மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூர்; கோயிற் கட்டடக்கலைச் சிறப்புப் பெற்றது. சாஞ்சிக்கருகிலுள்ள பில்சா (Bhilsa) என்னும் தொன்மையான ஊருக்கு அருகில் இவ்வூர் அமைந்துள்ளது. உதயாதித்யா (Udayaditya) என்னும் பரமாரா (Paramara) அரசர் இங்கு உதயேசுவரம் என்னும் கோயிலைக் கட்டியுள்ளார். இக்கோயில் கி.பி. 1059க்கும் கி.பி. 1080க்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது. இவருக்கு முன்னர் ஆட்சிபுரிந்த போசா (Bhoja) என்னும் அரசர் கட்டடக் கலையில் நாட்டம் மிக்கவர். அவரைப் போன்றே உதயாதித்யாவும் கட்டடக்கலையில் ஆர்வமிக்கவராக விளங்கினர். உதயாதித்யா உதயசமுத்திரம் என்னும் பெரிய குளத்தை வெட்டினார். உதயாதித்யாவின் பெயரால் உதய்பூர் (Udaipur) அமைக்கப்பட்டது. இவரது பெயராலேயே இங்குள்ள கோயிலும் உதயேசுவரம் என்று கூறப்படுகிறது. உதயேசுவரம் கோயில் நீள்சதுர வடிவம் உடையது. இக்கோயில் கருவறையையும் மூன்று முகப்பு மண்டபங்களையும் ஒரு பெரிய அறையையும் கொண்டுள்ளது. மாடக்குழியில் காணப்படும் ஆடவல்லான் சிற்பம் பரமாரர்களின் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்று பகர்வதாக அமைந்துள்ளது. சரசுவதி, பார்வதி ஆகியோரின் நடனச் சிற்பங்கள் விமானத்தில் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. இந்து சமயக் கடவுள்களின் உருவங்கள் பெருமளவில் இக்கோயிலில் காணப்படுகின்றன. திக்குப்பாலர்கள், கணேசர், கார்த்திகேயன், துர்க்கை, சிவன், திருமால், பிரமன் ஆகியோரின் சிற்பங்கள் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. இக்கோயிலின் கருவறை மேலே உயர்ந்த விமானத்தையும் மண்டபக் கூரை பிரமிடு அமைப்பையும் கொண்டு விளங்குகிறது. விமானத்தின் மேற்பகுதியில் உள்ள சிகரத்தில் மானிடச் சிற்பமொன்று காணப்படுகிறது. இது இக்கோயிலைக் கலைஞரின் சிற்பம் என்று கூறப்படுகிறது. இக்கோயிலைச் சுற்றி எட்டுச்சிறிய கோயில்கள் உள்ளன. இவை யாவும் பெருமளவில் அழிந்து காணப்படுகின்றன. உதயேசுவரம் கோயில்