சூல் பையின் கழுத்து
cūl paiyiṉ kaḻuttu
பேரிக்காய் வடிவில் இருக்கும் சூல் பை 3 செ.மீ.
பேரிக்காய் வடிவில் இருக்கும் சூல் பை 3 செ.மீ. நீளமும், 6.5 செ.மீ. அகலமும், 3.5 செ.மீ. பருமனும் கொண்டது. உடற்கூறு சார்ந்தும், பணி சார்ந்தும், இதை உடல் என்றும், கழுத்து என்றும் பிரிக்கலாம். இவ்விரண்டும் சேரும் இடத்தில், உள் வாயில் இருக்கிறது.இங்கு உடலின் சிலேட்டுமப் படலம், கழுத்தின் சிலேட்டுமமாகத் தொடர்கிறது.
கழுத்து, யோனிப் பகுதி, யோனி மேற்பகுதி எனப் பிரிக்கப் படுகிறது. யோனிப் பகுதி யோனிக்குள் துருத்துகிறது. கன்னிப் பெண்களில், கூர் உருளையாகவும் பல மகவு ஈன்ற பெண்களில் குட்டையாகவும், தட்டையாகவும் இருக்கும். கருப் பையின் கூரை, கருக் குழல் பொதிந்த இடத்திற்கு மேல் இருக்கிறது. கருப் பைக் குழிவு உள் வாயில் மட்டத்தில் குறுகலடைந்து, கழுத்துக் கால்வாயுள் செல்கிறது. கழுத்துக் கால்வாய் உள் வாயிலிருந்து வெளி வாயில் வரை சென்று யோனிக்குள் திறக்கிறது.
குழந்தை பெறாத பெண்களின் வெளி வாயில் வட்ட வடிவமாகவும், குழந்தை ஈன்ற பெண்களில் கிடை மட்டப் பிளவு போன்றும் இருக்கிறது. சூல் பைக் கழுத்தின் (cervix) சிலேட்டுமப் படலம், யோனியின் கீழ்ப் பகுதியின் தோல் போன்று இருக்கிறது. அதில் பல மடிப்புகள் காணப்படுகின்றன. முன் புறத்திலிருந்து பின்னோக்கிக் குறுக்காகப் பள்ளங்கள் செல்கின்றன.
சூல்பைக் கழுத்தின் சிலேட்டும உறையில், சளி அடிப் படலம் இல்லை. கருப் பைக் கழுத்து, அதன் சுரப்பிகள் ஆகியவற்றின் புறத் தோல், நேரடியாகச் சூல் பைக் கழுத்தின் கருவகத் தசையுடன் (myometrium) தொடர்பு கொள்கிறது. கழுத்துச் சுரப்பிகள் பல வடிவத்துடன் அமைந்து, கார்போஹைட்ரேட் நிறைந்த சளியைச் சுரக்கின்றன. இது கார நிலையில் காணப்படுவதால், விந்தணுக்களைக் கவர்கிறது. இச்சுரப்பு, சூல் பைக் கழுத்தின் துளையை மூடிக் கொண்டு, நுண்ணுயிரிகளின் தாக்கம் ஏற்படாமல் தடுக்கிறது. இதன் புறத் தோல் தூண் போன்று அமைந்து, கூருருளை வடிவ உட்கருக்களைக் கொண்டுள்ளது. இதிலுள்ள இழைகளின் அசைவு, வெளி வாயிலை நோக்கியிருக்கும். சூல் பைக் கழுத்தின் கருவகத் தசை, மாத விடாய் வட்டத்தின் போது மாற்றம் அடைவதில்லை.
சூல் பைப் புற்று, கோளப் புற்றாகத் (adenocarcinoma) தீங்கு குறைந்து இருக்கும். கருப் பைக் கழுத்துப் புற்று பெரிதும் தீங்கு வாய்ந்த செதில் (squamous) செல் கொண்டது. சூல் பை உடலுக்கும், கழுத்துக்கும் இடைப்பட்ட குறுகிய பகுதி, இடுக்கு (isthmus) எனப்படும். கழுத்தின் நீளமும், சூல் பை உடலின் நீளமும், வயதைப் பொறுத்து மாறுபடும். பத்து வயதில் 2:1 ஆகவும், பூப்படைந்தவுடன் 1:2 ஆகவும், முதிர்ச்சியடைந்ததும் 1:4ஆகவும், இருக்கும்.
சூல் பைக் கழுத்து அழற்சி. சீழ் சார்ந்த கருச் சிதைவு, பேறு காலப் பின் நிலைச் சீழ், வெட்டை நோய் ஆகிய நோய் நிலைகளில் சூல் பைக் கழுத்து அழற்சி (cervicitis) தீவிரம் அடைகிறது. யோனி சிவந்து, வீக்கமும், சீழ் சளிச் சுரப்பும், தொடு வலியும் தோன்றும். தீவிர வெட்டை அழற்சியில் பின் முதுகு வலியும், கீழ் வயிற்று உப்புசமும் காணப்படும். கருவகத் தசை (myometrium) அழற்சியும் உடன் இருக்கலாம். சீழ் கொண்ட கருச் சிதைவிலும், பேறு கால நுண்ணுயிர்ப் பின் பாதிப்பிலும், தீவிரமான கழுத்து அழற்சியை விடக் கருப் பையக (endometrium) அழற்சியே பெரிதும் காணப்படும். அழற்சியின் காரணத்தைக் கண்டு பிடித்து, மருத்துவம் அளிக்க வேண்டும்.
கருப் பையின் நாட்பட்ட அழற்சி.. இது அடிக்கடி நிகழக் கூடியதாகும். கருச் சிதைவின் போதோ, குழந்தைப் பிறப்பின் போதோ ஏற்படும் கருப் பைக் கழுத்துக் கிழிசல் இந்நிலையை உண்டாக்கலாம். இந்தக் கிழிசல் சீரடையா விடில், கிழிபட்ட பகுதிகளின் விளிம்புகள் வெளியே திறந்து, கருப்பைக் கழுத்துக் கால்வாய் பெரியதாகி, யோனியிலிருந்து நச்சுயிரிகள் உட்புகுந்து நாட்பட்ட அழற்சியை உண்டாக்கலாம். சூல் பைக் கழுத்தை விரிவு படுத்த கருவிகளைப் பயன் படுத்துவதும் இத்தகைய விளைவை ஏற்படுத்தலாம்.
கடும் அழற்சி நாட்பட்ட அழற்சியாக மாறலாம். சூல் பைக் கழுத்துக் கால்வாய் சீரற்று உள்ளமையாலும், சுரப்பிகள் பல வடிவில் காணப் படுவதாலும், உட்சென்ற உயிரிகள் நுண்ணுயிர் எதிர் மருந்துகளால் பாதிக்கப் படாத இடங்களில் தங்கி விடும். மேலும், கருப் பைக் கழுத்தின் சிலேட்டுமப் படலம், மாத விடாயின் போது, உதிர்ந்து விடுவதில்லை. ஆகவே, நுண்ணுயிர்ப் பாதிப்பு நீடிக்க வாய்ப்பு உண்டு. இங்கிருந்து நோய் பிற இடங்களுக்குப் பரவி, மலட்டுத் தன்மையை உண்டாக்கும். நாட்பட்ட அழற்சியுடன் அரிப்புப் புண்ணும் தோன்றலாம். கருப் பைக் கழுத்தின் அனைத்துப் பகுதியுமே பாதிக்கப்படலாம். நோய் வரலாற்றிலிருந்தும், நோயாளியின் கோளாறுகளிலிருந்தும், நோயை உறுதி செய்யலாம். புற்று நோயிலிருந்து பிரித்தறிய, பிணிக் கூற்று ஆய்வு தேவையாகும்.
இந்நோய்க்குச் சுட்டுப் பொசுக்கல் முறை சிறந்தது. சூல் பைக் கழுத்தின் திசுக்கள் உறைந்து தூண் புறத் தோல் சிதைக்கப் பட்டு, நாளடைவில் யோனிப் பகுதியில் செதில் புறத்தோலியம் (squamous epithelium) உண்டாகலாம். அண்மைக் காலமாகப் பாதிக்கப்பட்ட பகுதியைச் சுட்டுப் பொசுக்கல் முறை மூலம் அகற்றி விடுகின்றனர். —சாரதா கதிரேசன் நூலோதி. John Hawkins, Shaw's Text Book of Gynaecology, Ninth Edition, Churchill Livingstone, London, 1971; P.C. Williams et.al., Grays Anatomy, Thirtysixth Edition, Churchill Livingstone, London. 1980.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 672)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yshemtpz/
தமிழ்“சூல் பையின் கழுத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/yshemtpz/APA
Oliyon Research. (2026). சூல் பையின் கழுத்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yshemtpz/MLA
"சூல் பையின் கழுத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/yshemtpz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment