அடியார்க்கு நல்லார்
aṭiyārkku nallār
சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய சான்றோருள் ஒருவராவார்.
சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய சான்றோருள் ஒருவராவார். உரைச் சிறப்புப் பாயிரச் செய்யுள்கள் இவர் வரலாற்றினை ஓரளவு உய்த்துணரத் துணைசெய்கின்றன. இவர் நிரம்பை என்னும் ஊரினர் என்பதையும், ‘இவருக்கு நிரம்பையர் காவலன்’ என்று மற்றொரு பெயரும் உண்டு என்பதையும், இவரை ஆதரித்து உரை செய்வித்தவன் பொப்பண்ண காங்கேயர்கோன் என்பதையும் அப்பாடல்களால் அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வுரையாசிரியர் ‘அடியார்க்கு நல்லான்’ என்றே அப்பாடல்களில் குறிக்கப்பட்டுள்ளார். ‘நிரம்பையர் காவலன்’ என்னும் பெயர் ஊரால் வந்தது என்றும், நிரம்பை என்னும் ஊர் கொங்கு மண்டலத்தில் விசய மங்கலத்தின் அண்மையில் உள்ளதென்றும் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் கூறுவார்.
திருஞானசம்பந்தர் தம் தேவாரப் பாடலில் சிவபெருமானை ‘அடியார்க்கு நல்லார்’ என்னும் பெயரால் அழைப்பர். அப்பெயரைத் தாங்கியுள்ள இவ்வுரையாசிரியர் சைவ சமயத்தைச் சார்ந்தவர் என்பது ஒரு சாரார் கருத்தாகும். உரையாசிரியர் சிவபெருமானை இறைவன் என்றே சுட்டுவதையும், ‘துறவறம்’ ‘யோகம்’ ஆகிய சொற்களின் உரைகளில் சைவ சமயக் கருத்துகளை விரித்துரைப்பதையும், ‘பிறவா யாக்கைப் பெரியோன்’ என்னும் அடிக்கு, ‘என்றும் பிறவாத யாக்கையையுடைய இறைவன்’ என்று பொருள் கூறுவதையும் இக்கொள்கையர் தம் கருத்துக்குச் சான்றாகக் கொள்வர்.
அடியார்க்கு நல்லார் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்ற கருத்தும் உண்டு. அவர் குறிப்பிடும் மூன்று அதிசயம், மூன்று ஆகமம், எண்வகைக் கன்மங்கள், எண் குணங்கள், பஞ்ச நமககாரம் என்று சமணர்களால் வழங்கப்படும் பஞ்சமந்திரம், பஞ்சபர மேட்டிகள் பற்றிய கருத்துகள் யாவும் அச்சமயத்தைச் சார்ந்தவை என்றும், அவற்றை உரையாசிரியர் விரிவாகவே சொல்லிச் செல்கின்றார் என்றும் இக்கருத்துடையார் கூறுவர். மேலும், ‘ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கி’ (11:4) என்னும் அடி உரையில் அருகதேவன் பலபடப் பாராட்டப்படுகின்றார் என்றும், ‘பெருமகன்’ என்னும் சொல்லுக்கு ‘அருகதேவன்’ என்று பொருள் கூறி, ‘திருமொழியை’ ‘அவன் அருளிச் செய்த ஆகமம்’ எனக் குறித்து ‘இறைவனூலிற் கூறிய விரதம் தப்பாமை’ என்பதால், அருகதேவனை இறைவன் என்றே கூறுகின்றார் என்றும் சுட்டித் தம் கருத்தை வலியுறுத்துவர். மேலும் ‘இதனாற் சொல்லியது’ ‘நமது தரிசனத்துக் கடியப்பட்டவாற்றால் தேனுண்டலைப் பரிகரிக்க வென்றதாம்’ என்றும், ‘இதனாற் சொல்லியது, உயிர்க்கொலை புகாமற் பங்கரிக்க வென்பதாம்’ என்றும் உரையாசிரியர் சமண சமயக் கொள்கைகளை உணர்ந்து எழுதுவதையும், மேற்கோள் காட்டச் சமண சமய நூல்களையே மிகுதியும் கையாளுகின்றார் என்பதையும் இக்கொள்கையர் தமக்குச் சான்றாக எடுத்துரைப்பர்.
அடியார்க்கு நல்லார் உரையில் இளம்பூரணரும் அரும்பதவுரையாசிரியரும் இடம் பெறுகின்றனர். இவ்விருவர்தம் காலமும் கி.பி. 11–ஆம் நூற்றாண்டிற்கும் பிற்பட்டது எனக் கருதப்படுகின்றது. மேலும், இவர் உரையில் கலிங்கத்துப்பரணிப் பாடல்கள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. இப்பரணிகொண்ட குலோத்துங்கன் காலம் கி.பி. 1070—1120 என வரலாற்றாசிரியர்கள் கருதுவதால் இவர் காலம் கி.பி. 1120-க்கும் பிற்பட்டது என்று கொள்ள இடமுண்டு. ‘இவருடைய வருணம், சமயம், காலம் ஆகிய இவற்றுள் ஒன்றும் புலப்படவில்லை; ஆனாலும் நச்சினார்க்கினியரால் மறுக்கப்படுவனவற்றுள் சில இவருடைய கொள்கையாக இருத்தல் பற்றி, இவரது காலம் நச்சினார்க்கினியருடைய காலத்துக்கும் முந்தியதாக இருக்கலாமென்று ஊகிக்கப்படுகின்றது’ என்பர் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர். இவரது காலம் கி.பி. 14–ஆம் நூற்றாண்டு எனக் கொள்வாரும் உண்டு.
சிலப்பதிகாரத்துக்கு உரையெழுதிய சான்றோர் பலர் என்பதை அரும்பதவுரையாலும், அடியார்க்கு நல்லார் உரையாலும் அறிந்து கொள்ள முடிகின்றது. “நாவொடு நலிவாது நவைநீ ருகுத்து” (5:137); நவை: குற்றம், குற்றத்துக்காகக் கண்ணீருகுக்கையின் தவை நீரென்றார்; நவநீரென்று பாடமோதிப் புதிய தீரென்று உரைப்பாருமுளர்”, “ஆற்றுவீயரங்கம் (10:156)-ஆற்றை மறைக்கும் அரங்கம்; ஆவது குறை; அது சீரங்கம்; ஆற்றுவி என்பாருமுளர்” இவை போன்றன பிறவும் அரும்பதவுரையுள் இடம்பெற்றுள்ளன. “ஆடகமாம் (26:62) – திருவனந்தபுரம்; இரவிபுரம் என்பாருமுளர்”, “மங்கல வணி (2:63)–மாங்கலியமென்பாருமுளர்”, “தோல் (5:81) –பரிசை; கருங்கடகமென்பாருமுளர்; அடைகரை (10:90) – கடற்கரையென்பாருமுளர்” இன்ன பிறவும் அடியார்க்கு நல்லார் உரையுள் இடம்பெற்றுள்ளன. இவை யாவும், சிலப்பதிகாரத்துக்குப் பண்டை உரையாசிரியர் பலர் என்னும் கூற்றை மெய்ப்பிக்கின்றன.
அடியார்க்கு நல்லார் உரைதானும் சிலப்பதிகாரத்துக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. கானல் வரி நீங்கலாக முதல் 19 காதைகளுக்கு மட்டுமே (ஊர் சூழ்வரி வரை) உரை கிடைத்துள்ளது. அரங்கேற்று காதையுள் இரண்டு இடங்களில் ‘கானல் வரியிற் கூறுதும்’ எனக் கூறுவதாலும், வேனிற்காதையுள் ‘அது முன்னர் ஆணி என்பதனுட் கூறினாம்’ எனக் கூறுவதாலும், கானல்வரிக்கும் அடியார்க்கு நல்லார் உரையெழுதியமை புலனாகும். ‘அழற்படு காதைக் கண்ணே விரித்துக் கூறுதும்’ ‘கட்டுரை காதையுள் விரியக் கூறுவாம்’ என வரும் இவர்தம் உரைப் பகுதிகள், இவ்விரு காதைகட்கும் இவர் உரை எழுத எழுத எண்ணியிருந்தமையைப் புலப்படுத்துகின்றன. இடைப்பட்ட வழக்குரை காதை, வஞ்சினமாலை பற்றிய குறிப்புகள் நூலுள் இடம் பெறவில்லை. இவற்றை நோக்க அடியார்க்கு நல்லார் மதுரைக் காண்டம் வரை உரை எழுதியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. வஞ்சிக் காண்டம் பற்றிய குறிப்புகள் எவையும் இவர்தம் உரையில் காணப்படவில்லை.
சிலப்பதிகாரத்தின் சில காதைகளின் கீழே தனி வெண்பாக்கள் சில இடம்பெற்றுள்ளன. இவற்றை இளங்கோவடிகள் எழுதினாரென்றும், வேறு சிலர் எழுதிச் சேர்த்தனர் என்றும் கருத்து வேறுபாடுகள் உண்டு. சில வெண்பாக்களுக்கு அரும்பதவுரையும், அடியார்க்கு நல்லார் உரையும் காணப்படுவதால் அவை, இவ்வாசிரியர்க்கு முன்னர்த் தோன்றியனவாதல் வேண்டும்.
அவ்வெண்பாக்களுள், ‘ஊடினீரெல்லாம்’, ‘காதலி கண்ட’, ‘நண்ணு மிருவினையும்’ என்று தொடங்குவனவற்றுக்கு அடியார்க்கு நல்லார் உரை காணப்படுகின்றது. அவற்றுள்ளும், ‘நண்ணு மிருவினையும்’ என்னும் வெண்பாவுக்கு உரையாசிரியர், ‘உலகத்தீர்! நல்வினையே செய்யுமின்களென்று அடிகள் கூறினாரென்க’ என உரை எழுதுவதால், இவ்வெண்பா இளங்கோவடிகளால் எழுதப்பட்டது என்ற அவர்தம் கருத்து வெளிப்படுகிறது. ஊர்சூழ்வரியில் ‘வம்பப் பெருந்தெய்வம்’ (19:24) என்னும் தொடருக்கு, பெருந்தெய்வம் — தெய்வத்தினும் பெரியது; கற்புடைத் தெய்வம்; ‘என்னை? கற்புக் கடம் பூண்ட இத்தெய்வமல்லது, பொற்புடைத் தெய்வம் யாங்கண்டிலமால்’ எனவும், ‘தெய்வம் தொழாஅள் கொழு நற்றொழுவாளைத் தெய்வந் தொழுந் தகைமை திண்ணமால்’ எனவும் கூறினமையின் என எழுதுவர். எனவே, கட்டுரை காதையின் இறுதியில் இடம்பெறும் ‘தெய்வம் தொழாஅள்’ எனத் தொடங்கும் வெண்பாவும் அடிகளால் இயற்றப்பட்டது என்றே உரையாசிரியர் கருதுவதாகத் தெரிகிறது.
அடியார்க்கு நல்லார் உரை பல சிறப்புகளைக் கொண்டது. உரைப்பாயிரம், பதிகத்தின் உரை இவற்றில் பொதுவாகக் காப்பியம் பற்றி ஆய்ந்து கூறும் கருத்துக்கள் சிறப்பிடம் பெறுகின்றன. ஐந்திணைக்குமுரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய இவற்றுள் ஒவ்வொன்றின் வகை பலவற்றுக்கும் சிலம்பினின்றே காட்டுகள் தந்து விளக்கியிருப்பது அவர்தம் புலமைச் செழுமைக்கோர் எடுத்துக்காட்டாம், ஒவ்வொரு காதையின் ஒவ்வொரு பகுதிக்கும் பொழிப்புரை தந்துள்ளார்; அதன்கீழ் அருஞ்சொற்பொருள், விளக்கம், நயம், மேற்கோள், இலக்கணம் ஆகியவற்றைத் தந்துள்ளார். தேவையான இடங்களில் அணி வகைகளையும், மெய்ப்பாடுகளையும் வெளிப்படுத்தியுள்ளார். சொற்களை வருவித்துப் பொருள் கூறியும் வினை முடிவுகளை முடித்துக் காட்டியும், ஒவ்வொரு காதையின் முடிவிலும் இஃது இன்ன செய்யுள் என ஆய்ந்து கூறியும் உள்ளார்.
மற்றை உரையாசிரியர்கள் போலன்றித் தாம் எடுத்துக் காட்டும் மேற்கோள்கள் இன்னின்ன நூல்களில் உள்ளனவென்று பெரும்பாலும் புலப்படுத்தியுள்ளார், “இக்கதையைப் பதிற்றுப் பத்தினுள் அஞ்சாம்பத்தின் முடிவின்கண், வடவருட்கும் என்னுங் கலியுள்ளும் (பதிகம் 1 - 2: உரை), கலியுள் முல்லைத் திணையின்கண் ஆறாம் பாட்டினுள் ‘கழுவொடு சுடுபடை .... வியன்புலத்தார்’ எனக் கருவி கூறினமையாலும்” (17,21: உரை) என்று மேற்கோள்களை மிகத் தெளிவாகச் சுட்டுவதும், இவர்தம் உரைப் போக்காகும். இவரது இத்தனித் தன்மையே பெருங்கதையை ஆராய்ச்சி செய்வதற்கு ஏதுவாக இருந்ததென்று டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். நூற் பெயரைச் சுட்டும் போக்கொடு ‘என்றார் வள்ளுவனாரும்’ (1:36–9 உரை) என்று ஒரோவழி ஆசிரியர் பெயரைச் சுட்டுவது முண்டு, பலவிடங்களில் இலக்கியவடிகளை நடைப்படுத்தியுள்ளார். சிலம்படிகளை மிகுதியாகக் கையாளுவது, நூலுள் இவர் பெற்றிருந்த சிறந்த பயிற்சியினைக் காட்டுகிறது.
சங்க இலக்கியங்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், மணிமேகலை, இடைக்காலக் காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், பஞ்ச தந்திரம் போன்ற நூல்களினின்று மேற்கோள்களை எடுத்தாள்வது இவர்தம் பரந்துபட்ட இலக்கியப் புலமையை எடுத்துக்காட்டும். சொற்களுக்குத் தொல்காப்பிய நூற்பாக்களை மேற்கோள் காட்டி இலக்கணஞ் சுட்டுவதும், தேவைப்படும் இடங்களில் புறப்பொருள் வெண்பாமாலை நூற்பாக்களையும் பாடல்களையும் எடுத்தாள்வதும் இவர்தம் சிறந்த இலக்கணப் புலமைக்கு எடுத்துக்காட்டாக அமைகின்றன. தொல்காப்பியத்தையே சிலப்பதிகாரத்துக்கு இயற்றமிழ் இலக்கணமாக இவர் கொண்டுள்ளார். இசை நாடகப் பகுதிகட்கு இசை நுணுக்கம், இந்திரகாளியம், பஞ்சமரபு, பரதசேனாபதீயம், மதிவாணர் நாடகத் தமிழ்நூல் என்னும் ஐந்து நூல்களையும் இவர் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார். தொல்காப்பியர், ‘ஆசிரியர்’ என்றும், இளம்பூரணர் அடிகள் ‘உரையாசிரியர்’ என்றும் இவரால் குறிக்கப்படுகின்றனர். பல மேற்கோள் பாடல்கள் எந்நூலினின்று எடுக்கப்பட்டனவென்று அறிதற்கில்லை.
சொற்களுக்கும் சொற்றொடர்கட்கும் பல பொருள் கூறுதலும், சிறந்த பொருள் கூறி விளக்கம் தருதலும் இவர்தம் உரைப் போக்காகும். சொற்பொருள் விளக்கமேயன்றி நயவுரையும், உவமை மூலம் விளக்கமும் தருதலுண்டு. ‘அமைந்த நற்கலங்கள்’ (16:20) என்னும் தொடருக்கு, ‘அமைந்தகலமென்றாள், தாங்கள் ஆளுங்கலமன்றி மேன்மக்கள் ஆளும் மடைக்கலங்களை’ என நயவுரை பகர்ந்துள்ளார். ‘அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்’ (14:11) என்னும் சொற்றொடர் உரையில், ‘இனித் துறவறமாவது நாகம் தோலுரித்தாற்போல அகப்பற்றும் புறப்பற்றுமற்று இந்திரிய வசமறுத்து முற்றத்துறத்தல்’ எனக் கூறியுள்ளார். நாகம் புறத்தே தோலுரிக்கும்போது அகத்தே தான் கொண்டுள்ள நஞ்சினைக் காலுதல் போல், துறப்போர் புறப்பற்றோடு அகப்பற்றையும் துறத்தலே துறவு என உவமை வாயிலாக நயம்படப் பொருள் விளக்கம் தந்துள்ளார், ‘முன்நீர்’ (17:31) என்னும் சொல்லுக்கு இவர் கூறும் உரைப் பகுதி, தாஅனாட்டித் தனாது நிறுத்தும் இவர்தம் கோட்பாட்டை எடுத்துக் கூறும்.
‘இடைப்பாட்டுக் கூத்தியும்’ (14:156) என்னும் தொடருக்கு, “இடைப்பாட்டாவது ஒளகம்; இவர் கூட்டக் கூத்தியர்; இவையெல்லாம் முன்னம் அரங்கேற்று காதை முதலியவற்றுள் விரித்துக் கூறினவாதலின், ஈண்டும் விரித்துக் கூறுதல், ‘கூறியது கூறல்’ என்னுங் குற்றமாமெனின், ஒக்கும்; ஆண்டுக் கூறிய அடிகளே ஈண்டும் கூறுதலானும், இக்காதை ஒன்றனையுமே கற்றுணர்வார்க்குப் புலப்பட வேண்டுதலானும் ஈண்டும் விரித்துரைக்கப்பட்டன” என எழுதும் உரை, ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே படிப்போருக்கு அவ்வப்பகுதி ஆங்காங்குள்ள உரையினாலேயே புலப்பட வேண்டுமென்பது உரையாசிரியரின் கருத்து என்பதைப் புலப்படுத்துகிறது. மேலும் அகலாதும், கற்பார் மனநிலை சலியாதும் உரையமைதல் வேண்டும் என்பதும் ஆசிரியரின் உட்கோளாகும்.
மூலத்தில் எவ்விடத்தேனும் திசைச் சொற்கள், பழமொழிகளின் கருத்துகள் இடம்பெறுமாயின் அவற்றைத் தனித்தனியே எடுத்துக்காட்டி இன்ன சொல் இன்ன நாட்டு வழக்கென்றும், இன்னது இன்ன பழமொழியென்றும் இவர் புலப்படுத்துவார். பனி கொண்டு – பனியென்பதொரு நோயுமுண்டு – அது குடநாட்டு வழக்கு; தெழித்தல் – பிரித்தலுமாம் – குடநாட்டார் வழக்கு; சிறுமியர்–சிறுபெண்கள்–குட நாட்டு வழக்கு, புதைத்தல்–போர்த்தல்– மலைநாட்டு வழக்கு; பணிமொழி–பணித்தல் – அருளிச் செய்தல்- திசைச்சொல் என்று வட்டார வழக்குச் சொற்களைக் காட்டியுள்ளார். ‘திருவாணைக்கு மேலாய ஆணை இல்லை’, ‘விளையாட்டுப் பூசல் வினையாயிற்று’. ‘கெட்டால் மதிதோன்றும்’ என்று பழமொழிகளைச் சுட்டியுள்ளார். குற்றமில்லாதவன்மேற் குற்றத்தைச் சுமத்துவதை ‘இடுவந்தி கூறுதல்’ என்பர். இச்சொல் இப்பொருளில் தமிழ்நாட்டில் வடபாகத்தே வழங்குவதாக அறியப்படுகிறது.
இளங்கோவடிகளையும் அவர் படைத்துள்ள பாத்திரங்களின் பண்புகளையும் உளங்கொண்டே அடியார்க்கு நல்லார் உரையெழுதியுள்ளார். காப்பியத் தலைவி கண்ணகியின் கற்பு மேம்பாட்டைச் சிறப்புறப் புகழ்வது அடிகளின் கொள்கையாம். இக்கொள்கை உரையாசிரியரின் உரையில் போற்றப்பட்டுள்ளது. ‘புனமயிற் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும்’ (11:199) என்னும் அடியில், கண்ணகியை அடிகள் முற்கூறினமைக்குத் ‘தவத்தினும் கற்புச் சிறந்ததாகலின் முற்கூறினார்’ எனக் காரணங் காட்டியுள்ளார். ‘வம்பப் பெருந்தெய்வம்’ (19:24) என்னும் தொடருரையில், ‘பெருந்தெய்வம் தெய்வத்தினும் பெரியது கற்புடைத் தெய்வம்’ எனக் கூறுவதும், ‘சிலம்புள’ (9:73) என்னும் சொல்லுக்குப், ‘புலந்து கூறினாளெனிற் கற்பின் தன்மையன்றாம்’ என விசேடித்து உரைப்பதும் இக்கொள்கைக்குச் சான்றாக அமைகின்றன.
இளங்கோவடிகளின் உள்ளம் மூவேந்தரைக் குறிப்பிடும்போதெல்லாம் அவர்களை ஒப்பவைத்துப் புகழ்கின்றது. அடிகள் கருத்தில் தமிழக மன்னர்கள் ஓரினமாகக் காணப்படுகின்றனர். ஆட்சியால் வேறுபடினும் மொழியால் தமிழக வேந்தர்கள் ஓரினத்தவரே என்பது அடிகளின் கருத்தாகும். அடிகளின் இந்நடுவு நின்ற நன்னெஞ்சினை உளங்கொண்டே அடியார்க்கு நல்லார் உரையெழுதியுள்ளார். ஆய்ச்சியர் குரவையுள் உள்வரிக் கூத்தினுள் முதலில் பாண்டியனையும், பின்னர்ச் சோழனையும், அதன் பின்னர்ச் சேரனையும் அடிகள் வாழ்த்துகின்றார். பாண்டியனை முதற் கண் வாழ்த்தியமைக்கு அடியார்க்கு நல்லார் கூறும் காரணம், இளங்கோவடிகளின் பண்பு நலனை மிகுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. இவற்றுள், ‘சேரனை முற்கூறாது பாண்டியனை முற்கூறியது என்னையெனின், இது மதுரைக் காண்டமாதலானும், இக்காப்பியஞ் செய்தவர் விழைவு வெறுப்பற்ற சேர முனியாதலானும், முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது எனச் சாத்தர் கூறினமையானுமென்க’, என்பது அவ்வுரையாகும். இவ்வாறே பிற பாத்திரங்களின் பண்பு நலன்களை அறிந்து உரையெழுதினும், கண்ணகி கோவலர்க்கு எதிர்வது அறிந்து கூறும் ஆற்றம்-காலவுணர்ச்சி- கவுந்தியடிகள் மாட்டு இல்லை என்பதை ஈரிடங்களில் (10:55; 10:164-9 உரை) குறைகூறிச் சுட்டிச் செல்வதையும் அறியமுடிகிறது.
அடியார்க்கு நல்லார் கணிதநூற் பயிற்சியுடையார்; பல்கலைப் புலமையர்; அரங்கேற்று காதைக்கு இவர் எழுதியுள்ள உரை இவர் பெற்றிருந்த பிற புலமைகட்குத் தக்கதோர் சான்றாகும். கூத்தி, ஆடலாசிரியன், இசையாசிரியன், கவிஞன், தண்ணுமையோன், குழலோன், யாழாசிரியன் ஆகியோரின் அமைதிகளும், அரங்கின் அமைதி, தலைக்கோல் அமைதி, அரங்கிற்புகுந்து ஆடுகின்ற இயல்பு ஆகியனவும், இக்காதையுரையுள் பல மேற்கோள்களுடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இவருரையில் இந்திரவிழா எடுத்த காதையுள் ஆடை அணிமணிகளின் வகைகளும், கடலாடு காதையுள் ஒப்பனை வகைகள், ஆடல்பாடல்களின் இலக்கணம், இசைக் கருவிகளின் அமைப்பு முறை ஆகியனவும் கூறப்பட்டுள்ளன. ஊர்காண் காதையுள் நவமணிகள் பற்றிய விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ஆய்ச்சியர் குரவையுள் கூத்திற்கு நல்ல விளக்கம் தந்துள்ளார்.
அடியார்க்கு நல்லார் இயல் இசை நாடகக்கலைகளை நன்கு பயின்று திளைத்தவர்; பழுதற்ற முத்தமிழின் பாடற்குச் சிறந்த உரைகண்டவர். இவர் உரை இருபதாம் நூற்றாண்டில் தமிழிசை மறுமலர்ச்சிக்கு அடிகோலியது; பல இசை நூல்கள் தமிழகத்தில் கிளைத்தமைக்குக் காரணமாக அமைந்தது. இது தமிழிசையில் இன்று விரிவான ஆய்வு செய்ய உறுதுணையாய் விளங்குகிறது.இரா.செ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 261)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xg9f87ht/
தமிழ்“அடியார்க்கு நல்லார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xg9f87ht/APA
Oliyon Research. (2026). அடியார்க்கு நல்லார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xg9f87ht/MLA
"அடியார்க்கு நல்லார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xg9f87ht/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment