செம்மரம்
cemmaram
இம்மரங்களின் கட்டைகளும், பட்டைகளும் கொண்ட நிறத்தாலோ, வெட்டப்படும் போது, மரப்பட்டையிலிருந்து பால் வடிவதாலோ, இவற்றைச் செம்மரங்கள் என்பர்.
இம்மரங்களின் கட்டைகளும், பட்டைகளும் கொண்ட நிறத்தாலோ, வெட்டப்படும் போது, மரப்பட்டையிலிருந்து பால் வடிவதாலோ, இவற்றைச் செம்மரங்கள் என்பர். செம்மரம் என்ற வட்டாரப் பெயரைக் கொண்ட மரங்கள் பல உண்டு. தவிர, இம்மர இனங்களிடையே வேறு எந்த உறவு முறையும் இல்லை. லுஷிங்டன் என்பார் செம்மரம் என்ற பெயரைக் கொண்ட மரங்களின் பட்டியலைத் தந்துள்ளார். (பக்கம் 749)
அஃபேனோ மிக்ஸிஸ் பாலிஸ்டேகியா. இதன் முந்தைய தாவரவியல் பெயர் அமூரா ரோகிடுகா (Amoora rohituka). இம்மரம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் பசுமை மாறாக் காடுகளில் காணப்படும். 10–20 மீ. வளரக் கூடிய இம்மரத்தின் அடி மரம், 2 மீ. சுற்றளவு இருக்கும். அஸ்ஸாம், வங்காளம் ஆகிய மாநிலங்களில் காணப்படும். மரம் அறுக்கப்பட்டவுடன், சிவப்பாகவும், காற்றுப் பட்டவுடன் செம்பழுப்பு நிறமாகவும் மாறி விடும். தச்சு வேலைக்குக் குறிப்பாக, இழைப்பிற்கு மிகவும் ஏற்றது. மெருகு வேலைக்குப் பிறகு, பளபளப்பாகத் தோன்றும். மரக் கட்டைகளைத் தோணி, படகு, கட்டு மரம் தயாரிக்கப் பயன்படுத்துவர். விதைகளிலிருந்து எடுக்கப்படும் சிவப்பு நிற எண்ணெய், மருந்தாகப் பயன்படும்.
சோய்மீடா ஃபெப்ரிஃப்யூகா. வேம்புக் குடும்பத்தைச் சேர்ந்த இம்மரத்தைச் சோழ-மண்டலச் செம்மரம், இந்திய-மகாகனி என்றும் கூறுவர். மத்திய, தென்னிந்திய தாழ்ந்த குன்றுகளிலும், உலர் காடுகளிலும் நன்றாக வளரும். செம்மண் நிலம் இதற்கு ஏற்றது. கட்டையின் வைரம் பாய்ந்த பகுதி, சிவப்பாகவும், மென்மரம் குறுகலாகவும், வெண்மையாகவுமிருக்கும், வைரம் பாய்ந்த பகுதி, நெருக்கமான ரேகைகளுடன் கடினமாக இருக்கும். இவை கறையானால் பாதிக்கப் படுவதில்லை. கட்டைகள் வீடு கட்டவும், கிணற்றுச் சகடை, கலப்பை, உழவு கருவிகள், நாட்டுச் செக்கு ஆகியவை செய்யவும் பயன்படுகிறது. கசப்பான மரப் பட்டை மருந்தாகப் பயன்ப டுகிறது. கொயிலாப் பட்டை போல், இதுவும் காய்ச்சலுக்குப் பயன்படுவதால், இதற்கு இச்சிற்றினப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தோல் பதனிடுவதற்கும், வலிமையான கயிறு திரிக்கவும் பட்டைகளைப் பயன்படுத்துவர்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காக அட்டவணை, பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> டெரொகார்பஸ் சாண்டலைனஸ் என்ற சிவப்பு அல்லது செஞ்சந்தனம் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடக மாநிலக் காடுகளில் கற்பாங்கான, ஈரப் பசையற்ற மலைப் பகுதிகளில் மிகுதியாக வளரும். கனத்த மரப் பட்டையைக் கொண்ட இம்மரங்கள் வெட்டப்படும் போது, சிவப்பு நிறப் பால் வெளிப் படும். காய்ந்த கட்டைகளை ரம்பம் மூலம் அறுப்பது சற்றுக் கடினமானதால், கோடாரி மூலம் வெட்டுவர். உளி மூலமே செதுக்குவர். ஜப்பானில், கட்டையைக் கொண்டு ஒரு வகை இசைக் கருவி செய்வதால், பெருமளவில் கட்டைகள் அங்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன. இக்கட்டைகளைக் கொண்டு திருப்பதிப் பொம்மைகள், படச் சட்டங்கள் கடைசல் பொருள்கள் ஆகியன தயாரிப்பர். இம்மரத்தில், சிவப்பு நிற வேதிப் பொருளான சாண்டோலின் காணப்படுகிறது.
டெரோகார்பஸ் டால்பர்ஜியாய்டஸ். வேங்கை என்று கூறப்படும் இம்மரம் பொதுவாக, அந்தமான் தீவுகளில் பெரிதும் காணப்படுகிறது. அரிதாக, மேற்கு வங்காளத்திலும், தென்னிந்தியாவிலும் இதைக் காணலாம். மரத்தின் மென்கட்டை குறுகியும், பழுப்பு நிறத்துடனும் இருக்கும். வைரம் பாய்ந்த கட்டை இளஞ்சிவப்பும், ரேகையும் கூடிய ஒளிர் நிறம் கொண்டிருக்கும். கனமாகவும், கெட்டியாகவும், வலிவாகவும் காணப்படும். அழகான வண்ண ரேகைகளைக் கொண்டதால், அடி மரம் பெரிதும் விரும்பப் படுகிறது. கை, எந்திர ரம்பம் மூலம் எளிதில் அறுக்கலாம். தேக்கு மரப் பண்புகளை ஒத்துள்ள இது, நுணுக்கமான, அழகான கடைசல் வேலைகளுக்கு மிகவும் ஏற்றது. கப்பலில் அறை முதலிய பல மர வேலைகளில் இது பயன்படுகிறது.
அடினாந்தீரா பவோனினா. நடுத்தர உயரம் கொண்ட இம்மரம், 20–25 மீ. வளரக் கூடியது. இமய மலையை அடுத்த பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலை, அந்தமான் காடுகள் இவற்றில் காணலாம். தற்சமயம் இவை சாலை மரங்களாகவும் வளர்க்கப் படுகின்றன. வைரம் பாய்ந்த கட்டை சிவப்பாக இருப்பதால், செஞ்சந்தனத்திற்குப் பதில் மர வேலைகளில் பயன் படுகிறது. அலமாரி, பெட்டிகள் செய்ய ஏற்றது. கட்டையைப் பொடி செய்து, அதைக் கொண்டு, நாமச் சிவப்புத் தயாரிக்கின்றனர்.
எரித்ராக்சைலான் மோனோகைனம். இது 8 மீ. வரை வளரக் கூடிய செடி அல்லது சிறு மரமாகும். தக்காண, கர்நாடக, ஆந்திர உலர் பசுமைக் காடுகளில் இதைக் காணலாம். இது ஒரு வறட்சி தாங்கும் (drought resistance) இனமானதால், வனத் துறை இதை விதைகளிலிருந்து அதிக அளவில் பெருக்கி வருகிறது. இச்செடியின் இலை கனி ஆகியன உண்ணத் தக்கவை. வைரம் பாய்ந்த கட்டை ஆழ்ந்த பழுப்பு நிறத்துடனும், இனிய மணத்துடனும் காணப்படும். நன்றாக வண்ணம் ஏற்றுக் கொள்ளும். கட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், மரக் கட்டைப் பாதுகாப்பாகப் பயன்படுகிறது.
பிரைடீலியா கிரேனுலேட்டா. இலையுதிர் வகையைச் சேர்ந்த இம்மரம், மேற்குத் தொடர்ச்சி மலையில் 150–180 மீ. உயரமுள்ள மலைப் பகுதிகளில் காணப்படும். இம்மரம் 15–20 மீ. உயரம் வளரும். வெட்டப்பட்ட மரப் பட்டை சிவப்பு நிறத்தோடு காணப்படுவதால், இதற்குச் செம்மரம் என்னும் பெயர் வந்திருக்கலாம். மரக்கட்டைகளுக்காகப் பெரிதும் காடுகளில் வளர்க்கப் படுகின்றது. இந்தியாவைத் தவிர, மலேசியா, பர்மா, இலங்கை, நேப்பாளம், இந்தோசீனா போன்ற நாடுகளிலும் வளர்கிறது.
சீகோயா செம்பர் வைரன்ஸ். காலிஃபோர்னியாச் செம்மரம் எனப்படும் இச்சிற்றினங்கள், ஊசியிலை மரங்களாகும். இவை விதை மூடாத் தாவரப் பிரிவைச் (gymnosperms) சேர்ந்தவை. இம்மரங்கள் 100–120 மீ. உயரம் வளரக் கூடியவை. அவற்றின் குறுக்களவு 9–10 மீ. இருக்கும். சில உயிருள்ள மரங்களின் அடி மரத்தைக் குடைந்து, பேருந்து போன்ற ஊர்திகள் போவதற்கு ஏற்ற பாதை அமைத்துள்ளனர். உலகிலேயே வயதான உயிரினங்கள் என இவற்றைச் சொல்லலாம். சில மரங்கள் 3000–4000 ஆண்டு வாழ்பவையாகும். —தி. ஸ்ரீகணேசன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 768)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ydv8b5x3/
தமிழ்“செம்மரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ydv8b5x3/APA
Oliyon Research. (2026). செம்மரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ydv8b5x3/MLA
"செம்மரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ydv8b5x3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment