நைட்ரஜன் நிலைப்படுத்தல்
naiṭrajaṉ nilaippaṭuttal
வளி மண்டலத்திலிருக்கும் நைட்ரஜனைத் தாவரங்கள் உள்ளேற்கும் வண்ணம், உரிய சேர்மங்களாக மாற்றி நிலைக்கச் செய்து, அதன் மூலமாக மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் நன்மை ஏற்படுத்தும் முறைக்கு, நைட்ரஜன் நிலைப்படுத்தல் (nitrogen fixation) என்று பெயர்.
வளி மண்டலத்திலிருக்கும் நைட்ரஜனைத் தாவரங்கள் உள்ளேற்கும் வண்ணம், உரிய சேர்மங்களாக மாற்றி நிலைக்கச் செய்து, அதன் மூலமாக மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் நன்மை ஏற்படுத்தும் முறைக்கு, நைட்ரஜன் நிலைப்படுத்தல் (nitrogen fixation) என்று பெயர். நைட்ரஜன் சுழற்சியில் இது ஒரு முக்கிய படி ஆகும். இவ்வுலகில் நிகழும் வேதி, உயிர் வேதி மாற்றங்களால், ஒவ்வோர் ஆண்டும் ஏறத் தாழ 2.2 X 10⁶ டன் என்னும் அளவில், வளிம நைட்ரஜன் நிலைப் படுத்தப் படுகிறது. வேதி உரங்கள் உற்பத்தியிலும், பிற முக்கிய நைட்ரஜன் சேர்மங்களைப் பெறுதலிலும், நைட்ரஜன் பயன் படுகிறது.
மாறுபட்ட மின்னோட்டத்தைப் பெற்றுள்ள மேகங்கள் ஒன்றையொன்று நெருங்கும் போது, ஏற்படும் மின்னலின் போதான மிகை மின்சாரத்தால் வளி மண்டலத்திலிலுள்ள ஆக்சிஜனும், நைட்ரஜனும் இணைந்து, நைட்ரிக் ஆக்சைடு உண்டாகிறது. நைட்ரிக் ஆக்சைடு மேலும் ஆக்சிஜனுடன் வினை புரிந்து, நைட்ரஜன் டைஆக்சைடு விளைகிறது. இவ்வளிமம், மேகத்தில் காணப் படும் நீர்த் திவலைகளில் கரைந்து, நைட்ரிக் அமிலத்தையும், நைட்ரஸ் அமிலத்தையும் விளைவிக்கிறது. நைட்ரஸ் அமிலம் எளிதில் ஆக்சிஜனேற்றம் அடைந்து, நைட்ரிக் அமிலமாக மாறுகிறது. இவ்வாறு கிடைக்கும் நைட்ரிக் அமிலம் மழை நீரில் கரைந்து, மிக நீர்த்த அமிலமாகிப் புவிக்கு வரும் போது, புவி மேலோட்டில் காணப் படும் பல்வேறு காரப் பொருள்களுடன் வினை புரிந்து, நைட்ரேட் உப்புகளைத் தருகிறது. இம்முறையில், காற்றிலுள்ள நைட்ரஜன் கனிம உப்புகளாக நிலைப் படுத்தப் படுகிறது.
வேர் முண்டு (leguminous) குடும்பத் தாவரங்களின் வேர்ப் பகுதிகளில், ஒரு வகை நுண்ணுயிர்ப் பொருள்கள் உள்ளன. இவை காற்றிலுள்ள நைட்ரஜனை உட்கவர்ந்து, நைட்ரஜன் சேர்மங்களாக மாற்றுகின்றன.
வேதி முறைகள். தற்காலத்தில் வேதி முறையில், நைட்ரஜனை நிலைப் படுத்துவதற்குப் பல்வேறு முறைகள் உள்ளன. சான்றாகப் பெர்க்லாண்டு–ஐடு முறையைக் கூறலாம். இந்த வழிமுறைப் படி, காற்று மின் வில்லின் ஊடாகப் பாய்ச்சப் படுகிறது. இதனால், காற்றிலுள்ள நைட்ரஜனும், ஆக்சிஜனும் வினை புரிந்து, நைட்ரிக் ஆக்சைடு உண்டாகிறது. இது மேலும், அதிக ஆக்சிஜனுடன் சேர்ந்து, நைட்ரஜன் டைஆக்சைடு கிடைக்கிறது. இதனை நீரில் கரைத்துப் பெறப் படும் நைட்ரிக் அமிலத்திலிருந்து, தக்க வினைகள் மூலம், நைட்ரேட்டு உப்புகளைப் பெறலாம். இம்முறை, தற்போது மிகக் குறைவாகவே வழக்கத்தில் உள்ளது.
ஹேபர்–போஷ் முறையில், பெட்ரோலியம் அல்லது இயற்கை வளிமத்திலிருந்து பெறப் படும் ஹைட்ரஜனுடன் காற்று கலக்கப் பட்டு, உயர் அழுத்தத்தில் 200–700°C வெப்ப நிலையில், உலோக ஆச்சைடு வினையூக்கி உடனிருக்க, வினை புரியச் செய்து, அம்மோனியா உருவாக்கப் படுகிறது. அம்மோனியாவிலிருந்து, பல்வேறு உரங்களும், பிற வேதிமங்களும் பெறப் படுகின்றன. இது பரவலாகப் பயன் படும் முறை ஆகும். மற்றொரு முறையான, சயனமைடு முறையில், கால்சியம் சயனமைடு உண்டாகிறது. இதனைச் சிறிதளவு ஈரப் படுத்தினால், யூரியா, அம்மோனியா ஆகியன உண்டாகின்றன. கால்சியம் சயனமைடு சிறந்த உரமாகப் பயனாகிறது. இதற்கு நைட்ரோலியம் என்று பெயர்.
மேற்சொன்ன முறைகள் தொழிலக முறையில் நைட்ரஜனை நிலைப் படுத்தி, வேதி உரங்கள் தயாரிக்கும் வழிகளாகும். வளி மண்டல ஹைட்ரஜனை அயனியாக்கம், வேதி அணுக் கரு, பிற வினைகள் ஆகியவற்றின் மூலம் நைட்ரஜன் ஆக்சைடுகளாக மாற்றும் முறை அறியப் பட்டுள்ளதென்றாலும், தொழிலக வழி பயனுள்ளதாக இன்னும் தெளிவாக்கப் படவில்லை. ' ஆய்வகத்தில், நைட்ரஜனை உலோக நைட்ரைடுகளாக அல்லது இடை நிலை உலோகங்களின் டைநைட்ரஜன் அணைவுச் சேர்மங்களாக நிலைப் படுத்தும் உத்திகள் வழக்கில் உள்ளன. சில இடைப் பட்ட உலோக அணைவுச் சேர்மங்களில் இணைந்திருக்கும் நைட்ரஜனை ஒடுக்கி, அம்மோனியாவாக மாற்றும் முறையும் மேம்படுத்தப் பட்டுள்ளது. இம்முறைகள் தொழிலகப் பயன் மிக்கவை. —த. தெய்வீகன் —வ. சீனுவாசன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 266)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xypmp4t7/
தமிழ்“நைட்ரஜன் நிலைப்படுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xypmp4t7/APA
Oliyon Research. (2026). நைட்ரஜன் நிலைப்படுத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xypmp4t7/MLA
"நைட்ரஜன் நிலைப்படுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xypmp4t7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment