உணவுக் கொள்கை
uṇavuk koḷkai
மனிதனின் வாழ்வுக்கு இன்றியமையாத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றுள் தலையாய இடம்பெறுவது உணவு.
மனிதனின் வாழ்வுக்கு இன்றியமையாத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றுள் தலையாய இடம்பெறுவது உணவு. இயற்கை வளங்கள், நாட்டுக்கு நாடு வேறுபட்டுக் காணப்படுவதால் ஒவ்வொரு தனி நாடும் பொருளாதாரத் தன்னிறைவைப் பெறுவது இயலாததாகும். தன் நாட்டிற்குகந்த பொருளாதாரத் துறையில் வளர்ச்சியைப் பெற்றுப் பன்னாட்டு வாணிகத்தின் (International Trade) மூலம் பிற துறைகளின் தேவைகளை நிறைவேற்றுவதே சிறந்த கொள்கை எனக் கருதப்படுகிறது. எனினும், எக்காலத்திலும் முற்றிலுமாக உணவு போன்ற இன்றியமையாத் தேவைகளுக்காக அந்நாட்டைச் சார்ந்திருப்பது காலப் போக்கில் மனித உரிமையை இழப்பதற்கும் பொருளாதார முற்றுரிமைக்கும் (Economic Monopoly) இடம் அளிக்கும். தொழில்நுட்ப அறிவை வேளாண்மைத் துறையில் புகுத்துவது, சிறந்த பங்கீட்டு முறையைச் செயற்படுத்துவது, உற்பத்திப் பொருள்களின் தரத்தை (Nutritional Value) உயர்த்துவது, கால் நடைகள், மீன்வளம் போன்றவற்றின் உற்பத்தியைப் பெருக்குவது ஆகியவற்றின் மூலம் உணவு உற்பத்தியில் பசுமைப் புரட்சியை (Green Revolution) அடைய நாடுகள் முற்பட்டு வெற்றியையும் தன்னிறைவையும் அடைந்துள்ளன.
தொன்றுதொட்டு உணவு உற்பத்தியில் வளமான பெருக்கமும், பற்றாக்குறையும் உலகெங்கும் மாறி மாறி நிகழ்ந்து வருகின்றன. நைல், தைக்ரிசு, யூப்ரட்டிசு (Nile Tigris & Euphrates) ஆகிய ஆற்றோரப் பள்ளத்தாக்கு நிலங்களைச் சார்ந்து வாழ்ந்த அரசுகளும் மக்களும் வறட்சியாலும் பட்டினியாலும் துன்புற்றமையால் பேரரசுகள் வீழ்ச்சியுற்றன; பேரளவில் மக்கள் உயிரிழந்தனர்; எஞ்சியோர் இடம் பெயர்ந்து சென்றனர் என வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. எனினும், கி.பி. 18–ஆம் நூற்றாண்டு இறுதி வரையிலும் உணவுச் சிக்கல், உலகளவில் பெரும் தாக்கத்தினை உண்டு பண்ணியதாகக் கூறப்படவில்லை. மக்கள் தொகையியல் வல்லுநர் மால்தசு (Thomas Malthus) கி.பி. 1789–ஆம் ஆண்டில் முதன் முதலாக உணவுப் பெருக்கத்திற்கும் மக்கள்தொகை வளர்ச்சி வீதத்திற்கும் இடையேயுள்ள இடைவெளியை ஆராய்ந்தார். உலக தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் உணவுப் பற்றாக்குறையினால் தொற்றுநோய், கொள்ளை நோய் (Epidemic & Pestilent) பஞ்சம் ஆகியவற்றால் மக்கள் பலர் உயிரிழக்க நேரும் என மால்தசு எச்சரித்தார். ஐரோப்பிய நாடுகளில் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் மக்கள்தொகைப் பெருக்கத்திற்குத் தேவையான அளவு உணவு உற்பத்தி பெருகவில்லை. அதன் விளைவாகவே பன்னாட்டு வாணிகமும், பிற நாட்டு நிலங்களைத் தங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்தும் வழிமுறைகளும் காலனி ஆதிக்கத்தின்மூலம் வளர்ச்சியுற்றது என்று சொல்லலாம். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், வளரும் நாடுகளில் மக்கள்தொகை எழுச்சியும் (Population Expolsion) உணவுப் பற்றாக்குறையும் பரவலாகக் காணப்படுகின்றன. இவற்றை அறிவியல் வளர்ச்சி, பன்னாட்டு உதவி, உணவு வேளாண்மை அமைப்பின் (FAO) முயற்சிகள், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் (Family Planning) ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ள வளரும் நாடுகள் முயற்சி செய்கின்றன.
பின்தங்கிய நாடுகளில் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகள் நீண்டகால வறட்சியினாலும், தொழில் துறை வளர்ச்சியின்மையினாலும், பசி பட்டினி, வறுமை, பஞ்சம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுப் பேரளவில் உலக நாடுகளின் உதவியைப் பெற்ற பின்னரும் பஞ்சத்திலிருந்து விடுபடாத நிலையிலேயே நீடித்திருக்கின்றன. இந்நாடுகளில் இயற்கை வளங்களை உண்டாக்கும் குறுகிய கால, நீண்ட காலத் திட்டங்களைச் செயற்படுத்துதல் எக்காலத்திலும் பிற நாடுகளைச் சாராமல் உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க வழி வகுக்கும். இந்நாடுகளில் சமூக, அரசியல், கல்வி, சுகாதாரத் துறைகளிலும் மக்கள் அடிப்படைத் தேவைகளின்றி வாழ்கின்றனர். இத்துறைகளின் முன்னேற்றத்திற்கு முயற்சிகள் எடுக்கப்படாவிடின் வறுமைச் சுழற்சியிலிருந்து (Vicious Circle of Poverty) இந்நாடுகள் விடுதலை பெற இயலாது. எனவே உணவுக் கொள்கையின் வெற்றி, பொருளாதார சமூக அரசியல் துறைகளின் கொள்கைகளையும் முறைகளையும் சார்ந்துள்ளது எனக் கருதப்படுகிறது.
உலக மக்கள்தொகையான 3.3 பிலியனில் (1965) 31 விழுக்காடு வளர்ச்சியடைந்த நாடுகளிலும், 69 விழுக்காடு ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய வளரும் நாடுகளிலும் பின் தங்கிய நாடுகளிலும் வாழ்கின்றனர். இத்தொகை 2000 ஆண்டளவில் 6.7 பிலியனாக இரட்டிக்கப்பட்டு இவற்றுள் 80 விழுக்காடு அல்லது 5.3 பிலியன் மக்கள் பின்தங்கிய நாடுகளிலும் வளரும் நாடுகளிலும் வாழ்வர் என மக்கள்தொகை வல்லுநர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்குத் தேவையான குறைந்த அளவு உணவு 1965–ஆம் ஆண்டைய 935 மிலியன் கண்டியிலிருந்து 1936 மிலியன் கண்டியாகப் பெருக வேண்டும். மொத்த உணவு உற்பத்தியில் 40 விழுக்காடு 1965–இல் வளரும் நாடுகளிலும் பின்தங்கிய நாடுகளிலும், 60 விழுக்காடு வளர்ச்சியடைந்த நாடுகளிலும் உற்பத்தி செய்யப்பட்டது.
உரோம் (Rome) நகரில் நிறுவப்பட்டுள்ள ஐ. நா. அவையின் உணவு வேளாண்மை அமைப்பு (FAO) 1977–இல் வெளியிட்ட ஆய்வு அறிக்கையிலிருந்து வளர்ச்சியடைத்த நாடுகள் எதிர்பாராத அளவிற்கு உணவு உற்பத்தியில் முன்னேற்றமடைந்திருப்பது அறியப்படுகிறது. அட்டவணை 1–இல் கொடுக்கப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் அவ்வறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டவையே. வளரும் நாடுகள் குறிப்பாக ஆசிய நாடுகள் மூன்று சிறப்பு வழிமுறைகளால் உற்பத்தியைப் பெருக்க முனைந்தன. அவை யாவன: (1) வேளாண்மைத் தொழிலைத் தொழில் நுட்ப முறையால் இயந்திரமயமாக்கல், (2) புதிய நிலங்களை விளைநிலங்களாக மாற்றல், (3) செறிந்த பண்ணைமுறையில் (Intensive Farming) நில ஆக்கத் திறனை உயர்த்துதல். வளரும் நாடுகளில் விரைவில் உணவு உற்பத்தி பெருகியது. எனினும், அங்கு 2.3 விழுக்காடு வீதத்தில் பெருகிய மக்கள்தொகையின் தேவைக்கு ஏற்ப அளிப்பு ஈடாகவில்லை. வளர்ச்சியடைந்த நாடுகள் தங்கள் தேவைக்கு மிகையாக 2.7 விழுக்காடு வீதத்தில் உணவு உற்பத்தி செய்தன. ஆனால் அங்கு மக்கள்தொகைப் பெருக்கம் 1 விழுக்காடாகவே இருந்தது. எனவே வளர்ச்சியடைந்த நாடுகள் மிகை உணவு உற்பத்தியைக் கட்டுப்படுத்த வேண்டும் என 1960–ஆம் ஆண்டளவில் கருதின. அமெரிக்க ஐக்கிய நாடு 1960–இல் தன் நாட்டு உணவு உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் கொள்கையைப் பின்பற்றியது.
உணவு அளிப்பு நிலையில் 1972–ஆம் ஆண்டில் உலகளவில் நெருக்கடி நிலவ தொடங்கியது. குறிப்பாகச் சோவியத்து உருசியா (Russia), தென் அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் உணவு உற்பத்தியில் வீழ்ச்சி காணப்பட்டது. இதன் விளைவாக 1973–ஆம் ஆண்டிற்குப் பின் தொடர்ச்சியாகப் பணவீக்கமும் (Inflation) பொருளாதார நெருக்கடியும் நிலவின. உலக எண்ணெய் நெருக்கடியின் (World Oil Crisis) காரணத்தினாலும் உலகளவில் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்பட்டது. வளர்ச்சியடைந்த நாடுகள் உணவு ஏற்றுமதிப் பெருக்கத்தினால் பெரும் ஆதாயம் ஈட்டின. வளரும் நாடுகள் உணவு இறக்குமதிப் பெருக்கத்தினால் தங்கள் அயல்நாட்டுச் செலுத்து நிலையில் பாதக (Unfavourable Balance of Payment) விளைவுகளைப் பெற்றுப் பெருஞ்சிக்கல்களுக்குள்ளாயின.
உலக வங்கி 1971–1975 ஆண்டுகளில் வேளாண்மைத் துறைத் திட்டங்களுக்கென 1,858,000,000 நிதியுதவி அளித்தது. இக்காலத்தில் வேளாண்மைக்கு ஒதுக்கப்பட்ட தொழில்நுட்ப உதவிகளும் 10 விழுக்காட்டுக்கும் மேல் உயர்ந்தன. ஐ.நா. அவையின் 1964–74 ஆண்டுக் கால முன்னேற்றத் திட்டச் செலவுகளில் 1/3 பாகம் வேளாண்மைத் திட்டங்களுக்காக அளிக்கப்பட்டது. இவற்றால் வளரும் நாடுகள் அயல்நாட்டுச் செலாவணிப் பற்றாக்குறையினால் தங்கள் ‘பசுமைப் புரட்சி’த் திட்டங்களை நடைமுறைப்படுத்தாமலிருக்கக் கூடாது என்பது வலியுறுத்தப்பட்டது. உணவு வேளாண்மை அமைப்பும் பிற பன்னாட்டு நிதி நிறுவனங்களும் வளரும் நாடுகளின் முன்னேற்றத் திட்டங்களில் பங்கு பெறுகின்றன. இவை அளிக்கும் ஆராய்ச்சிகள், கலந்தாலோசனைகள், அறிவுரைகள், மறைமுக, நேர்முக நிதி உதவிகள், திட்டங்களைச் செயற்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் வளரும் நாடுகள் பெரும் பலன்களைப் பெற்றுக் குறிப்பிடத்தக்க அளவில் உணவு நெருக்கடிச் சிக்கல்களை மேற்கொண்டன. பெரும்பாலான உலக நாடுகள் 1980–ஆம் ஆண்டளவில் உணவுத் தேவையில் 90 விழுக்காடு தன்னிறைவு பெற்றுள்ளன. உணவு வேளாண்மை அமைப்பின் (FAO) கணிப்பின்படி 1985–ஆம் ஆண்டளவில் தேவையை நிறைவேற்ற வளரும் நாடுகள் 3.6 விழுக்காடு வீதத்தில் உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும்.
இந்தியாவில்
உணவுப் பற்றாக்குறையினால் நாட்டில் பல பகுதிகளில் 1775, 1801, 1826, 1851 1876, 1901, 1906, 1918, 1943 ஆகிய ஆண்டுகளில் பஞ்சம் நிகழ்ந்துள்ளமையால் இந்திய அரசு வேளாண்மைத் துறை வளர்ச்சிக்கு முதலிடம் அளித்து வருகிறது. வங்காளத்தில் ஏற்பட்ட 1943–ஆம் ஆண்டைய உணவுப் பஞ்சம் அண்மைக் கால வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம் பெற்றதாகும். அதனை மேற்கொள்ள அரசு மிகை உணவு உற்பத்தி இயக்கத்தைச் (Grow More Food Compaign) செயற்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் உணவுப் பொருள்களை அரசு இறக்குமதி செய்தது. உலகப் போரினால் தொடர்ந்து தேவையான அளவு இறக்குமதி செய்யப்பட இயலவில்லை. அதனால் விலையேற்றம் காணப்பட்டது. அரசு விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்தது. நாடெங்கிலும் பங்கீட்டுமுறை புகுத்தப்பட்டது அதுவும் தொடர்ந்து நடைமுறைப்படுத்த இயலாமல் கைவிடப்பட்டது. மீண்டும் பங்கீட்டு முறை, கட்டுப்பாடு நடவடிக்கைகளுடன் 1948–ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் இந்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் தமிழ்நாட்டிலும் செயற்படுத்தப்பட்டு 1952–ஆம் ஆண்டு வரை நடைமுறையிலிருந்தது.
இந்திய அரசு 1949–இல் உணவு தன்னிறைவு இயக்கத்தை (Food Self-sufficiency Drive) அரசின் கொள்கையாக அறிவித்தது. முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் வேளாண்மைக்கு முதன்மையிடம் அளிக்கப்பட்டது. உணவு உற்பத்தி, திட்ட இறுதியில் 65.8 மிலியன் கண்டியாகப் (Tonnes) பெருகியது. இக்காலத்தில் உணவு உற்பத்தியில் இறக்குமதியும் கீழிறங்கியது. உகந்த கால நிலையின் காரணமாகவும் உணவுப் பொருள்களின் விலை இறக்கத்தின் காரணமாகவும் உணவுச் சிக்கல் முற்றிலுமாக முடிவுற்றது எனக் கருதினர். ஆனால் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் எதிர்மாறான நிலை ஏற்பட்டு, 1959–60 ஆம் ஆண்டுக் காலத்தில், 39 முதல் 51 இலட்சம் கண்டி உணவுப் பொருள்களை அரசு இறக்குமதி செய்தது.
மூன்றாம் ஐந்தாண்டுக் காலத்திலும் தொடர்ந்து உணவு உற்பத்தியில் முன்னேற்றம் காணப்படவில்லை. வேளாண்மைத் திட்டங்களில் ஏற்பட்ட தோல்வியே காரணங்களாகக் கருதப்பட்டன. இந்திய அரசு 1960–64–இல் அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து ஆண்டொன்றுக்கு 16 மிலியன் கண்டி கோதுமையும் 1 மிலியன் கண்டி அரிசியும் இறக்குமதி செய்தது. அமெரிக்காவின் பொதுச் சட்டம் 480–இன் மூலம் (P.L.480) நிதியுதவி பெற்ற பின்னரும் இந்தியா தன் அயற்செலாவணியில் பெரும் பகுதியை இழக்க நேரிட்டது.
இந்திய அரசு அமைத்த வேளாண்மை விலை ஆணையம் (Agricultural Prices Commission) 1965–இல் அரசின் வேளாண்மை விலைக் கொள்கையை அறிவித்தது. வேளாண்மையினரை உணவு உற்பத்திப் பெருக்கத்திற்கு ஊக்குவிக்கவும், நுகர்வோர் நியாயமான விலையில் உணவுப் பொருள்களைப் பெறவும் இக்கொள்கை செயற்படுத்தப்பட்டது. இக்கொள்கையின்படி உணவுப் பொருள்களின் விலை அவ்வப்போது இவ்வாணையகத்தால் வரையறுக்கப்படும். உணவுப் பொருள்களின் உற்பத்திப் பெருக்கத்தால் அங்காடியில் தேக்கம் (Glut) ஏற்படின், அரசு உற்பத்தியாளருக்கு இழப்பீடு அளிக்கும் அல்லது அரசு மிகை உற்பத்திப் பொருளை வரையறுக்கப்பட்ட விலைக்கு வாங்கிப் பங்கீடு செய்யவோ நெருக்கடிக் காலத்திற்காக இருப்பாகச் சேமித்து வைக்கவோ (Buffer Stock) செய்யும். இதன் மூலம் அரசாங்கக் கொள்முதல் கொள்கையும் (Government Procurement Policy) செயற்படுத்தப்பட ஏதுவாயிருந்தது. தொடக்க காலத்தில் வரையறுக்கப்பட்ட விலையை விடக் கொள்முதல் விலை உயர்வாகக் குறிக்கப்பட்டமையால் அரசின் கொள்முதலுக்கு ஆதரவு பெருகியது.
அரசு வாணிகக் கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் உணவுப் பொருள்கள் பாதுகாக்கப்பட்- டுப் பங்கீடு செய்யப்படுகிறது. கூட்டுறவு நிறுவனங்களும் மாநில வேளாண்மைத் துறை நிறுவனங்களும் பல வகைகளில் அரசின் வேளாண்மைக் கொள்கைகளை நிறைவேற்றும் பணிகளில் பங்கேற்கின்றன. உணவுப் பொருள்களின் வாணிகத்தில் ஊக வாணிகம் நடைபெறாமல் தடுக்கவும் சேமிப்பு இருப்பை நெருக்கடிக் காலத் தேவைகளுக்காகப் பெருக்கவும், விலை நிலையைக் கட்டுப்படுத்தவும் 1965 இல் அரசு உணவுப் பொருள்களின் வாணிகத்தில் (State Trading) நேரடியாகத் தலையிட்டது. அரசு வாணிகக் கழகத்தின் மூலமும் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடனும் மைய அரசு மூன்று இலக்குகளையடைய முனைந்துள்ளது. அவையாவன: (1) உணவுப் பொருள்களைக் கொள்முதல் செய்தல், பாதுகாத்தல், பங்கீடு செய்தல், சரக்குப் போக்குவரத்து வசதிகளை ஏற்றல்; (2) உணவுப் பொருள் உற்பத்தி பெருகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தல்; (3) உணவுப் பொருள்களைப் பதப்படுத்தும் அரிசி ஆலைகளையும் அறவை ஆலைகளையும் நிறுவுதல், அவற்றை நிறுவ நிதி உதவி அளித்தல்.
நான்காம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் உணவு நெருக்கடி நிலை ஓரளவு தணிந்தது. திட்டக் கால (1973–74) இறுதி ஆண்டில் எதிர்பார்த்த 129 மிலியன் கண்டி உணவுப் பொருளுக்கு 25.39 மிலியன் கண்டி குறைவாக 103.61 மிலியன் கண்டியே உற்பத்தி செய்யப்பட்டது. ஐந்தாம் திட்டக் காலத் தொடக்கத்தில் உணவு நெருக்கடிநிலை நிலவியது எனலாம். நெருக்கடி நிலையைத் தவிர்க்க 1975–ஆம் ஆண்டு வரையிலும் தொடர்ந்து உணவுப் பொருள்களை அரசு இறக்குமதி செய்தது. இறக்குமதி 1974–இல் 51.6 இலட்சம் கண்டியாகவும், 1975–இல் 75.4 இலட்சம் கண்டியாகவும் பெருகி, 1976–இல் 67 இலட்சம் கண்டியாக இறங்கியது. எனினும் 1978,79,80–ஆம் ஆண்டுகளில் உணவுப் பொருள்களின் இறக்குமதியை அரசு நிறுத்தும் நிலைக்கு முன்னேற்றம் ஏற்பட்டது.
ஆறாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் (1980–85) உணவுப் பொருள்களின் சேமிப்பு இருப்பைப் பாதுகாக்கவும் (Maintain) விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் இறக்குமதியை மீண்டும் தொடங்கியது. எனவே 1981–இல் 63 இலட்சம் கண்டியும் 1982–இல் 15.5 இலட்சம் கண்டியும், 1983–இல் 37.3 இலட்சம் கண்டியும் இறக்திமதி செய்யப்பட்டன. திட்டக் கால இறுதியில் (1985) நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவைப் பெற்றது. ஏழாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் இந்தியா உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தில் அரிசி உற்பத்தியின் பெருக்கத்திற்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தென் மாநிலங்களிலும் கிழக்கு மாநிலங்களிலும் நெல் விளைச்சல் பெருகத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், எண்ணெய் வித்துகள், தினை (Millet), பயறுவகைகள் (Pulses) ஆகியவற்றின் உற்பத்தியைப் பெருக்கவும் சிறப்புத் திட்டங்கள் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளன.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 860)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xgjm36h9/
தமிழ்“உணவுக் கொள்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xgjm36h9/APA
Oliyon Research. (2026). உணவுக் கொள்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xgjm36h9/MLA
"உணவுக் கொள்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xgjm36h9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment