பிறந்ததிலிருந்து 18 மாதங்கள் வரையில் குழந்தைகள் இளங்குழவிப் பருவத்தினராக இருக்கின்றனர். இப்பருவத்துக் குழந்தைகளுக்குச் சோதனைகளை (Psychological Tests for Infants) உளவியல் முறையில் அமைப்பது கடினமாகும். ஏனெனில், குழந்தைகள் இப்பருவத்தில் பிறர் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றனர். ஒரு வயது முடிவடையும் வரையில் இளங்குழவிகளின் இயல்பான நடத்தைமுறைகளைக் கவனித்து ஆராய முடியும். குழந்தையின் இரண்டாம் வயதில் ஒரு சில செயற் சோதனைகளைக் கொடுக்க முடியும். இலின்பர்ட்டு ஈரோசுலர் அளவை (Linfert Hierhozler Scale) என்னும் இளங்குழவிச் சோதனை குழந்தையின் நுண்ணறிவைப் பின்வருவன போன்ற நடத்தைக் கூறுகளில் மதிப்பீடு செய்யலாம் என்று கூறுகிறது. :: ஒரு பந்தைக் குழந்தையின் எதிரில் உருட்டி விட்டுக் குழந்தை எவ்வாறு அப்பந்து செல்லும் பக்கம் நோக்கித் தன் பார்வையைத் திருப்புகிறது என்பதைக் கவனித்தல். :: இரண்டாம் வயதில் குழந்தை எவ்வாறு உணவை எடுத்து உண்ணுகிறது என்பதை மதிப்பிடுதல் சார்லட்டு பூலர் (Chorlotte Buhler) என்பவர் அமைத்த இளங்குழவிச் சோதனையில், குழந்தை எவ்வாறு–எத்தகைய தூண்டல்களுக்குச் சிரிக்கிறது என்பதையும் குழந்தையின் முன் வைத்திருந்த பொம்மை மறைக்கப்பட்டவுடன் குழந்தை அதனை எவ்வாறு தேடுகிறது என்பதையும் கவனித்தல் அடங்கியுள்ளன. இத்தகைய சோதனைகளை முழுமையாகக் குழந்தையின் நுண்ணறிவினைச் சோதிப்பனவாக ஏற்றுக் கொள்ள முடியாது. குழந்தையின் உள நிலையும் விரைவில் மாற்றங்களை அடைகிறது. மேலும், இளங்குழவியின் வளர்ச்சி விகிதம் எப்பொழுதும் ஒன்று போல் இருப்பதில்லை. பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரையில் விரைவாக வளர்ச்சி நிலைகளையும் அவற்றுடன் தொடர்பு கொண்ட இயக்கத்திறன்களையும் அடைந்துவரும் குழந்தை எட்டு மாதங்கள் நிரம்பியவுடன் வளர்ச்சி விகிதக் குறைவை அடைகிறது. வரைபடத்தில் மூன்று குழந்தைகளின் நிற்கக் கற்றுக் கொள்ளும் திறன், மூன்று வயது வரையில் எவ்வாறு விகித மாற்றங்களை அடைகிறது என்பது கீழ்வரும் வரைபடத்தின் மூலம் ஆய்ந்து விளக்கப்பட்டுள்ளது. இளங்குழவிப் பருவத்தில் காணப்படும் இயக்க வளர்ச்சி விகிதம், நுண்ணறிவு வளர்ச்சி விகிதம் ஆகியவற்றுக்கும் பள்ளிப் பருவ வளர்ச்சி விகிதத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக எண்ண முடியாது. ஆனால், குழந்தை தன் வயதுக்கேற்ற இயக்கத்திறனை அடைந்துள்ளதா என்பதைச் சோதனைகளின் உதவியால் அறிய முடியும். பியாகே (Piaget) என்னும் உளவியல் அறிஞர் தம்முடைய ஆராய்ச்சிகளின் விளைவாக இளங்குழவி இப்பருவத்தில் கற்றுக் கொள்ளும் திறன் கருத்துப் பெறல் ஆகும் என்று கூறுகிறார். குழந்தை ஒரு பந்தைப் பின் தொடர்ந்து தவழ்ந்து செல்லும் பொழுது அப்பந்தினை ஒரு திரைக்குப்பின் மறைத்து விட்டால் குழந்தை அப்பந்து அங்குத் திரைக்குப் பின் இருக்- மூன்று குழந்தைகளின் நிற்கும் திறன் வளர்ச்சியைக் காட்டும் படம் கிறது என்ற கருத்தைப் பெறுகிறது. இதனைப் பொருள் நிலைப்பு (Object Permanence) என்று பியாகே கூறுகிறார். திரைக்குப்பின் இருக்கும் பந்தை எடுத்து ஒரு துணியில் மறைத்து மேசை மீது னவக்கும் பொழுதும் குழந்தை பந்து திரைக்குப் பின் இருப்பதாக நினைக்கிறது. இப்பருவத்தில் குழந்தை இணைத்தல் அறிவுத் திறனையும் பெறுகிறது. உனக்கு ஓர் இனிப்பு, உன் தாய்க்கு ஓர் இனிப்பு எனக்கு ஓர் இனிப்பு என்று கூறி மூன்று இனிப்புகளைக் குழந்தையின் முன் வைத்தால், அது இனிப்புகளையும் தன் அருகில் இருப்பவரையும் மாறிமாறிப் பார்த்து ஒவ்வொருவருக்கும் ஒர் இனிப்பு இருக்க முடியுமா? என்று இணைத்தறியக் கற்றுக் கொள்கிறது. இதனைப் போன்றே ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது நிலைத்த கவனத்தைச் செலுத்தக் குழந்தை கற்றுக் கொள்கிறது. இத்தகைய கவன நிலைப்பையே பினே (Binet) என்னும் உளவியல் அறிஞர் நுண்ணறிவுச் சோதனைகளை அமைக்கும்பொழுது குழந்தைகளிடம் மதிப்பீடு செய்யக் கூடிய திறனாகக் கருதினார். குழந்தை தன் கையில் எடுக்கும் பொருளைத் திருப்பித் திருப்பிப் பார்த்து அப்பொருளின் முழுமையான தோற்றத்தை அறிய முயற்சி செய்கிறது. இதுவும் ஒரு திறனாகும் என்று பியாகே கருதினார். இளங்குழவிகளுக்கான உளவியல் சோதனைகளுள் கெசெல் பட்டியலும் (Gesell Schedule), காட்டெலின் (Cattell) அளவையும் குறிப்பிடத்தக்கவை. காட்டெல் அளவை இசுடான்போர்டு பினே சோதனையின் (Stanford Benet Test) அடிப்படையில் அமைந்துள்ளது. கெசெல் பட்டியல் குழந்தைகள் இப்பருவத்தில் எச்செயல்களை இயல்பாகச் செய்கின்றனர் என்பதன் அடிப்படையில் அமைந்துள்ளது. இச்சோதனைகளைப் பல உளவியலறிஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில், இச்சோதனைகள் தரப்படுத்தப்படுதல் மிகவும் சிக்கலானது. காட்டெலின் சோதனையை இசுகாட்டு (Scott), பால் (Ball) ஆகிய இருவரும் பகுத்தாய்வு செய்துள்ளனர். இளங்குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட சோதனைகளுள் நான்சி பெய்லி (Nancy Bayley) என்பவர் அமைத்த பெயிலி அளவையும் (Bayley Scale) குறிப்பிடத்தக்கதாகும். இச்சோதனை ஒரு மாதக் குழந்தையிலிருந்து 30 மாதக் குழந்தை (2½ வயது) வரையிலான குழந்தைகளுக்குக் கொடுக்கப்படக் கூடிய சோதனைகள் அடங்கியதாகும். இசுகாட்டு, பால் ஆகியவர்கள் பெயிலிச் சோதனையையும் காரணிப் பகுப்பாய்வு (Factor Analysis) செய்துள்ளனர். இச்சோதனையில் முதல் ஆறு மாதம் வரையில் குழந்தை பின்வரும் திறன்களுக்காக மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றது. அ) குழந்தையின் முன் ஒரு சிறு வளையத்தை வைத்தால் அதன் மீது குழந்தையின் கவனம் எந்த அளவுக்கு நிலைத்திருக்கிறது? ஆ) ஒரு பொருளை நகர்த்திக் கொண்டே போனால் அதன் பக்கம் குழந்தைப் பார்வையும் கவனமும் எந்த அளவிற்குத் தொடர்கிறது? இ) மகிழ்ச்சியின்மையைக் குழந்தை வெளியில் தெரியப்படுத்தும் முறை, ஈ) தன் உருவத்தை அல்லது வேறு உருவத்தைக் கண்ணாடியில் கண்டு சிரித்தல். இந்த நான்கு வகைத்திறன்களும் குழந்தைக்கு 6 மாதம் முடியும் வரையிலும் தொடர்ந்து கொடுக்கப்படலாம். ஆறிலிருந்து பன்னிரண்டு மாதம் வரையில் சொல், கருத்து இவை உருவாதல், சிறு கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல் போன்ற திறன்களையும் மதிப்பீடு செய்யலாம். பெயிலி அளவையில் (6 முதல் 12 மாதங்கள் வரை) பின்வரும் சோதனை முறைகள் அடங்கியுள்ளன. அ) ஒரு கன சதுரத்தைக் கொடுத்து குழந்தையின் கையில் அதனை ஒரு கிண்ணத்தினுள் போடச் சொன்னவுடன் குழந்தை அதனைச் செய்தல். ஆ) ஒரு கரண்டியால் குடுவையைப் பெரியவர்கள் கிளறுவதைப் போல் தானும் செய்தல். இ) எழுதுபொருள் கொண்டு எழுதுவதைப் போல இயங்குதல். ஈ) நிற எழுது கட்டியை (Crayon) கையில் எழுதும் முறையில் பிடித்தல். உ) இயல்பான கிறுக்கல்கள். ஊ) குழந்தையின் சட்டை, காலணி அல்லது பொம்மை போன்றவற்றைக் குறிப்பிட்டு ‘எங்கே?’ என்று கேட்டதும் அதனைக் குழந்தை சுட்டிக் காட்டுதல். எ) குழந்தை பொம்மையை ‘வை, எடு, என்னிடம் கொடு’ போன்ற கட்டளைகளைக் கொடுத்தவுடன் அவற்றை நிறைவேற்றுதல். இத்திறன்களை இத்த வரிசையிலேயே மதிப்பீடு செய்யும் முறையில் சோதனைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேறு சோதனைகளில் குழந்தை எத்தனைச் சொற்களைக் கேட்டுத் திரும்பக் கூறுகிறது என்பதைப் போன்ற பகுதிகள் காணப்படுகின்றன. உசுகிரிசு (Uzgiris), அண்டு (Hant) ஆகியவர்கள் அமைத்த உளமுதிர்ச்சியின் அளவை வரிசைகள் (Ordinal Scales of Psychological Development) என்னும் சோதனை முறையில் 2 வாரக் குழந்தையிலிருந்து 24 வாரங்கள் நிறைந்த குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடிய சோதனைப் பகுதிகள் அடங்கியுள்ளன. இச்சோதனைகளுக்குக் குழந்தைகளின் துலங்கல்களை ஆராய்ந்ததில் அவை பின்வரும் ஆறு பகுதிகளில் அடங்கின. 1. பொருள் நிலைப்பு. 2. பொருளை அடைவதற்குத் தானே துணைக் கருவிகளை நாடுதல்: குச்சி, கை, கம்பி போன்றவற்றைப் பிடித்துக் கொண்டு வேண்டும் பொருளை அடைய முயற்சி செய்தல். 3. கேட்டுச் சொல்லுதலும் பார்த்துச் செய்தலும். 4. காரணமறிதல் (எ–டு. சாவியைத் திருப்பினால் பொம்மை ஓடும் என்று அறிதல்). 5. பொருளை எப்படி எங்கு வைத்தால் விழாமல் இருக்கும் என்று உணர்தல். 6. பொருள்களைத் தொட்டுத் திருப்பி எறிந்து கீழே போட்டு அவற்றின் தன்மைகளை அறிதலும் பொருள்களுடன் தொடர்புடைய செயல்களைச் செய்தலும் (பொம்மை உந்து ஒன்றைப் பார்த்தவுடன் உந்து ஓட்டும் செயலைக் காட்டுதல், சதுரக் கட்டைகளை எடுத்தவுடன் அடுக்குதல், மணிமாலையைக் கண்டவுடன் அதனை அணிதல், பொம்மைகளுக்குப் பெயரிட்டுச் சுட்டிக் காட்டுதல் போன்ற இயைபுச் செயல்கள்). இச்சோதனைகள் 84 குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டுத் தரப்படுத்தப்பட்டன. சோதனைப் பகுதிகளின் மதிப்பீட்டுப் புள்ளிகள் கணித முறையில் குறியீட்டு எண்ணுக்குக் (Index) கொண்டு வரப்பட்டன. பல்வேறு சோதனைகளின் குறியீட்டு எண்கள் 802–இலிருந்து 991–வரையில் காணப்பட்டன. இத்தகைய இளங்குழவிச் சோதனைகள் அமெரிக்க ஐக்கிய நாட்டைத் தவிர, இங்கிலாந்திலும் வேறு சில ஐரோப்பிய நாடுகளிலும் அந்தந்த நாட்டுப் பண்பாட்டுச் சூழமைவுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பண்பாட்டுச் சூழமைவுக்கு ஏற்ப இச்சோதனைகள் அமைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படவேண்டும். துணை நூல் Anne Anastasi, Psychological Testing, Collier Macmillan Internation, New York, 1974.