இந்திய மானிடவியல் அறிஞரான இவர், இனப் பரப்பளவியல் சார்ந்த ஆய்வுகளைப் பெருமளவு மேற்கொண்டு இந்திய மானிடவியலின் வளர்ச்சிக்கு வித்திட்ட தொடக்ககால மானிடவியலாளர்களுள் ஒருவராவர். இவர் சமூக மானிடவியற் பரப்பிலேயன்றி, வரலாற்றுக்கு முன்னிலை வரலாற்றுப் (Prehistory) பரப்பிலும் பல ஆய்வுகளை மேற்கொண்டவராவர். இவர் கி.பி. 1871–ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 4–ஆம் நாள் பிறந்தார். இவர் பள்ளிப் படிப்பைக் கல்கத்தாவிலுள்ள நகரக் கல்லூரிப் பள்ளியிலும் (City Collegiate School), இளங்கலை ஆங்கிலப் பட்டப்படிப்பை கி.பி. 1892–இலும், முதுகலைப் பட்டப்படிப்பை கி.பி. 1893–இலும் பொது அவை நிறுவனத்திலும் (General Assembly Institute), இளஞ்சட்டலியல் (Bachelor of Law) கி.பி. 1895–இல் பட்டத்தை கல்கத்தாவிலுள்ள இரிப்பன் கல்லூரியிலும் பெற்றார். இராய் பகதூர் சரத் சந்திர ராய் (Rai Bahadur Sarat Chandra Ray) தம் வழக்குரைஞர் வாழ்க்கையை கி.பி. 1897–இல் தொடங்கினார், இவர் இராஞ்சியில் வழக்குரைஞராகப் பணியாற்றிய பொழுது, சோட்டா நாக்பூர்ப் பகுதி ஆதிக்குடிகளிடையே காணப்பட்ட வெளியாரின் சுரண்டல், அவர்கள் மீது இழைக்கப்படும் குற்றங்கள் முதலானவற்றைக் கண்டு ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினார். அதனாலேயே முண்டா ஆதிக்குடிகளின் மொழி, மரபுகள், நடத்தைகள், முறைமைகள் முதலானவற்றை முழுவதுமாகத் தெளிவுடன் அறியத் தம் முழு நேரத்தையும் செலவிட்டார். அந்த ஆய்வின் வெளியீட்டை ‘முண்டாவும் அவர்கள் நாடும்’ (Mundas and Their Country) என்னும் தலைப்பில் 1912–இல் வெளியிட்டார். இந்த இனக்குழு ஒப்பாய்வியல் (Ethnological) இந்திய மானிடவியலின் இனப்பரப்பியல், இன ஒப்பாய்வியல் ஆகிய இரண்டு பரப்பிலுமே நல்லதொரு தொடக்கத்தினை ஏற்படுத்தியது. இவர் 1915–இல் ‘சோட்டா நாக்பூர் ஓரவர்கள்’ (The Oraons of Chotanagpur) பற்றியும், 1925–இல் பிர்கர் (The Birhor) பற்றியும், 1928–இல் ‘ஒரிசாவின் மலைப் பூயியாக்கள்’ (The Hill–Bhuiyas of Orissa) பற்றியும், 1937–இல் காரியர் (The Kharias) பற்றியும் நூல்களை எழுதி வெளியிட்டார். இவர் 1921–ஆம் ஆண்டு ‘இந்தியாவில் மனிதன்’ (Man in India) என்னும் காலாண்டு இதழினைத் தொடங்கினார். இன்று இந்த இதழ் இந்தியாவில் வெளியிடப்படும் மானிடவியல் பருவ இதழ்களுள் முதன்மையானதாகும். இவர் 1920–ஆம் ஆண்டு இலண்டன் நாட்டுப் புறவியல் கழகத்தில் சிறப்பு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பீகார், ஒரிசா ஆகிய மாநிலங்களின் சட்ட மேலவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய மானிடவியலில் இவரது சிறந்த பங்கினைப் போற்றும் வகையில் 1941–ஆம் ஆண்டு இந்திய அறிவியல் கழகம் (Indian Science Congress) ‘மானிடவியல் கட்டுரைகள்’ (Essays in Anthropology) என்னும் ஒரு கட்டுரைத் தொகுப்பினை இவரது 70–ஆம் பிறந்த நாளன்று வழங்கி இவரைச் சிறப்பித்தது. இந்திய மானிடவியல் கழகத்தின் 1983–ஆம் ஆண்டுக் கூட்டத்தில் பேராசிரியர் டாக்டர் சே.எச். அட்டன் (Dr. J.H. Hutton) தம் தலைமை உரையின்போது, இந்திய முதுகுடிகளின் (Aborigines) வல்லுநர் எனப் பெயர் பெற்ற இவரை ‘இந்திய இனக்குழு ஒப்பாய்வியலின் தந்தை’ (Father of Indian Ethnology) எனச் சிறப்பித்தார். இவர் 1913–இல் ‘கைசர்–இ–இந்து’ (Kaiser–i–Hindu) என்னும் பட்டத்தையும், 1919–இல் தமது சமூகச் சேவைக்காகவும் எழுத்தாற்றல் மற்றும் ஆழ்ந்த புலமைக்காகவும் ‘இராய்பகதூர்’ (Rai Bahadur) என்னும் சிறப்புப்பட்டத்தையும் பெற்றார். இவர் 1942–ஆம் ஆண்டு ஏப்பிரல் 30–ஆம் நாள் இயற்கை எய்தினார்.