தமிழில் அமைந்துள்ள நாட்டுப்புற இலக்கிய வகை சார்ந்த அம்மானை நூல்களுள் ஒன்றாகும். இது சிரீ இராமர் அம்மானை என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பண்பாட்டுக் கருவூலமாக விளங்கும் இராமாயணம் சிற்பமாய்ச் சித்திரமாய்க் காவியமாய் ஓவியமாய் அமைந்து, இந்தியப் பெருநாட்டையும் அதன் மக்களையும் மொழி சமயம் வேறுபாடு கடந்தும் பண்படுத்தி வந்துள்ளது. இவ்வகையில் தமிழில் நாட்டுப்புற இலக்கிய வடிவங்களில் ஒன்றான அம்மானை வடிவில், இராமர் அம்மானை உருவாகியுள்ளது. தொடக்க நிலையில் நாட்டுப்புற மக்களின் உள்ளங்களை நிலைக்களனாகக் கொண்டு, வாய் மொழி இலக்கியமாகத் திகழ்ந்த இராமர் அம்மானை காலப்போக்கில் ஏட்டில் இடம் கொண்டு, இன்று அச்சுவடிவம் பெற்றுத் திகழ்கிறது. ‘கச்சி நகரார்க்குக் கண்ணான புத்திரனார் வரதன் சிறுவன் சொன்னான்’ என இந்நூலில் வரும் பகுதியால், இதன் ஆசிரியர் பெயர் வரதன் என்பதும் இவர் கச்சி எனப்படும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் என்பதும் புலனாகின்றன. இவர் காலம் இதுவென அறியக் கூடவில்லை. தயரதன் தன் படைசூழ மிதிலை வந்தபோது அங்குத் ‘தெள்ளு தமிழ் தெரிந்து செந்தமிழோர் பாடி’ வந்தனர் என்றும், அசோகவனத்தில் அனுமன் சீதைக்குத் தன் வரவுணர்த்தும் பாங்கில் ‘மின்னுமுகில் வேதியனார் வேதக் கவியனுமான், பன்னுதமிழ் தெரிந்து பாடலுற்றான்’ என்றும் கூறும் பகுதிகள் இந்நூலாசிரியர்தம் தமிழ்ப் பற்றினைக் காட்டுகின்றன. ‘கம்பனிட நாடன் தன் கதையில் மொண்டு கொண்டு சொல்ல லுற்றேன்’ என்று இந்நூலாசிரியர் தாம் கம்பர்பால் கொண்ட நன்றியுணர்வைப் புலப்படுத்தியுள்ளார். இந்த அம்மானையில் திருமாலின் தசாவதார மாட்சி சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. திருமால் சமயத்தினரான இந்நூலாசிரியர் முருகன் சிவன் ஆகியோரையும் சிறப்பித்துப் போற்றியிருப்பது, இவருடைய சமயப் பொறையினை விளக்குவதாக உள்ளது. பொதுவாக அம்மானை நூல்கள் ஆசிரியப் பாவினைப் போன்றதொரு பாடலில் நெடிதாய்த் தொடர்ந்து செல்லும் போக்குடையன. இந்நூலில் இடையிடையே சில சந்தவிருத்தங்களும் பாடி இணைக்கப்பட்டுள்ளன. இராமாயணக் கதையில் மட்டுமேயன்றிக் கம்பராமாயணச் செய்யுள்களிலும் ஈடுபாடு கொண்டிருந்தமையால், இந்நூலாசிரியர் சிற்சில இடங்களில் பொருத்தமான கம்பராமாயணச் செய்யுட்களையும் தம் நூலில் சேர்த்துக் கொண்டுள்ளார்.