மக்கள்தொகைப் பெருக்கம் இயற்கையான பாலுணர்ச்சியின் அடிப்படையில் தோன்றுகிறது என்ற இயற்கை விதிக் கோட்பாட்டிற்கு எதிராக இக்கோட்பாடு உருவானது. தாமசு இராபர்ட் மால்தசு என்னும் பொருளியல் பேரறிஞர் முதன் முதலாக மக்கள்தொகைப் பெருக்கம் பற்றிய தம் ஆய்வுக் கருத்துகளை நூல்களின் மூலம் கி.பி. 1798–இலும் கி.பி. 1803–இலும் வெளியிட்டார். அன்றிருந்து மக்கள்தொகையியல் (Demography) பல ஆய்வுக்குட்பட்டுச் சிறந்த கருத்துத் தொகுப்புகளை வழங்கி வருகிறது. உயிரியல் சார்ந்த மாற்றங்கள் மனிதனில் ஏற்படுவதன் அடிப்படையில் மனித சமுதாயத்தின் படிமுறை வளர்ச்சி (Evolution) மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று இசுபென்சரும் (Herbert Spencer) கினியும் (Gini) கூறினர். இவ்வாறு ஏற்படும் உயிரியல் சார்ந்த இயற்கை மாற்றங்கள் அறுதியான தாக்கமுடையன என்று இவர்கள் உறுதியாகக் கருதினர். மனிதனது கருத்தரிக்கும் திறன் (Facundity) குறைபடுதல், இம்மாற்றங்களில் மிகவும் திட்டமான விளைவுகளை உண்டாக்க வல்லது. எனவே, இனப்பெருக்கத்திறன் ஊறுபட்ட பின்னர், மக்கள்தொகைப் பெருக்கமோ சுருக்கமோ மனிதனின் கட்டுப்பாட்டிற்கப்பாற்பட்டு, படிமுறை வளர்ச்சி ஆற்றலில் மனிதன் மேலும் கட்டுப்பாடு செலுத்த இயலாதவனாக ஆகிறான். உயிரியல் மக்கள்தொகைக் கோட்பாட்டுக் (Biological Theory of Population) கருத்துகளைத் தோற்றுவித்த இசுபென்சர் (கி.பி. 1820–1903) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவர்தம் உயிரியல் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் இவருக்கு முன்னோடிகளான சாட்லரும் (Sadler) தபுள்டேயும் (Double day) எழுதிய கருத்துகளை ஒட்டியவையாகும். மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு மனிதன் மட்டுமே காரணமாயிருக்க முடியாது. இதற்கு இயற்கைச் சக்திகளும் இன்றியமையாக் காரணிகளாக விளங்குகின்றன. மனிதன் தன் காலத்தையும் ஆற்றலையும் தன் சொந்த அறிவு வளர்ச்சி, பொது அறிவியல், பொருளாதார சமூக முன்னேற்றம் ஆகியவற்றிற்காகச் செலவிடும்போது, இனப்பெருக்கத்திற்குக் கவனம் செலுத்தாமற் போகிறான் என்பது இசுபென்சர் கோட்பாட்டில் அடிப்படைக் கருத்து. குறிப்பாக, பெண்கள் அறிவு வளர்ச்சி சார்ந்த ஈடுபாடுகளில் கவனம் செலுத்தும்போது அவர்களது கருத்தறிக்கும் திறன் கீழிறங்குகிறது. இதன் விளைவாக மக்கள் தொகைப் பெருக்கம் மந்தநிலை அடைகிறது. சமுதாய முன்னேற்றப் போக்குப் பெண்கள் மிகுதியாகத் தங்கள் சொந்த வளர்ச்சியில் ஈடுபாடு செய்யத் தூண்டுவதாக அமைகிறது. அதுவும் அவர்களது கருத்தரிக்கும் திறனைக் குறைக்கிறது. மூளை உழைப்பு மிகுதியாக மிகுதியாக, பெண்களின் இனப்பெருக்கத் திறன் (Fertility) குறைவுபடுகிறது என்று இசுபென்சர் கருதினார். உயர்குடிப் பிறந்த பெண்கள் ஏழைப் பெண்களை விட அதிகச் சத்துள்ள உணவைப் பெறுகிறார்கள். எனினும், அவர்களது இனப்பெருக்கத் திறன் குறையுள்ளதாக இருப்பதற்கு வேறு காரணம் இருக்க முடியாது. அவர்கள் தங்கள் மூளை உழைப்பை மிகைப்படுத்தும்போது அவர்களது உடல் பாதிக்கப்படுகிறது. அது நேரடியாக அவர்களது இனப்பெருக்கத் திறனைப் பாதிக்கிறது. அது மட்டுமன்றி அவர்களது கருத்தரிக்கும் திறனும் நாளடைவில் ஊனமடைகிறது. ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மேல் அவர்களால் பெறமுடிவதில்லை. அவர்களால் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்து வளர்க்க முடிவதில்லை. சமுதாயத்தின் உயர்மட்டங்களில் உள்ள பெண்கள் மிகவும் கல்வி, பொருளாதாரம், சமூகம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டு அதிக அக்கறை காட்டி வருவதால், சமுதாயத்தின் உயர்மட்டத்தில் மக்கள் தொகைப் பெருக்கம் இல்லை என்று இசுபென்சர் கூறினார். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளின் மக்கள்தொகைப் பெருக்கம் இவ்வகையைப் பின்பற்றினதாகத் தோற்றமளித்தாலும், இதுதான் மந்தமான மக்கள்தொகைப் பெருக்கத்திற்குக் காரணம் என்று கூறிடப் போதிய ஆதாரம் இல்லை. மேலும், இனப்பெருக்கத்தின் மீது மனிதனுக்கு முழுமையான கட்டுப்பாடு இல்லையென்றும், அது அவன் கட்டுப்பாட்டிற்குட்பட்டது என்றும் கூறுதல் ஏற்புடைத்தன்று. இத்தாலிய நாட்டவரான கொராடோ கினி (Corrado Gini, கி.பி. 1884) என்பவர் சமுதாயங்கள் மூலமாக நாடுகள் படிமுறை வளர்ச்சிக்குள்ளாகின்றன என்று தம் உயிரியல் மக்கள்தொகைக் கோட்பாட்டை விளக்கினார். மக்கள்தொகை மாற்றங்கள் மூலமாகவே படிமுறை வளர்ச்சி நடைபெறுகிறது; சமூக, பொருளாதார மாற்றங்களை விட மக்கள்தொகைப் பெருக்க வீதங்களே நாடுகளின் படிமுறை வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகின்றன என இவர் கூறினார். ஒரு சமுதாயத்தின் பலதரப்பட்ட மக்கள் கூட்டம் பல்வேறு மக்கள்தொகைப் பெருக்க வீதங்களுடையதாக விளங்குகிறது; ஆனால், விரைவில் முழு மக்கள் தொகையும் உயிரியல் சார்ந்த ஒரே சீரான குணங்களை அடைந்துவிடுகிறது; கினி பல்வேறு நாடுகளின் புள்ளி விவரங்களை ஆராய்ந்து இக்கருத்தை வெளியிட்டார். ஒரு தலைமுறையில் சிறியதொரு பிரிவினரே பின்வரும் தலைமுறையின் பெரும்பான்மையான மக்கள் எண்ணிக்கையை உண்டாக்குகிறவர்களாக இருக்கின்றனர்; மக்கள் தொகை சுழற்சியான வளர்ச்சி, தேய்வு ஆகியவற்றுக்குட்படுகிறது என்று இவர் கூறினார். கினி ஒரு தனி ஆளின் வாழ்க்கைச் சுழற்சிக்கு மக்கள்தொகைப் பெருக்கச் சுழற்சியை ஒப்பிட்டார். முதலில் மிகத் தீவிர வளர்ச்சி ஏற்பட்டு, பின்னர் மந்தநிலை எழுகிறது. அதன் பிறகு முழுவதுமாக அடைபட்டுப் போகிறது. இப்பருவத்தில் மக்கள் தொகைப் பெருக்கம் கணிசமாகக் குறைந்து செல்கிறது. நாகரிகத்தின் தன்மையும் குறைவுபடுகிறது. ஒவ்வொரு நாடும் இவ்வகையான சுழற்சி விதிக்குட்பட்டதே. கினி கருத்துப்படி, முதற்கட்டத்தில் மிகுந்த கருத்தரிக்கும் திறனுள்ள தலைமுறையினர் மக்கள் தொகைப் பெருக்கத்தை உண்டாக்குகின்றனர். இவ்வித இனப்பெருக்கம் சமுதாயக் கட்டமைப்பில் சிக்கலான அமைப்புகளை உருவாக்குகிறது. பல சமூக இனங்களும் வகுப்புகளும் பிறக்கின்றன. தொழிற்றுறை மற்றும் வாணிக நடவடிக்கைகள் பெருகுகின்றன. மக்கள் தொகைப் பெருக்கம் வளர வளர அதன் அதிகரித்த தேவைகள் உணரப்படுகின்றன. போர் அல்லது குடியேற்றம் அல்லது இரண்டுமாகச் சேர்ந்த காரணங்கள் பெருக்கத்தைத் தாக்குகின்றன. அடுத்த கட்டத்தில் சமூக, பொருளாதாரக் கட்டமைப்பு மேலும் சிக்கலடைகிறது. இதன் விளைவாக மக்கள்தொகைப் பெருக்க வீதம் குறைவுபடுகிறது. இந்தச் சமுதாயத்தின் உயர்குடி இனங்கள் கீழ்க்குடி. மக்களைவிட இனவிருத்தித் திறன் குறைந்தவர்களாக இருக்கின்றனர். இவ்வகையில் உயிரியல் சார்ந்த காரணமே மக்கள்தொகைப் பெருக்கத்தை மந்தப்படுத்துகிறது. இதுவே அடித்தளம். குழந்தைப் பிறப்புகள் குறைவுபடுதல் கருத்தறிக்கும் திறன் குறைவு பாட்டால் ஏற்படுகிறது. மனிதனது இனப்பெருக்கத் திறன், கருத்தரிக்கும் திறன், உயிர்வாழ் வீதம் ஆகியன யாவும் உயிரியல் காரணிகளால் ஏற்படுகின்றன. உயிரியல் மக்கள்தொகைக் கோட்பாட்டின்படி, சூழமைவு முறை உயிரியல் மாற்றமே (Mystique Biological Change) மக்கள்தொகைப் பெருக்கத்திற்கும் சுருக்கத்திற்கும் காரணம் என்பது கூறப்படுகிறது. ஆனால், இன்றைய ஆய்வுகள் இக்கருத்தினை முழுவதுமாக ஆதரிக்கவில்லை. உயிரியல் சார்ந்த மாற்றங்களுக்கும் மக்கள்தொகைப் பெருக்கத்திற்கும் உள்ள உறவுகள் அறியப்படாத மறைபொருளாக இல்லாமல், அனைவரும் அறிந்த உண்மைகளாக இன்று அறியப்பட்டுள்ளன. உயிரியல் மக்கள்தொகைக் கோட்பாடு, சமூக மக்கள் தொகைக் கோட்பாடு போன்றவை யாவும் அந்தந்தக் கால கட்டத்தில் சிறப்பாக விளங்கிய கருத்துகளின் அடிப்படையில் தோன்றியவையே. மக்கள் தொகைப் பெருக்கம் பற்றிய விதி என்று ஒன்றை எல்லாக் காலங்களிலும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாகக் கூற இயலாது என்பது மக்கள்தொகையியலாரின் பொதுவான கருத்து. தா.செ. துணை நூல்கள் Spencer, Herbert, The Principles of Biology, D. Appleton and Company, New York, 1867–68. Spiegel, Henry, W., The Development of Economic Thought–Great Economists in Perspective, John Wiley and Sons, New York, 1952. Alfred Sanvy, Fertility and Survival, Population Problems from Malthus to Mao Tse Tung, Criterion Books, New York, 1961.