<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> நீள் வட்டச் சுழல் கழிகள், அவற்றின் மையத்திலிருந்து கொண்டு சுழலும் போது, அதன் வெளிப்புற உறையுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதால் ஏற்படும் தொடர்ந்த கன அளவு மாறுபாட்டைக் கொண்டு சுழற்சியல் எந்திரம் (rotary engine) இயங்குகிறது. 1952ஆம் ஆண்டு, ஸ்செஃபெல் (Scheffel) என்பார் இதனை வடிவமைத்தார். தகுந்த துளைகளின் அமைப்பு, எரி பற்ற வைப்பு (ignition) முறைகள், சரியான அமுக்க விகிதம், சுழல் கழிகளின் இடையே நிலவும் நான்கு கன அளவுகள் இவற்றைக் கொண்டு நான்கு வீச்சு ஆட்டோ சுழற்சி நிகழ்கிறது. இருப்பினும், இந்த வடிவமைப்பு, அதன் சிக்கல் தன்மை காரணமாகத் தோல்வியடைந்தது. 1954இல் ஜெர்மானிய கண்டு பிடிப்பாளர் ஃபெலிக்ஸ் வேங்கெல் என்பார் ஆட்டோ சுழற்சியைச் சார்ந்து இயங்கும் சுழற்சியல் எந்திரம் ஒன்றை வடிவமைத்தார். இது மாறக் கூடிய கன அளவு பகுதிகள் இரு சம பக்க முக்கோண வடிவ, வளைந்த பக்கங்களைக் கொண்ட சுழல் கழிகளின் துணையோடு செயற்பட்டது. வெளிப்புறச் சுழலும் உறை, இரு பக்க புறச் சில்லுரு | (epitrochoid) பெருந்துளை, சுழல் கழிகளை உள்ளடக்கிக் கொள்ளுமாறு அமைந்துள்ளது. இக்கூட்டமைப்பு மூன்று பகுதிகளாகச் சுழலும் போது, வடிவத்திலும், கனஅளவிலும் மாறுபடுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ப்ராய்ட் என்பார் சுழலும் வெளியுறைப் பகுதியை அசையா வண்ணமும், சுழலும் தண்டுகளைக் கொண்டும் புதிதாக வடிவமைத்தார். இது போன்ற எளிய அமைப்பு உறிஞ்சு அமைப்பு, வெளியேற்ற அமைப்பு, எரி பற்ற வைப்பு அமைப்பு, குளிர்விப்பு அமைப்பு போன்றவை நிலையான பகுதிக்கு ஏற்படுத்தப்படும். இவ்வகைச் சுழலும் சுழலியல் எந்திரம் வேங்கெல் பொறி எனப்படுகிறது. வேங்கெல் சுழலியல் பொறி, நான்கு பருவச் சுழற்சி அடிப்படையில் இயங்குகிறது. இதில் பெட்ரோல், டீசல் ஆகிய இரு வகை எந்திரங்களும் உள்ளன. நான்கு பருவச் சுழற்சி என்பது நான்கு வீச்சுச் சுழற்சியேயாகும். நான்கு பருவங்கள் என்பன முறையே உறிஞ்சு வீச்சு, அழுத்த வீச்சு, ஆற்றல் வீச்சு, வெளியேற்று வீச்சு ஆகியன. அமைப்பு. படத்தில் காட்டியபடி, பொதுவாக இரு அசையும் பகுதிகளைச் சுழலியல் எந்திரம் கொண்டுள்ளது. சுழல் கழி, மைய விலக்கம் கொண்ட (eccentric) அல்லது வெளி உருளைப் (output shaft) பகுதி, அதனுடைய உட்புற மைய விலக்கம் கொண்ட பகுதி, சுழல் உருளை, அதனுடைய மைய விலக்கம் கொண்ட உருளைகளாலேயே நேரடியாகப் பொருந்தியிருப்பதால், இணைப்புத் தண்டு (connecting rod) தேவையில்லை. வெளிப் பக்கத் திறன் விசை, மைய விலக்கம் கொண்ட பகுதி வழியாகக் கழிக்குச் செல்கிறது. உட்புற, வெளிப் புறப் பற்ற வைப்பு கால அளவையும், நான்கு வீச்சுகளையும் அறுதியிடும் பல்லிணைகள், சுழல் கழிகளின் சுழற்சிக்கும், மைய விலக்கம் கொண்ட பகுதியில் உள்ள உருளைக்கும் இடையேயுள்ள தொடர்பைக் கட்டுப் படுத்தும். சிறு வெளிப்புறப் பற்களைக் கொண்ட பல்லிணை, மைய விலக்கம் கொண்ட பகுதி கழியின் அச்சிலேயே அமைந்து, சுழல் தண்டு, மைய விலக்கம் கொண்ட பகுதியைச் சுற்றி வருமாறு பொருத்தப் பட்டுள்ளது. சுழல் தண்டு, வணரியில் (crank) பல்லிணை பொருத்தப்பட்டுள்ளது. சுழல் தண்டின் மும்முனைகளும் (A, B, C) மிகவும் பொருத்தமாக நீள் வட்ட வெளிப் பகுதியுடன் கசிவற்ற இறுக்கமான தொடர்புடன் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வினைகள், கனற்பகுதி ஆகியன தொடர்ந்த சுழற்சிகளின் விளைவால் ஏற்படும் தொடர்பால் நடைபெறுகின்றன. சுழல் தண்டு அதனுடைய முப்பக்கங்களிலும் சற்றுக் குழிவான பகுதியைக் கொண்டுள்ளது. இது படத்தில் விடுபட்டகோட்டால் குறிக்கப்பட்டுள்ளது. செயல்முறை. முப்பக்கச் சுழல் தண்டு, அதன் வெளிப் பக்க நீள் வட்ட பகுதியுடனான தொடர்பால், மூன்று அறைகளை உருவாக்குகிறது. நான்கு வீச்சுகளான உறிஞ்சு வீச்சு, அழுத்த வீச்சு, ஆற்றல் வீச்சு, வெளியேற்று வீச்சு முதலியவை மூன்று அறைகளிலும் அடுத்தடுத்தாற் போலத் தொடர்ந்து நடைபெறும். படம் 1இல் எரிபொருள் உள்ளிழுப்பைக் காணலாம். இச்செய்கையால், AB பக்கத்தில் எரி பொருள் நிறைகிறது. சுழல் தண்டு கடிகாரம் சுழலும் திசையில் சுழலும் போது, உள்ளிழுக்கப்பட்ட எரி பொருள் சுழல் கழிக்கும் வெளிப் பகுதிக்கும் இடையேயுள்ள இடத்தில் அமுக்கப்படுகிறது. இது படம் 2இல் விளக்கப்பட்டுள்ளது. பிறகு, நன்கு அமுக்கப்பட்ட எரி பொருள் எரிக்கப்படுகிறது. எரியும் போது, வெளிப் படும் எரிந்த வளிமம், சுழல் தண்டைச் சுழலச் செய்கிறது. இது படம் 3இல் விளக்கப்பட்டுள்ளது. இவ்வகைச் செயலால், சுழல் கழி அதன் இயல்பு நிலைக்குச் சென்று, மீண்டும் அடுத்த சுழற்சிக்கு ஆயத்தமாகி விடுகிறது. இவ்வாறு 90° கோண அளவுக்கு ஒரு முறை சுழற்சியின் ஒவ்வொரு பகுதியும் நடைபெற்று முழுச் சுழற்சி நிறைவேற ஒரு முழுச் சுற்று அதாவது, 360° கோண அளவை அது எடுத்துக் கொள்கிறது. சுழல் தண்டின் ஒவ்வொரு சுற்றுக்கும் வெளிப் புறத் தண்டு (Output shaft) மும்முறை சுழல்கிறது. ஆகவே, வெப்ப இயங்கியல் பருவம் (thermodynamic phase) 270° கோண அளவிற்கு ஒரு முறை முடிவு பெறுகிறது. இவ்வகை எந்திரத்தில் தொடர்ந்து ஆற்றல் கிடைக்கிறது. சுழல் தண்டின் மைய விலக்கம் கொண்ட பகுதியின் அசைவு அதிர்ச்சியை இரண்டு வட்டுகளைப் பயன்படுத்தித் தவிர்த்து விடலாம். இவ்வட்டுகள், சமனுருள்கள் (fly wheels) எனப்படுகின்றன. பயன்கள். எதிரியங்கும் எந்திரங்களை விட (reciprocating engines) வேங்கெல் வகைச் சுழலியல் எந்திரங்கள் அளவில் சிறியவையாகவும், எடை குறைந்தவையாகவும் உள்ளன. இவ்வகை மிகவும் சிக்கனத் தயாரிப்பாகவும், இயங்கும் பகுதிகளான இணைப்புக் தண்டு, ஓரதர் (valve) அமைப்பு எளிய வடிவங் கொண்டவையாகவும் விளங்குகின்றன. இவ்வகையில் சமன் (balancing) செய்வது மிகவும் எளிது. இதில் எதிரியங்கும் உறுப்புகள் இல்லாமையால், கன அளவிலான திறன் மிகுதியாக அடிக்கடி 100%க்கு மேல் கிடைக்கிறது. ஒரு கிலோவுக்குக் கிடைக்கும் ஆற்றல் ஏனைய எந்திரங்களை விடத் தொடர்ந்த செயல் முறை இழப்புக் குறைவாக இருக்கும். குறைகள். குறைந்த அளவு வேக எந்திரங்களில் மிகு எரி பொருள் செலவு, மிகு எண்ணெய்ச் செலவு, குறைந்த திருக்க (torque)விரைவுகள் போக்குவரத்தில் வேகக் குறைப்பு ஆகியன குறிப்பிடத் தக்கவை. எரி பற்ற வைப்பு முறையில் சிக்கல் உள்ளமையால், அடிக்கடி மின் பொறிச் செருகுகளை (spark plug) மாற்ற வேண்டும். இது மின்னணு எரி பற்று முறையின் செயற்பாட்டால் தவிர்க்கப் படுகிறது. இவ்வகைச் சுழலியல் எந்திரங்களில் கசிவு இல்லாதவாறு அடைத்தல் மிகவும் சிக்கலானது. உள்ளிழுப்புத் துளை, வெளியேற்றுத் துளை இரண்டும் அருகருகே அமைந்துள்ளமையால், உருள் கலத்தில் உருமாற்றம் உயர் வெப்பத்தால் ஏற்பட வாய்ப்புள்ளது. மிக உயர் வெப்ப நிலை வெளியேறும் வளிமங்களில் நிலவுவதால், வெளியேற்றக் குழாய், ஒலி குறைப்பான் (silencer) ஆகியவற்றின் வடிவமைப்பைக் கவனமாகத் தயாரிக்க வேண்டும். —வி. சண்முகசுந்தரம் நூலோதி. P.L. Ballaney, Theory of Machines, Fifteenth Edition, Khanna Publishers, New Delhi, 1987.