அவையோர் என்பது ஒரு பொதுவான இலக்கில் கவனம் ஒன்றிய மக்கள் திரளைக் குறிக்கச் சமூகவியலார் வழங்கும் பெயராகும். இவர்கள் ஆங்காங்குப் பரந்துபட்டோ ஓரிடத்தில் குழுமியோ இருக்கலாம். இக்குழு சிறியதாகவோ பெரியதாகவோ இருக்கலாம். ஓர் அறையில் கருத்துப் பரிமாறும் குழு மிகச் சிறிய அவை ஆகும். பெரிய அரங்குகளில் கூடும்திரள் ஒரு பேரவை ஆகும். தொலைக்காட்சி பார்ப்போர் அல்லது பரவலான செய்தித்தாள் படிப்போர் பரந்து கிடக்கும் பேரவையோராவர். இவர்களை ஒரே சமயத்தில், ஓரிடத்தில் சேர்க்க இயலாது. இம்மாபெரும் திரளான அவையோர் (Audience) செய்தித் தொடர்பு முறைகளால் (Mass Communication Media) தோன்றியுள்ளனர். பொது இலக்கானவரின் நடப்பைத் திருப்புவோர் திட்டமான அவையில் (Concrete Audience) அடங்குவர். மொழிவாயிலாகத் தம் கருத்தை அவையோர் உணர்த்தாவிடினும் முகக்குறி, சலசலப்பு போன்றவற்றால் பொது இலக்கானவரின் நடத்தை திருத்தப்படும். அவையோர் தரும் ஊக்கம் தலைவர்களுக்கு இன்றியமையாத தேவையாகும். ஒரு கூட்டத்தில் பெரும்பாலோர் செயற்பாடற்றவரே. ஆயினும் இவர்கள் அதே கூட்டத்தில் முனைப்பாகச் செயல்படுவோருக்கு அவையோராக அமைகின்றனர். கேளிக்கை அவையோர், செயல் முனைப்பற்ற ஒரு கூட்டம் (Passive Crowd) எனக் கருதப்படுகின்றனர். ஒரு பக்கம் நடிகர் அல்லது பேச்சாளர், மறுபக்கம் ஒருமுகமாகத் தம் கவனத்தை அவர் மீது செலுத்தும் அவையோர் என்னும் நிலைமையை ஒருமுகப்படுதல் என்கிறோம். ஒரே சமயத்தில் தம் கவனத்தைக் கவரும் ஒரு நிகழ்ச்சியைப் பலர் காண நேரும் போது தற்செயலான அவை தோன்றுகிறது. ஒரு பேருந்து விபத்தைக் காணப் பலர் கூடினால், அவர்கள் தத்தம் பணியிலிருந்து விடுபட்டு விபத்தில் தம் கவனத்தைத் திருப்புகின்றனர். அவ்விடத்தில் அம்வேளையில் அங்கு நிற்கும் எவரும் அந்த விபத்தைக்காணும் நோக்கத்தோடு வரவில்லை. மாறாக, திடீரென்று அந்நிகழ்ச்சியைக் கண்ணுறும் அவையோராகின்றனர். அவ்விபத்துக்குப் பின் தற்செயலான அந்த அவையினர் விரைந்து மறையலாம்; அல்லது அவர்கள் சினமுற்ற ஒரு கூட்டமாக மாறலாம். அல்லது பொறுமையாகப் பகுத்தறிந்து விபத்துக்காளானோரைக் காக்கும் பணியிலும், காவல் துறைக்குச் செய்தி கொடுக்கும் பணியிலும், போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியிலும் ஈடுபடும் ஒரு முறையான அமைப்பாகவும் செயற்படலாம். தற்செயலான அவையினின்றும் முற்றிலும் மாறுபட்டவர் நோக்கமுள்ள அவையோர் ஆவர். குறிப்பான நோக்கமுள்ள அவையோரின் கவனம் நேரடியாகப் பயன் கருதியிருப்பதால் இவ்வகை அவை நோக்கமற்ற அல்லது நிலைபேறற்ற அவையைவிட நீடித்து இருக்கலாம். மேலும் ஒரு வகுப்பிலுள்ள மாணவர்களைப் போன்ற நோக்கமுள்ள அவையோர் மீண்டும் பல முறை அதே நோக்கில் திட்டமிட்டுக் கூடலாம். செய்தி அல்லது கல்வியை நாடியோ பொழுதுபோக்கை நாடியோ இத்தகு அவையோர் கூடுவர். பல சமயங்களில் இரண்டையும் சேர்த்தே நாடலாம். பொழுது போக்குக்காகப் படம் பார்க்கப் போவோர் பயனுள்ள செய்திகளையும் பெற்று வருவதைக் காண்கிறோம்.யூ.ஆர்.கா. துணை நூல்கள் “International Encyclopaedia of the Social Sciences” Vol. 3 & 4, The Macmillan Company and the Free Press, New York, 1972. Julius Could and William L. Kolb, “A Dictionary of the Social Sciences”, Tavistock Publications, UNESCO, 1964. Gardner Lindzey and Elliot Aronson, “The Hand-book of Social Psychology”, Vol. I, Amerind Pablishing Co., New Delhi, 1975. John W. Mc, David & Herbert Harari, “Social Psychology”, Harper & Row, New York, 1967.