தென் மேற்கு ஆசியாவில் கருங்கடலின் தென்கிழக்கிலும் காசுபியன் கடலின் தென் மேற்கிலும் இருந்த தொன்மையான பகுதி, இப்பகுதியில் கி.மு. 8–ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் உரார்த்து (Urartu) என்னும் அரசு ஆட்சி புரிந்து வந்தது. உரார்த்திய மக்கள் போரிடுவதில் வல்லவர்களாக விளங்கினர். உரார்த்தின் முதன்மைக் கடவுளான கால்திசின் (Khaldisu) பெயரால் உரார்த்திய அரசு கால்தியா (Khaldia) என்றும் கூறப்பட்டது. உரார்த்து அரசு பற்றி அசிரியர்களின் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. உரார்த்து அசிரியப் பேரரசின் வடக்கே இருந்தது. உரார்த்தியர்கள் அடிக்கடி அசிரியர்களுடன் போரிட்டு வந்தனர். உரார்த்தின் தலைநகர் வான் (Van) என்னும் ஏரிக் கரையிலமைந்திருந்த துசுபா (Tushpa) நகரம் ஆகும். உரார்த்திய அரசின் ஆதிக்கம் துருக்கியிலுள்ள சில்திர் (Cildir), வான் ஏரிப்பகுதிகள், ஈரானில் உள்ள உர்மியா (Urmia), சோவியத்து அர்மீனியக் குடியரசிலுள்ள செவன் ஆகிய ஏரிப்பகுதிகளிலேயே அமைந்திருந்தது. உராத்தியர்கள் ஊரியன்களின் (Hurrians) பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்தனர். இவ்விரு இனமக்களும் பல பொதுத் தன்மைகள் பெற்றிருந்தனர். அசிரியர்களின் கலை, இலக்கிய எழுத்தமைதியை இம்மக்கள் பயன்படுத்தினர். அசிரியர்களுக்கும் உரார்த்தியர்களுக்கும் இடையின் பண்பாட்டுக் கலப்பு இருந்தது. முதலாம் சர்தூரி (Sarduri I, கி.மு. 840–830) என்னும் உரார்த்திய அரசர் வெளியிட்ட கல்வெட்டுகளே உரார்த்தியர்களைப் பற்றி அறிய உதவும் முதல் சான்றுகளாக உள்ளன. அவர்தம் மகன் இசுபியுனி (Ishpuini, கி.மு. 830–810) என்பவர் காலத்திலும் அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த அவர்தம் மகன் மினூயா (Meinua, கி.மு. 810–781) காலத்திலும் உரார்த்தியர்கள் பல போர்களைச் செய்து பல பகுதிகளைக் கைப்பற்றி உரார்த்து அரசை விரிவுபடுத்தினர். இவ்வரசர்களின் கல்வெட்டுகள் மேற்கே எலாசிகு (Elazig) நகரம் முதல் வடக்கே அராசு (Aras) வரையிலும், தெற்கே உர்மியா ஏரிக்கரை வரையிலும், தென்கிழக்கில் அர்தினி (Ardini) அல்லது முசாசிர் (Musasir) வரையிலும் உள்ள பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உரார்த்தியர்கள் அர்தினியாவிலிருந்த அல்தி (Haldi) என்னும் கோயிலுக்குப் பல கொடைகள் வழங்கி ஆதரவு அளித்தனர். இக்கோயிலில் அசிரியர்கள் வழிபடவும் அனுமதி அளிக்கப்பட்டது. மினூயா காலத்தில் நாட்டில் வேளாண்மை பெரிதும் வளர்ந்தது. இவர் வெட்டிய கால்வாய் ஒன்று மினூயாக் கால்வாய் என்று கூறப்படுகிறது. இக்கால்வாய் மூலம் நிலங்களுக்கு நீர் எளிதில் கொண்டு செல்லப்பட்டது. இக்கால்வாய் 28 கி.மீ. நீளமுடையது. மினூயாவை அடுத்து அவர்தம் மகன் முதலாம் அர்கிசுத்தி (Arguishti I. கி.மு. 780–765) ஆட்சிக்கு வந்தார். இவர் காலத்திலிருந்துதான் உரார்த்து அரசைப் பற்றி அறிந்து கொள்ள முழுமையான வரலாற்று ஆவணங்கள் கிடைக்கின்றன. இவ்வரசர் காலம் முதல் அடுத்து வந்த இரண்டாம் சர்துரி (Sarduri II. கி.மு. 755–735) காலம்வரை பல வரலாற்று ஆவணங்கள் வான் ஏரிக்கரைப் பகுதியிலுள்ள பாறைகளில் எழுதப்பட்டுள்ளன. இவர்கள் காலத்தில் உரார்த்தின் ஆதிக்கம் மேற்கில் விரிவடையத் தொடங்கியது. முதலாம் அர்கிசுத்தி கி.மு. 777-இல் மெலிதீன் (Melitene) நகரைக் கைப்பற்றினார். இதனை மறுமுறை இவர் மகன் இரண்டாம் சர்தூரியும் கைப்பற்றினார். இரண்டாம் சர்தூரி கோம்மாசென் அரசர் குசதசுபி (Kushtashpi of Commagene) என்பவரைக் கி.மு. 745–ஆம் ஆண்டளவில் தோற்கடித்தார். சர்தூரியின் தந்தையான முதலாம் அர்கிசுத்தியும் தாபல் (Tabal) அரசர் துயட்டு (Tuate) என்பவரைத் தோற்கடித்து, அந்நாட்டின் ஒரு பகுதியை உரார்த்துடன் இணைத்தார். இவ்விரு அரசர்களின் காலத்திலும் உரார்த்தின் ஆதிக்கம் பெரிதும் விரிவடைந்தது. இவ்வரசர்கள் உள்நாட்டிலும் வேளாண்மையைப் பெருக்கினர்; பல ஏரிகளை நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுத்தி நாட்டின் விளைபொருள்களைப் பன்மடங்காக்கினர். உரார்த்து அரசு அடுத்துவந்த உரார்த்திய அரசர்கள் அசிரியாவுடன் போரிடுவதிலேயே ஈடுபட்டனர். அசிரியர்கள் கி.மு. 744 முதல் கி.மு. 715 வரை தங்கள் வலிமையைப் பெருக்கி உரார்த்தியர்களின் ஆதிக்கத்தை வீழ்த்துவதில் முனைந்தனர். அசிரிய அரசர் மூன்றாம் திக்லத்-பைல்சரும் (Tiglath – Pileser III) அவர் மகன் இரண்டாம் சார்கோனும் உரார்த்திய அரசர் முதலாம் உரூசாசு (Rusas I) என்பவரைத் தோற்கடிக்க முயன்றனர். சார்கோன் தம் மகனான சென்னா செரிபு என்பவரை உளவறிந்து வர உரார்த்திற்கு அனுப்பி வைத்தார். முதலாம் உருசாசு அப்போது காகசசுப் பகுதியிலிருந்த நாடோடிக் கூட்டத்தினரிடம் போரிடுவதில் ஈடுபட்டிருந்தார். போரில் உரார்த்தியர்கள் பலமிழந்து காணப்பட்டமையால், உரூசாசு தம் படைவீட்டிலிருந்து தலைநகர் திரும்பினார். இந்நேரத்தைப் பயன்படுத்தி சார்கோன் உரார்த்து மீது படையெடுத்தார். இவ்வேளையில் உரூசாசால் நாடோடிக் கூட்டத்தாருடன் போரில் ஈடுபட்டிருந்த தம் படைத்தளபதிகளுடன் தொடர்பு கொள்ள இயலவில்லை. உரூசாசு தோற்கடிக்கப்பட்டு, மலைப்பகுதியில் தப்பித்து மறைந்து வாழ்ந்து வந்தார். சார்கோன் பன்முறை உரார்த்தைச் சூறையாடினார். இறுதியில் அர்தினி (Ardini) கோயிலைச் சூறையாடிக் கோயிலினுள் இருந்த அல்தி (Haldi) என்னும் கடவுளின் சிலையைத் தம் நாட்டிற்குத் தூக்கிச் சென்றார். நாட்டை எதிரியின் தாக்குதலிலிருந்து காப்பாற்ற இயலாமல் மறைந்து வாழ்ந்த உரார்த்திய அரசர் உரூசாசு, இதனைக் கேள்வியுற்றுத் தற்கொலை செய்து கொண்டார். உரூசாசின் இறப்பிற்குப்பின் அவர் மகன் இரண்டாம் அர்கிசுத்தி பெயரளவில் அரசரானார். இவர் நாட்டின் வேளாண்மையைப் பெருக்கினார். உரார்த்தியர்களின் ஆதிக்கம் நாளடைவில் தளர்த்தப்பட்டு, இறுதியில் கி.மு. 7–ஆம் நூற்றாண்டில் அர்மீனியர்களால் முடிவுக்குச் கொண்டுவரப்பட்டது. உரார்த்தியக் கல்வெட்டுகள் பெரும்பாலும் அவர்களது சமயத்தை பற்றியே குறிப்பிடுகின்றன. உரார்த்தியக் கடவுள்களின் பெயர்கள், அவர்களை வழிபடும் முறை பற்றி இக்கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இவர்களின் சமூகம் அடிமைகளைக் கொண்டு விளங்கியது. உரார்த்தியர்கள் கட்டடக் கலையில் பெரிதும் நாட்டம் உடையோர். அரசர்கள் கோட்டைகளையும் நகரங்களையும் வேளாண்மைக்காகக் கால்வாய்களையும் கட்டினர். இவர்களின் கட்டடக் கலைக்குச் சிறந்த சான்றாக விளங்குவது தீசுபைனி (Teisbaini) என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் அரண்மனை ஆகும். இவ்வரண்மனையில் உணவு, எண்ணெய், மது, கருவிகள் ஆகியவற்றைச் சேமிக்கும் பெரும் அறைகள் காணப்படுகின்றன. இவ்வரண்மனை 10 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டது. ஏறக்குறைய 120 அறைகளாக இவ்வரண்மனைப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வறைகளைச் சுற்றிச் சுற்றுச் சுவர்கள் கருங்கல்லாலும் சூரிய வெப்பத்தில் காய வைக்கப்பட்ட செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளன. இச்சுவர்களின் ஒவ்வொரு மூலையிலும் உயர்ந்த தூபி போன்ற அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதிலுள்ள அறைகளின் உயரம் 32 அடியாகும். கோடைக் காலத்திலும் உள்ளே குளிர்ச்சியாக இருக்கும் வகையில் இவ்வரண்மனை கட்டப்பட்டுள்ளது. அறைகளின் கூரைகள் மரத்தால் வேயப்பட்டவையாகும். இவ்வரண்மனையைத் தவிர, பொதுவான வீடுகள் பல நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வீரர்களும் வேளாண் மக்களும் வணிகர்களும் தட்டையான கூரை வீடுகளில் வசித்தனர். இவ்வீடுகள் பொதுவாக மூன்று அறைகளைக் கொண்டு விளங்கின. இந்நகரம் புயலால் சிறிது அழிந்தது. பின்னர், சித்தியர்களால் (Scythians) நெருப்பினால் கி.மு. 585–இல் தீக்கிரையாக்கப்பட்டது. துணை நூல்கள் Tull, G.K., Early Civilisations, Blandford Press, London, 1968. Upadhyaya, B.S., The Ancient World, S. Chand&Co., New Delhi, 1976.