அரசும் கல்வியும்
aracum kalviyum
அரசு, மக்களைச் சமூக இயல்பினராக்குவதில் தலையாய பங்கு கொள்கிறது.
அரசு, மக்களைச் சமூக இயல்பினராக்குவதில் தலையாய பங்கு கொள்கிறது. மக்கள் யாவரையும் உள்ளடக்கிய பெரும் சமுதாயமாகிய இவ்வமைப்பு மிகவும் செல்வாக்குடையது; வலிமைமிக்கது. கல்வி அமைப்பு, பயிற்றும் முறைகள், பள்ளிச் செயல்கள் யாவும் அந்நாட்டின் அரசின் தன்மையைப் பொறுத்து அமையும். இசுபார்ட்டா (Sparta) கல்வி முறையும், ஏதென்சிலிருந்த (Athens) கல்வி முறையும், அவ்விரு கிரேக்க நகரங்களில் காணப்பட்ட சமூக அமைப்பையும், அரசின் குறிக்கோள்களையும், தேவைகளையும் வெளிக்காட்டுவனவாக அமைந்திருந்தன. குடியாட்சி நடைபெறும் நாடுகளின் கல்வி முறைக்கும், எதேச்சாதிகார நாட்டின் கல்வி முறைக்கும் உள்ள வேறுபாடு இதை எடுத்துக் காட்டும்.
நாசிசம், பொதுவுடைமை, பாசிசம் ஆகிய கொள்கைகள் குழந்தைகளின் மனத்தில் பள்ளிக் கல்வியின் மூலம் முறையே செருமனி, உருசியா, இத்தாலி நாட்டில் திணிக்கப்பட்டனவென்பதை வரலாறு கூறும். குடியாட்சிக் கோட்பாட்டை மேற்கொண்டுள்ள நாடுகளின் கல்விமுறைக்கும் எதேச்சாதிகார நாடுகளின் கல்வி முறைக்கும் உள்ள வேறுபாடுகள், அவ்விரு ஆட்சி முறைக்குமுள்ள வேறுபாடுகளின் காரணமாக எழுந்தவையாகும். கல்விக் கொள்கைகளை உருவாக்குவதிலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் அரசு ஈடுபடும் தன்மையைப் பற்றிக் கருத்து வேறுபாடுகள் அறிஞர்களிடம் காணப்படுகின்றன. கல்வியின் கலைத் திட்டம் (Curriculum), கற்பிக்கும் முறைகள், அவைபற்றிய செயல்கள், நிருவாகம் ஆகியன குடும்பம், சமய நிறுவனம், மக்கட் பற்றுடைய குழுக்கள் போன்ற சமூக நிறுவனங்களின் பொறுப்பிலிருக்க வேண்டும் என்ற கருத்தை ஒரு சாரார் வலியுறுத்துவர். இதை, ‘இருப்பது போல் இருக்கட்டும்’ என்று அழைக்கப்படும் ‘தலையிடாக் கொள்கை’ (Laissez–faire) என்று கூறுவர். மற்றொரு சாரார் சமூகச் சமதருமக் கொள்கையைப் (Socialisation) பின்பற்றுபவர்களாவர். இவர்கள் கருத்துப்படி, ‘அரசு கல்வியைப் புறக்கணிக்க இயலாது. பெரும்பாலான பெற்றோர்கள் தகுந்த அறிவுத்திறன் அற்றவர்களாயிருப்பதாலும் அவர்கள் மற்றைய பணிகளில் ஈடுபட்டிருப்பதால், தங்கள் குழந்தைகளின் கல்வியைப் பற்றித் தகுந்த அளவு கவனிக்க ஓய்வு இல்லாமலிருப்பதாலும் அரசு அதன் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கிறது. மேலும், சமய நிலையங்களிலிருந்து பெறப்படும் கல்வி ஒரு சார்புடையதாகவும், குறுகிய மனப்பான்மையை வளர்க்கும் தன்மையுடையதாகவும் இருக்கும் என்பதை மறுக்க முடியாது. எனவே, அரசு தனது இன்றியமையாத பொறுப்பிலிருந்து விடபடமுடியாது’ என்று கூறுகிறார்கள்.
அண்மைக் காலந்தொட்டு மற்றொரு சாராரின் கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. அது மேற்கூறிய இரண்டு கொள்கைக்கும் புறம்பாக நடுநிலையைப் பின்பற்றும் கருத்தாகவும் அமைந்துள்ளது. குழந்தைகளின் வளர்ச்சியை நாடும் அரசு, சமூக நிலையங்களாகிய குடும்பம், சமய நிறுவனம் முதலியவற்றின் ஒத்துழைப்பால் கல்வி அமைப்பை உருவாக்கி நிருவகிக்கும் பொறுப்பை ஏற்பதாகும். கல்வி பற்றிய ஒவ்வொரு செயற்பாட்டிலும் தலையிட்டு அரசு தனது கொள்கையைத் திணிப்பதையும் தவிர்த்து இயங்குகிறது. இது நடுநிலைக் கொள்கையைப் பின்பற்றுபவர்களின் கூற்றாகும். பல நூற்றாண்டுகள் அயலார் ஆட்சியின் பிடியிலிருந்து விடுதலை பெற்ற இந்திய நாட்டிற்கு இக்கொள்கை மிகவும் பொருத்தமுடையதாக இருக்கிறது.
கல்வி, அரசுக் கட்டுப்பாட்டின் கீழ்வருவதால் ஏற்படும் இடுக்கண்கள்
அரசு கல்வியைத் தன் ஆதிக்கத்தின்கீழ்க் கொண்டுவருவதால் கல்வியின் நோக்கங்கள், நிருவாகம் எல்லாம் அதன் அரசியல் கட்சியின் கொள்கைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும் நிலை உருவாகும். அரசியல் கட்சியின் தத்துவத்திற்கு ஏற்பக் கல்வி நிலையங்கள் பணிசெய்ய வேண்டிய நிலை ஏற்படும். ஆசிரியர்கள் பணியமர்த்தம் உட்பட எல்லாச் செயல்களிலும் கட்சியின் ஆதிக்கம் வலுவடையும்.
குழந்தைகளின் உள்ள வளர்ச்சி, திறன் வளர்ச்சி, ஆளுமை மேம்பாடு எல்லாம் புறக்கணிக்கப்பட்டு, அரசியல் கட்சியின் கொள்கைக்கும் கோட்பாட்டிற்கும் கல்வித்துறை செயற்படுத்தப்படும். மறைமுகமாக அரசின் (கட்சியின்) கொள்கைகளைக் குழந்தைகளின் உள்ளத்தில் பதிய வைக்க ஆசிரியர்களும் அலுவலர்களும் பயன்படுத்தப்படுவார்கள்.
அதிகாரக் குவிப்பும் பரவலாக்கப்படுதலும்
கல்வி நிருவாகத்தைப் பற்றிக் கூறும்பொழுது இரண்டு முறைகளைக் கூறலாம். அவை அதிகாரக் குவிப்பும் பரவலாக்கப்படலும் ஆகும். மைய அரசின் நேரடி நிருவாகத்திலிருக்கும் முறைக்கு அதிகாரக் குவிப்பு (Centralisation) முறை என்று பெயர். பிரான்சு நாட்டிலும் உருசியாவிலும் இம்முறை வழக்கிலுள்ளது. அதிகாரம் பரவலாக்கப்படும் (Decentralisation) முறை அமெரிக்க ஐக்கிய நாட்டில் பின்பற்றப்படுகிறது. பள்ளிக் குழுக்கள் (School Boards) தனி உரிமை பெற்று இயங்குகின்றன. சில இடங்களில் வட்டார அதிகாரிகள் (Local Authorities) நிருவாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர். இன்னும் சில பகுதிகளின் மாநில அரசுகள் கல்வியைத் தமது பொறுப்பில் வைத்துள்ளன. இங்கிலாந்தில் கல்விப் பொறுப்புக் கூட்டுறவு முறையிலுள்ளது. அரசு, மாநிலக் கல்வி அதிகாரிகள், பள்ளிகள் ஆகிய மூவரும் இணைந்து கல்வி நிருவாகத்தை நடந்துகின்றனர். இந்தியாவில் கூட்டாட்சி முறையில் அரசியல் அமைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளி நிருவாகம் அதிகாரக் குவிப்பு முறையிலும், பன்முகப்படுத்தல் முறையிலும் மாறிமாறிச் செயற்பட்டு வருகிறது.
அதிகாரக் குவிப்பு முறையின் நன்மைகள்
(அ) கல்வி, மைய அரசின் நிருவாகத்திலிருப்பதால் அதன் முன்னேற்றம் நாடு முழுவதும் ஒரே அளவாக அமையும். (ஆ) எல்லா மாநில அரசுகளின் கல்வி முயற்சிகட்கிடையே ஒருங்கிணைப்பு ஏற்படுகிறது. (இ) ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாகச் சோதனை முறைகள் கல்வியில் செயலாக்குவதால் ஏற்படும் இரட்டிப்புச் செலவுகள் நிகழாவண்ணம் காக்க முடிகிறது. (ஈ) நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் உரிய தேவைகளைக் கணக்கிட்டு மைய அமைப்பினால் எளிமையாகத் திட்டமிட்டு, ஒவ்வொரு மாநிலத்தின் தேவைகளுக்கு ஏற்பக் கல்வி பற்றிய செயல்கள் நடைபெற வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
குறைபாடுகள்
(அ) நாடு முழுமைக்கும் அமைக்கப்படும் கல்விமுறை மாற்றியமைப்பதற்கு எளிதாக இருக்க முடியாது. நாளடைவில் கல்விமுறை வளையாத் தன்மையைப் பெறும். (ஆ) வழக்கமாக நடைபெறும் நிருவாகம், கல்விப் பணியைக் காட்டிலும் முதன்மை பெறும் நிலை அடையக் கூடும். (இ) நிலப்பரப்பு அதிகம் உள்ள நாட்டில், வெகுதொலைவிலுள்ள பகுதிகளும் மாறுபாடான பண்பாடு, பழக்க வழக்கங்களும் மைய அரசினால் பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் சூழ்நிலை ஏற்படலாம்.
பரவலாக்குதலால் நன்மைகள்
(அ) உள்ளூர்ப் பகுதியின் முயற்சியும் ஊக்கமும் ஆதரவும் கல்விச் செயல்களில் இடம் பெறும். (ஆ) கல்வி ஏற்பாட்டில் தனிப்பட்ட குடிமகனும் சிறு குழுக்களும் பங்கு பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். (இ) கல்வி பற்றிய திட்டங்களை நாட்டின் ஒவ்வொரு பகுதியின் வேறுபட்ட தேவைகளுக்கேற்ப அமைக்க முடியும். (ஈ) கல்வி அமைப்பில் முன்னேற்றம் கருதி மாறுதல்களை ஏற்படுத்தி எளிமையாகச் செயலாற்ற முடியும்.
குறைபாடுகள்
(அ) நாடு முழுமைக்கும் ஒரே விதமான கல்வி அமைப்பு முறை தோன்ற இயலாது (ஆ) வேண்டிய அளவு நிதி முதலீடு செய்யத் தடையேற்படும். (இ) சிதைந்து போகும் சக்திகள் மேலோங்கி நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் தீங்கு ஏற்படும்.
இந்திய நிருவாகத்தைக் கண்ணுற்றால் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1919–ஆம் ஆண்டிற்கு முன்பு மாநிலங்களுக்கு எவ்விதமான தனி உரிமையும் கிடையாது. மைய ஆட்சியும் மாநில ஆட்சியும் இங்கிலாந்திலுள்ள இந்தியச் செயலர் அனுமதியின்றி எந்தவிதச் சட்டமும் இயற்ற இயலாது. மாநிலங்களின் நிருவாகத்தை மைய அரசு தனது பிடியில் வைத்திருந்தது.
1919–ஆம் ஆண்டு முதல் கல்வி பற்றிய கொள்கையில் பரவலாக்குதல் முறை மேற்கொள்ளப்பட்டது. 1947–ஆம் ஆண்டிற்குப் பிறகு மேலும் அதிகாரம் பரவலாக்கல் அதிகமாக்கப்பட்டது. வட்டார அமைப்புகளிடம் தொடக்கக் கல்விப் பொறுப்பு விடப்பட்டது. 1929–ஆம் ஆண்டு ஏற்பட்ட சர் பிலிப் ஆர்டாக் குழு அறிக்கையும் (Sir Philip Hartog), 1944–ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சான் செர்சண்ட்டுக் குழு அறிக்கையும் (John Sergeant Committee) வட்டார அமைப்புகளிடம் தொடக்கக் கல்வியின் பொறுப்பை விடுவதைத் தவிர்த்து, மாநில அரசே அதன் நிருவாகத்தை ஏற்க வேண்டுமென்று பரிந்துரை செய்தன. எனினும் 1958–ஆம் ஆண்டு முதல், வட்டார அமைப்புகளுக்கு அதிக அளவில் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு வந்தன. கேர் கமிட்டி (Kher Committee) முதலிய பல குழுக்கள், தொடக்கக் கல்வியை வட்டார அமைப்புகள் ஒழுங்காக நிருவகிக்கவில்லையென்றும், மாநில அரசே அதன் முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும் என்றும் கூறியதோடு, மாநில அரசின் மேற்பார்வையின் கீழ்த் தன்னிலையுடைய குழுக்களிடம் (Independent Committee) தொடக்கக் கல்வியின் நிருவாகம் ஒப்படைக்கப்பட வேண்டுமென்ற கருத்தையும் வெளியிட்டன.
இந்திய அரசியல் சட்டத்தின் 7–ஆவது அட்டவணையில் மூன்று பட்டியல் உள்ளன. மத்திய ஆட்சி- யின் பட்டியலில் (Union List) 97 தலைப்புகளும், மாநில அரசுப் பட்டியலில் (State List) 66 தலைப்புகளும், ஒருங்கியல் பட்டியலில் (அதாவது மைய மாநில அரசுகளின் இணைந்த பொறுப்பில், Concurrent List) - 47 தலைப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன. கல்வியைப் பற்றிய சட்டம் இயற்றுவதற்கும், மத்திய அரசின் மேற்பார்வையில் கல்வித் திட்டம் அமைவதற்கும் ஒருங்கியல் பட்டியலில் கல்வியைக் கொண்டு வருவது பற்றிய சிக்கல் எழுந்தது. வெவ்வேறு கருத்துகளை வல்லுநர்கள் எடுத்துரைத்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களடங்கிய குழு ஒன்று உயர்நிலைக் கல்வி பற்றிப் பி.என். சாப்ரு தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. அக்குழு உயர் கல்வியை ஒருங்கியல் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற கருத்தை வெளியிட்டது. 1976–ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தப்படி கல்வி ஒருங்கியல் அதிகாரப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
கல்வியை மக்களுக்கு அளிக்கும் பொறுப்பிலிருந்து அரசு தன்னை விடுவித்துக் கொள்வது விரும்பத்தக்கதன்று. அதே சமயத்தில் தனது கடுமையான பிடியில் கல்வியை வைத்துக் கொண்டு, கற்பிக்கும் பணியிலும் நிருவாகத்திலும் ஈடுபட்டுள்ளவர்கள் விரும்பத்தகாத இடையூறுகளை ஏற்படுத்தாமலும், மனிதனின் தனித் தன்மைக்கு ஊறு செய்யா வண்ணமும் அரசு கல்வியைச் செயற்படுத்த வேண்டும். அரசின் ஈடுபாடு, மேற்பார்வை, வழிகாட்டுதல் ஆகியவற்றுடன் கல்வி அமைதல் விரும்பத்தக்கதாகும்.இரா.தி.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 739)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y88ekjmt/
தமிழ்“அரசும் கல்வியும்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/y88ekjmt/APA
Oliyon Research. (2026). அரசும் கல்வியும். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y88ekjmt/MLA
"அரசும் கல்வியும்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/y88ekjmt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment