தொடரியலில் சொற்களும் தொடர்களும் ஒன்றை அடுத்து ஒன்று தொடர்ந்து வந்து வாக்கிய உறுப்புகளாகவும் வாக்கியங்களாகவும் அமைகின்றன. வாக்கியத்தில் பெயர்ச் சொல் தொடர் (பெ.சொ.தொ.), வினைச்சொல் தொடர் (வி.சொ.தொ.) என்ற இரு வகைகளில் தொடர்கள் அமைகின்றன. ‘கண்ணன் வந்தான்’ என்ற வாக்கியத்தில் ‘கண்ணன்’ என்பது பெயர்ச்சொல் தொடர். ‘வந்தான்’ என்பது, வினைச்சொல் தொடர். பெயர்ச்சொல்லைத் தலைமையாகக் கொண்டு அமைகிற தொடர் பெயர்ச்சொல் தொடர்; வினைச்சொல்லைத் தலைமையாகக் கொண்டு அமைகிற தொடர் வினைச்சொல் தொடர். இவ்வாக்கியத்தில் பெயர்ச்சொல் தொடர் ஒரே ஓர் உறுப்பை மட்டும் கொண்டுள்ளது. இங்குச் சுட்டப்பெற்றுள்ள வினைச்சொல் தொடரை வினைச் சொல் என்றும் ‘இறந்த காலம் காட்டும் உருபன்’ என இரண்டாகப் பிரிக்கலாம். ‘கண்ணன் வந்தான்’ என்ற வாக்கிய அமைப்பை வரி மரத்தில் (Tree Diagram) அமைத்துக் காட்டும்போது, வாக்கியம் (வா.) என்பது பெயர்ச்சொல் தொடர் (பெ.சொ.தொ.) + வினைச்சொல் தொடர் (வி.சொ.தொ.) என்று அதாவது, வா→பெ.சொ.தொ. + வி.சொ.தொ. எனப் பிரித்துக் காட்டப்படுகிறது. தொடர் பெயரை மட்டுமே (பெ.) குறிப்பதால் ‘பெயர்’ என்று வரிமரத்தில் குறிக்கப்படுகிறது. வரிமரம் ஆனால், வினைச் சொல் தொடர் வினைச்சொல் (வி) என்றும் இறந்தகால உருபன் (இ.உ.) என்றும் பிரிக்கப்பட்டு, அவை ‘வா’ என்ற வினைச் சொல்லாகவும் (வி.சொ.) ‘ந்த்’ என்ற இறந்த கால உருபனாகவும் (இ.உ.) எழுதப்படுகின்றன. ஆகவே, இந்த வாக்கியத்தின் இரு தொடர்களிலும் பெயர்ச் சொல், வினைச் சொல், இறந்த கால உருபன் என்ற மூன்று உறுப்புகள் குறிக்கப்படுகின்றன. இவ்வாறு குறிக்கப்படும் மூன்று உறுப்புகளும் இணைத்த தொடரே ஈற்று வரித் தொடர் (Terminal String) என்று சொல்லப்படுகிறது. இவ்வரிப்படத்தில் (வரிமரத்தில்) கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தினைக் கீழ்வரும் தொடர் அமைப்பு விதிகள் மூலமும் விளக்கலாம். இதேபோன்று ‘அழகான கண்ணன் வேகமாக வந்தான்’ என்ற வாக்கியத்தை ‘அழகான கண்ணன்’ என்ற பெயர்ச்சொல் தொடராகவும், ‘வேகமாக வந்தான்’ என்ற வினைச்சொல் தொடராகவும் பிரிக்கலாம். இங்குப் பெயர்ச்சொல் தொடரில் பெயரடை, பெயர் என்ற இரு உறுப்புகளும் வினைச் சொல் தொடரில் வினையடை, வினைமுற்று என்ற இரு உறுப்புகளும் அமைந்துள்ளன. பெயரடையில் பெயர் + பெயரடை உருபு என்றும், வினையடையில் பெயர் + வினையடை உருபு என்றும் உறுப்புகள் அமைகின்றன. ஆகவே, பெயர்ச்சொல் தொடரில் மூன்று உறுப்புகளும் வினைச்சொல் தொடரில் நான்கு உறுப்புகளும் கொண்டு ஈற்றுவரித் தொடர் அமைகிறது. கி.சு. வரிமரம்