உயர்தர அதிகாரம்
uyartara atikāram
ஆட்சியாளர் எனப்படுவோர் உயர்தர அதிகாரமுடையவர்களாவர்.
ஆட்சியாளர் எனப்படுவோர் உயர்தர அதிகாரமுடையவர்களாவர். எவருடைய அதிகாரத்துக்கு எதிராகச் சட்டத்தில் மேல் முறையீடு செய்ய இயலாதோ, அவருடைய அதிகாரம் தலைமை அதிகாரம் (Sovereignty) எனப்படுகிறது. அரசியல் வரலாற்றில் அரசாங்க அதிகாரிகள் இறைமை அல்லது தலைமை அதிகாரத்தைக் கையாளுகின்றனர் என்னும் கருத்து பண்டைக் காலத்தில் உரோமானியர்களால் முதலில் நடைமுறையில் கையாளப்பட்டு உரோமானியச் சட்டத்திலும் கையாளப்பட்டது.
உரோமானியர் காலத்தில்
உரோம் நகர அரசு முடியாட்சி அமைப்பில் (Monarchy) இருந்த காலத்தில் (கி.மு. 753 முதல் கி.மு. 510 வரை) உரோமை ஆண்ட அரசர்கள் செலுத்தி வந்த அதிகாரம் உயர்தர அதிகாரம் (Imperium) எனப்பட்டது. இவ்வதிகாரம் (1) உயர்தர நீதி வழங்கும் அதிகாரம்; (2) சமூக நலனுக்காகக் கடவுளர்க்கு வழிபாடுகளும் பலிகளும் நடத்தும் அதிகாரம், (3) போரில் தலைமைத் தளபதியாக இருந்து போரை நடத்தும் அதிகாரம் ஆகிய மூவகை அதிகாரங்களையும் குறித்தது.
முடியாட்சியில் உயர்தர அதிகார வரம்புகள்
முடியாட்சிக் காலத்தில் அரசர்களின் உயர்தர அதிகாரத்துக்கு வரம்புகள் இல்லை. என்றாலும், இரண்டு உரோமானிய வழக்கங்கள் (Customs) உயர்தர அதிகாரத்துக்கு வரம்புகளாக அமைந்தன. ஒன்று, அரசரால் அமர்த்தப்பட்ட 300 உறுப்பினர்களை உடைய ஆலோசனை மன்றத்தின் (Senate, an Advisory Body) கருத்துகளை அரசர் கேட்டறிந்து, அவற்றை ஏற்றுக் கொள்ளுதல் வேண்டுமென்ற கட்டாயம் இல்லாவிட்டாலும் அவற்றை ஏற்றே ஆட்சி செய்தார். இரண்டு, அரசர் குற்ற இயல் வழக்குகளை ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கும்போது, குற்றவாளிக்கு அவர் அளிக்கும் மரணதண்டனைத் தீர்ப்பை மக்கள் மன்றத்தின் (Comitia Curiata) இறுதி ஒப்புதலுக்கு விடுதல் வேண்டும்.
குடியரசில் உயர்தர அதிகார வரம்புகள்
(கி.மு. 510 முதல் கி.மு. 27 வரை) உரோமானிய நகர அரசில் கி.மு. 510–ஆம் ஆண்டில் முடியாட்சி ஒழிக்கப்பட்டு, குடியரசு (Republic) நிறுவப்பட்டது. அப்போது, அரச பதவி நீக்கப்பட்டாலும் அரசர் செலுத்தி வந்த உயர்தர நீதி, இராணுவ அதிகாரங்களை (Imperium) உரோமானியக் குடிமக்கள் தங்களால் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு அதிகாரிகளிடம் (Consuls) ஒப்படைத்து, இவ்வதிகாரிகளும் தங்களுடைய ஓராண்டு ஆட்சிக் காலத்தில் கொடுங்கோலர்களாக மாறி, குடிமக்களுடைய உரிமைகளையெல்லாம் அழித்து விடாதபடி அவற்றைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, இவ்வதிகாரிகளின் இராணுவ, நீதி உயர்தர அதிகாரிகளுக்குப் பல வரம்புகளை அமைத்தனர். இவ்வதிகாரிகளின் பதவிக்காலமும் ஓராண்டுதான், ஓர் அதிகாரி விடுக்கும் ஆணையை மற்ற அதிகாரி தள்ளுபடி செய்தற்கு அதிகாரம் பெற்றிருந்தார். உயர்தர இராணுவ அதிகாரத்தை உரோம் நகரத்தின் எல்லைக்குள் கையாளுதல் இயலாது. மேலும், இவ்வதிகாரி ஓர் உரோமானியக் குடியாளின் உயிரையோ நிலையையோ பாதிக்கும்படியான தீர்ப்பை வழங்கினால், அத்தீர்ப்பை மக்கள் மன்றத்தின் இறுதி ஒப்புதலுக்கு (Final Ratification) விடுதல் வேண்டும். மக்கள் மன்றம் அத்தீர்ப்புக்கு ஒப்புதல் அளித்தால்தான் அத்தீர்ப்புச் செல்லுபடியாகும்.
உரோமானியக் குடிமக்களுள் உயர்ந்த வகுப்பினர் (Patricians) எல்லா அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளையும் பெற்று நல்ல நிலையில் வாழவும், உரிமை இன்றி வறுமையில் வாழ்ந்த பெரும்பாலான எளிய மக்கள் (Plebeians) உயர்வகுப்பினருடன் சமஉரிமை பெறும் பொருட்டும் போராட்டங்களை நடத்தினர். அதன் விளைவாக அவர்களுடைய உயிரையும் உரிமைகளையும் உயர்வகுப்பாரின் எதேச்சாதிகாரத்தினின்று பாதுகாக்கும் பொருட்டு, எளியோர்க்கெனத் தனியாகப் புதிய அலுவலர்களை (Tribunes) ஆண்டுதோறும் தங்களிடையே இருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை பெற்றனர். இந்தப் புதிய அலுல்வர்களுக்கு எதேச்சாதிகார ஆணைகளைத் தள்ளுபடி செய்து, தங்களுடைய வகுப்பாரின் உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய அதிகாரம் (Power of Intercession) இருந்தது. ஆகையால், இவ்வலுவலரின் மறுப்பாணை அதிகாரமும் மேட்டுக் குடியினரின் உயர்தர அதிகாரத்துக்கு ஒரு வரம்பாக இருந்தது.
குடியரசுக் காலத்தில் உரோமானிய அரசியலமைப்பில் ஆலோசனை மன்றத்தைத் தவிர, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேறுசில மன்றங்களும் இருந்தன.
பேரரசுக் காலத்தில் அதிகாரக் குவிப்பு
(கி.பி. 4–ஆம் நூ. வரை): உரோமானியக் குடியரசு திறமை மிக்க படையினால் மத்திய தரைக் கடலைச் சுற்றி உள்ள நாடுகளையெல்லாம் வென்று, ஒரு பேரரசை (Empire) ஆளும் தகுதி பெற்றது. ஆகையால், அக்குடியரசின் அரசியலமைப்பிலும் தக்க மாறுதல்கள் ஏற்படுதல் தவிர்க்க இயலாததாயிற்று. குடியரசின் அரசியலமைப்பு நான்கு அடிப்படைகளில் அமைக்கப்பட்டிருந்தது: (1) பல அதிகாரிகளிடையே பகிர்ந்தளிக்கப்பட்ட உயர் தர அதிகாரம், (2) அதிகாரிகளுக்குப பதவிக்காலம் குறுகலாக ஆக்கப்படுதல், (3) நாட்டின் முக்கியமான கேள்விகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்கள் மன்றத்துக்கே இருத்தல், (4) அதிகாரியின் உயர்தர இராணுவ அதிகாரம் உரோம் நகர அரசினுள் கையாளப்படாதவாறு தடை செய்யப்படுதல். எந்த ஒரு அரசாங்க அதிகாரியும் சருவாதிகாரியாக மாறிவிடாதபடி தடுக்கும் பொருட்டு இந்த நான்கு அடிப்படைகளில் குடியரசு அரசாங்கம் அமைக்கப்பட்டு, அதில் அதிகாரிகள் ஒருவர் விடுக்கும் ஆணையை மற்றவர் மறுப்பாணை வாயிலாகத் தடுக்கக் கூடிய அதிகாரமும் பெற்றிருந்த படியால், இக்கோட்பாடு தடை–சமன் கோட்பாடு (Principle of Checks and Balances) எனப்பட்டது. உரோமானியப் பேரரசைத் திறம்பட ஆளுதற்குத் திறமையான அதிகாரி ஒருவர் நிலையாக இருத்தல் வேண்டுமென்றும், குறுகிய ஆட்சிக் காலத்தில் தடை–சமன் விதிப்படி ஆளும் அதிகாரிகளால் பேரரசைத் திறமாக ஆளுதல் இயலாதென்றும் உரோமானியர் உணர்ந்தனர். இத்தேவையை நிறைவு செய்த திறமையாளரே அகசுடசு சீசர் (Augustus Caesar) ஆவார். சூலியசு சீசரின்(Julius Caesar) பேரராகிய இவர் வெற்றி வீரராகவும், ஆட்சித் திறமை உடையவராகவும், எல்லாவற்றையும் விடப் பழமை விரும்பிகளான உரோமானிய மக்களுடைய குடியரசு உணர்வை மதிக்கக் கூடியவராகவும், அதே சமயத்தில் பேரரசுக்குத் தேவையான அதிகாரக் குவிப்பையுடைய ஒற்றையாள் ஆட்சியைப் பலருடைய ஆட்சி என்ற வடிவத்தில் அமைக்கக் கூடிய அரிய திறனுடையவராகவும் இருந்தார். ஆகையால், எல்லா அதிகாரங்களையும் வெளிப்படையாக ஏற்ற சூலியசு சீசரை உரோமானியக் குடியரசு வாதிகள் வெறுத்தனர். அகசுடசு சீசர் உரோமானிய மாகாணங்களில் கையாளக்கூடிய உயர்தர அதிகாரத்தை (Proconsular Imperium) உரோமிலிருந்து கொண்டே கையாளுதற்கும், உரோம் நாரத்தினுள்ளும் கையாளுதற்கும், உரோமானிய அதிகாரிகளின் ஆணைகளையெல்லாம் தள்ளுபடி செய்யக்கூடிய மறுப்பாணையையும் (Tribunician Veto) தமது கையில் குவித்து வைத்துக் கொள்வதற்கும் வாய்ப்பும் பெற்றிருந்தார். இவ்வாறு உயர்தர அதிகாரமென்பது உரோமானிய முடியாட்சிக் காலத்திலும், குடியரசுக்காலத்திலும் பல வடிவங்களில் காணப்பட்டது.
சமுதாயத்தைக் காப்பதற்கும், அதனை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்கும் உயர்தர அதிகாரம் இன்றியமையாதது. ஆனால், இந்த உயர்தர அதிகாரம் கொடுங்கோன்மையாக மாறிவிடாதபடி அதற்கு வரம்புகள் அமைக்கப்படுதல் வேண்டுமென்ற விதியை முதன் முதலில் கண்டுபிடித்துக் காட்டியவர்கள் பண்டைய உரோமானியரே ஆவர். நீதிபதி உள்ளிட்ட எந்த அரசாங்க அதிகாரிக்கும் அதிகாரங்களை வழங்கும்போது, அதனை அவ்வதிகாரி தவறாகக் கையாளுதலினின்றும் அவரைத் தடுக்கக்கூடிய பாதுகாப்புகள் (Safeguards) எதுவும் இல்லாமல் அதிகாரங்களை வழங்குதல் கூடாது. இவ்விதியை நடைமுறையில் செய்து காட்டினார்கள் உரேமானியர்கள். இந்த விதியே அரசாங்க அமைப்பு விதிகளில் ஒன்றாக இக்காலத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா முதலிய நாடுகளின் அரசியலமைப்புகளில் பின்பற்றப்படுகிறது.
துணை நூல்கள்
Fowler, W.W., The City – State of the Greeks and the Romans, Macmillan, 1921.
How, W.W. & Leigh, H.D., A History of Rome, Lougmans, 1907.
Taylor, T.M.A., A Constitutional and Political History of Rome, Methuen, 1911.
Abbot, F.F., A History and Development of Roman Political Institutions, Guinn, 1901.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 960)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yfb6adas/
தமிழ்“உயர்தர அதிகாரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/yfb6adas/APA
Oliyon Research. (2026). உயர்தர அதிகாரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yfb6adas/MLA
"உயர்தர அதிகாரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/yfb6adas/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment