ஆங்கில வரலாற்றறிஞரும் தொல்லியல் அறிஞருமாவார். இலேன்–பூல் (Lane – Poole Stanley Edward) இங்கிலாந்து நாட்டில் இலண்டன் மாநகரில் கி.பி. 1854–ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 18–ஆம் நாள் பிறந்தார். இவர் கி.பி. 1877–ஆம் ஆண்டில் ஆக்சுபோர்டு கார்ப்பசு கிறித்துக் கல்லூரியில் (Corpus Christ College) படித்துப் பட்டம் பெற்றார். பின்னர்ப் பிரிட்டிசு அருங்காட்சியகத்தில் நாணயத் துறையில் (Coin Department) கி.பி. 1892 வரை பணி செய்தார். எகிப்திய அரசுக்காகக் கெய்ரோ மாகரில் தொல்லியல் ஆய்வாளராக கி.பி. 1895 முதல் 1897 வரை பணிபுரிந்தார். பின்னர் கி.பி. 1898 முதல் 1904 வரை இவர் தப்ளின் Dublin) நகரிலுள்ள திரினிட்டிக் கல்லூரியில் (Trinity College) அராபி மொழிப் பேராசிரியராகப் பணியாற்றினார். இசுலாமியப் பேரரசின் தொடக்க வரலாறு, பண்பாடு ஆகியவற்றில் இலேன்–பூல் வல்லுநராக இருந்தார். இவருடைய பாட்டனார் கி.பி. 1876–இல் காலமானார். அதன் பின்னர்த் தம் பாட்டனார் முடிக்காமல் விட்டுச் சென்றிருந்த அராபிய–ஆங்கிலப் பேரகராதியை (Arabic-English Lexicon) முடிக்கப் பல்லாண்டுகள் இவர் செலவிட்டார். இவர் பல நூல்களை வெளியிட்டுள்ளார். அவை 1. பிரிட்டிசு அருங்காட்சியகக் கிழக்கத்திய இந்திய நாணயங்கள் பற்றிய 14 தொகுதிகள் கொண்ட அட்டவணை, (Catalogue of Oriental and Indian Coins in the British Museum, 14 Vols., 1875–92) 2. இசுபெயினில் மூர்கள் (The Moors in Spain, 1887), 3. துருக்கி (Turkey, 1888), 4. பார்பரிக் கொள்ளைக் கப்பல்கள் (Barbary Corsairs, 1890), 5. இந்துசுத்தான் மொகலாயப் பேரரசர்களின் வரலாறு (The History of Moghul Emperors of Hindustan, 1892), 6. இடைக் காலத்தில் எகிப்தின் வரலாறு (A History of Egypt in the Middle Age, 1901), 7. இடைக்கால இந்தியா (Mediaeval India, 1902), 8. கெய்ரோவின் கதை (The Story of Cairo, 1902) என்பனவாகும். இலேன்–பூலின் நூல்கள் அறிஞர்களாலும் நூல் ஆர்வங் கொண்ட பொதுமக்களாலும் பெரிதும் போற்றிப் படிக்கப்படுவனவாகும். தலையாய ஆங்கிலேயர் பலரின் வாழ்க்கை வரலாறுகளையும் இவர் எழுதியுள்ளார்.