அதர்வ வேதம்
atarva vētam
வடமொழி வேதங்களுள் ஒன்று. வேதங்களைக் குறிக்கும் ‘திரய்வித்தியா’ என்னும் தொடர், அறிவு நூல்களாகிய இருக்கு, யசுர், சாமம் ஆகிய மூன்று வேதங்களைக் குறிப்பிடுகிறது.
வடமொழி வேதங்களுள் ஒன்று. வேதங்களைக் குறிக்கும் ‘திரய்வித்தியா’ என்னும் தொடர், அறிவு நூல்களாகிய இருக்கு, யசுர், சாமம் ஆகிய மூன்று வேதங்களைக் குறிப்பிடுகிறது. வடமொழி இலக்கியங்கள் பல, மூன்று வேதங்களையே குறிப்பிடுகின்றன. வேதங்களில் நான்காவதாக வைத்து எண்ணப்படுவது அதர்வ வேதம். இவ்வேதத்தில் மிகப் பழைய கருத்துகள் காணப்படுகின்றன. இக்கருத்துகள் ஏனைய வேதங்களிற் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களின் வேறானவை. உயர்நிலை நில்லாத கீழோர்க்குரியது இவ்வேதம் என்ற கருத்து, முன்னர் நிலவியிருந்தது. ஆனால் நாளடைவில் ஏனைய வேதங்களிலிருந்து சில பகுதிகளை இவ்வேதம் தன் உறுப்பாக ஏற்றது. அவை கூறும் கருத்துகள் பல அதர்வ வேதத்தில் இடம் பெறலாயின. இவ்வாறு தொடக்க நிலையிலிருந்து வேறாகி விரிந்துருவாகிய ‘அதர்வ வேதம்’ வேதங்களில் நான்காம் இடத்தைப் பெற்றது.
‘அதர்வம்’ என்னும் பெயர், பிற வேதங்களின் பெயர்களைப் போல் எடுத்து விளக்கத்தக்க முறையில் அமையவில்லை. இவ்வேதத்திற்கு ‘அதர்வாங்கிரசு’, ‘பிரமவேதம்’ என்னும் வேறு பெயர்களும் உண்டு. மேலும் ‘பேசசானி’, ‘யாது’ என்னும் பெயர்களும் ஒரு காலத்தில் இவ்வேதத்திற்கு வழங்கப்பட்டு வந்தன. எனினும் இப்பெயர்கள் இக்காலத்தே வழக்கில் இல்லை.
இராமாயணத்திலும் வடமொழி நூல்களிலும் மகாபாரதத்திலும் ‘அதர்வவேதம்’ தனி வேதமாக விளக்கப்படுகிறது. தசகுமார சரிதம், கிராதார்ச்சுனீ, சுச்ருதர் ஆகியவற்றில் இவ்வேதம் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. கிரியை முறையின் தோற்றுவாயாகவும் அதனை விரித்து விளக்கும் நூலாகவும் இவ்வேதம் அமைந்துள்ளதனை விட்டுணுபுராணம் குறிப்பிடுகிறது. மச்ச புராணம், மார்க்கண்டேய புராணம் ஆகிய இரண்டும் அதர்வத்தைப் பற்றிக் கொண்டுள்ள மதிப்பைக் கூறும் பகுதிகளை உரையாசிரியர் சாயனர் தம் உரையில் எடுத்து விளக்கியுள்ளார்.
அதர்வ வேதத்தில் ஒன்பது பிரிவுகள் காணப்படுகின்றன. இவை சாகைகள் அல்லது கிளைகள் என்று சொல்லப்படுகின்றன. இவை பைப்பலாதம், தெளடம், மௌடாயனம், சௌநகியம், சாசலம், சலதம், பிரமவாதம், தேவதரிசம், சரணவைதயம் என்பனவா- கும். இவற்றுள் சௌநகியம், பைப்பலாதம் என்னும் இரு சாகைகள் குறிப்பிடத்தக்கவையாகும். சௌநகியச் சாகையைச் சார்ந்த அதர்வ வேதமே இன்று எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. அதர்வ சங்கிதையில் எழுநூற்று முப்பத்தொரு சூக்தங்கள் உள்ளன. ஏறக்குறைய ஆறாயிரம் பாட்டுகள் காணப்படுகின்றன. இவ்வேதம் இருபது காண்டங்களை உடையது. அதர்வ வேதத்தில் காணப்படும் பாடல்களுள் ஏழில் ஒரு பங்கு இருக்கு வேதப் பாடல்களாக உள்ளன. முதல் ஏழு காண்டங்களிலும் சிறு சூக்தங்களே உள்ளன. முதற் காண்டத்தில் நந்நான்கு பாடல்களை உடைய சூக்தங்களும், இரண்டாம் காண்டத்தில் ஐந்து பாடல்களுள்ள சூக்தங்களும், மூன்றாம் காண்டத்தில் ஆறு பாடல்கள் உள்ள சூக்தங்களும், நான்காம் காண்டத்தில் ஏழு பாடல்களமைந்த சூக்தங்களும் இருக்கின்றன, ஐந்தாம் காண்டத்தில் எட்டுப் பாடல்களுக்கு மிகாதபடி சூக்தங்கள் உள்ளன. ஆறாங்காண்டத்தில் நூற்று நாற்பத்திரண்டு சூக்தங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் மூன்று பாடல்களை உடையன. ஏழாங் காண்டத்தில் உள்ள சூக்தங்கள் நூற்றுப் பதினெட்டிலும் இரண்டொரு பாட்டுகள் இருக்கின்றன. அடுத்து வரும் ஏழு காண்டங்களும் பதினேழாம், பதினெட்டாம் காண்டங்களும் மிக நீண்ட சூக்தங்களை உடையவை. இக்காண்டங்களில் உள்ள மிகச் சிறிய சூக்தத்தில் இருபத்தொரு பாடல்களும், மிகப்பெரிய சூக்தத்தில் எண்பத்தொன்பது பாடல்களும் உள்ளன. இவ்வேதத்தின் பதினைந்தாம் பதினாறாம் காண்டங்கள் உரைநடையில் அமைந்த மொழி அமைப்பிலும், நடையிலும் பிராமணங்களை நிகர்த்துக் காணப்படுகின்றன. சூக்தங்களின் அளவையே அடிப்படையாகக் கொண்டு அதர்வ வேதம் அமைக்கப்பட்டுள்ளது.
அதர்வ வேதம் தெய்வங்களைக் கூறியபோதிலும், அவற்றின் இயல்பு கூறுமிடத்துப் பிற வேதங்களினின்றும் வேறுபடுகிறது. அதர்வ வேதம் அரக்கர்களை அழிப்பதாக அமையும் தெய்வ இயல்பினை விளக்குகிறது. மேலும், இவ்வேதங் கூறும் தெய்வங்களுக்குச் சிறப்பியல்புகள் எனவயும் இல்லை. இவ்வேதத்தில் உள்ள மந்திரங்கள் பேராற்றல் வாய்ந்தவை. சில நோய் நீக்க வல்லன; சில நீண்ட வாழ்வை அளிப்பன; சில செல்வச் செழிப்பைத் தருவன; சில குறைகளைக் களைவன. ஒன்றியிருக்கும் காதலரைப் பிரிக்கவல்ல மந்திரங்கள் சில; பிரிந்த காதலரை ஒன்று சேர்ப்பன சில; பகைவருக்குத் தீங்கு விளைவிக்கும் தனிநோக்குடையவை சில; பகைவரை அழித்து அரசருக்கு வெற்றி நல்குவதற்கெனச் சில மந்திரங்கள் உள்ளன. அரசன், அரசு கட்டில் ஏறுங்கால் நிகழ்த்தும் கிரியைகளில் பயன்படுத்தும் மந்திரங்களும் அதர்வவேதத்தில் உள்ளன.
அதர்வ சங்கிதை, அக்கால மக்களின் சமயத்தை விளக்கிக் கூற மிகவும் பயன்படும். அதர்வ வேதம் வேட்பவர்களைப் பற்றிக் கூறாது பொதுமக்களிடையே காணப்பட்ட பழக்க வழக்கங்களையே கூறுகிறது. மாந்திரிகம் நிகழ்த்தப்படும் முறையும் இங்குக் கூறப்படுகின்றன. வேள்வி முறை பற்றிக் கூறும் சில பாடங்களும் மந்திரங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. இதனால்தான் அதர்வ வேதம் தனி இடம் பெற்றது. அதர்வ வேதத்தில் தத்துவக் கருத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றுள் சில உலக அமைப்பை விளக்குவதற்காகப் பாடப்பட்டன. ஆனால் இவ்வகைப் பாடல்கள் கூட ஏனைய அதர்வ மந்திரங்கள் போல் மந்திரங்களாகப் பயன்படுத்தப்பட்டன. ஆராய்ச்சியில் ஈடுபடும்பொழுது உண்மைகளை எடுத்துக்கூறும் இப்பாடல்கள், உச்சரிப்பவர்பால் மந்திர ஆற்றலை வளரச் செய்து, எண்ணிய கருமங்களை நிறைவேற்றுவதற்குப் பயன்படுகின்றன. உபநிடதம் கூறும் முக்கியப் பொருள்களையும், உலகை ஆக்கவும் காக்கவும் வல்ல பிரசாபதியையும் உலகத் தோற்றத்துக்குக் காரணமான பரம்பொருளையும், பிரமம், தபசு, அசத்து, பிராணன், மனசு போன்ற உயர்ந்த தத்துவக் கருத்துகளையும் சுட்டும் சொற்களை உடையன இப்பாடல்கள்.
அதர்வ வேதத்தின் பதின்மூன்றாவது காண்டத்தில் உரோகித சூக்தங்கள் இருக்கின்றன. செந்நிறத்தவனான சூரியனைக் குறித்து இவை பாடப்பட்டன. நாளடைவில் சூரியனது ஆன்ம சக்தியே படைத்தற்கு முதல் தெய்வமாக உயர்த்தப்பட்டது.
அதர்வ வேதத்தில் காணப்படும் மொழியமைப்பு இருக்கு வேதத்தின் மொழியமைப்பினின்றும் மிகுதியாக வேறுபடவில்லை. யாப்பு முறையும் அப்படியே, இருத்தும் அதர்வ வேதத்தில் வரும் சில சொல்லுருவங்கள் மிகப் பிற்காலத் தொட்டு வழங்கிவரும் அளவிற்கு அது கூறும் கருத்து மிகவும் தொன்மை வாய்ந்ததாக அமைந்துள்ளது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 328)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xqx53bhs/
தமிழ்“அதர்வ வேதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xqx53bhs/APA
Oliyon Research. (2026). அதர்வ வேதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xqx53bhs/MLA
"அதர்வ வேதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xqx53bhs/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment