பிரிட்டனின் ஆட்சியில் அமெரிக்கக் குடியேற்ற நாடுகள் இருந்த காலத்தில், அவற்றின் இரும்பு வார்ப்புத் தொழிலைப் பிரிட்டன் தனது தொழிலுக்குத் தடையாக இல்லாதபடி, அதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டுச் செய்த சட்டம் இரும்புச் சட்டம் (Iron Act) எனப்படும். இது கி.பி. 1750–ஆம் ஆண்டில் பிரிட்டன் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரிட்டனின் வாணிக, கப்பல் தொழில் சட்டங்களுள் (British Trade and Navigation Acts) ஒன்று. அமெரிக்கக் குடியேற்ற நாடுகளின் இரும்புத் தொழில் வளர்ச்சியைத் தடுப்பதன் வழியாகப் பிரிட்டன் தனது தொழிலுக்கு ஏற்படக் கூடிய போட்டியைத் தவிர்க்கும் பொருட்டுச் செய்து கொண்ட சட்டமே இது. பிரிட்டனின் தொழில் வளர்ச்சிக்குத் தேவை- யான வார்ப்பிரும்பையும் (Pig Iron) இரும்புப் பாளங்களையும் சுங்கவரி இல்லாமல் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வதற்கு இச்சட்டத்தின் மூலம் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்கு வழி உண்டாயிற்று. மேலும், இச்சட்டம் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளில் எஃகு உலைகளும், இரும்பைக் கீறும் ஆலைகளும், முலாம்பூசும் உலைக் களங்களும் (Plating Forges) நிறுவுதலையும், இரும்புக் கருவிகளைச் செய்தலையும், பிரிட்டன் பேரரசுக்கு (Empire) வெளியிலுள்ள நாடுகளுக்குக் குடியேற்ற நாடுகளிலிருந்து இரும்பை ஏற்றுமதி செய்தலையும் தடை செய்தது. தமது இரும்புத் தொழில் வளர்ச்சிக்கு இவ்வாது தடை விதித்த இரும்புச் சட்டத்தை அமெரிக்கக் குடியேற்ற நாடுகள் சில சமயங்களில் எதிர்த்துக் கீழ்ப்படிய மறுத்தன. இச்சட்டத்தின் விளைவாக, அமெரிக்கக் குடியேற்ற நாடுகளின் இரும்புத் தொழில் மிகவும் வளர்ச்சி குன்றிப் போயிருந்தது என்ற கருத்தை வரலாற்றாசிரியர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். பிரிட்டன் அப்போது பிரஞ்சு நாட்டோடு போர் செய்து கொண்டிருந்ததாலும், இந்தியாவில் அது தனது பேரரசை விரிவாக்கிப் பாதுகாக்கும் பணியில் தனக்கு ஏற்பட்ட பெரும் எதிர்ப்பை அடக்க வேண்டியிருந்ததாலும், பிரிட்டனால் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளை இரும்புச் சட்டத்துக்கு முற்றிலும் கட்டுப்பட்டிருக்குமாறு கட்டாயப்படுத்த இயலவில்லை. ஆகையால், சூழ்நிலையின் காரணமாக அமெரிக்கக் குடியேற்ற நாடுகள் இரும்புச் சட்டத்தின் முழு விளைவையும் ஏற்கவில்லை. நாளாவட்டத்தில் இந்நிலை மாறிற்று, பிரஞ்சு நாட்டோடு நடைபெற்ற போரும், இந்தியாவில் நடைபெற்ற போர்களும் ஓய்ந்தபின்னர். பிரிட்டன் இரும்புச் சட்டத்தையும், கப்பல் தொழில் சட்டங்களையும் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளின் மீது கடுமையாகக் கையாண்டது. அதன் விளைவாகத் தேயிலை இறக்குமதியை அமெரிக்கர் வன்மையாக எதிர்த்துக் கலகம் செய்தனர். அமெரிக்க விடுதலைப் போர் (War of American Independence, கி.பி. 1755–1783) மூண்டது; இறுதியில் அமெரிக்கர் வெற்றி பெற்று, தடைச் சட்டங்களைத் தகர்த்தெறிந்து விடுதலை பெற்றனர்.