உபலக்கணம் என்பது சொற்றொடர் பொருள் உணர்த்தும் வகைகளுள் ஒன்றினைக் குறிக்கும் இலக்கணக் குறியீடாகும். ஒரே இனமாக அமையும் பலவற்றுள் ஒன்றினைக் குறிப்பிட்டு, அதனால் ஏனையவற்றை உடன் கூறிக்கொள்ளுமாறு அமைப்பது உபலக்கணம் எனப்படும். ‘கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை’ (குறள். 9) என்னும் குறளில், ‘தாளை வணங்காத் தலை’ என்ற தொடரை விளக்குங்கால் பரிமேலழகர், ‘காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயனில எனத் தலைமேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும் இனம் பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயனில என்பதூஉம் கொள்க’ என்று குறிப்பிட்டுள்ளார். வணங்காத் தலைகள் பயனில்லை என்ற அளவில், அவ்வாறே காணாத கண், வாழ்த்தாத வாய், புகழ் கேளாத செவி, தொழாத கை, வலஞ்செய்யாத கால் ஆகியனவும் பயனில்லை என்று உடன் அறிந்து கொள்ளுவது உபலக்கணத்தால் அமைவதாகும். இதனைப் பவணந்தி முனிவர் தாமியற்றிய நன்னூற் பொதுவியலுள் ஒரு நூற்பாவில் இலக்கணப்படுத்தியுள்ளார். ‘ஒருமொழி ஒழிதன் இனங்கொளற் குரித்தே’ (நன். 358) என்பது அந்நூற்பாவாகும். இதன் பொருள், பெயர் வினை இடை உரி என்னும் நால்வகைச் சொற்களுள் ஒவ்வொன்றும், ஒழிந்து நின்ற தன்தன் இனங்களைக் கொண்டு முடிதற்கு உரித்தாகும் என்பதாகும். இதனை ‘நஞ்சுண்டான் சாவான் என்றவழி நஞ்சுண்டவள் சாவாள், நஞ்சுண்டவர் சாவார், நஞ்சுண்டது சாம், நஞ்சுண்டன சாம்’ என்று எடுத்துக்காட்டுத் தந்து உரையாசிரியர்கள் விளக்கியுள்ளனர்.