாள் முதலமைச்சர் மாண்புமிகு எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களால், மதுரை மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் நகரத்தைத் தலைநகராகக் கொண்டு ‘அண்ணா மாவட்டம்’ தொடங்கப் பெற்றது.
மேலும், அண்ணாதுரைக்குப் பெருமை கூட்டும் முறையில்
அண்ணாவிருது
ஒன்றையும் தமிழக அரசு வழி ஏற்படுத்தியுள்ளது. அண்ணாவின் கொள்கை வழி நிற்போர், நிலை நிறுத்துவோர், பரப்புவோர், அவற்றை ஆய்வு செய்வோர் என்னும் நான்கு வகையினர்க்கு இவ்விருது வழங்கப்படும். இந்நிலையில் முதன் முதல் 1985–ஆம் ஆண்டு அண்ணாவிருது தமிழக முதல்வர் மாண்புமிகு எம்.ஜி. இராமச்சந்திரனுக்கு வழங்கப்பட்டது.
தமிழில் நாவன்மை படைத்த அண்ணாதுரையைத் தமிழக மக்கள் ‘பேரறிஞர் அண்ணா’ என்று பாராட்டி மகிழ்கிறார்கள்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 291)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zdbvbmhs/
தமிழ்“அண்ணாதுரை கா.ந”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zdbvbmhs/APA
Oliyon Research. (2026). அண்ணாதுரை கா.ந. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zdbvbmhs/MLA
"அண்ணாதுரை கா.ந." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zdbvbmhs/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment