இலினாய்
iliṉāy
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இருபத்தோராம் மாநிலமாக கி.பி.
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இருபத்தோராம் மாநிலமாக கி.பி. 1818–ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 3–ஆம் நாள் இணைந்தது. மக்கள் தொகையில் இது அமெரிக்க ஐக்கிய நாடுகளுள் ஐந்தாமிடத்தைப் பெறுகின்றது. இம்மாநிலத்திலுள்ள சிகாகோ மாநகரமே அமெரிக்காவின் இரண்டாம் பெரு நகரமாகும். இலினாய் (Illinois) மக்கள் தம் மாநிலத்தை இலிங்கனின் நிலம் என்று அன்பாகக் குறிப்பிடுவர். ஆபிரகாம் இலிங்கன் இம்மாநிலத்தில்தான் தம் வாழ்வின் பெரும்பங்கைக் கழித்தார். இதன் தலைநகர் இசுபிரிங்குபீல்டு நகரமாகும். இங்குத்தான் இலிங்கன் அடக்கம் செய்யப் பெற்றார்.
பரப்பு
இலினாயிலின் பரப்பு 1,46,075 ச.கி.மீ. அதில் 1689 ச.கி.மீ. பரப்பில் உள்நாட்டு நீர்நிலைகள் அடங்கும்.
மக்கள்தொகை
இம்மாநிலத்தின் மக்கள் தொகை 1,14,18,461 (1980). சிகாகோ, மக்கள் தொகைப் பெருக்கம் மிகுந்த, சிறந்த தொழிற்சாலை நகரம்.
எல்லைகள்
இம்மாநிலத்திற்கு வடக்கில் விசுகான்சினும், வட கிழக்கில் மிச்சிகன் ஏரியும், கிழக்கில் இந்தியானாவும், தென்கிழக்கில் ஒகையோ ஆறும், மேற்கில் மிசிசிப்பி ஆறும் எல்லைகளாக அமைந்துள்ளன.
இலினாய்
நிலப்பிரிவுகள்
இம்மாநிலத்தை மூன்று நிலப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை, மத்திய சமவெளிகள், சானிக்குன்றுகள், வளைகுடாக் கடற்கரைச் சமவெளி என்பனவாம்.
மத்திய சமவெளிகள் வளமான உள்நாட்டுச் சமவெளிகளின் பகுதியாக மத்திய மேற்கு மாநிலங்களில் பெரும்பாலானவற்றை அடைத்துக் கொண்டுள்ளன. மத்திய சமவெளியின் பகுதியான பெரும் ஏரிச் சமவெளிகளில்தான், தொழிற்சாலைகளுக்கும் கப்பற்கட்டும் தொழிலுக்கும் பெயர் பெற்ற சிகாகோ நகரம் அமைந்துள்ளது. காற்றுப்போக்கற்ற பகுதி எனப்பெறும் (Driftless Area) பிரிவில் உயர்ந்த மலைத் தொடர்களையும் ஆழ்ந்த பள்ளத்தாக்குகளையும் காணலாம். சார்லசு மாண்டு (Charles Mound) இம்மாநிலத்தின்மிக உயர்த்த மலையுச்சியாகும். இதன் உயரம் 376 மீ. மாநிலத்தின் நடுவில் தில் சமவெளிகளும் (Till Plains) பல தோட்டங்களும் உள்ளன.
சானிக் குன்றுகள் பகுதியைச் சில வேளையில் இலினாய் ஒசார்க்சு என்றும் குறிப்பிடுவர். இப்பகுதி 91 மீட்டர் முதல் 325 மீட்டர் வரை உயரமுள்ளது. இங்குச் சமவெளிகள், காடுகள், ஆற்று முகடுகள், காடுகள் கொண்ட குன்றுகள் போன்றவையுள்ளன.
வளைகுடாக் கடற்கரைச் சமவெளி, இலினாய்ச் சமவெளியின் வடவோரத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்தில் உயரம் குறைந்த பகுதியை இங்குக் காணலாம்.
சிகாகோ கடற்கரைப் பகுதி
தட்பவெப்பநிலை
இலினாய்த் தட்பவெப்பநிலை பருவத்திற்குப் பருவம் மிகவும் மாறுபடுகிறது. கடுங்குளிரும் கடுங்கோடையும் இங்குத் தென்படும். நாளுக்குநாள் தட்பவெப்பநினல மாறுவதுமுண்டு. வடபகுதி குளிர் மிகுந்த பகுதி. மெக்சிகோ வளைகுடாவிலிருந்து வீசும் காற்றுகள் இம்மாநிலத்திற்கு மழையைக் கொண்டு வருகின்றன.
வேளாண்மை
வேளாண்மையின் அடிப்படையில் இம்மாநிலத்தை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை, பருத்தி விளையும் தென்கோடிப் பகுதி, வைக்கோல், பால்பண்ணைப் பொருள்கள் கிட்டும் வடக்குக் குறுகிய பகுதி, மக்காச்சோளம் விளையும் பகுதி, கோதுமை விளையும் பகுதி என்பனவாம்.
கனிவளம்
மென்மையான நிலக்கரிப் படிவங்கள், இம்மாநிலத்தின் மூன்றில் இரண்டு பகுதிகளில் பரவியுள்ளன. பெட்ரோலும் இங்குக் கிடைக்கிறது. கல் வகைகள் மிகுதியாக உள்ளன. இயற்கை வாயுவும் கிடைக்கிறது.
தொழில்வளம்
சிகாகோ பகுதியில் உருக்குத் தொழிற்சாலைகள் மிகுதி. வேளாண்மைத் தொழிலுக்குத் தேவையான இயந்திரங்கள் சிகாகோ, பயோரியா, மோலின், சோலியட்டுப் போன்ற நகரங்களின் பட்டறைகளில் உற்பத்தியாகின்றன. புனித உலூயிக்கு அருகில் இரசாயனப் பொருள்கள் உற்பத்தியாகின்றன. அச்சிட்டு வெளியிடும் தொழில், மின் இயந்திரங்கள், போக்குவரத்துச் சாதனக் கருவிகள், பெட்ரோலைத் தூய்மைப்படுத்துதல் போன்ற தொழில்கள் இம்மாநிலத்தின் சிறப்பான தொழில்களாகும். இறைச்சியைப் பிப்பாய்களில் அடைத்து அனுப்புதல், மக்காச்சோளத்தைப் பதப்படுத்துதல் போன்ற தொழில்களைச் செய்யும் தொழிற்சாலைகளை ஆர்கோ, பெசின், கிரானைட்டு மாநகரம் போன்ற இடங்களில் காணலாம். சோயாபீன்சு, கிப்சன்சிடி, சாம்பெயின், சிகாகோ போன்ற நகரங்களில் பதப்படுத்தப்படுகிறது. புனித உலூயி, பயோரியா, இராக்போர்டு ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன.
போக்குவரத்து
இம்மாநிலத்தில் 22 சிறப்பான இருப்புப்பாதைத் தொடர்களும், சீரிய சாலை அமைப்புகளும் உள்ளன. வானவூர்தி நிலையங்களும் பல உள்ளன.
வரலாறு
இலினாயில் கி.பி. 17–ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரெஞ்சு ஆய்வாளர்களும், வணிகர்களும் குடியேறினர். ஏழாண்டுப் போரின் விளைவாக இப்பகுதி ஆங்கிலேயர் வசம் வந்தது. சுதந்திரப் போராட்ட காலத்தில் இங்கும் போர் நடைபெற்றது. பின்னர், இம்மாநிலம் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பகுதியாயிற்று.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 426)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yq3m5nyq/
தமிழ்“இலினாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/yq3m5nyq/APA
Oliyon Research. (2026). இலினாய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yq3m5nyq/MLA
"இலினாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/yq3m5nyq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment