அரிசமய தீபம்
aricamaya tīpam
வைணவ சமய அடியார்களாகிய ஆழ்வார்கள், ஆசாரியர்கள் ஆகியோரின் வரலாற்றினை விருத்தப் பாக்களால் கூறும் தமிழ் நூல்.
வைணவ சமய அடியார்களாகிய ஆழ்வார்கள், ஆசாரியர்கள் ஆகியோரின் வரலாற்றினை விருத்தப் பாக்களால் கூறும் தமிழ் நூல். இதன் ஆசிரியர் கீழையூர்ச் சடகோபதாசர், கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவருள் ஒருவராவார். இவர், தொண்டை நாட்டிலிருந்து தென்னாட்டுக்குச் சென்ற வல்லை காளத்தியப்ப முதலியார் மரபில் தோன்றியவர். இவர் சடகோபராமானுச முதலியார் என்றும் பெயரொடு, நாகப்பட்டணம் வட்டத்தைச் சார்ந்த கீழையூரில் மிக்க புகழோடு வாழ்ந்தார். இவருடைய புதல்வர் பத்தராவி முதலியார் ஆவார். இந்நூலாசிரியர் சிறந்த வைணவ சமயச் சீலராய் விளங்கிச் சடகோபதாசர் எனும் பெயர் பூண்டு, இந்நூலினை இயற்றியுள்ளார்.
இந்நூல், பரமபதச் சருக்கம், ஆதி யோகிச் சருக்கம். பத்தி சாரச் சருக்கம், பராங்குசச் சருக்கம், குலசேகரச் சருக்கம், பதுமைச் சருக்கம், முனிவாகனச் சருக்கம், விப்பிரநாராயணச் சருக்கம், பட்டநாதச் சருக்கம், கோதைச் சருக்கம், பரகாலச் சருக்கம், நாதமுனிச் சருக்கம் யாமுநச் சருக்கம், இராமானுசச் சருக்கம் ஆகிய பதினான்கு சருக்கங்கள் கொண்டமைந்துள்ளது. பெரியாழ்வார் திருமகளாகிய ஆண்டாளின் சரிதம் அவர் வரலாற்றில் அடங்குவதாலும், மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் சீடராய் அமைவதாலும் இவ்விரு ஆழ்வார்களின் வரலாறு தனித்தனியாக இந்நூலில் கூறப்படவில்லை. ஏனைய ஆழ்வார்களின் வரலாறுகளையும், நாதமுனிகள், யாமுனாச்சாரியார், இராமானுசர் ஆகிய ஆசாரியர்களின் வரலாறுகளையும் இந்நூல் விரிவாகக் கூறுகிறது. ‘வளை பொய்கை’ எனத் தொடங்கும் துதிக் கவியினை அடுத்து, நான்கு நூன்முகச் செய்யுள்களையும் கொண்டு இந்நூல் தொடங்குகிறது.
இந்நூல் முதலாழ்வார்கள் முதல் இராமானுசர் வரையிலுள்ள வைணவச் சான்றோர்களின் வரலாறுகளையே கூறுகிறது. இராமானுசருக்குப் பின்னர் வைணவ ஆசாரிய பரம்பரை வடகலை தென்கலை எனப் பிரிவுபட்டுச் செல்வது நோக்கி இந்நூலாசிரியர் இராமானுசர் வரலாற்றோடு இதனை, நிறுத்திவிட்டார் என்று இந்நூலை 1904–ஆம் ஆண்டில் பதிப்பித்த சே. முத்துக் கிருட்டிண நாயுடு கூறுகின்றார். அதனால் இந்த நூல் வடகலை தென்கலையாகிய இருகலையினர்க்கும் உரியதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நூலுக்குச் சே. முத்துக்கிருட்டிண நாயுடு எழுதிய பொழிப்புரையும், கா.ர. கோவிந்த ராச முதலியார் எழுதிய உரையும் உள்ளன.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 778)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z8r357r7/
தமிழ்“அரிசமய தீபம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/z8r357r7/APA
Oliyon Research. (2026). அரிசமய தீபம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z8r357r7/MLA
"அரிசமய தீபம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/z8r357r7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment