உத்தர ராம சரிதம்
uttara rāma caritam
சிறந்த நாடகங்கள் 10 பிரிவுகளும் 4 அமைப்புகளும் உடையனவாகி, 9 சுவைகளுள் காதலையும் (சிருங்காரம்) வீரத்தையும் முக்கியமாக வெளிப்படுத்தும் ஆற்றலோடு, அவையோரை மெய்ம்மறக்கத் தூண்டுவதாகிய உலகியலுக்கு மாறுபட்ட (அலௌகிக) சுவை விஞ்சப் பெற்று, முதல், வழி, சார்பு என்னும் நூல்வகை மூன்றனுள் ஒன்றாக அமையப் பெறுதல் வேண்டும் என வடமொழி அணி இலக்கண நூல்கள் விளக்குகின்றன. இவ்விலக்கணம் யாவும் சிறப்புற அமையப் பெற்றனவாக உத்தர ராம சரிதமும் சாகுந்தலமும் கருதப்படுகின்றன. இவ்விரு சிறந்த நாடக நூல்களுள்ளும் உத்தர ராம சரிதமே அனைத்திலக்கணமும் முற்றிலும் பொருத்தப்பெற்று, கற்போரையும், காண்போரையும் மெய்ம்மறக்கச் செய்யும் திறம் கொண்டுள்ளது என நாடக நூலறிஞர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது.
கருணை (Pathos) என்பது 9 சுவைகளுள் அடங்காத ஒரு தனிச்சுவை. இது ஊடலில் உண்டாகும் நாடக இன்பச் சுவையாகும். இதுவே வான்மீக ராமாயணத்தின் முக்கியச்சுவை. உத்தர ராம சரிதத்திலும் இதுவே முக்கியமாக இடம் பெற்றுள்ளது. இந்நாடக நூலைப் படித்தால் கல்லும் அழும்; வச்சிரமும் வெடிக்கும் என்று இதன் ஆசிரியர் கூறுகிறார். மகாகவி காளிதாசர் இந்நூலைப் பயின்று பாராட்டினார் என்பர்.
இந்நூலாசிரியர் இராமன் செயன்முறைகளை இரண்டாகப் பகுத்து, மகாவீர சரிதம், உத்தர ராம சரிதம் என்னும் தம் இரு நாடக நூல்களுக்கு அவற்றைக் கருவாக அமைத்துள்ளார். முடிசூட்டலுக்கு முன்னர் நிகழ்ந்த இராமனின் செயன்முறைகள் மகாவீர சரிதத்திலும், பின்னர் நிகழ்ந்த அவன் செயன்முறைகள் உத்தர ராம சரிதத்திலும் நாடகமாகப் புனையப் பெற்றுள்ளன. உத்தர ராம சரிதம் என்னும் பெயர் முடிசூட்டலுக்குப் பின்னர் இராமனின் செயன்முறைகள் என்று பொருள்படும். ‘உத்தர’ என்னும் சொல்லுக்குத் திருமால் என்னும் பொருள் உள்ளமையால், உத்தர ராம சரிதம் என்பதற்குத் திருமாலின் அவதாரமாகிய இராமனின் செயன்முறைகள் என்றும் பொருள் கூறுவர்.
சீதையின் தூய்மையினை நேரிலும் நெருப்புச் சோதனை வழியாகவும் வான்மீகி போன்ற முனிவர்கள் வழியாகவும் நன்கு உணர்ந்திருந்த போதிலும், ஒரு வண்ணான் கூறிய பழிச் சொல்லைப் பொருட்டாக ஏற்று, அவளை இறுதிவரை கைவிட்டமையால் இராமனுக்கு உண்டாகிய பழியைப் போக்கும் நோக்கத்தில் இந்நாடகம் இயற்றப்பட்டுள்ளது. இராமன் இலக்குவன் மூலமாகச் சீதையைக் காட்டிற்கு அனுப்பிய பகுதியிலிருந்து இதன் கதை தொடங்குகிறது. சீதை காட்டில் வான்மீகியின் பாதுகாப்பில் வாழ்வது, இலவன், குசன் என்னும் மைந்தர்கள் அவளுக்குப் பிறப்பது போன்ற நிகழ்ச்சிகள் வான்மீக ராமாயணத்திலுள்ளமை போன்று இதிலும் இடம் பெற்றுள்ளன. ஆயினும் சில புதிய நிகழ்ச்சிகளைக் கதைவோட்டத்தோடு தொடர்புபடுத்தி, அவையோரின் உள்ளத்திற்கு இனிமை அளிக்கும் வகையில் இந்நாடகம் சேர்த்துள்ளது. இராமனும் சீதையும் மறை உடலில் புகுந்திருந்து, ஒருவரை ஒருவர் சந்திப்பதாக வரும் புதிய காட்சி இந்நூலில் நாடகத்திற்குள் நாடகமாக அமைந்துள்ளது. இந்நாடகம் இராமனுக்குப் பரதரால் நடத்தப்பட்டு, அவன் காண்பதாக உள்ளது. இது இராமன் சீதையோடும் தம் மைந்தர்களோடும் கூடி இருக்கும் வகையில் மங்களமாக முடிகிறது.
உத்தர ராம சரிதத்தை யாத்தவர் நீலகண்டன் என்னும் கவிஞர். இவருக்குப் பவபதி என்னும் வேறு பெயரும் உண்டு. இவர் உதும்பரர்கள் என்னும் அந்தண மரபினர்; பேரார் என்ற பதுமபுரத்தில் வாழ்ந்தார். இவர் வேத, சாத்திரங்களில் புலமை பெற்று யோக, ஞான நெறிகளில் நன்கு பயிற்சி பெற்றவர். இவர் தந்தை நீலகண்டர்; தாயார் சாதுகர்ணீ. இவர் யசோவர்மன் என்ற மன்னனால் ஆதரிக்கப் பெற்றார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 887)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y8ekw94d/
தமிழ்“உத்தர ராம சரிதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/y8ekw94d/APA
Oliyon Research. (2026). உத்தர ராம சரிதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y8ekw94d/MLA
"உத்தர ராம சரிதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/y8ekw94d/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment