இராமசாமி முதலியார், ஆ
irāmacāmi mutaliyār, ā
அரசியல் அறிஞர்; நிருவாகத் திறன் மிக்கவர்; கல்வியாளர்; தொழில் அதிபர்; பொதுப் பணியாளர் எனப் பல்வேறு வகையில் பாராட்டப்பெற்றுப் புகழுடன் வாழ்ந்தவர்.
அரசியல் அறிஞர்; நிருவாகத் திறன் மிக்கவர்; கல்வியாளர்; தொழில் அதிபர்; பொதுப் பணியாளர் எனப் பல்வேறு வகையில் பாராட்டப்பெற்றுப் புகழுடன் வாழ்ந்தவர். ‘ஆர்க்காட்டு இரட்டையர்’ என்று அன்போடு அழைக்கப்பட்டவர்களுள் மூத்தவர். இவர் 14.10.1887–இல் கர்நூல் மாவட்டத்தில் வைணவக் குடும்பத்தில் ஆர்க்காடு குப்புசாமி முதலியாருக்கும் சீத்தம்மாளுக்கும் மூத்த மகனாகப் பிறந்தார். இளையவர் டாக்டர் ஆ. இலட்சுமணசாமி முதலியார்.
இவர் கர்நூல் நகரவை உயர்நிலைப்பள்ளியில் தொடக்கக் கல்வியினைப் பயின்றார். சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் பட்டப் படிப்பினை முடித்தவுடன், சென்னைச் சட்டக் கல்லூரியில் சேர்ந்து (1908–1911) சட்டப்படிப்பை முடித்தார். அக்கால கட்டத்தில் சென்னையில் புகழ்பெற்றிருந்த இரிச்மாண்டு (Richmond) என்பவரிடம் பயின்று வழக்கறிஞராகச் சேர்ந்தார்.
இராமசாமி முதலியார் 1910–ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த காமாட்சி அம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஆண்மக்கள் இருவரும் பெண்மக்கள் இருவரும் பிறந்தனர்.
இராமசாமி முதலியார் ஏழை எளியவர்களுக்குப் பணி செய்யும் பெரு விருப்பம் கொண்டிருந்த காரணத்தால் அரசியலில் நாட்டம் செலுத்தினார். டாக்டர் டி.எம். நாயர், பி. தியாகராய செட்டியார் போன்றவர்களால் 1917–இல் தொடங்கப்பெற்ற நீதிக்கட்சியின் (Justice Party) கொள்கையால் ஈர்க்கப்பட்டு, அக்கட்சியின் நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். நீதிக்கட்சியின் வரலாற்றில் இராமசாமி முதலியார் தனியிடம் பெற்றார்.
இலண்டனில் 1919–இல் வெளியான மாண்டேகு செம்சுபோர்டு அறிக்கையினை எதிர்த்து நடைபெற்ற வழக்கு மன்றத்தில் நீதிக்கட்சியின் கொள்கையினை இராமசாமி முதலியாரும் கே.வி. இரெட்டியும் முன் வைத்தனர். இராமசாமி முதலியாரின் வழக்காடும் திறனைக் கேட்டு மாண்டேகு அவரைப் பாராட்டி, அறிக்கையினை மாற்றியமைக்க இசைந்தார். நீதிக்கட்சியின் பொதுச் செயலாளராக 1920–இல் இருந்து சிறப்பாகச் செயலாற்றினார்.
இராமசாமி முதலியார் 1920–ஆம் ஆண்டு சென்னை மேலவைக்கு நடைபெற்ற தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து இருமுறை தேர்ந்தெடுக்கப்பெற்று. ஆறாண்டுக் காலம் (1920–1926) கல்வித் துறையின் பணியாற்றினார். மேம்பாடு கருதிப் பல மாற்றங்கள் செய்தார்; கல்வியின் இன்றியமையாமை கருதித் தொடக்கக் கல்வியினைக் கட்டணமின்றிக் கட்டாயக் கல்வியாக்கினார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தருக்கு முழுப் பொறுப்பு (ஆளுமை) அளிக்கும் சட்டம் இயற்றப் பெருமுயற்சி எடுத்துக்கொண்டு வெற்றியடைந்தார். தெலுங்குமொழி பேசும் மக்களுக்காகத் தனியே ஆந்திரப் பல்கலைக் கழகம் அமைய 1925–ஆம் ஆண்டு வழி வகுத்தார்.
தமிழகக் கோயில்களின் சீர்கேடுகளைக் களைய இந்து அறநிலையச் சட்டம் நிறைவேற 1926–ஆம் ஆண்டு பெருந்துணை புரிந்தார். பல்வகையிலும் சிறப்பாகப் பணியாற்றியும் 1926–ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். ‘நீதி’ (Justice) என்ற செய்தி இதழை நிதிப் பற்றாக்குறையினின்று வெளியேற்ற அதன் நிருவாகப் பொறுப்பினை ஏற்றுத் திறம்படச் செயலாற்றி, அதன் விற்பனைத் திறனைப் பெருக்கினார்.
இராமசாமி முதலியார் 1928 முதல் 1930 வரை சென்னை மாநகராட்சியின் தலைவராகப் பணிபுரிந்தார். ‘சைமன் குழு’ (Simon Commission) முன் 1929–ஆம் ஆண்டு தம் கருத்துரைகளைக் கூறினார். தில்லி மேலவைக்கு 1930–ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, ஓராண்டு பணியாற்றியபொழுது இலண்டனில் வட்டமேசை மாநாடு நடைபெறக் காரணமாயிருந்தார். நீதிக்கட்சியின் சார்பாக மூன்று வட்டமேசை (1930, 31, 32) மாநாடுகளிலும் கலந்துகொண்டார்.
சென்னையிலிருந்து 1930–ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மத்திய சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். பின்னர், 1936–ஆம் ஆண்டு இலண்டனில் இந்தியக் குழு உறுப்பினராக ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பெற்றுச் சிறப்பாகப் பணியாற்றினார். இராமசாமி முதலியாரின் திறனை அறிந்த அரசப் பிரதிநிதி (Viceroy) இலின்லித்கோ பிரபு தமது செயற்குழுவில் (Viceroy's Executive Council) வணிகத்துறைப் பொறுப்பை ஒப்படைத்தார். இவருடைய பெருமுயற்சியினால் அறிவியல் மற்றும் தொழில் ஆய்வு நிலையம் அமைக்கப்பட்டு, இந்தியாவின் தொழில் வளர்ச்சி மேலோங்கியது. பின்னர், 1943 முதல் 1946 வரை திட்டம், வளர்ச்சித் துறை போன்றவற்றின் பொறுப்பேற்றார். இரண்டாம் உலகப் போரின்போது இரண்டாம் இங்கிலாந்துப் பிரதமர் வின்சுடன் சர்ச்சில் (Vinston Churchill) கீழ் அமைக்கப் பெற்ற போர்க்குழுவின் உறுப்பினராக இருந்தார்.
இராமசாமி முதலியார் 1945–ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் அவைக் (UNO) கூட்டத்திற்கு இந்தியக் குழுவிற்குத் தலைமையேற்றார். இரண்டு ஆண்டுகள் (1946, 1947) ஐ.நா. பொருளாதாரக் குழு, சமூகக் குழு போன்றவற்றின் தலைவராக இருந்தார். மைசூர் மாநிலத்தின் திவானாக 1946 முதல் 1949 வரை இருந்து அம்மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்க உதவினார். ஐதராபாத்து நகரத்தை இணைக்க மறுப்பு எழுந்தபொழுது ஐ.நா. பாது- காப்பு அவையில் முறையிடச் சர்தார் வல்லபாய் பட்டேல், இராமசாமி முதலியாரைத் தேர்ந்தெடுத்துத் தம் செயலில் வெற்றி அடைந்தார்.
இராமசாமி முதலியார் திருவாங்கூர்ப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக 1951 முதல் 1961 வரை பணியாற்றினார்; மாநில அவையின் உறுப்பினராக 1951 முதல் 1962 வரை இருந்தார்; தொழில் துறையில் பெரும் ஈடுபாடு கொண்டார்; இந்தியத் தேசிய கப்பல் நிறுவனத்தின் தலைவராகப் பல்லாண்டுக் காலம் பணியாற்றினார்; இலாயிடு நிறுவனம் தொடங்கிய இந்தியக் கப்பல் துறைக்கு முதல் தலைவராக இருந்தார். இவர் இருபதுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளின் நிருவாகப் பொறுப்பாளராக இருந்துள்ளார்.
இவர் திவான் பகதூர் (1930), சர் (1937), கே.சி.ஐ.இ. (K.C.I,E. 1942), இராமசந்திர சிந்தாமணி (1947), பத்ம விபூசன் (1967) போன்ற பட்டங்களைப் பெற்றார். மதிப்புப் பட்டங்களான டி.சி.எல். (D.C.L.) பட்டத்தை ஆக்சுபோர்டு பல்கலைக் கழகமும் (1946), துர்காம் பல்கலைக் கழகமும் (1953) வழங்கின; எல்.எல்.டி. (L.L.D.) பட்டத்தைச் சென்னைப் பல்கலைக் கழகமும் (1957) உசுமானியப் பல்கலைக்கழகமும் வழங்கின.
புகழ்மிக்க இப்பெருமகனார் சென்னையில் 7.7.1976–இல் காலமானார். சி.பா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 115)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xjf2ksua/
தமிழ்“இராமசாமி முதலியார், ஆ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xjf2ksua/APA
Oliyon Research. (2026). இராமசாமி முதலியார், ஆ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xjf2ksua/MLA
"இராமசாமி முதலியார், ஆ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xjf2ksua/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment