உசை
ucai
இருக்கு வேதம் கூறும் பெண் தெய்வங்களுள் முதன்மையானது.
இருக்கு வேதம் கூறும் பெண் தெய்வங்களுள் முதன்மையானது. இவள் விடியற் காலையில் கிழக்கில் தோன்றுவாள். ஒளியை ஆடையாக உடுத்தியுள்ள இவள் ஆடல் அழகியாகச் சிறப்பிக்கப்படுதிறாள். ஒளிவீசுதல் என்னும் கருத்துடைய ‘வஸ்’ என்னும் வினையடியாகத் தோன்றியது இப்பெயர். உசை (Usha) இருளைக் களைகிறாள். இருக்கு வேதத்தில் இருபதுக்கு மேற்பட்ட பாடல்களில் இவள் போற்றி வணங்கப்படுகிறாள். இப்பாடல்கள் இவளுக்கு உருவம் கொடுத்துப் பாடுகின்றன. பல காலம் கழிந்தும் பல பருவங்கள் கடந்தும் முதிர்ச்சியுள்ள இவள் இளமை குறையாமல் உலா வரும் காட்சியினைக் கவிஞர் வியந்து பாடியுள்ளார். ஆனால், இவள் மக்களின் ஆயுளைத் தேய்ந்தழியும்படி செய்கிறாள். புதுப்புது உருவங்களோடு நாள்தோறும் விடியற்காலையில் தோன்றுவதால் மீண்டும் மீண்டும் பிறக்கும் பெண்ணாகவும் விண்ணின் கதவுகளைத் திறப்பவளாகவும் இவள் புனைந்துரைக்கப்பட்டுள்ளாள். இருளைப் போக்கும் இவள் அரக்கரை விரட்டுகிறாள். இவள்தன் ஒளிக்கிரணங்கள் மாட்டு மந்தை போல் காட்சியளிக்கின்றன.
இவள் ஒளிவீசத் தொடங்கும்போது பறவையினங்கள் கூட்டிலிருந்து பறந்து வெளியில் செல்கின்றன. மக்களும் உணவு தேடப் புறப்படுகின்றனர். வானத்தில் ஒவ்வொரு நாளும் பிறக்கும் இவளை வானத்தின் மகளாகவும் இரவினுடன் பிறந்த மூத்தவளாகவும் பல பாடல்கள் கூறுகின்றன. ஆடவன் பெண்ணைத் தொடர்வதைப் போல் சூரியன் இவ- ளைத் தொடர்கிறான். இவள் சூரியனின் மனைவி, சூரியன் எழுமுன் இவள் தோன்றுவதால் சூரியனைப் பிறப்பிப்பவள் என்றும் சூரியனின் தாய் என்றும் கவிஞரால் விவரிக்கப்படுகிறாள். வேறொரு கவிஞர் நல்ல ஒளிபொருந்திய குழந்தையை இவள் ஏந்தி வருவதாக புனைந்துரைத்துள்ளார். விடியற்காலையில் இவள் தோன்றுவதாலும் அப்போது வேள்வித்தீ மூட்டப்படுவதாலும், அக்கினியையும் இவளையும் தொடர்புபடுத்தி அக்கினியின் காதலியாக இவளை மற்றுமொரு கவிஞர் கூறியுள்ளார். விடியற்காலைப் பொழுதுடன் இணைத்துக் கூறப்படுபவர்கள் அசுவினி தேவர்களாவர். அவர்களுடன் இவளைத் தொடர்புபடுத்திப் பாடும் பல பாடல்கள் இருக்குவேதத்தில் அமைந்துள்ளன. இருளால் மறைக்கப்பட்டுக் கிடக்கும் செல்வங்களை வெளிப்படுத்திக் காட்டுவதுடன் அவற்றை வாரி வழங்கும் வள்ளன்மை உடையவளாகவும் இவள் இருக்கிறாள். இப்பெண் தெய்வம் தன்னை வணங்குவோர்க்குப் புகழ், பெருமை, செல்வம், குழந்தைகள், பாதுகாப்பு, நீண்ட கால வாழ்வு முதலியனவற்றை எல்லாம் வழங்கும் என்று இருக்கு வேதம் கூறுகிறது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 750)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x2mxm4nv/
தமிழ்“உசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/x2mxm4nv/APA
Oliyon Research. (2026). உசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x2mxm4nv/MLA
"உசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/x2mxm4nv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment