அரசியல் குழப்பம் என்பது தீவிர நிலையிலுள்ள தனியார் சுதந்திரக் கோட்பாட்டை எடுத்துக் காட்டுகிற சமூக அமைப்புப் பற்றிய ஒரு கோட்பாடு ஆகும். எல்லா அரசாங்கமும், சட்டமும் மனிதருடைய சுதந்திரத்தை அழிப்பன. எனவே மக்களின் விருப்பத்தின்பேரில் அமைக்கப்படுகிற அரசாங்கத்தைத் தவிர மற்ற, இப்போதுள்ள அரசாங்கங்கள் ஒழிக்கப்படுதல் வேண்டும். ஒழுங்கில்லாததொரு சமுதாயத்தை நிறுவுதல் வேண்டும் என்று குழப்பவாதிகள் (Anarchists) கூறுவதில்லை. ஒழுங்கு என்பது தம்மைத் தாமே ஆண்டுகொள்ளும் குழுக்கள் மூலமே தோன்றுகிறது. குழுவினின்று கிடைக்கும் நற்பயன்களெல்லாம் கட்டுப்பாடில்லாத சுதந்திரமான முறையின் வாயிலாகவே வருகின்றன. தனியார் உரிமைகளை மதிக்கும் இயல்பு மனிதனிடத்தில் சுதந்திரமான சூழ்நிலையில் காணப்படுகிறது. குற்றங்களை ஒடுக்குதல் என்னும் செயல், மக்களாலே அமைக்கப்பட்ட கவனக் குழுக்களுக்கு விடப்படலாம். இத்தகைய குழுக்கள் கலிபோர்னியாவில் மாநில அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு முற்பட்ட காலத்தில் இருந்தன. உருசிய நாட்டு குரோபோட்கின் (கி.பி. 1842–1921), “தொழிலாளரால் தோற்றுவிக்கப்பட்ட செல்வத்தை முறையற்ற வகையில் பகிர்வதாலும், இப்போதைய வருக்கச்சலுகைகளாலும் (Class Privileges) குற்றம் தோன்றுகிறது” என்று கூறினார். கட்டாய அரசாங்க முறைகளையும், குடியாட்சியில் பெரும்பாலானவருடைய எதேச்சாதிகாரத்தையும் எல்லாக் குழப்பவாதிகளும் எதிர்க்கின்றனர். பிரவுதான் (கி.பி 1809–1865) என்ற பிரெஞ்சு சிந்தனையாளர் குழப்ப இயல் தனியார் உரிமைக் கோட்பாட்டை (Anarchist Individualism) வகுத்தார். குரோபோட்கின் குழப்ப இயல்பான பொதுவுடைமைக் கோட்பாட்டாளர் (Anarchist Communist). பிரவுதான் (Prouthon) வல்லந்தத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் குழப்ப இயல் தோற்றுவித்த வல்லந்தத்தைப் பாக்கூனின் (கி.பி. 1814–1876) என்பவர் ஆதரித்தார். இவர் அமைதியான புரட்சியை எதிர்த்தார். அச்சுறுத்தும் நோக்கத்தோடு சமூக சீர்திருத்தத்தை அடையவும், அரசையே ஒழிக்கவும் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் சூழ்ச்சிகள் செய்யப்பட்டன. செருமானிய அரசர்களைக் கொல்ல முயற்சிகள் நடந்தன. ஆசுதிரியப் பேரரசர், பிரெஞ்சுக் குடியரசுத் தலைவர், இத்தாலிய அரசர், அமெரிக்க ஐக்கிய நாட்டுக் குடியரசுத் தலைவர் ஆகியோர் கொல்லவும் பட்டனர். குரோபோட்கினும் பிரவுதானைப் போல் சொத்துரிமையை மறுத்தார். சுருங்கச் சொல்லின் குழப்ப இயல் கருத்து தனிப் பொதுவுடைமைக் கோட்பாடாக (Pure Communism) ஆயிற்று. அரசியல் குழப்பம் (Anarchy) என்ற கருத்தும் ஆட்சிவேண்டாக் கோட்பாட்டைப்போல் மறுப்புக்கு உரியதாகும். தனியார் சொத்துரிமையைப் பெருமளவில் கட்டுப்படுத்துதல்தான் மனித இயல்புக்கு ஏற்ற கோட்பாடு என்பதும், தனியார் சொத்துரிமையை அறவே ஒழித்தல் நடைமுறையில் இயலாது என்பதும், சங்கங்கள் மட்டுமே கட்டுப்பாடு ஏதுமின்றிப் பொருளுற்பத்தி, பகிர்வு முதலியவற்றைச் செய்வனே செய்தல் இயலாதென்பதும், சங்கங்களிடையே ஏற்படும் முரண்பாட்டை நீக்குவதற்கும், அவைகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தற்கும், அவற்றை விட வலிமை மிக்க தலைமையான அதிகாரத்தை உடைய ஓர் அரசு தேவை என்பதும் வரலாற்றிலிருந்து தெரியவருகின்றன.பா.சூ.