அல்சீரியா
alcīriyā
வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள குடியரசு நாடாகும்.
வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள குடியரசு நாடாகும். இது மத்தியதரைக்கடலின் தெற்கிலும் ஆப்பிரிக்காவின் வடக்கிலும் அமைந்திருக்கிறது. இந்நாட்டிற்குக் கிழக்கில் துனிசியாவும் (Tunisia) இலிபியாவும் (Lybia), மேற்கில் மேற்கு சகாராப் பாலை நிலமும் மொராக்கோவும், தெற்கில் நைசர், மாலி, மௌரிடானியா ஆகிய நாடுகளும் எல்லைகளாக அமைந்துள்ளன. அல்சீரியாவின் (Algeria) பரப்பு 23,81,741 ச.கி.மீ.
கி.பி. 1982–ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி இந்நாட்டின் மக்கள்தொகை 2,10,00,000 ஆகும்.
அல்சீரியா
அட்லாசு மலைகள் இந்நாட்டை 1. மத்திய தரைக் கடல் நிலப்பிரிவு, 2. இசுடெப்பிசு நிலப்பிரிவு, 3. சகாராப்பாலை நிலப் பிரிவு என்று பிரிக்கின்றன.
மத்தியதரைக்கடல் நிலப்பிரிவு
பெரும்பான்மை மக்கள், ஒடுங்கி நீண்டிருக்கும் இப்பகுதியில் வாழ்கின்றனர்; உழைக்கின்றனர். இது 160 கி.மீ. அகலமும் 1160 கி.மீ. நீளமும் கொண்ட பகுதியாகும். இப்பகுதி நல்ல வளமான மண்ணைப் பெற்றிருக்கிறது. திராட்சைக் கொடிகள், ஒலிவ மரக்காடுகள், பழ மரங்கள், தானியப் பயிர்கள், காய்கறிகள் ஆகியவை இங்கே செழித்து வளர்கின்றன.
இசுடெப்பிசு என்று கூறப்படும் புல் நிறைந்த நிலப்பிரிவு
இது உயரமான பீடபூமிப் பகுதியாகும். இதில் புல் வளர்வதால், மக்கள் ஆடு மாடுகளை வளர்க்கிறார்கள். காகிதம் செய்வதற்குப் பயன்படும் பெசுபார்டோ புல் இங்கே அறுவடை செய்யப்படுகிறது.
சகாராப் பாலை நிலப்பிரிவு
இது மணல் இடம் பெயர்ந்து கொள்ளும் அகன்ற பெரிய பரப்பாகும். இதில் மக்கள் மிகக் குறைவாக வாழ்கின்றனர். பாலை நிலப் பசுஞ்சோலைகளில் சிற்றூர்கள் உள்ளன. அங்கே காய்கறிகளும் வெப்ப மண்டலப் பழங்களும் பேரீச்சம் பழங்களும் விளைகின்றன.
ஆறுகள்
720 கி.மீ. நீளம் ஓடும் செலிப்பு என்னும் ஆறு இங்குள்ள முதன்மையான ஆறாகும். மற்ற ஆறுகள் கெபிரு சாகசல், செப் அவுசு, சிக், தாப்னா முதலியன.
வேளாண்மைக்குப் பயன்படும் பெரும்பாலான நிலங்கள் கடற்கரையை ஒட்டி இருப்பவையே. காடுகள் 12,000 ச.கி.மீ. அளவு உள்ளவை. காடுகளில் பொதுவாகக் காணப்படும் மரங்கள் ஆலப்போ பைன், பசுமையான ஓக்சு, செடார், கார்க்கு, ஓக்சு முதலியவை. மீன் பிடிப்பில் கிடைக்கும் மீன் வகைகள் சார் டைன், இசுபார்ட்சு, இடூரை, மேல் ஓடுகள் மூடிய மீன்கள் முதலியன. மக்கள் கடலிலே மூழ்கிக் கடற்பஞ்சுகளையும் முத்துகளையும் எடுக்கிறார்கள்.
அட்லசு மலைத் தொடர்களிலிருந்து இரும்புக் கனிகள், பாசுபேட்டுகள், நிலக்கரி, துத்தநாகம், ஈயம், அண்டிமணி, செம்பு, டங்சுடன், இயற்கை வாயு ஆகியவையும் டெசிலி, ஆரிசு மிசான்ட்டு, டிசபெல் பார்க்கா பகுதிகளில் எண்ணெயும் கிடைக்கின்றன.
மக்கள்
அல்சீரியர்களில் பெரும்பாலோர் அராபியர்கள். இவர்கள் பெர்பெரிகள் இனத்தவர்களில் கலந்த இனத்தவர்களாவர். காபிலசு, இடூவார்கசு, மொசொபைட்டு, அவுரே அவுரோசியர் முதலிய மக்கள் அடங்குவார்கள். அவர்களில் பெரும்பாலோர் முசுலிம்கள். அவர்கள் உடை உடுப்பதிலும், வீடுகளிலும் ஐரோப்பியர்களைப் பின்பற்றுகிறார்கள். சிலர் அராபிய உடைகளை அணிகிறார்கள். பெண்கள் முகத்திரை போடும் பழக்கம் உடையவர்கள்.
அல்சிரியாவிலுள்ள ஓரன் துறைமுகம்
நகரங்கள்
பெருநகரங்கள் அல்சியர்சு, கான்சுடான்டைன், ஓரன் ஆகியவையாம். பழைய பகுதிகள் கசுபாக்கள் என்றழைக்கப்படுகின்றன.
நாட்டுப்புற வாழ்க்கை
நாட்டுப்புற மக்களில் பெரும்பாலோர் குடியானவர்களே, வீடுகள் செங்கல், களிமண், கல் ஆகியவற்றினால் கட்டப்படுகின்றன. ஆண்கள் கால்நடைகளையும் ஆடுகளையும் மேய்க்கிறார்கள். வீடுகளில் வெப்பம் தெரியாமலிருக்கச் சாளரங்கள் அமைக்கப்படுகின்றன. ஊர் சுற்றும் நாடோடிகள் கூடாரங்களில் வாழ்கிறார்கள். அவர்களுள் பெரும்பாலோர் கைவேலைகளிற் சிறந்தவர்களாய் இருக்கின்றனர். நகர மக்கள் தொழிற்சாலைகளிலும், வாணிகர், தொழில்கள் நடத்துவோர் ஆகியோரிடமும் வேலைக்கு அமர்கிறார்கள். பலர் வேலையில்லாமல் இருக்கிறார்கள்.
வேளாண்மை
குடியானவர்கள் கோதுமை, பார்லி, ஓட்சு, உருளைக் கிழங்கு, அவரை, பட்டாணி, தக்காளி, எலுமிச்சை, பேரீச்சை, அத்தி, வாதுமை, மாதுளை பீன்சு, முதலியவற்றைப் பயிர்செய்கிறார்கள். பேரீச்சம் பழங்களை ஏற்றுமதி செய்வதில் இந்நாடு முன்னிற்கிறது. இந்நாட்டில் ஏறத்தாழ 3,60,000 எக்டேர் நிலத்தில் திராட்சை பயிராகிறது. மற்றப் பயிர்கள் பருத்தி, புகையிலை, கூலங்கள், இசுபார்டொபுல் முதலியன. செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் முதலிய கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. வேளாண்மை செய்வதற்கான வசதிகள் 2.5 இலட்ச எக்டேர் பரப்பு நிலத்திற்கே உள்ளன.
சுரங்கத் தொழில்
இயற்கை வாயுவும் எண்ணெயும் சிறப்பான கனிப் பொருள்கள் ஆகும். மற்றக் கனிப் பொருள்கள், அண்டிமணி, நிலக்கரி, செம்பு, இரும்புத்தாது, ஈயம், சலவைக்கல், பாசு பேட்டு, துத்தநாகம் முதலியவை ஆகும்.
ஏற்றுமதியும் இறக்குமதியும்
சாராயம், எலுமிச்சம் பழங்கள், இரும்புக் கனிகள், காய்கறிகள், பாசுபேட்டுகள் ஆகியவை ஏற்றுமதியாகின்றன. உணவு, பருத்தித் துணிகள், இயந்திரங்கள் முதலியன இறக்குமதி செய்யப்படுகின்றன. பிரான்சு இந்நாட்டுடன் பெருமளவு வாணிகத் தொடர்பு கொண்டிருக்கிறது.
போக்குவரத்து
இந்நாட்டில் 100 விமானங்கள் வந்திறங்கும் தளங்கள் உள்ளன. 25,600 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 4000 கி.மீ. நீள இருப்புப் பாதைகள் போடப்பட்டுள்ளன.
கல்வி
மக்களுள் கால் பகுதியினர் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். 2500 பொதுத் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. அங்கே 16,00,000 பேர் கல்வி பயில்கின்றனர். இங்குப் பள்ளி ஆசிரியர்கள் போதுமான அளவு இல்லை.
நூல் நிலையங்கள் அராபி, துருக்கி, பார்கர் ஆகிய மொழிகளில் உள்ள கையெழுத்துப் படிகளைப் பாதுகாக்கின்றன. கையெழுத்துப் படிகள் எடுப்பதிலும் கட்டடம் செய்வதிலும், ஒளியேற்றுவதிலும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகள் உள்ளன.
இசுலாமியர் கட்டட வேலைப்பாட்டுக் கலையில் மிகச் சிறப்பாக முன்னேறியுள்ளனர். இங்கே சிறந்த வேலைப்பாடுகள் அமைந்த மசூதிகளும், தூபிகளும் உள்ளன. சிறந்த கைவேலைக்காரர்கள் விரிப்புகள், நகைகள், மட்பாண்டங்கள், கண்ணாடிப் பண்டங்கள் பாத்திரங்கள் பித்தளை விளக்குகள், சமைக்கும் பாத்திரங்கள் ஆகியவற்றைச் செய்கிறார்கள்.
கொடி
இடப்பாதியில் பச்சை நிறமும் வலப்பாதியில் வெள்ளையும் அதன் நடுவில் ஒரு சிவப்பு நட்சத்திரமும் அல்சீரிய தாட்டுக் கொடியில் அமைக்கப்பட்டுள்ளன.த.கோ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 841)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yk52j7y4/
தமிழ்“அல்சீரியா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/yk52j7y4/APA
Oliyon Research. (2026). அல்சீரியா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yk52j7y4/MLA
"அல்சீரியா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/yk52j7y4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment