உடன் கூட்டம்
uṭaṉ kūṭṭam
ஒரு குற்றத்தைச் செய்வதற்கு ஒருவனைத் தூண்டுபவனும், அவனுக்கு உதவியாக இருப்பவனும், அவனுடன் சேர்ந்து சதி செய்பவனும், பொதுவான எண்ணத்துடன் அவனுடன் சேர்ந்து செயற்படுபவனும் உடன் குற்றவாளி (Accomplice) எனச் சொல்லப்படுவான்.
ஒரு குற்றத்தைச் செய்வதற்கு ஒருவனைத் தூண்டுபவனும், அவனுக்கு உதவியாக இருப்பவனும், அவனுடன் சேர்ந்து சதி செய்பவனும், பொதுவான எண்ணத்துடன் அவனுடன் சேர்ந்து செயற்படுபவனும் உடன் குற்றவாளி (Accomplice) எனச் சொல்லப்படுவான். ஐந்தும் ஐந்துக்கு மேற்பட்டவர்களும் பொதுவான நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகச் சட்டவிரோதமான கும்பலாக இயங்கும் நிலையில் அக்கும்பலில் உள்ள ஒவ்வொருவனும் அக்கும்பலில் உள்ள மற்றவனுக்கு உடன் குற்றவாளியாவான்.
குற்றவாளியும் உடன் குற்றவாளியும் ஒத்த வயதினராயிருந்தால் இருவரும் ஒன்றாக விசாரிக்கப்படுவார்கள். அவர்களுள் ஒருவன் தலை மறைவாகிவிட்டால் பிடிப்பட்டவனை மட்டும் தனியாக விசாரணை நடத்துவர். அவ்விருவருள் ஒருவன் மட்டும் 18 வயதுக்குட்பட்ட சிறுவனாயிருந்து, மற்றவன் அவ்வயதுக்கு மேற்பட்டவனாயிருக்கும் நிலையில் அவ்விருவரும் தனித்தனியாக விசாரிக்கப்படுவார்கள்.
ஒரே வழக்கில் குற்றவாளியும் உடன் குற்றவாளியும் ஒன்றாக விசாரிக்கப்படும் நிலையில், வழக்கு விசாரணையின் தொடக்க கட்டத்திலேயே ஒருவன் மட்டும் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் நிலையில், அவனைப் பொறுத்த மட்டிலும் பொதுவாக வழக்குப் பிரிக்கப்பட்டு, அடுத்தவன் மீது அதாவது குற்றத்தை ஒப்புக் கொள்ளாதவன் மீது தனியாகத் தொடர்ந்து விசாரணை நடைபெறும்.
குற்றம் புரிந்தவனும் அவனுக்கு உடந்தையாக இருந்த உடன் குற்றவாளி எனப்படுபவனும் சட்டப்படி குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படும் வரையில் குற்றம் சாட்டப்பட்ட எதிரிகளாகக் கருதப்படுவார்கள். அவ்விருவரும் ஒரு வழக்கில் ஒன்றாக விசாரிக்கப்படும் நிலையில் ஒருவன் எதிரியாகவும் மற்றவன் அவனுடன் ஒத்த எதிரியாகவும் கருதப்படுவான். அந்நிலையில் அவ்விருவருள் ஒருவன் கொடுத்த ஒப்புதல் வாக்கு மூலம் முறையாக மெய்ப்பிக்கப்பட்ட நிலையில் அந்த ஒப்புதல் வாக்குமூலத்தை மற்ற எதிரிக்கு எதிராகவும் நீதிமன்றம் ஆராயலாம் (May take into Consideration) என்பது இந்திய சான்றுச் சட்டத்தின் 30–ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு ஆராயப்படத் தகுதி வாய்ந்ததாக அமைவதற்கு இரு முக்கிய நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவனும் மற்றவனும் ஒரே வழக்கில் சக எதிரிகளாக விசாரிக்கப்படவேண்டும். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவன் தானும் குற்றம் செய்தவன் என்று அதில் ஒப்புக் கொண்டிருக்கவேண்டும். அவ்வாறான ஒப்புதல் வாக்குமூலத்தை வழக்கு விசாரணையின் போது வாக்குமூலம் கொடுத்தவன் மறுத்திட்ட போதிலும் அந்த ஒப்புதல் வாக்குமூலத்துக்கு அளிக்கப்பட வேண்டிய மதிப்பில் குறைவு ஏற்படாது.
மேற்கூறிய இந்திய சான்றுச் சட்டத்தின் 30–ஆம் பிரிவில் உள்ள கோட்பாடு ஆங்கிலச் சட்டத்திலிருந்து மாறுபட்டதாகும். குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை மற்றவருக்கு எதிராகப் பயன்படுத்த ஆங்கிலச் சட்டம் அனுமதிப்பதில்லை. இந்தியாவிலும் மேற்கூறிய கோட்பாட்டைக் கடைப்பிடிப்பதில் மிகவும் நிதானமும் முன் எச்சரிக்கையும் தேவை என்று நீதிமன்றங்கள் எச்சரித்துள்ளன. நீதிமன்றங்களின் தீர்ப்புப்படி ஒரு குற்றம் சாட்டப்பட்டவரின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டும் சக எதிரியைத் தண்டிக்கக்கூடாது. ஓர் எதிரிக்கு எதிராக வேறு வகையில் போதுமான சாட்சியமிருந்தால் அதை உறுதி செய்ய மற்ற எதிரியின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பயன்படுத்தலாம் எனச் சில வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சில சூழ்நிலைகளில் உடன் குற்றவாளி (Accomplice) எனப்படுபவன் சக எதிரியாக இல்லாமல் குற்றம் சாட்டுபவர் (Prosecution) தரப்பில் சாட்சியாக மாறுவான். அந்நிலையில் அவன் அளிக்கும் சாட்சியம் சக எதிரியின் ஒப்புதல் வாக்குமூலத்தைக் காட்டிலும் தரத்தில் சிறிது உயர்ந்ததாகக் கருதப்படும். ஏனெனில், அவனது சாட்சியம் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறது. சக எதிரியின் ஒப்புதல் வாக்கு மூலமோ குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதில்லை.
உறுதிப்படுத்தப்படாத உடன் குற்றவாளியின் சாட்சியத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒருவனைத் தண்டிப்பது சட்டவிரோதமான காரியம் அன்று என்று இந்திய சான்றியல் சட்டத்தின் 133–ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதே சாட்சிய சட்டத்தின் 114–ஆம் பிரிவில் சொல்லப்பட்டுள்ள இரண்டாம் எடுத்துக்காட்டில் வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது. முக்கியமான பகுதிகளில் வேறு சான்றின் மூலம் உறுதிப்படுத்தப்படாத உடன்குற்றவாளியின் சான்று நம்பத்தகாததாக அனுமானிக்கப்- படும் என அந்த எடுத்துக்காட்டில் சொல்லப்பட்டுள்ளது. மேற்கூறிய 133–ஆம் பிரிவையும் 114–ஆம் பிரிவில் சொல்லப்பட்டுள்ள எடுத்துக்காட்டையும் ஒன்றாகப் படிக்கும்போது கீழ்க்காணும் கருத்துத் தோன்றுகிறது. உடன்குற்றவாளியின் சான்றின் அடிப்படையில் மட்டும் ஒருவனைத் தண்டிப்பதில் தடையேதுமில்லை. என்றாலும், அவ்வாறு தண்டிப்பதற்குமுன் உடன் குற்றவாளியின் சாட்சியத்தை வேறு சாட்சியத்தின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்வது அறிவொடு பட்ட செயலாகும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 807)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y556dhk8/
தமிழ்“உடன் கூட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/y556dhk8/APA
Oliyon Research. (2026). உடன் கூட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y556dhk8/MLA
"உடன் கூட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/y556dhk8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment