சூல் பை நார்க் கட்டி
cūl pai nārk kaṭṭi
கருவகத் தசையிலிருந்து (myometrium) உருவாகும் தசைப்புத் துகள் (myoma) தீங்கற்ற புது வளர்ச்சி ஆகும்.
கருவகத் தசையிலிருந்து (myometrium) உருவாகும் தசைப்புத் துகள் (myoma) தீங்கற்ற புது வளர்ச்சி ஆகும். ஹிப்பாக்கிரடீஸ் இக்கட்டிகளை ஸ்கிரோமடா என்று குறிப்பிட்டார். ரோகிடான்ஸ்கி இதை நார்க் கட்டிகள் (fibroids) என்றார். ஆனால், வர்சோவ், இவற்றை லியோமையோமா என்றார். ஃபைப்ராய்டு, மையோமா என்னும் சொற்கள் வழக்கத்தில் இருந்தாலும், லியோமையோமா என்பதே பொருந்தும்.
கட்டிகள் உருண்டை வடிவத்தில் இருக்கும்; இவை உறையால் மூடப்பட்டுள்ளமையால், இவற்றை எளிதில் அகற்றி விடலாம். இவை ஒன்றுக்கு மேலாகவும், மிகப் பெரியவையாகவும் இருக்கலாம். இக்கட்டிகள் பெரும்பாலும் 35–45 வயதினரில் காணப்படுகின்றன. இக்கட்டி உண்டாகும் காரணம் தெரியவில்லை. மிகப் பெரிய கட்டிகள் குழந்தையே பெறாதவர்களிடம் காணப்படும். 15% நோயில் கருவகக் குழல் அடைபட்டு, மலட்டுத் தன்மை தோன்றக் கூடும். கருப்பைத் தசைப் புத்து மலட்டுத் தன்மை காரணமாக அமையும். ஆகவே கட்டியை அகற்றி விட்டால், பெண், சூல் அடையலாம். ஆய்வக முடிவுகளில் தசைப் புத்து உற்பத்தி செய்யும் ஹார்மோனும், தசைப் புத்து உண்டாவதைத் தடை செய்யும் ஹார்மோனும் இதற்குக் காரணம் எனக் கண்டுள்ளனர்.
தசைப் புத்து, எண்ணிக்கையில் மிகுந்து, சில போது, நூறுக்கு மேலாகவும் காணப்படலாம். சில வடிவத்தில் மிகச் சிறியவையாகவும், சில மிகப் பெரியவையாகவும் உள்ளன. தசைப் புத்தில், பல வித நசிவு, சுருக்கமடைதல், ஹையலினாக மாறுதல், நீர்ப்பை மாற்றம், கொழுப்பு மாற்றம், கால்சிய உப்புப் படிதல், இளஞ்சிவப்பு மாற்றம், புற்றாதல் முதலியன காணப் படுகின்றன.
தசைப் புத்தின் சிக்கலாகத் தன்னைத் தானே சுருட்டிக் கொண்டு, குருதித் தேக்கம் ஏற்பட்டு வயிற்று வலியும் உண்டாகிறது. தசைப் புத்தில் உறை கிழிந்து விடலாம்; அழற்சி விளைவுகள் ஏற்படலாம். 700 தசைப் புத்து நோயினரில் 20 பேரிடம் கருப் பைப் புற்று நோய் காணப்பட்டது.
தசைப் புத்தும் சூலும். தசைப் புத்தில் மலட்டுத் தன்மை ஏற்பட்டாலும், சூல் அடைவது மிகவும் இயல்பாகும். சிலேட்டுமப் படலத்தின் அடியில் இருக்கும் தசைப் புத்து கருப் பையை நிலை குலையச் செய்து, மலட்டுத் தன்மையை உண்டாக்குகிறது. சூலடைந்தால், கருச் சிதைவு ஏற்படும். சூலின் போது, தசைப் புத்து இளஞ்சிவப்பு நசிவடைந்து வயிற்று வலி, தொடு வலி, வாந்தி, காய்ச்சல், வெள்ளணுப் பெருக்கம் ஆகியவை தோன்றும். இதற்கு, அறுவை முறையைக் கையாளக் கூடாது. பேற்றின் போது, தசைப் புத்து பெரிதாகலாம். ஆனால், மகப் பேற்றின் பின் சிறிதாகி விடுகிறது. சில சமயம், தசைப் புத்து கருப் பைக் கழுத்தை அடைத்து விட்டால், கருப்பைத் திறப்பு அறுவை செய்து, குழந்தையை வெளியே எடுக்க வேண்டும்.
தசைப் புத்தின் அறிகுறிகள். மாத விடாயின் போதான குருதிப் பெருக்கு மிகையாக இருப்பது, அடிக்கடி தீட்டு ஏற்படுவது. ஒவ்வொரு மாத விடாய்க்கும் இடையே குருதிப் பெருக்கு உண்டாவது முதலியன அறிகுறிகளாகும். தசைப் புத்து பக்கத்திலுள்ள உறுப்புகளை அழுத்துவதால், மலச் சிக்கல், சிறுநீர்த் தேக்கம், கால் வீக்கம், நரம்பு வலி, அடி வயிற்றில் வலி, வெள்ளைப் படுதல், மலட்டுத் தன்மை, மிகையான நாடித் துடிப்பு, படபடப்பு, வயிற்றில் வீக்கம் போன்ற பல அறிகுறிகளும் தோன்றுகின்றன.
மருத்துவம். போதிய ஓய்வும், குருதி இழப்புக்கு இரும்புச் சத்தும், மாத்திரைகளும் பயனளிக்கும்; அறுவை தேவையிருந்தால், ஹீமோகுளோபின் அளவு 70%க்கு மேல் இருக்க வேண்டும்.
முன்பு கதிர் வீச்சு மருத்துவம் பரிந்துரைக்கப் பட்டது. அண்மைக் காலமாக அது கை விடப்பட்டது. அறுவை மூலம் தசைப் புத்தை அகற்றுவதே சிறந்த முறை. யோனி வழியாகவோ, வயிறு வழியாகவோ தசைப் புத்தை அகற்றி விடலாம். மிகவும் சிக்கலான நோயில் கருப் பையை அகற்றி விடுவதும் ஒரு முறையாகும். —மு. சி. ராஜாசுப்பிரமணியம் நூலோதி. Gordon Bourne, Text Book of Gynaecology, Ninth Edition, Churchill Livingstone, London, 1971.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 670)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y93znw48/
தமிழ்“சூல் பை நார்க் கட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/y93znw48/APA
Oliyon Research. (2026). சூல் பை நார்க் கட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y93znw48/MLA
"சூல் பை நார்க் கட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/y93znw48/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment