கொங்கு நாட்டில் பாயும் பவானி ஆற்றின் வடகரையிலுள்ள நிலப்பகுதி, பண்டு வடகரைநாடு எனப்பட்டது. இவ்வடகரை நாட்டின் மையமாக விளங்குவது அந்தியூர். இவ்வூர் பெரியார் மாவட்டப் பவானியிலிருந்து வடமேற்கே 16 கி.மீ. தொலைவிலுள்ளது. சங்ககால முதற்கொண்டே இது வரலாற்று முதன்மை பெற்று வந்துள்ளது. கொங்கு நாட்டை ஆண்ட சேரர், வடகரை நாட்டையும் ஆண்டு வந்தனர். இவர்களுள் அந்துவன் பொறையன் (கி.பி. 92 – 112) என்பான் குறிப்பிடத்தக்கவன் ஆவான். இவனது பெயராலேயே இது அந்தியூர் (அந்துவன் ஊர்) எனப்பெயர் பெற்றது. அந்தியூரைக் கி.பி. 1750–இல் இயற்றப்பட்ட ‘நண்ணாவூர்ச் சங்கமேசுவர சுவாமி வேதநாயகியம்மன் விறலிவிடுதூது’ குறிப்பிடுகின்றது. திப்பு இதனைக் கி.பி. 1797–98–இல் ‘அகமதாபாத்’ என்று குறிப்பிட்டுள்ளான். அந்தியூருக்கு 18-10-1800–இல் வருகைபுரிந்த டாக்டர் புக்காணன் இவ்வூரின் நிலைமை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். செல்வக்கடுங்கோ வாழியாதன், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, கணைக்கால் இரும்பொறை முதலான கொங்குச்சேரரும் வடகரை நாட்டை ஆண்டுள்ளனர். வேடர் தலைவனான கண்டீரக்கோப்பெருநற்கிள்ளி என்ற வள்ளலும் இப்பகுதியை ஆண்டுள்ளான். இவனால் ஆளப்பட்டு வந்த தோட்டிமலை, இன்றைய பருகூர் மலையில் அமைந்திருந்தது. சங்க காலத்தை அடுத்து இப்பகுதி, இரெட்டிகுல மன்னர், கங்கர், இராட்டிரகூடர், சேர சோழ பாண்டியர், போசளர், விசய நகரத்தார், மதுரை நாயக்கர் முதலான வேந்தராலும், ஐதர்அலி, திப்பு சுல்தான் ஆகிய சுல்தான்களாலும் ஆளப்பட்டு வந்தது. இறுதியாக ஆங்கிலேயரால் கைப்பற்றிக் கொள்ளப்பட்டது. அந்தியூரில் பெரிய கோட்டை ஒன்றும் பேரேறி ஒன்றும் இருந்தன. இப்பெருங்கோட்டை 1½ கி.மீ. நீளமும் அகலமுங் கொண்டது; மூன்று சுற்று மதில்களைக் கொண்டிருந்தது. கோட்டையின் உட்புறத்திருந்த அரண்மனை, ஆசுதான மண்டபம், அந்தப்புரம், அலுவலகங்கள் ஆகியன அழிந்துவிட்டன. செல்வக்கடுங்கோ வாழியாதனுடன் தொடர்புடைய செல்லீசுவரர் கோயில், அழகரசப் பெருமாள் கோயில், வீரபத்திரர் கோயில், பத்திரகாளியம்மன் கோயில் என்பவை மட்டும் இன்றுமுள்ளன. இக்கோயில்களில் கவின்மிகு சிற்பங்களும் கல்வெட்டுகளும் உள்ளன. இக்கோட்டையில் கி.பி. 1798–இல் திப்பு சுல்தானின் சமாபந்தி நடைபெற்றது. திப்பு சுல்தானது வீழ்ச்சியின் விளைவாக அந்தியூர்க் கோட்டையும் வீழ்ந்தது. கணைக்காலிரும்பொறை சிறையிலிருக்கும் தோற்றம், பத்திரகாளியம்மன் கோயிலின் வெளிப்புறத்தில் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளது. பத்திரகாளியம்மன் கோயில், புதுப்பாளையம் குருநாதசுவாமி கோயில், அழகரசப் பெருமாள் கோயில் முதலானவற்றில் பாண்டியரது மீன் சின்னம் காணப்படுகின்றது. கன்னட மொழிக் கல்வெட்டுகள் சில இங்குப் பொறிக்கப்பட்டுள்ளன. செல்லீசுவரர் திருக்கோயிலில், திரிபுவனச் சக்கரவர்த்திகள் கோனேரின்மை கொண்டான் வீரபாண்டிய தேவரின் (கி.பி. 1265–1285) பதினைந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும், சிரீமன் மகாமண்டலேசுவரன் வீரநஞ்சராய உடையாரின் (கி.பி. 1489–1500) கல்வெட்டும் காணப்படுகின்றன. உடையாரின் கல்வெட்டில் ஊர்ப் பேராளர்கள் ஐவர் குறிக்கப் பெறுகின்றனர். இவர்களுள் பாசறை வேட்டுவன் குறும்பன், பொன்னாங் கட்டியார் வேங்கடநாதன் ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்கவர் ஆவர். அந்தியூர்க் குளத்திற்கு மேல்பால் உள்ள நிலப்பகுதி, கி.பி. 1178–ஆம் ஆண்டில் காவேரி வல்லபன் கோரவி கோதை என்னும் சேரமன்னரால், ஈரோடு திருத்தொண்டீசுவரருக்குத் தேவதானமாக அளிக்கப்பட்ட செய்தி ஈரோட்டுக் கல்வெட்டால் அறியப்படுகின்றது. கோட்டைப் பகுதியில், ஆயிரக்கணக்கான உருண்டை வடிவிலான பீரங்கி எறிகற்கள், உரோமாபுரி நாணயங்கள், யானைத் தந்தங்கள், உடைவாள், பழைமை மிக்க எலும்புத் துண்டுகள், பலவகையான நாணயங்கள், அகல் விளக்குகள், மட்- பாண்டங்கள், மண்ணால் செய்து சுடப்பட்ட பொம்மைகள், வளையல்கள் போன்ற அணிகலன்கள் ஆகியவை இன்றும் காணக்கிடக்கின்றன.ம.இரா.