அங்கத பூபதி
aṅkata pūpati
வடநாட்டில் வாழ்ந்து, திருமாலடியாராகத் திகழ்ந்தவன்.
வடநாட்டில் வாழ்ந்து, திருமாலடியாராகத் திகழ்ந்தவன். இவனுக்கு இராயசிங்கு என்னும் பெயருடைய உடன் பிறந்தான் ஒருவன் திருந்தான். அங்கத பூபதியின் மனைவி திருமாலடியார்களிடம் அன்புடையவளாக இருந்தாள். அவளுக்கு அருளுரை கூறிய ஆச்சாரியார் ஒரு நாள் அவன் இல்லத்திற்கு வந்தார். அங்கத பூபதியின் மனைவி தன் ஆச்சாரியாருக்குச் சிறப்பாக உணவு படைக்க ஏற்பாடு செய்தாள். இதனைக் கண்டு அங்கதபூபதி பொறாமை கொண்டான். தன் மனைவியைப் பார்த்து, “கற்புடைய பெண்களுக்குக் கணவனைப் பார்க்கினுஞ் சிறந்த தெய்வம் வேறு இருக்கிறதோ? இருந்தால் காட்டு, நான் ஒருவன் இருக்கும்போது இவ்வாறெல்லாஞ் செய்கின்றாயே” என்று கேட்டான். அங்கத பூபதி கூறியதைக் கேட்டதும் அவன் மனைவிக்கு மிகுந்த வருத்தம் உண்டாயிற்று. உணவு முதலியன கொள்ளாமல் மூன்று நாள் திருமாலையே நினைந்திருந்தாள். திருமால் அங்கத பூபதியின் கனவில் தோன்றி, ‘உன் மனைவியிடம் கணவனினும் சிறந்த தெய்வத்தைக் காட்டுமாறு கேட்ட தெய்வம் நான்தான்’ என்று கூறி மறைந்தருளினார். அங்கத பூபதி திடுக்கிட்டு விழித்தான். தன் மனைவியிடம் போய், “நான் உன் மீது வீணே சினங் கொண்டேன். நீ உனது விருப்பம் போல் திருமாலையும் அவனடியார்களையும் போற்றி வழிபடுவாயாக” என்று சொன்னான். உடனே அவள் தன் ஆச்சாரியாரைக் கொண்டு கணவனுக்கும் தீட்சை வழங்கச் செய்தாள். அதன் பிறகு கணவன், மனைவி இருவருமே திருமாலிடத்தில் பெருமாலுடையவர்களாய் விளங்கினர். இவ்வாறு இருக்கையில், அங்கத பூபதியின் அண்ணன் இராயசிங்கு தன் பகைவர்கள் மீது தம்பியைப் படையெடுத்துச் செல்லப் பணித்தான். அங்கத பூபதியும் அவ்வாறே போய்ப் பகைவர்களை வென்று அவர்களுடைய பொருள்களைக் கைப்பற்றினான். அப்பொழுது பெரிய வயிரமணி ஒன்று கிடைத்தது. அது அழகியதாகவும் அருமை- யானதாகவும் இருந்தபடியால் அதனைத் திருமாலுக்குச் சூட்ட விரும்பிப் பாதுகாத்து வைத்திருந்தான். இராயசிங்கு இச்செய்தியை அறிந்தான். அம்மணியை எவ்வாறேனும் கைப்பற்ற வேண்டும் என்று பெருமுயற்சி செய்தான். முடியாமற் போகவே தம்பியைக் கொன்று கைப்பற்றுவதென்று முடிவு செய்தான்.
தன் தங்கையிடம் நஞ்சினைக் கொடுத்து உணவிற் கலந்து கொடுக்குமாறு கட்டளையிட்டான். அண்ணனுக்கு அஞ்சிய அவள் அவ்வாறே செய்தாள். அங்கத பூபதி இதனை அறிந்தும், அதனைக் கடவுளுக்குப் படைத்து உண்டான். அதனால் அவனுக்கு எத்தகைய ஊறும் உண்டாகவில்லை. பின்னர் அங்கிருப்பதற்கு விருப்பமில்லாதவனாய் மனைவியோடு சகநாதத்தை நோக்கிப் புறப்பட்டான்.
இதனை இராயசிங்கு உணர்ந்து அவ்வயிரமணியைக் கைப்பற்றி வருமாறு அமைச்சனைப் படையோடு அனுப்பி வைத்தான். அமைச்சன் சென்று வயிரமணியைக் கைப்பற்ற எண்ணினான். அங்கத பூபதி அவ்வயிரமணியை அண்மையில் இருந்த ஆற்றில் எறிந்து விட்டதைக் கண்ட அமைச்சன் தன் படைகளைப் பார்த்து அதனைத் தேடிக் கண்டெடுத்து வருமாறு சொன்னான். படையினர் நெடுநேரம் தேடி முயன்றும் அதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கத பூபதி, அமைச்சனையும் தேடுபவர்களையும் பார்த்து, “நீங்களேன் வீணாக வருந்துகிறீர்கள்? என்னோடு வந்தால் அது சகநாதர்மீது இருத்தலைக் காட்டுகிறேன்” என்றான்.
எல்லோரும் சகநாதத்தையடைந்து சகநாதரைப் போற்றி வழிபட்டனர். அப்பொழுது அம்மணி சகநாதர் மார்பில் இருப்பதை அங்கத பூபதி அமைச்சனிடம் காட்டினான். அமைச்சன் கோயில் பூசாரிகளைப் பார்த்து இம்மணி இங்கு எவ்வாறு வந்தது? என்று கேட்டான். பூசாரிகள், மூன்று நாட்களுக்கு முன்பு அங்கத பூபதி இதனை எங்களிடம் கொடுத்தார். சகநாதர், பதக்கத்திற்பதித்து இதனை அணிக என்று கட்டளையிட்டனர். அவ்வாறே செய்துள்ளோம் என்று கூறினர்.
அமைச்சன் இச்செய்திகளை இராயசிங்கிற்குத் தெரியப்படுத்தினான். இராயசிங்கு தன் தம்பி சகநாதனுக்குத் தொண்டனானதை அறிந்து மகிழ்ந்தான். அவனிடத்துப் பேரன்பு கொண்டான். உடனே திரும்பி இங்கு வந்து விடுக – சகநாதன் மீது ஆணை என்று கடிதம் எழுதினான். அங்கத பூபதியும் திரும்பி ஊரையடைந்து திருமாலைப் போற்றி வழிபாடு செய்து வாழ்ந்தான்.த.கோ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 140)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x7tbcc3n/
தமிழ்“அங்கத பூபதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/x7tbcc3n/APA
Oliyon Research. (2026). அங்கத பூபதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x7tbcc3n/MLA
"அங்கத பூபதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/x7tbcc3n/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment