அட்லாண்டிக் பட்டயம்
aṭlāṇṭik paṭṭayam
இரண்டாம் உலகப்போர் (1939–45) நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அட்லாண்டிக் பட்டயம் (Atlantic Charter) உருவாயிற்று.
இரண்டாம் உலகப்போர் (1939–45) நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அட்லாண்டிக் பட்டயம் (Atlantic Charter) உருவாயிற்று. இது எட்டு நெறிமுறைகள் கொண்டது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் அதிபர் பிராங்க்ளின் டி. ரூசுவெல்ட்டும் (Franklin D. Roosevelt) இங்கிலாந்து நாட்டின் தலைமை அமைச்சர் வின்சுடன் சர்ச்சிலும் (Winston Churchill) அட்லாண்டிக் கடலில், கானடாவிற்கு அருகில் அகசுடா (Augusta) என்ற போர்க்கப்பலில், 1941–ஆம் ஆண்டு ஆகசுட்டுத் திங்கள் 9–ஆம் நாள் முதல் 12–ஆம் நாள் வரை சந்தித்துப் பேசினர். இவ்வுரையாடலின் விளைவாக அவ்விருவரும் 1941–ஆம் ஆண்டு ஆகசுட்டு 14–ஆம் நாள் இப்பட்டயத்தை வெளியிட்டனர். அட்லாண்டிக் கடலில் இருந்த போர்க் கப்பலிலிருந்து வெளியிடப்பட்டதால் இது ‘அட்லாண்டிக் பட்டயம்’ எனக் குறிக்கப்படுகிறது.
அட்லாண்டிக் பட்டயத்தின் எட்டுக் கோட்பாடுகள் வருமாறு:
: அமெரிக்காவும் இங்கிலாந்தும் தங்கள் எல்லைகளையோ பிறவற்றையோ பெருக்கிக் கொள்ளுதல் கூடாது.
: பிறநாட்டு மக்களின் உண்மையான கருத்துகளைக் கேட்காமல் எல்லைகளைப் பெருக்குதற் பொருட்டு அந்நாடுகளைப் பிடித்தல் கூடாது.
: இவ்விரு நாடுகளும் மக்கள் தாம் விரும்பும் ஆட்சியைத் தேர்ந்தெடுக்கும் உரிமையினை வழங்குகின்றன. மேலும், வலுக்கட்டாயமாக உரிமை பறிக்கப்பெற்ற நாடுகள், தாம் இழந்த உரிமையை மீண்டும் பெறச் செய்தல்.
: உலகத்தில் உள்ள அனைத்துப் பெரிய, சிறிய நாடுகளும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு வாணிகம் நடத்தவும் மூலப் பொருள்களைத் தடையின்றிக் கொண்டு செல்லவும் இவ்விரு நாடுகளும் இப்பட்டயத்தின் மூலம் முயற்சிகளை மேற்கொள்ளும்.
: உலக நாடுகளுக்கிடையே உடலுழைப்பை ஏற்படுத்திப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு அளித்து அவர்களின் தரத்தை உயர்த்தவும், சமூகப் பாதுகாப்பு ஏற்படுத்தவும் இவ்விரு நாடுகளும் விரும்புகின்றன.
: நாசிகளுடைய (The Nazis) கொடுங்கோன்மை ஆட்சியை அழித்த பின், மக்கள் தங்களது நில எல்லைக்குள் அமைதியாக வாழவும், அவர்களது சொந்த நாட்டிற்குள் உரிமையுடனும் அச்சமின்றியும் தேவைகளை விரும்பியவாறு பெறவும் இவ்விரு நாடுகளும் வழிவகை செய்யும் என்று இப்பட்டயம் உறுதியளிக்கிறது.
: இவ்வமைதியால் மனிதன் தடையேதுமின்றிக் கடல்களையும் பெருங்கடல்களையும் கடந்து செல்ல முடியும் என இப்பட்டயம் கூறுகிறது.
: உலக நாடுகள் அனைத்தும் தங்களுடைய நலனுக்காகப் படை வலிமையைப் பெருக்குவதைத் தவிர்க்கும் என இவ்விரு நாடுகளும் நம்புகின்றன. நிலத்திலோ கடலிலோ வானிலோ போர்ப்படை வலிமையைப் பெருக்கி அமைதியாக வாழ முடியாமல் பிற நாடுகளைத் துன்புறுத்த விரும்பினால், அந்நாடுகளுக்குப் பொதுவான, நிலையான பாதுகாப்பு அளிக்க இப்பட்டயம் வழிவருக்கிறது.
மக்கள் இவ்வகைப் படைவலிமைப் பயத்திலிருந்து விடுபட்டு, அமைதியும் அன்பும் கலந்த நல்வாழ்வை. அனுபவிக்க இந்நாடுகள் வழிவகை செய்யும்.
இப்பட்டயம், இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட அச்சு (Axis Powers) நாடுகளின் வலிமைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நிலை ஆவணம் ஆகும். ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் நேச நாடுகள், 1942 சனவரித் திங்கள் 1–ஆம் நாள் வாசிங்டன் டி.சி.யில் (Washington D.C.) கையெழுத்திட்டன. பின்னர், 26 நாடுகள் ஐக்கியநாட்டு அறிக்கையின் மூலக் கருத்துகள் தாங்கிய இப்பட்டயத்தை ஏற்றுக் கொண்டன. இப்பட்டயத்தினை மீண்டும் உறுதிசெய்யும் வண்ணம் 1954-ஆம் ஆண்டு சூன் மாதம் சர்ச்சிலும் அப்பொழுதைய அமெரிக்க அதிபர் ஐசனோவரும் இதன் கோட்பாடுகளை முறைப்படுத்தினர்.
துணை நூல்கள்
Grant, A.J. and Harold Temperley., “Europe in the Nineteenth and Twenteeth Centuries”, Lillian, M. Penson, Longman Group Ltd., 1982.
Hayes, J.H., “Contemporary Europe Since 1870”, Delhi, Surject Publications, 1981.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 221)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z8r6bgwv/
தமிழ்“அட்லாண்டிக் பட்டயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/z8r6bgwv/APA
Oliyon Research. (2026). அட்லாண்டிக் பட்டயம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z8r6bgwv/MLA
"அட்லாண்டிக் பட்டயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/z8r6bgwv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment