சிறுவர்களும் இளையோரும் குற்ற நடத்தையில் ஈடுபடுவது இளங்குற்ற நடத்தை என்று குறிப்பிடப்படுகிறது. உலகெங்கிலும் இளங்குற்ற நடத்தை சமூகச் சிக்கலாகக் கருதப்படுகிறது. பல நாடுகளில் இளங்குற்றவாளிகள் தனிப்பட்ட சில பெயர்களால் குறிப்பிடப்படுகின்றனர். பொதுவாகச் சமூகம் ஏற்றுக் கொள்ளாத செயல்களில் ஈடுபடும் இளையோரும், சிறுவர்களும் இளங்குற்றவாளிகள் எனப்படுகிறார்கள். சிறுவர்கள் பல்வேறுவகைப்பட்ட குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இக்குற்றங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. கெய்ரோ (Cairo) நகரத்தில் சிறுவர்கள் தெருவில் புகையிலைச் சுருட்டுத் துண்டுகளைப் பொறுக்குகி்ன்றனர். ஆங்காங்கு (Hogkong) நகரத்தில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் பல தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். சட்ட விரோதமான வணிகம் செய்ததற்காகச் சிறுவர்கள் குற்றவாளிகளாகப் பிடிக்கப்படுகின்றனர். இலாகோசு (Lagos), நைசீரியா (Nigeria) போன்ற நாடுகளில் பெற்றோர்களுக்குக் கீழ்ப்படியாத சிறுவர்கள் குற்றவாளிகளாகக் கருதப்படுகின்றனர். இவற்றுக்கு மாறாக வேறு சில நாடுகளில் சிறுவர்கள் குற்றம் புரியும் குழுக்களாக அமைந்து குற்ற நடத்தைகளிலும், சமூக எதிர்ப்புச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். போலந்து, கனடா, தாய்லாந்து, அர்சண்டைனா, அமெரிக்க ஐக்கிய நாடு போன்ற நாடுகளில் சிறுவர்கள் பல்வேறு குற்ற நடத்தைகளில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் கணக்கெடுப்பின்படி உலகில் பொருளாதார முன்னேற்றமடைந்த நாடுகளில் இளங்குற்ற நடத்தை மிகுதியாகவும், பொருளாதார முன்னேற்றமடையாத நாடுகளில் இளங்குற்ற நடத்தை குறைவாகவும் இருக்கிறது. சமூகக் காரணங்கள் அமைதியில்லாத குடும்பச் சூழ்நிலை, வறுமை, பெற்றோர்களால் கைவிடப்படுதல், பெற்றோர்களின் குற்ற நடத்தை, வேலையில்லாத் திண்டாட்டம், வீடுகளில் மக்கள் நெரிசல், பெற்றோர்களின் அரவணைப்பும் அன்பும் இல்லாமை போன்ற காரணங்களால் சிறுவர்கள் குற்ற நடத்தையில் ஈடுபடுகின்றனர். சில குடும்பங்களில் காணப்படும் மிகையான கட்டுப்பாடும் தண்டனையும் கூட இளையோர் குற்றம் புரியக் காரணமாகின்றன. சிதைந்த குடும்பம் குற்ற நடத்தைக்கு ஒரு தலையாய காரணமாகும். சிதைந்த குடும்பத்தில் குழந்தைகளுக்குத் தேவையான அன்பும் பாதுகாப்புணர்வும் கிடைப்பதில்லை. குடும்பப் பொறுப்புகளும், ஒழுங்குமுறைகளும் இல்லாத சூழமைவு குழந்தைகளின் உள்ளத்தில் வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. இந்த வெற்றிடம் குற்றநடத்தைக்கு வித்திடுகிறது. தாயன்பு கிடைக்காத சிறுவர்களும் குற்றம் புரிகின்றனர். பெற்றோர் தமக்குள் சண்டை, மனவேறுபாடு போன்ற காரணங்களால் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்திருப்பினும் மணவிலக்கு வேண்டிப் பிரிந்திருப்பினும், பெற்றோர்கள் ஒழுக்கமில்லாதிருப்பினும் இளையோர் குற்ற நடத்தையில் ஈடுபடக்கூடும். குழந்தைகளின் உள நலத்திற்குப் பெற்றோர்களிடையே ஒற்றுமையும், பெற்றோர்களின் அன்பும் பாதுகாப்பு உணர்வும், இன்றியமையாதவையாகும். பொருளாதாரக் காரணங்கள் வறுமையின் காரணமாக இளையோர் குற்ற நடத்தையில் ஈடுபடுவதாகக் கூறிவிட முடியாது. ஏனென்றால் வறுமை மட்டுமே குற்ற நடத்தைக்குக் காரணமாகாது. சமுதாயத்தில் ஒரு பிரிவினர் மிகுந்த செல்வத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் பொழுது, மறு பகுதியினர் வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் காரணத்தினாலும், வறுமையில் வாடிக்கொண்டிருப்பவர்களுக்கு உணவும் உடையும் கிடைத்த போதிலும், செல்வர்களின் சுகபோக வாழ்க்கைக்கும், தங்களுடைய நம்பிக்கையற்ற வாழ்க்கைக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை உணரும் இளந்தலைமுறையினர் சலிப்பு அடைகின்றனர். மேலும், சமூகத்தில் பல பெருங்குற்றங்களைச் செய்யும் பெரியவர்கள் சட்டத்தினின்று தப்பித்து வாழ்வதைப் பார்க்கும் இளையோர், தாமும் அவ்வழியில் சென்று செல்வர்களாகி விடவேண்டும் என்ற எண்ணத்தினாலும், கையாடல், கள்ளக்கடத்தல், கள்ள வாணிகம் முதலிய சமூக விரோத நடத்தைகள் செல்வர்களிடையே குற்றங்களாகக் கருதப்படுவதில்லை என்ற எண்ணத்தினாலும் இளையோர் குற்ற நடத்தையை மேற்கொள்கின்றனர். மேலும், பல்வேறு குற்றங்கள் புரியும் பெரியவர்கள் கொலை, கொள்ளை போன்ற குற்றங்களைச் செய்திருந்தாலும் செல்வாக்கின் காரணத்தினால் தண்டனைக்குத் தப்பிக் குற்றங்கள் புரிவதையே தொழிலாகக் கொண்டிருப்பதே, இளந்தலைமுறையினர் குற்ற நடத்தையில் ஈடுபடுவதற்கு முக்கியக் காரணமாகும். உளவியல் காரணங்கள் ஒரே அறையில் ஒரு குடும்பத்தினர் அனைவரும் வாழ்வது குழந்தைகளின் உளநலத்தைக் கெடுக்கிறது. பெற்றோர்களுக்குத் தேவையான தனிமை இருப்பதில்லை. சிறுவர்களும் சிறுமிகளும் இளம் பருவத்திலேயே பால் முதிர்ச்சியடைகின்றனர். இவர்களின் மனவெழுச்சிச் சமநிலை பாதிக்கப்படுகிறது. சிறுவயதிலேயே பால் நடத்தைகளில் ஈடுபடுகின்றனர். முறைதவறிய பால் நடத்தைகள் இத்தகைய ஒற்றை அறைக் குடும்பங்களில் தான் காணப்படுகின்றன. இளையோர் பல்வேறு மனப்போராட்டங்களுக்கு உள்ளாகின்றனர். இதன் காரணமாக இவர்களின் ஆளுமை பாதிக்கப்படுகிறது. இவர்கள் குற்ற நடத்தைகளில் ஈடுபடுகின்றனர். மேலும், தகுந்த ஓய்வு நேரப் பொழுதுபோக்குகள் பெரும்பாலான குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. பொழுதுபோக்கு இடங்கள், விளையாட்டு அரங்குகள், திடல்கள் முதலியன இல்லாத காரணத்தினாலும், சிறுவர்களை ஒருங்கே கூட்டி விளையாட்டு, பொழுதுபோக்குப் போன்றவை அமைப்பதற்குத் தேவையான பொருள்களும், ஒருங்கமைப்பாளர்களும் இல்லாத காரணத்தினாலும் சிறுவர் தங்கள் ஓய்வு நேரத்தில் குற்றங்கள் புரிகின்றனர். திரைப்படங்களிலும் இந்த நடவடிக்கைகளைப் பற்றிய விரிவான முறையில் கதைகளும் காட்சிகளும் அமைக்கப்படுகின்றன. இதனால், திரைப்படங்களும் இளங்குற்ற நடத்தைக்கு மறைமுகக் காரணங்களாக அமைகின்றன. உடல் ஊனமுற்ற குழந்தைகள் மற்றக் குழந்தைகளால் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அதனால், இத்தகைய குழந்தைகளும் குற்றக் குழுக்களில் சேர்ந்து விடுகின்றனர். சமூகத்தில் குற்றக்கிடங்குகள் இருக்கின்றன. இவற்றைச் சேர்ந்தவர்கள் சிறு குழந்தைகளைத் திருடியும் பிடித்தும் ஏமாற்றி அழைத்து வந்தும் குற்றங்கள் செய்வதற்குப் பயிற்சி கொடுக்கின்றனர். இத்தகைய குழந்தைகள் கொடூரமாக நடத்தப்படுகின்றனர். இவர்கள் பிச்சையெடுத்துப் பணம் சேர்த்துக் குற்றக் குழுவின் தலைவனிடம் கொடுத்து விடுகின்றனர். கள்ளக் கடத்தல் செய்வதற்குப் பயிற்சி அளிக்கப்படுகின்றனர். சிறு திருட்டுகள் செய்தல், பயணம் செய்வோரின் சட்டைப் பையிலிருந்து பணம் திருடுதல், கள்ளச் சாராயம் விற்றல், போதை மருந்துப் பொருள்களைச் சட்டவிரோதமாக விற்றல், பரத்தைத் தொழிலுக்கு வாடிக்கைக்காரர்களை அழைத்து வருதல், முறையில்லாப் பால் நடத்தையில் ஈடுபடுவது போன்ற குற்றங்களைச் செய்வதற்குச் சிறுவர்கள் பயிற்சி அளிக்கப்படுகின்றனர். ஆதலின், குற்றக் குழுக்களே இளங்குற்ற நடத்தையின் பிறப்பிடங்கள் ஆகும். இளங்குற்ற நடத்தை, மரபியல் காரணமாகவும் சில நேரங்களில் ஏற்படுகிறது. உயிர்ப்பொருள் ஆக்கக் கோளாறுகள் (Metabolic Disorders), இளங்குழவிப் பருவத்தில் ஏற்படக் கூடிய சில நோய்கள், மூளைக் காயச்சல் மரபணுப் பிறழ்வுகள் போன்ற காரணங்களும் சில நேரங்களில் குழந்தைகளிடையே குற்ற நடத்தையைத் தோற்றுவிக்கின்றன. இந்தியாவில் பல மாநிலங்களில் இளம்பருவத்தினரின் நலனுக்காகச் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. இச்சட்டங்கள் இளம்பருவத்தினரைச் சமூகத் தீங்குகளிலிருந்து காப்பாற்றும் நோக்கத்துடனும், அவர்கள் சமூக எதிர்ப்புச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கத்துடனும் இயற்றப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் பெண்கள் குழந்தைகள் விபசாரத் தடைச்சட்டம் (Suppression of Immoral Traffic in Women & Children Act), குழந்தைகள் சட்டம் போன்றவை (Children Act) இளம்பருவத்தினரின் நலனைக் கருதி இயற்றப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு உட்படப் பல மாநிலங்களில் குற்றமிழைத்த இளம் பருவத்தினரும், குற்றத்தில் ஈடுபடுத்தப்பட்ட இளம்பருவத்தினரும் திருந்தி மறுவாழ்வு பெறும் பொருட்டு இளங்குற்றவாளிகள் வழக்கு மன்றங்களும், இளங்குற்றவாளிகள் சீர்திருத்தப் பள்ளிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தவிரப் பல மாநிலங்களில் குழந்தைகள் நல வாரியங்கள், மீட்பு இல்லங்கள் (Rescue Homes), குறுகிய காலக் காவல் இல்லங்கள் (Remand Homes) போன்ற அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் 1981–ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி. 93 இளங்குற்றவாளிகள் வழக்கு மன்றங்களும், 102 சீர்திருத்தப் பள்ளிகளும் உள்ளன. இளங்குற்றவாளிகளின் மறுவாழ்வு இக்காலத்தில் இளங்குற்ற நடத்தை ஒரு குற்றமாகக் கருதப்படுவதில்லை. அது ஒரு சமூக நோயின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. இளங்குற்றவாளிகள் குற்றமிழைத்தவர் என்ற நோக்கில் ஆராயப்படுவதில்லை. குற்றமிழைப்பதற்கு நேரடியாகயோ மறைமுகமாகவோ தூண்டப்படுகின்றனர் என்று கருதப்படுகிறது. ஆதலின், இளங்குற்றவாளிகளைச் சிறையிலடைப்பதில்லை. அவர்களுக்குச் சீர்திருத்தப் பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இத்தகைய சீர்திருத்தப் பள்ளிகள் பல மாவட்டங்களில் உள்ளன. இளங்குற்றவாளிகள் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டவுடன் குறுகிய காலக் காவல் இல்லங்களில் வைக்கப்படுகின்றனர். பின்னர், இவர்கள் இளங்குற்றவாளிகள் வழக்கு மன்றத்தில் விசாரணை செய்யப்படுகின்றனர். தமிழ்நாட்டில் இத்தகைய வழக்கு மன்றங்கள் குழந்தைகள் வழிகாட்டு அமைப்பு (Juvenile Guidance Bureau) என்ற பெயரில் இயங்குகின்றன. இந்த மன்றத்தில் நீதிபதியைத் தவிர ஒரு சமூகப் பணியாளரும், உளவியல் வல்லுநரும் இருக்கின்றனர். இவர்கள் குழந்தையின் வயது, மனநிலை, உள முதிர்ச்சி, மனவயது போன்றவை பற்றிய சுருக்கமான அறிக்கை தயாரிக்கிறார்கள். இந்த விவரங்களின் அடிப்படையில் குழந்தைகள் மனவளர்ச்சி குன்றியவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டால், பாலவிகார் போன்ற மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் இல்லத்திற்கு அனுப்பப்படுகிறார்கள். உளமுதிர்ச்சி உடையவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டால், சிறுவர் சீர்திருத்தப்பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். உளக்கோளாறு அல்லது உளப்பிணி உடையவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டால், மனநலக் காப்பகத்திற்கு அனுப்பப்படுகின்றனர். உடல் ஊனமுற்ற குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கென இயங்கும் பள்ளிகளுக்கும், பயிற்சிக் கூடங்களுக்கும் அனுப்பப்படுகின்றனர். இளங்குற்றவாளிகளின் மீது சமூகம் தவறான எண்ணமும் அணுகுமுறையும் கொள்வதால் இளங்குற்றவாளிகளின் மனத்தில் தங்களுக்கு மறுவாழ்வு கிடைக்க வழி இல்லை என்ற எண்ணம் உருப்பெற்று விடுகிறது. இந்த எண்ணம் இவர்களைத் திரும்பவும் குற்றம் புரியத் தூண்டுகிறது. மேலும், குற்றக்குழுக்களின் செல்வாக்கினால் இளங்குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டும், தப்புவிக்கப்பட்டும் திரும்பவும் குற்றத் தொழிலிலேயே ஈடுபடுத்தப்படுகின்றனர். சீர்திருத்தப் பள்ளியிலிருந்து திரும்பி வந்த குழந்தைகளைச் சமூகம் ஏற்றுக் கொள்ளாமையால் அவர்கள் திரும்பவும் குற்றமிழைக்கின்றனர். இளங்குற்றவாளிகள் வாழ் நாள் முழுவதும் ‘பழியை’ச் சுமந்தே வாழ்கின்றனர். இந்நிலை திருந்தினால் இளங்குற்ற நடத்தை கட்டுப்படுத்தப்படும். இளங்குற்றவாளிகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உளவியல் சோதனைகள் அளிக்கப்பட்டு அவர்களின் ஆளுமையும் உளவளர்ச்சியும் மதிப்பீடு செய்யப்படுகின்றன. அவர்களுக்குக் குழு உளவழி மருத்துவம் (Group Psychotheraphy) அளிக்கப்படுகிறது. தனியார் சமூகப் பணி அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் வேறுபலரும் இளங்குற்றவாளிகளைப் பண்டிகை நாட்களில் வந்து பார்வையிட்டு அவர்களுடன் உரையாடிப் பரிசு கொடுத்து மகிழ்விக்கின்றனர். சமூகப் பணிக் கல்லூரிகளிலுள்ள மாணவர்கள், இளங்குற்றவாளிகளுக்கென விளையாட்டுப் போட்டி, மனமகிழ் திட்டங்கள் ஆகியவற்றை அமைத்து நடத்துகின்றனர். இளங்குற்றவாளிகளை அவர்களின் வயது, உளமுதிர்ச்சி ஆகியவற்றுக்கேற்ப வகைப்படுத்தி ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்ற கலந்துரையாடல்களை நிகழ்த்துகின்றனர். மேலும், வாழ்க்கைப் பின்னணி ஆய்வு (Case Work) என்னும் முறையில் இளங்குற்றவாளிகளின் கடந்தகாலக் குடும்பச் சூழமைவு, சமூகப் பின்னணி, பள்ளிச் சூழமைவு ஆகியவற்றைப் பற்றி ஆய்வு செய்து அக்குழந்தைகளுக்கு ஏற்ற மறுவாழ்வுத் திட்டங்களையும் அமைத்துக் கொடுக்கின்றனர். இளங்குற்றவாளிகளின் மறுவாழ்வுக்கு முழுமையான உணர்வுடன் பாடுபடுவர்களுள் சமூகப் பணிக் கல்லூரிகளின் மாணவ மாணவியரைச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். இளையோர் குற்ற நடத்தையில் ஈடுபடாதவாறு தடுப்பதற்காகக் காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் ‘சிறுவர் ஊர்’ (Boys Town) எனப்படும் அமைப்புகள் தமிழ் நாட்டின் பல இடங்களில் காணப்படுகின்றன. இந்த அமைப்புகளில் சிறுவருக்கான ஓய்வு நேர விளையாட்டுகளும், நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. நீந்துதல், ஓடுதல் போன்ற விளையாட்டுத் துறைகளில் சிறுவருக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்தகைய அமைப்புகள் இளங்குற்ற நடத்தையைத் தடுப்பதற்காகப் பாடுபடுகின்றன. ஆர்.கே.பா. துணை நூல்கள் Mukerjee, K., The Sociology & Social change in India Today, Prentice Hall of India, New Delhi, 1965. Mehr, J., Abnormal Psychology, Holt, Rineharl 2 Rinchalt winston, New York. 1983