இனங்கள், மனிதர்
iṉaṅkaḷ, maṉitar
மனிதகுலத்தின் மிகப் பெரும் பிரிவே இனம்.
மனிதகுலத்தின் மிகப் பெரும் பிரிவே இனம். இனம் (Race) என்னும் சொல் பல்வேறு சூழலில் பலவாறாகப் பொருள் கொள்ளப்பட்டுக் கூறப்படுகிறது. அரசியலார், மொழியியலார், உயிரியலார், வரலாற்றியலார், சமய அறிஞர்கள் முதலானோர் பண்டைக் காலந்தொட்டே வெவ்வேறான கருத்தினைக் கொண்டு, தத்தம் சொல்வழக்கில் இச்சொல்லைக் கையாண்டுள்ளனர்.
இனப்பெயர்களுள் பல மொழிக் குழுக்களைக் குறிப்பனவாகவும், நிறத்தைக் குறிப்பனவாகவும், புவியமைப்பைக் குறிப்பனவாகவும் காணப்படுகின்றன. தமிழினம், ஆரிய இனம், நார்டிக்கு இனம் (Nordic Race), ஐரிசு இனம், இசுகாட்டிசு இனம் (Scottish Race), யூதர் இனம், செமிட்டிக்கு இனம் (Semitic Race) முதலானவை சில எடுத்துக் காட்டுகள். ஆரிய இனம் என்று வழங்கப்பட்டதற்கு முதன்மையான காரணம் அவர்களனைவரும் இந்தோ–செருமானிய மொழியின் உறவினைப் பெற்றிருந்ததே. நார்டிக்கு இனத்தவர் தம் தோலின் நிறத்தாலும் உடலுயர்வு அளவாலும் உயர்ந்தவரென எண்ணி, நார்டிக்கு என்னும் பெயரைச் சூட்டிக் கொண்டனர். வட ஐரோப்பாவில் உள்ள மக்களினத்தில் உடலமைப்பில் யாவரினும் உயர்ந்தவர்கள் என்ற பொருளையும் நார்டிக்கு என்னும் சொல்லுக்கு இவர்கள் தந்தனர்.
நாடு சார்ந்தும் பண்பாடு சார்ந்தும் மக்களினம் பகுக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் பலர் ஐரிசு இனம் என்றும் இசுகாட்டிசு இனம் என்றும் நாட்டினத்தைக் குறி்ப்பதற்காகச் சொற்களைக் கையாண்டனர். மொழி, நாடு, புவியமைப்பு முதலானவற்றின் சார்பற்ற மக்கள் சமயத்தால் ஒன்றுபடும்போது இனமெனக் கூறப்படுவதுமுண்டு. யூதர் இனம், செமிட்டிக்கு இனம் ஆகியவற்றை இதற்குச் சான்றாகக் கூறலாம். நீக்கிரோ இனம் என்னும் சொற்றொடர் முற்காலத்தில் கறுப்பராக இருந்த அனைவரையும் குறித்தது. பின்னரே, இவ்வினம் ஆப்பிரிக்க மூதாதையர்களைக் கொண்ட ‘கறுப்பர்’களைக் குறிக்கும் குறைந்த எல்லையைக் கொண்ட சொற்றொடராகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஆசுத்திரேலியக் கறுப்பர்கள், தென்னிந்தியக் கறுப்பு நிறத்தவர்கள், பிசித் (Fiji) தீவுக் கறுப்பு நிற மக்கள், கறுப்பு நிற அமெரிக்க இந்தியர் முதலானவர்களை இத்தொடர் சுட்டிக் காட்டுவதில்லை. மேலும், புண்பாடு, அரசியல் முதலான பின்னணி பற்றியும் இனம்பிரித்தலுண்டு. எடுத்துக்காட்டாக, மேசிடோனியர் (Mace–donians), குரோட்சு (Croats), மாக்யார்கள் (Magyars) முதலானோரைக் குறிப்பிடலாம்.
இனம் பற்றிய மானிடவியலின் வரையறை நீண்ட வரலாறு கொண்டது. இக்கருத்தை அரிசுடாட்டிலின் இயற்கை பற்றிய கருத்துகள் முதல் இலின்னேயசு (Linnaeus) வகுத்த வகுப்பு (Class), பொதுவினம் (Genus), சிறப்பினம் (Species) முதலான கோட்பாடுகள் வரை தொடர்புபடுத்தி அறியலாம். தொன்மை மானிடவியலாரின் (Classical Anthropologists) இனம் பற்றிய கருத்து, அறிவியல்சார் கருத்துகளிலிருந்தும் மரபியல்சார் கருத்துகளிலிருந்தும் மாறுபட்டது. இவர்கள் அனைவரும் மக்களினம் இயற்கையிலேயே தனிப்பட்ட பண்புகளைக் கொண்ட ஒரு சிறப்புப் படைப்பு என்று கூறினர்.
இனம் என்னும் சொல்லை முதன்முதலில் கி.பி. 1749–ஆம் ஆண்டு இயற்கை வரலாற்றியலில் (Natural History) பப்பன் (Buffon) என்பவர் கையாண்டார். உடல்சார் மானிடவியலாரான (Physical Anthropologist) புளுமன் பேக்கு (Bluemenbach) கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் இனம் பற்றி மிகுதியாக ஆராய்ந்தார். இவர்தம் வரையறையும் கருத்துகளும் மனித உடலின் புறக்கூறுகள்மீது அமைந்த ஒரு தலைக் கருத்தாகவே காணப்பட்டன. தார்வினின் (Darwin) இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டின் வெளிப்பாட்டிலிருந்தே இனத்தின்பால் அறிவியல் சான்றோடு அறியும்போக்கு வலுப்பெற்றது. ஒவ்வொரு சிறப்பினமும் தான் வாழும் குழ்நிலையில் நிலையான பண்புகளைச் சிதையாமல் நிலைநிறுத்தும் திறனைக் கொண்டிருக்கவில்லை. படிமலர்ச்சி (Evolution) நிகழ்வில் ஒவ்வோரினமும் காலப்போக்கில் தன் பண்புகளில் மாற்றம் பெற்று விடுகிறது. இக்கருத்தினை அடிப்படையாகக் கொண்டே மானிடவியலார் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து இனம் பற்றிய கருத்துகளை வெளியிடுவதில் மனிதப் புறப்பண்புகளை விடுத்து, மரபுப் பண்புகளையும், இரத்த வசைகள், அமினோ அமிலங்கள், ஆர்எச் கூறுகள் (Rh Factors) முதலான உடற்கூற்றுப் பண்புகளையும் அடிப்படையாகக் கொண்டு, மனித வேற்றுமைகளுக்கான காரணங்களை அறிய முற்பட்டனர்.
இன்று இனம் என்னும் சொல்லை மானிடவியலார் புனை கருத்துகள் கொண்டோ அரசியல், மொழி, சமுதாயம் முதலானவற்றின் புறச்சூழலை வெளிக்காட்டும் கருத்துகள் கொண்டோ வரையறுக்கவில்லை. உயிர்சார் அடிப்படையில் ஒத்த பண்புகளைக் கொண்ட மக்கள் குழு, இனப்பெருக்க மக்கள்தொகை (Breeding Population), மரபுவழிக் கொண்டு செல்லும் பண்புகளைக் கொண்ட மக்கள் குழு ஆகியவற்றையே இனம் என்று இக்கால மானிடவியலார் வரையறை செய்வர். மனிதகுலத்தைக் குறைந்த எண்ணிக்கையிலான இனங்களாகக் குறிக்கும் முற்கால இனவரையறை இக்கால மானிடவியலாளரால் மாற்றியமைத்துக் கூறப்படுகிறது. இனம் என்னும் சொல்லுக்குப் பதிலாக இனக்குழுக்கள் (Ethnic Groups) என்னும் சொல்லை வழக்கில் கொண்டுவர முனைகின்றனர். பாரிசில் உலக நாடுகளின் கல்வி அறிவியல் பண்பாட்டுக்கழகம் (UNESCO) 1967–ஆம் ஆண்டு வெளியிட்ட இனம் பற்றிய வெளியீடு, இனம் என்னும் சொல்லை நாடு, சமயம், புவியமைப்பு, மொழி, பண்பாடு ஆகியவற்றைச் சார்ந்த குழுக்களோடு தொடர்புபடுத்தலாகாது எனக் கூறுகிறது. பண்டைக் காலந்தொட்டே மேற்கூறிய சொற்களோடு இனம் என்னும் சொல் தவிர்க்க முடியாமல், சொல் வழக்கில் வந்துவிட்டதால் இச்சொல்லைக் கைவிட்டு இனக்குழுக்கள் என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என அவ்வெளியீடு கூறுகிறது. இனங்களுக்கிடையில் காணப்படும் வேறுபாடுகள், ஒவ்வோரினத்திலும் அதன் மக்கள் குழுவினர் கொண்டுள்ள மாறுபட்ட பண்புகளைக் குறிப்பதாகும். இப்பண்புகள் தொடர்ச்சியான மாற்றங்களைப் பெற்று வருவன. மனிதக்குழுக்கள் சார்ந்துள்ள புவியமைப்பு, சூழ்நிலை, காலநிலை, உணவுமுறை முதலானவை நெடுங்காலமாகச் செயற்பட்டு ஒவ்வொரு மக்கள் குழுவையும் அதன் மரபுப் பண்பை மாற்றும் தன்மை கொண்டவை.
மனிதக் குலத்தின் அனைத்து வகையினரும் ‘ஓமோ’ (Homo) என்னும் பேரினத்தில் (Genus) ‘ஓமோ செபியன்’ (Homo Sapien) என்னும் சிறப்பினத்தின்கீழ் அடங்குவர். ஒரே சிறப்பினத்தின் உயிரினைக் கொண்ட மக்கள் மரபுப்பண்புகளின் அடிப்படையில் பல இனங்களாகப் பகுக்கப்படுகின்றனர். எளிதில் காணப்பெறும் புறத்தோற்றப் பண்புகளான தோல், மயிர், முகம், உடலமைப்புப் போன்றவற்றைச் கொண்டும், இரத்த வகைகள், அமினோ அமிலங்கள் (Amino Acids) சுரப்பில் வெளிப்படும் மாற்றங்கள், மரபுவழி வரும் சுரப்புநீரின் (Enzymes) தன்மைகள் போன்ற உடற்கூற்றுப் பண்புகளின் அடிப்படையிலும் மனித இனங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. புறத்தோற்றப் பண்புகள் முற்கால மானிடவியல் வகைப்பாடுகளில் முதன்மையான பாங்கினைப் பெற்றிருந்தன. இக்கால உடல்சார் மானிடவியலார் (Physical Anthropologists) உடற்கூற்றுப் பண்புகளையே பெரிதும் கையாளுகின்றனர். மனித இனங்களைக் குறிப்பிடும்போது, சில உயிரியலார் மனிதத் தொகுதி (Human Stocks}, இனமரபினர் (Strain), வகைகள் (Varieties), இனக்குழுக்கள் (Ethnic Groups) எனப் பலவாறாகப் பயன்படுத்துவதும் உண்டு. இது பெரும்பாலும் அரசியல் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும் வெறுப்புணர்ச்சி தரும் பெயரைக் கொண்டு ஓர் இனத்தை அழைப்பதிலிருந்து தவிர்ப்பதற்கும் இச்சொற்கள் கையாளப்படுகின்றன.
தொன்மைக் காலத்தில் மனிதகுலம் வெவ்வேறு சூழ்நிலையில் எண்ணிக்கையில் குறைந்து காணப்பட்டது. காலத்தினூடே படிமலர்ச்சி நிகழ்வில் மனிதக் குழுக்கள் பெரிய நிலப்பரப்புகளிலிருந்து வெவ்வேறு திசைகளில் இடம் பெயர்ந்தன. மலைத் தொடர்களாலும் பாலை நிலங்களாலும் கடல்களாலும் ஒதுக்கப்பட்ட புவிப்பரப்பில் வாழ்த்த மக்களினங்கள் வாழும் தன்மையில் தகவமைந்து, மேன்மேலும் நுண்ணிய மாறுபாடுகளைப் பெற்றன. இம்மாற்றங்களின் அடிப்படையில் இனங்களைப் புவியமைப்புசார் இனங்கள் (Geographical Races), வட்டார இனங்கள் (Local Races), நுண்ணினங்கள் (Micro-races) என வகைப்படுத்தலாம்.
புவியமைப்புசார் இனங்கள்
மனித இனங்களின் வளர்ச்சியிலும் வேறுபாடுகளிலும் இயற்கையின் தாக்கம் மிகுதியானது. பண்டைக் காலத்தில் மனிதர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நிலப்பகுதிகளில் மட்டுமே வாழ்ந்திருந்தனர். பின்னர், அவர்கள் பூமியின் பல்வேறு இடங்களுக்கு, உயரமான மலைகள், அகன்ற ஆறுகள், அடர்ந்த காடுகள், செழிப்பற்ற பாலை நிலங்கள் முதலான இயற்கைத் தடைகளைக் கடந்து இடம்பெயர்ந்து வாழ முற்பட்டனர். இறுதியில், வரலாற்றுப் போக்கில் பூமியின் அனைத்துக் கண்டங்களிலும் வேறுபட்ட சூழ்நிலை, கால நிலைகளையுடைய அனைத்து நிலப்பரப்புகளிலும் மனித வாழ்க்கை பரவிவிட்டது. ஒவ்வோர் இயற்கைச் சூழலிலும் வாழும் மனிதக் குழு ஒவ்வொன்றும் தான் சார்ந்துள்ள நிலப்பரப்பின் தன்மைக்கேற்ற பண்புகளைப் பெற்று விடுகிறது. இதனால், மக்களிடையே புறப்பண்புகளிலும் உடற்கூற்றுப் பண்புகளிலும் ஒவ்வொரு பகுதி மக்களும் ஏதோ ஒரு வகையில் தனிப்பட்டவர்களாசுக் காணப்படுவர். இவ்வித மக்கள் இனத்தையே ‘புவியமைப்புசார் இனங்கள்’ எனக் கூறுவர்.
இவ்வினம் இயற்கையினால் அமையப் பெறுவது; புவிப்பரப்பால் பகுக்கப்படுவது; வேற்று நிலப்பரப்பு மக்களிடமிருந்து வேறுபடுவது. புவியமைப்புசார் இனங்கள் பற்றித் தெளிவாக விளக்கும்போது, மிகப் பரந்த நிலப்பரப்புகளைக் கொண்ட கண்டங்களைக் குறிப்பிடுவதே பொருத்தமானது. புவியமைப்புசார் இனங்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட கண்டத்தைச் சார்ந்ததாகக் காணப்படினும் சில இனத்தவர்கள் பிற கண்டங்களிலும் காணப்படுகின்றனர். பெரும்பாலான மானிடவியலார் உலக மக்களை ஒன்பது புவியமைப்புசார் இனங்களாகப் பகுப்பர். அவையாவன: 1. ஆப்பிரிக்கர், 2. அமெரிக்க இந்தியர், 3. ஆசியர் (Asian), 4. ஆசுத்திரேலியர் (Australian) 5. ஐரோப்பியர், 6. இந்தியர், 7. மெலனீசியர் (Melanesian), 8. மைக்ரோனீசியர் (Micronesian), 9. பாலினீசியர் (Polynesian). சில மானிடவியலார் ஆட்டண்டாட்டு (Hottentot), புசுமன் (Bushmen) ஆகியோரை ஆப்பிரிக்கர்களிலிருந்து பிரித்துத் தனிப் புவியமைப்புசார் இனமாகக் கணக்கிட்டுப் பத்துப் புவியமைப்புசார் இனங்கள் உண்டு என்பர்.
ஆப்பிரிக்கர்
இவர்களை நீக்கிரோவினர் (Negroid) எனக் குறிப்பிடுவர். இவர்கள் சகாராவின் தென் பகுதியிலிருந்து ஆப்பிரிக்கா முழுவதும் பரவியுள்ளனர். அமெரிக்கக் கறுப்பர்கள் பெரும்பான்மையோர் ஆப்பிரிக்கத் தோற்றத்தைக் கொண்டவர்கள். இவர்கள் அனைவரும் சுருண்ட அல்லது மிகச் சுருண்ட மயிரினையும் தடித்த உதடுகளையும், கருமையான தோல், மயிர், பல் ஈறு முதலானவற்றையும் கொண்டவர்கள்.
அமெரிக்க இந்தியர்
இவர்கள் அமர்இந்தியர் (Amerindian) அல்லது அமெரிக்க மங்கோலியர் எனவும் கூறப்படுவர்; ஆசிய மக்களோடு தொடர்புற்றவர்களாயினும் இரத்தக் குழுவில் மாற்றம் பெற்றவர்கள். தோலின் நிறம் இளம் பழுப்பு முதல் கருமையான பழுப்பு வரை காணப்படுகிறது. இவர்கள் கருமையான நேரான மயிரைக் கொண்டவர்கள். இவர்கள் தென்அமெரிக்காவிலும் வட அமெரிக்காவிலும் வாழ்கின்றனர்.
ஆசியர்
தெற்கு ஆசியா, மத்திய கிழக்குப் பகுதிகளைத் தவிர்த்துச் சப்பான் (Japan), தாய்லாந்து, பிலிப்பைன்சு, இந்தோனேசியத் தீவுகள் முதலானவற்றின் மக்களை ஆசியர் எனக் குறிப்பிடுவர். இவர்கள் இளம் பழுப்பு நிறத் தோலையும், இரப்பை அடிமடிப்பையும் (Epicanthic Fold), ஐரோப்பியர்களை விடக் சற்றுக் குறைவான உயரத்தையும் கொண்டவர்கள்.
ஆசுத்திரேலியர்
இவர்கள் ஆசுத்திரேலிய முதுகுடி (Australian Aborigine) என்றும், ஆசுத்திரேலிய இனத்தவர்கள் (Australoid) என்றும் கூறப்படுவர். இவ்வகையினர் ஆசுத்திரேலியாவின் வட்டார இனங்களின் குழுமமேயாகும். பெரிய பற்கள், குறுகிய மண்டையோடு, உடலில் மிதமான அளவில் மயிர், நடுத்தரமான தோல் நிறம் முதலான பண்புகளைப் பெற்றவர்கள் ஆசுத்திரேலியர்.
ஐரோப்பியர்
இவர்கள் காக்கேசியர் (Caucasoid) எனவும் கூறப்படுவர். ஐரோப்பா, மத்திய கிழக்கு, சகாராவின் வடக்குப் பகுதி முதலானவற்றின் மக்கள் இந்த வகையில் அடங்குவர். ஆசுத்திரேலிய, நியூசிலாந்து, வடக்கு, தெற்கு அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா முதலான நாடுகளிலுள்ள வெள்ளையர்களும் ஐரோப்பியப் புவியமைப்புசார் இனத்தைச் சேர்ந்தவர்களாவர். அனைத்துப் புவியமைப்புசார் இனங்களைக் காட்டிலும் மிதமான தோல் நிறம் கொண்டவர்கள்.
இந்தியர்
தெற்காசிய மக்களனைவரும் இந்த இனத்தில் அடங்குவர். தோலின் நிறம் மிதமானது முதல் கருமையான நிறம் வரை காணப்படுகிறது. வடபகுதியில் இளம்பழுப்பு நிறத்தையும் தென்பகுதியில் கரும்பழுப்பு நிறத்தையும் கொண்டவர்களாக உள்ளனர். இந்தியர்கள் ஐரோப்பியரோடு ‘B’ வகை இரத்தக் குழுவோடு பெரும்பான்மையாகக் கொண்டு ஒன்றுபடினும், வேறு சில இரத்தப் பண்புகளில் வேறுபடுகின்றனர்.
மெலனீசியர்
இவர்கள் மெலனீசிய – பப்புவர் (Melanesian – Papuan) எனவும் கூறப்படுவர். நியூ பிரிட்டன், நியூகினி, சாலமன் தீவுகள் முதலானவற்றில் வாழும் இவர்கள் கருமையான தோலினைக் கொண்டவர்கள். இவர்கள் ஆப்பிரிக்கர்களோடு தோலின் நிறத்தால் ஒன்றுபட்டாலும் இரத்தக் குழுக்களால் வேறுபடுகின்றனர்.
மைக்ரோனீசியர்
கரோலின் (Caroline), கில்பர்ட்டு (Gilbert), மரியனா (Mariana), மார்சல் (Marshall) தீவுகளில் உள்ளவர்கள் இந்த இனத்தவர்களாவர். இவர்கள் அலை அலையானது முதல் சுருட்டையானது வரையுடைய தலைமயிரைக் கொண்டவர்கள். இரத்த வகையில் பாலினீசியரைச் சில வகையில் ஒத்திருப்பினும், இவர் ‘B’ இரத்த வகையை மிகுதியாகப் பெற்றவர்கள்.
பாலினீசியர்
இவர்கள் பசிபிக்குக் கடலில் தூரப் பகுதிகளில் உள்ள தீவுகளில் குறிப்பாக வடக்கில் அவாய் (Hawaii) முதல் தெற்கில் நியூசிலாந்து வரையிலும், கிழக்கில் ஈசுடர்த் தீவு (Easter Island) முதல் மேற்கில் துவலுத் (Tuvalu) தீவு வரையிலும் உள்ள தீவுகளில் காணப்படுகின்றனர். இவர்கள் மிதமானது முதல் நடுத்தரமானது வரையிலான தோலின் நிறங் கொண்டவர்கள். பிற பசிபிக்குக் கடல் மக்களினத்தவர்களைப் போன்றே குறைந்த அளவிலான ‘B’ வகை இரத்தக் குழுவைப் பெற்றுள்ளனர்.
வட்டார இனங்கள்
புவியமைப்புசார் இனங்கள் அனைத்தும் பல வட்டார இனப்பெருக்க மக்கள் தொகைகளை (Local Breeding Population) உடையன. குறைந்த எண்ணிக்கையுள்ள மக்கள்தொகையுடைய ‘வட்டார இனங்கள்’ மொழியாலும் மரபுப் பண்பாலும் பண்பாட்டாலும் மிகுந்த ஒற்றுமையைப் பெற்றிருக்கும். வட்டார மக்கள்தொகை (Local Population) என்றும் கூறப்படும் வட்டார இனங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சார்ந்திருக்கும் பண்பினைக் கொண்டுள்ளதால், அவர்கள் பேசும் மொழியால் ஒன்றாகக் காணப்படுவர். அமெரிக்க இந்தியர்கள் எனப் பொதுவான பெயரைக் கொண்ட மக்கள் தொகையில் நூற்றுக்கும் மேற்பட்ட வட்டார இனங்கள் காணப்படுகின்றன. தொன்மை ஆசுத்திரேலிய இனத்தைச் (Proto–Australoid) சேர்ந்த பெரும்பான்மையான இந்திய மக்கள் தொகையிலும் நூற்றுக்கணக்கான வட்டார இனங்கள் காணப்படுகின்றன. தமிழகப் பகுதியில் வாழும் பழங்குடிகளுள் தோடர், படகர், இருளர், காடர் போன்ற மக்களனைவரும் ஒவ்வொரு வட்டார இனங்களாகவும், ஆந்திரப் பகுதியில் வாழும் செஞ்சுகள், எருகுளர், இலம்பாடி போன்றோர் ஒவ்வொருவரும் தனித்தனி வட்டார இனங்களாகவும் காணப்படுகின்றனர். வட்டார இனத்தைப் பற்றித் துல்லியமாக வரையறை செய்யும்பொழுது, ஒவ்வொரு பழங்குடியும் ஒவ்வொரு சாதிக்குழுவும் தனித்தனி வட்டார இனமென்றே கூறவேண்டும். இதைப்போன்றே இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் மொழி, பண்பாடு, மரபுப் பண்பு முதலானவற்றின் அடிப்படையில் பல வட்டார இனங்கள் காணப்படுகின்றன.
நுண்ணினங்கள்
வட்டார இனப்பெருக்க மக்கள் தொகையைக் கொண்ட மக்கள் குழுவே, வட்டார இனங்களாகும். நுண்ணினங்கள் என்பன நெருக்கமான தொடர்பினைப் பெற்ற தனித்த இனப்பெருக்க மக்கள் தொகை (Isolated Breeding population) ஆகும். சமூகம், சாதி, சமயம் முதலானவற்றின் அடிப்படையில் அமையப்பெறும் இனப்பெருக்கக் குழுவும் நுண்ணினமே. சமயம், சாதி முதலான சமூக அமைப்புகள் பல விலக்குகளையும் (Taboos) பல தடுப்புகளையும் விதித்து, நுண்ணினத்தின் தனித்தன்மையைக் காத்து நிற்கின்றன.
மனித குலத்தைப் பாகுபடுத்துவதில் தலையான அலகாகக் காணப்படுவது இனமே. மனித இனங்களை அடையாளங் காணவும், வகைப்படுத்தவும், மனித இனங்களின் தோற்றத்தினை ஆழ்ந்து அறியவும் இனங்களுக்கிடையில் காணப்படும் வேற்றுமைகள் மனிதச் செயற்பாடுகளில் கொண்டுள்ள தொடர்புகளை அறியவும் மனித இனங்களின் உயிரியல் பண்புகளைக் கண்டறிய வேண்டும். உடல்சார் மானிடவியலார் மனித இனங்களை வகைப்படுத்தியதில் பல கருத்துகளை ஏற்றுக் கொண்டுள்ளனர். இனத்தை வகைப்படுத்துவதில் பழைய அலகுகளாக நிறம், மயிர் வடிவம், மனித உடலளவு முதலியவற்றைக் கையாண்டனர். நெடுங் காலமாகவே புவியமைப்புசார் இனங்களும் வட்டார இனங்களும் கண், தோல், மயிர் முதலானவற்றின் நிறங்களை அடிப்படையாகக் கொண்டே பாகுபடுத்தப்பட்டன. வெள்ளை மனிதன், கறுப்பு மனிதன், மஞ்சள் மனிதன், சிவப்பு மனிதன், தோல் நிறம், மயிர் வடிவம், தலையமைப்பு முதலானவையும் பழைய அலகுகளாகும். இனங்களை வகைப்படுத்துவதில் புதிய அலகுகளாக இரத்தக் கூறுகளையும் (Blood Traits) பிற மரபுப் பண்புகளையும் பெரிதும் கையாளுகின்றனர். காண்க: இனவகைப்பாட்டின் அலகுகள்.
இனவகைகள்
மனித குலத்தை மரபுசார் பண்புகள் அடிப்படையிலும், பொதுவான உடலியற் பண்புகள் அடிப்படையிலும், பொதுவான சில வேறுபாட்டுப் பண்புகளின் (Variable Character) அடிப்படையிலும் பல இனங்களாக மானிடவியலார் வகைப்படுத்துவர். இனங்களை வகைப்படுத்துவதில் பல காலகட்டங்களில் மானிடவியலாரிடையே வேறுபட்ட பல கருத்துகள் காணப்பட்டாலும், அவர்கள் மனிதகுலத்தை நீக்ரோவினர் (Negroid), மங்கோலியர் (Mongoloid), காக்கேசியர் (Caucasoid) என்னும் மூன்று பெரும் இனக்குழுக்களாகப் பகுத்துள்ளனர். சில மானிடவியலார் ஆசுத்திரேலியர் (Australoid) என்ற நான்காவது இனத்தையும் சேர்ப்பர்.
ஒவ்வோரினமும் பல குழுக்களாகவும் உட்குழுக்களாகவும் பாகுபடுவதை அனைத்து மானிடவியலாரும் ஒப்புக் கொள்கின்றனர். இக்கால மானிடவியலாளர் நீக்ரோவினர், மங்கோலியர், காக்கேசியர் என்ற மூன்று இனங்களையே இனவகைப்பாட்டில் பெரிதும் கையாளுகின்றனர்.
மங்கோலியர்
காக்கேசியர்
தொடக்க கால மனித இடப்பெயர்ச்சி
புவியமைப்புசார் இனங்கள்
நீக்கிரோவினர்
இம்மக்களின் தோல் நிறம் கரும் பழுப்பு, கருப்பு நிறங்களில் அமையும், சில குழுக்களிடையே மஞ்சள் கலந்த பழுப்பு நிறமும் காணப்படும். மயிர் குட்டையாகவும் சுருள் சுருளாகவும், சிலரிடையே அடர்ந்து சுருட்டையாகவும் காணப்படும். இவர்களின் கண்கள் கரும்பழுப்பு, கருப்பு நிறங்களை உடையன. மூக்குப் பெரிதாகவும் தட்டையாகவுமிருக்கும். மூக்கடியும் (Nose Root) மூக்கு இணைப்பும் (Nose Bridge) தட்டையாகவும் பெரிதாகவுமிருக்கும்; முகநீட்சி (Facial Prognathism) குறிப்பிடும்படியாக இருக்கும். நீக்கிரோவினர் ஆப்பிரிக்க நீக்கிரோ (African Negro) என்றும் பசிபிக்குப் பெருங்கடல் பகுதியினர் (Oceanic) என்றும் பகுக்கப்படுகின்றனர்.
ஆப்பிரிக்க நீக்கிரோ
இக்குழுவினர், கலப்பற்ற நீக்கிரோவினர் (True Negros), நைல் ஆற்றுப் பகுதி நீக்கிரோவினர் (Nilotic Negros), பண்டு மொழி பேசும் நீக்கிரோவினர் அல்லது பண்டு (Bantu Speaking Negros or Bantu), புசுமன் ஆட்டண்டாட்டு (Bushmen Hutentot), நீக்கிரில்லோ (Ncgrillo) என ஐந்து உட்குழுக்களாகப் பகுக்கப்படுகின்றனர்.
கலப்பற்ற நீக்கிரோ
இவர்கள் கருமை அல்லது கரும்பழுப்பு நிறத் தோல், 173 செ.மீ. வரை உயரம், சுருட்டை மயிர், அகன்ற மூக்கு (Platyrrhine), நீண்டு குறுகிய தலை (Dolicocephalic), நீண்ட முகம், தடித்த உதடுகள், குட்டையான கால்கள் நீண்டகைகள் உடையோர். இந்நீக்கிரோக்கள் மேற்கு ஆப்பிரிக்காவிலும் கினி கரையிலும் (Guinea Coast) வாழ்கின்றனர். செனகல் ஆறு முதல் சூடான் வரையிலும், உகாண்டா, சாம்பியா முதலான பகுதிகளிலுள்ள அடர்ந்த காடுகளிலும் வாழும் நீக்கிரோக்கள் கலப்பற்ற நீக்கிரோக்களை விட உயரம் குறைந்து காணப்படுகின்றனர். இவர்களின் சராசரி உயரம் 165 செ.மீ. இவர்கள் உடலமைப்பில் பொதுவான அமைப்புகளைப் பெற்றிருப்பினும் மூக்குப் பெரியதாகவும் முக எலும்பு நீட்சி பெற்றதாகவும் காணப்படுகின்றனர்.
நைல் ஆற்றுப் பகுதி நீக்கிரோ
இவர்கள் மிகக் கருமையான தோல், 178 செ.மீ. வரை உயரம், நீண்ட கால்கள், நீண்டு குறுகிய தலை, அகன்ற மூக்கு, குறைந்த நீட்சியுடைய முகம், தடிப்பற்ற உதடுகள் பெற்றுள்ளனர். இப்பண்புகள் கலப்பற்ற, நீக்கிரோக்களின் பண்புகளிலிருந்து மாறுபட்டவை. நைல் ஆற்றுப் பகுதியில் வாழும் நீக்கிரோக்களுள் சில்லூக்கு (Shilluk), தின்கா (Dinka), கவிரோண்டோ (Kavirondo), அமிட்டிக்கு (Hamitic) அல்லது எத்தியோப்பியருள் ஒரு பிரிவினர் முதலானோர் அடங்குவர். இவர்கள் நைல் பள்ளத்தாக்கின் மேற்பகுதியிலும் கிழக்குச் சூடானிலும் வாழ்கின்றனர்.
நீக்கிரோவினர்
பண்டு மொழி பேசும் நீக்கிரோ
இவர்கள் தென் ஆப்பிரிக்கா, நடு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் பண்டு மொழி பேசும் மக்கள். இக்குழுவில் பல மாறுபட்ட பண்பு கொண்ட மக்கள் தொகுதியினர் காணப்படுகின்றனர். இவர்களின் தோல் மஞ்சள் கலந்த பழுப்பு, கருப்பு நிறங்களை உடையது. பெரும்பான்மையோர் கரும்பழுப்பு நிறத்தவர். நீக்கிரோக்கள் பண்பினைக் கொண்ட தலைமுடியையும் 167 செ.மீ. வரையிலான உயரத்தையும் நீண்டு குறுகிய தலையையும் இவர்கள் கொண்டிருக்கின்றனர். சிலர் நடுத்தரத் தலை (Mesocephalic) அமைப்பையும் கொண்டுள்ளனர். நடுத்தரத்தலை அமைப்பைக் கொண்டவர்கள் குறைந்த உயரமானவர்கள். மிகுதியான; கருப்பில்லாத தோலினையும் தட்டையான முன் நெற்றியையும் தாடை நீட்சி குறைந்த முகத்தினையும் உடையவர்கள். பண்டு மொழி பேசும் இவர்கள் நீக்கிரோ இனத்தவராயினும் அமிட்டிக்கு, நீக்கிரில்லோ, புசுமன் – ஆட்டண்டாட்டு முதலான இனத்தவர்களுடன் கலப்புற்றுக் காணப்படுகின்றனர்.
புசுமன் – ஆட்டண்டாட்டு
உடல் தோற்ற அமைப்பில் புசுமன் (Bushmen), ஆட்டண்டாட்டு (Hottentot) ஆகிய இரு இனத்தவருமே ஏறத்தாழ ஒத்த பண்பினைக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பண்பாட்டால் இருவரும் வேறுபடுகின்றனர். ஆட்டண்டாட்டு இனத்தவர் கொய்–கொய் (Khoi-Khoi) என்றும் புசுமன் இனத்தவர்கள் குவய் அல்லது சான் (San) என்றும் குறிக்கப்படுவர். புசுமன் இனத்தவர் முன்பு தென்னாப்பிரிக்காவின் பெரும் பரப்புகளில் காணப்படினும், இக்காலத்தில் கலகாரி (Kalahari) பாலைவனப் பகுதிகளில் மட்டுமே வாழ்கின்றனர். ஆட்டண்டாட்டு இனத்தவர் தென்மேற்கு ஆப்பிரிக்காவில் வாழ்கின்றனர்.
புசுமன்–ஆட்டண்டாட்டு இனத்தவர்களின் புறப் பண்புகள் மிகுதியாக ஒத்த பண்புகளாகவே காணப்படுகின்றன. இவர்களின் தலை மயிர் சுருண்டு கருத்திருக்கும். உடலில் குறைந்த அளவு மயிர் உளது. ஒருசில குழுக்களில் உடலின்மேல் மயிர் காணப்படாது. புசுமன் தோலின் நிறம் வெளிர்பழுப்பு முதல் பழுப்பு மஞ்சள் வரையிலும் உள்ளது. ஆட்டண்டாட்டுத் தோலின் நிறம் சிவப்புக் கலந்த மஞ்சளாகும். இருவருக்குமே கண் நிறம் கரும்பழுப்பு ஆகும். ஆட்டண்டாட்டு இனத்தவர் 160 செ.மீ. வரை உடலுயரத்தையும், புசுமன் இனத்தவர் 145 செ.மீ. வரை உடலுயரத்தையும் கொண்டுள்ளனர். ஆட்டண்டாட்டு, புசுமன் ஆகியோரின் தலை நீண்டு குறுகியும், முகம் நீண்டு முக்கோண வடிவமாகவும், தாடை குறைந்த நீட்சியுடையதாகவும், எடுப்பாகவும் மோவாய் சிறியதாகவும், முன்நெற்றி குமிழ் வடிவமானதாகவும் மூக்கு தட்டையாகத் தாழ்ந்து அகன்று நுனி தடித்துக் குழிந்த உருவுடையதாகவும் உள்ளன. புசுமன் பெண்களின் மெலிந்த பிட்டத்தைப் போலல்லாது. ஆட்டண்டாட்டுப் பெண்களின் பிட்டம் மிகுந்து புடைத்துக் காணப்படுகிறது.
நீக்கிரில்லோ (ஆப்பிரிக்கக் குள்ளர்)
இவர்கள் 136 செ.மீ. உயரமுடையோர்; குறைந்த உடலுயரத்தினர்; குறுகிய கால்களும் நீண்ட கைகளும் நடுத்தரமான தலையும் தாடை நீண்டமுகமும் பெற்றுள்ளனர்; குறுகியதும் மெலிந்ததுமான கன்னமும் அகன்ற தட்டையான மூக்கும் இவர்கள் உடையவர்; இவர்களின் தலை மயிர் கரும்பழுப்பு நிறத்தில் மிகக் குட்டையாகவும் சுருட்டையாகவும் இருக்கும்; உடல் மயிர் மஞ்சள் நிறமுடையது.
நீக்கிரில்லோ மக்களில் அக்கா (Akka), பா திவா (Ba Twa), பா இம்புத்தி (Ba Mbuti) முதலான குழுவினர் அடங்குவர். இவர்கள் அனைவரும் காங்கோப் பகுதியில் உள்ள நிலநடுக்கோட்டுக் காட்டுப் பகுதி வாழ்கின்றனர். குள்ளர்கள், நில நடுக் கோட்டுப்பகுதியிலுள்ள ஆப்பிரிக்கா (காங்கோப் பகுதி), மலாய் முந்நீரகம் (Malay Peninsula), சுமித்திரா, அந்தமான் தீவுகள், பிலிப்பைன்சு, நியூகினி முதலான பகுதிகளிலும் காணப்படுகின்றனர். இக்குள்ளர்கள் அனைவரையும் ஆப்பிரிக்கக் குள்ளர்கள் (நீக்கிரில்லோ), பசிபிக்குப் பெருங்கடற் பகுதிக் குள்ளர்கள், ஆசியக் குள்ளர்கள் என்று வகைப்படுத்தலாம். பசிபிக்குப் பெருங்கடற் பகுதிக் குள்ளர்களும் ஆசியக் குள்ளர்களும் நீக்குரிட்டோ (Negrito) ஆவர்.
பசிபிக்குப் பகுதி நீக்கிரோ
நீக்கிரோ இனத்தின் ஒரு துணைப் பிரிவாகிய பசிபிக்குப் பகுதி நீக்கிரோ (Oceanic Negro) இனக்குழுவில் ஆசியப் பசிபிக்குப் பகுதிகளில் வாழும் நீக்கிரிட்டோவும் மெலனீசியரும் பப்புவரும் அடங்குவர்.
நீக்கிரிட்டோ
குழுவில் அந்தமானியர், சீமாங்கு (Semang), அயிட்டா (Aeta), தப்பிரோ (Tapiro) முதலானோர் முதன்மையானவர்கள். இவர்களுள் அந்தமானியர், சீமாங்கு, அயிட்டா ஆகியோர் ஆசியக் குள்ளர்கள், தப்பிரோ பசிபிக்குப் பகுதிக் குள்ளர்கள்.
அந்தமானியர்
குறைந்த உயரமுடையோர். இவர்களின் சராசரி உயரம் 148 செ.மீ. இவர்கள் குறுகி அகன்ற தலையமைப்பு, நேரான மூக்கு, அகன்ற கன்னங்களையுடைய முகம், வெண்கல நிறம் முதல் புகைக்கரி கருப்பு நிறம் வரையிலான நிறமுடைய தோல், வெளிர்சிவப்புக் கலந்த கருநிறத் தலைமயிர் முதலான உடற்பண்புகளைப் பெற்றுள்ளனர். இவர்கள் உடல் பரவலான மயிருடனோ மயிரற்றோ காணப்படுகிறது.
சீமாங்கு
இனத்தவர் சராசரியாக 152 செ.மீ. வரையிலான உயரத்தைப் பெற்றுள்ளனர். நல்ல உடற்கட்டுடன் காணப்படும் இவர்களது தலை நடுத்தரமாகவும், முகம் வட்டமாகவும், மூக்கு அகன்று தட்டையாகவும், தோல் கரும்பழுப்பு நிறமாகவும், தலை மயிர் சுருண்டு குட்டையானதாகவும் காணப்படுகின்றன. இவர்கள் கிழக்குச் சுமத்திராவிலும் மலாய் முந்நீரகத்தின் மையப் பகுதியிலும் வாழ்கின்றனர்.
அயிட்டா
இனத்தவர்கள் சராசரி 146 செ.மீ. உயரமும் குறுகி அகன்ற (Brachycephalic) தலையமைப்பும் உடையவர்கள். இவர்தம் மூக்கு தட்டையாகிச் குறுகி அகன்றது; உதடுகள் நடுத்தரமாகத் தடித்துக் காணப்படும்; தோல் புகைக்கரி கருப்பு நிறமுடையது; தலைமயிர் கருத்தும் சுருண்டும் உள்ளது; உடலின்மீது அடர்ந்த மயிர் உள்ளது. இவர்கள் பிலிப்பைன்சுத் தீவுகளில் வாழ்கின்றனர். தப்பிரோ இனத்தவர் சராசரியாக 146 செ.மீ. உயரமுடையோர். சதைப்பற்றுள்ள இவர்கள் தலை நடுத்தரமானது; மேலுதடு ஆழ்ந்து குவிந்திருக்கும்; தலைமயிர் சுருண்டு குறுகிக் கருமையானது; முகம், உடல் ஆகிய இடங்களில் மயிர் நிறைந்திருக்கும்; தோல் மஞ்சள் கலந்த பழுப்புநிறமாகும். இவர்கள் நியூகினி தீவுகளில் வாழ்கின்றனர்.
பாப்புவ
இனத்தவர் நியூகினி, மெலனீசியா ஆகிய தீவுகளில் வாழ்கின்றனர். சராசரியாக 168 செ.மீ. உயரமுள்ள இவர்களது தலையமைப்பு நீண்டு குறுகியது. இவர்களின் கண் குழி விளிம்பு (Brow Ridge) தொடர்ச்சியாகவும் தடித்துமிருக்கும். இத்தகைய உடல் அமைப்பு தொன்மைக் கால மனிதனிடம் காணப் பெறுவதாகும். இவர்கள் அழுந்திய வேர், குவிந்த உருவம், தடித்த நுனி ஆகிய பண்புகளையுடைய மூக்கு, சுருட்டையான கரு மயிர், கரும்பழுப்பு நிறத்தோல், முகத்திலும் உடலிலும் அடர்ந்த மயிர், கரும்பழுப்பு முதல் சிவந்த பழுப்பு நிறம் வரையிலான மயிர் ஆகிய பண்புகளைப் பெற்றுள்ளனர்.
மெலனீசிய
இனத்தவர்கள் குள்ளமான உயரம் முதல் நடுத்தர உயரம் வரையில் காணப்படுகின்றனர். இயர்களிடையே நீண்டு குறுகிய தலையமைப்புப் பொதுவாகக் காணப்படினும், நடுத்தரத் தலையமைப்பும் குறுகி அகன்ற தலையமைப்பும் காணப்படுகிறது. இவர்தம் முன் நெற்றி வட்டமானதாகவும் மூக்கு அகன்றதாகவும் உள்ளன; மயிர் பெரும்பாலும் சுருட்டையானதாகவும் ஒரு சில குழுக்களிடையே வளைவமைப்பு உடையதாகவும் சுருள்சுருளாகவும் தோலின் நிறம் கரும்பழுப்பு, செம்பழுப்பு, கருமையாகவும் காணப்படுகின்றன. இவர்கள் நியூகினி தீவின் கடலோரப் பகுதிகளிலும் பிசி (Fiji), அட்மிரால்டி தீவு (Admirality Island), நியூகலிடோனியா (New Caledonia) தீவு ஆகியவற்றிலும் அதன் அண்டைய பகுதிகளிலும் வாழ்கின்றனர்.
மங்கோலிய
இனத்தவர்களின் தோல் மஞ்சள் முதல் பழுப்புக் கலந்த மஞ்சன் வரை நிறமுடையது. சில குழுக்களிடையே அது வெளிர் மஞ்சளாகவும் உள்ளது. மங்கோலியர்களின் தலைமயிர் கருப்பாகவும், நேராகவும், சொறசொறப்பாகவும் இருக்கும்; உடலிலும் முகத்திலும் மயிர் குறைந்த அளவே இருக்கும். எடுப்பான கன்ன எலும்புகளைக் கொண்டு. இவர்கள் முகம் தட்டையாகி அகன்றிருக்கும். இவர்கள் கண் சாய்வானது; கண்ணில் உட்புற இரப்பை அடிமடிப்பு (Inner Epicanthus) என்னும் தசை வளர்ச்சி அல்லது மங்கோலிய மடிப்பு (Mongoloid Fold) என்னும் தசையுடன் காணப்படும்.
மங்கோலியர்களைத் தொன்மை அல்லது மைய மங்கோலியர்கள் (Classic or Central Mongoloids), வடதுருவ அல்லது வடபகுதி மங்கோலியர் அல்லது எசுகிமோவினர் (Arctic or Northern Mongoloids or Eskimoids), தெற்கத்திய அல்லது இந்தோனேசிய–மலாய் மங்கோலியர்கள் (Southern or Indonesian Malayan Moagoloids), அமெரிக்க இந்தியர்கள் (American Indians) என நான்கு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
தொன்மை அல்லது மைய மங்கோலியர்கள்
சைபீரியா, வடசீனா, மங்கோலியா, திபேத்து முதலான பகுதிகளில் வாழ்கின்றனர். மங்கோலிய இனப் பழங்குடிகளுள் ஒருசிலர் பூரியாத்து (Buriat), கொன்யக்கு நாகர், கோல்டி (Goldi), கில்யக்கு (Gilyak) முதலானோராவர், திபேத்து நாட்டவரும் வடசீன மக்களும் இக்குழுவில் அடங்குவர். இவர்களில் தலை குறுகி அகன்றது. நடுத்தரத் தலையமைப்பும், நீண்டு குறுகிய தலையமைப்பும் இவர்களிடையே பரவலாகக் காணப்படுகிறது. இவர்தம் முன்நெற்றி வட்டமானதும் நடுத்தர உயரமானதுமாகும். அமுந்திய அடியைக் கொண்ட இவர்களது மூக்கு நேராகவோ குழிந்தோ காணப்படுகிறது. இவர்களின் கன்ன எலும்பு நன்கு வளர்ந்து காணப்படுகிறது; தோலின் நிறம் மஞ்சள் முதல் பழுப்பு மஞ்சள் வரை இருக்கும்; தலைமயிர் கருப்பாகவும் நேராகவும் சொறசொறப்பாகவும் உள்ளது; உடலிலும் முகத்திலும் மயிர் குறைந்து காணப்படுகிறது. இவர்கள் மங்கலாயிடு மடிப்புள்ள கண்களைக் கொண்டிருக்கின்றனர்.
வடதுருவ மங்கோலியர் அல்லது எசுகிமோவினர்
நேரான கருத்த தலைமயிர், மஞ்சள் நிறத் தோல், எடுப்பான கன்ன எலும்புகள், அகன்று தட்டையான முகம், குறுகிய மூக்கு, குறுகிய கைகள் மற்றும் பாதங்கள், நீண்ட உடல், குறுகிய கால்கள், நேரான கண்கள் ஆகியவற்றையும் மங்கோலிய மடிப்புகளை மிகக் குறைந்த அளவிலும் பெற்றுள்ளனர்.
இப்பிரிவினர் வடஆசியா, வடஅமெரிக்கா, ஆர்க்டிக்குக் கரைப் பகுதி, கிரீன்லாந்து, இலாப்ரடார், மேற்கு அலாசுகா (Western Alaska) முதலான பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்களுள் முதன்மையானவர்கள் எசுகிமோ, சுக்சி (Chukchi), காம்சடேல்சு (Kamtchadales), யாக்குட்சு (Yakuts) ஆகியோர். மேற்கத்திய எசுகிமோக்கள் சராசரி 168 செ.மீ. உயரத்துடனும் அலாசுகா எசுகிமோக்கள் சராசரி 168.8 செ.மீ. உயரத்துடனும் காணப்படுகின்றனர்.
இந்தோனேசிய–மலாய் மங்கோலியர்கள்
இவ்வகையிலடங்கும் பெரும்பாலான தெற்காசிய மங்கோலியர்கள் காக்கேசிய இனக் கூறுகளையும் நீக்கிரோ இனக் கூறுகளையும் கொண்டுள்ளனர். இதனால், இவ்வகையினரை மானிடவியலார் மலாய் வகையினர் என்றும் இந்தோனேசிய வகையினர் என்னும் பாகுபடுத்துகின்றனர்.
மலாய்
வகையினர் சராசரி 158 செ.மீ. உயரம், குறுகி அகன்ற தலை, நடுத்தர அல்லது அகன்ற மூக்கு, நேரான, கருத்த தலை மயிர், முகத்திலும் உடலிலும் குறைந்த மயிர், பழுப்பு மஞ்சள் முதல் கரும் மஞ்சள் நிறம் வரையிலான தோல், உட்புற இரப்பை அடிமடிப்பு, அகன்ற எடுப்பான கன்ன எலும்புகள் ஆகியவற்றைப் பெற்றுள்ளனர். இவர்கள் தென்சீனா, இந்தோசீனா, பர்மா, தாய்லாந்து, மலாய் முந்நீரகம், தச்சு கிழக்கிந்தியத் தீவுகள், பிலிப்பைன்சு, சப்பான் (Japan) முதலான பகுதிகளில் காணப்படுகின்றனர்.
இந்தோனேசிய வகையினர்
மெலிந்தும் உயரம் குறைந்தும் காணப்படுகின்றனர். சராசரி 155 செ.மீ. உயரமுள்ள இவர்கள் நீண்டு குறுகிய தலையும் குறுகிய அகலத்துடன் நீண்டு உயர்ந்த மூக்கும் பெற்றுள்ளனர். சிலரிடம் மட்டும் உட்புற இரப்பை அடிமடிப்புக் காணப்படுகிறது. இவர்களின் தலைமயிர் கருப்பாகவும் மங்கலாகவும் காணப்படுகிறது. தோலின் நிறம் மங்கலான செம்பழுப்பு முதல் நடுத்தரமான பழுப்பு வரையிலிருக்கும். இவ்வகையினர் தென்சீனா, இந்தோ–சீனா, பர்மா, தாய்லாந்து, மலாய் தீவுக்கூட்டங்களின் உட்பகுதி முதலான பகுதிகளில் காணப்படுகின்றனர்.
அமெரிக்க இந்தியர்
இம்மக்களுள் மிகப் பெரும்பான்மையோர் மங்கோலிய இனத்தவர்; இருப்பினும், மிகக் குறைந்த அளவில் மங்கோலியரல்லாத இனக்கூறுகள் கலந்துவிட்டன. காக்கேசிய, ஆசுத்திரேலிய இனக்கூறுகள் குறைந்த அளவிலும் நீக்கிரில்லோக்கள் (Negrilloid) இனக்கூறுகள் மிகக் குறைந்த அளவிலும் கலப்புற்றுள்ளன.
அமெரிக்க இந்தியர்கள் பெரும்பான்மையோர் மஞ்சள் கலந்த பழுப்பு முதல் செம்பழுப்பு நிறம் வரையில் காணப்படுகின்றனர். ஒருசில குழுக்களில் செம்பழுப்பு நிறமான தலைமயிர் காணப்படினும், பெரும்பான்மையோர் கரியமயிரைக் கொண்டுள்ளனர். கரும்பழுப்பு நிறம் முதல் கருமை நிறம் வரை உடைய இவர்களின் கண்களில் மங்கோலிய மடிப்புக் காணப்படவில்லை. இருப்பினும், புற இரப்பைக் கண்மடிப்புப் பொதுவாக அனைவரிடமும் காணப்படுகிறது. மங்கோலியர்கள் பொதுப் பண்பாகிய அகன்ற முகத்துடன் கூடிய கன்ன எலும்புகள் மஞ்சள் கலந்த நிற அமெரிக்க இந்தியர்களிடையேயும் காணப்படுகிறது. நீண்டு குறுகிய நடுத்தரத் தலையமைப்பும் (Dolico–mesocephalic) குறுகி அகன்ற தலையமைப்பும் இவர்களிடையே காணப்படுகின்றன.
அமெரிக்க இந்தியர்களைத் தொல் அமெரிக்க இந்தியர் (Palaeo–Amerind), வடபகுதி அமெரிக்க இந்தியர் (Northern Amerind), புது அமெரிக்க இந்தியர் (Neo–Amerind), தெகுவல்சீ (Tehuelche), வடமேற்குக் கடற்கரை அமெரிக்க இந்தியர் (West Coast Amerind) என்னும் ஐந்து வகையினராகப் பகுப்பர்.
தொல் அமெரிக்க இந்தியர்கள்
தென் அமெரிக்காவின் தொன்மையான இனத்தவர்கள்; சிறிய மண்டையோட்டைக் கொண்டவர்கள். இன்று வாழும் இவ்வினத்தவர்களுள் பொட்டோகுடோ (Botocudo), புரூ (Buru) முதலியோர் முதன்மையானவர்கள். இவர்கள் கிழக்கு ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் அமெரிக்காவின் பிற பகுதிகளிலும் பரவலாக வாழ்கின்றனர்.
வட அமெரிக்க இந்தியர்கள் 168–175
செ.மீ. உயரமுள்ளவர்கள்; நீண்டு குறுகிய தலையமைப்பு அல்லது நடுத்தரத் தலையமைப்பு உள்ளவர்கள். மேற்குப் பகுதியில் உள்ளவர்கள் குறுகி அகன்ற தலையமைப்பைக் கொண்டுள்ளனர்; மஞ்சள் கலந்த பழுப்பு நிறத் தோலையும், நீண்ட கருமையான தலை மயிரையும் தட்டையான நீள்வட்ட முகத்தையும் குவிந்த அல்லது நேரான மூக்கையும் கொண்ட பண்புடையோர்.
புது அமெரிக்க இந்தியர்கள் 155–178
செ.மீ. உயரத்தையும் குறுகி அகன்ற தலையையும் நேரான அல்லது குழிந்த மூக்கையும் அகன்ற முகத்தையும் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத் தோலையும் கொண்டவர்கள். இவ்வகையினர் தென் அமெரிக்கா, நடு அமெரிக்கா, வட அமெரிக்கப் பீடபூமி முதலான பகுதிகளில் வாழ்கின்றனர்.
தெகுவல்சீ
மக்கள் உயரமானவர்கள். இவர்கள் உயரம் 173–183 செ.மீ. வரை உள்ளது. இவர்கள் தலை குறுகி அகன்றது. சதுரமான அகன்ற முகம், பழுப்பு நிறத்தோல், நேரான கருத்த தலைமயிர் முதலியன இவர்களின் பிற உடற் பண்புகள், திவாரா டெல் பியூகோ (Tierra del Fuego) பகுதியிலுள்ள ஓனாசு (Onas) மக்கள் இக்குழுவில் அடங்குவர்.
வட அமெரிக்கக் கடற்கரை அமெரிக்க இந்தியர்கள்
ஏனைய அமெரிக்க இந்தியர்களைவிட மங்கலான நிறமுடைய தலைமயிரையும் தோலையும் கொண்டுள்ளனர். நடுத்தரமான உயரமுடைய இவர்கள் குறுகிய உடலையும் நீண்ட கைகளையும் உடையவர்கள். இவர்கள் வடபகுதியினர், தென்பகுதியினர் எனப் பகுக்கப்படுவர். வடபகுதியினர் தென் பகுதியினரை விட உயரமானவர்கள்.
காக்கேசியர்
இவ்வினத்தில் மிகுந்த எண்ணிக்கையிலான இனக்குழுக்கள் பல் வேறுபட்ட பண்புகளுடனும் மிகவும் விரிவடைந்த இனக்கூறுகளுடனும் காணப்படுகின்றன. காக்கேசிய இனத்தவர்களை நடுநிலக்கடல் இனத்தவர் (Mediterranean), நார்டிக்கு (Nordic), ஆல்பைன் (Alpine), கிழக்குப் பால்டிக்கு (East Baltic), தைனாரிக்கு (Dinaric), ஆர்மீனியர் (Armenoid), கெல்டிக்கு (Keltic), இலாப்பியர் (Lapps), இந்திய–திராவிடர் (Indo–Dravidian), பாலினீசியர் (Polynesian), அய்னு (Ainu) போன்ற இனக்குழுக்களாக உடல்சார் மானிடவியலார் பாகுபடுத்தியுள்ளனர்.
நடுநிலக்கடல் இனத்தவர்
தொன்மைக் காலத்தில் நடுநிலக்கடல் பகுதியைச் சார்ந்த இடங்களில் வாழ்ந்தமையால் இப்பெயரைப் பெற்றனர். இன்று போர்ச்சுகல், இசுபெயின் (Spain), பிரான்சு, இத்தாலி, துருக்கி, வடஆப்பிரிக்கா, அரேபியா, ஈரான், ஆப்கானிசுத்தான், பாகிசுத்தான், இந்தியா முதலான பல நாடுகளிலும் வாழ்கின்றனர். நடுநிலக்கடல் இனத்தவர் அனைவரும் ஒத்த பல பண்புகளைப் பெற்றிருப்பினும், நடுநிலக்கடல் தொன்மை இனத்தவர் (Classic Mediterranean), அட்லாண்டிய நடுநிலக்கடல் இனத்தவர் (Atlantic–Mediterranean), இந்திய – ஆப்கானிய நடுநிலக்கடல் இனத்தவர் (Indo–Afghan Mediterranean) என மூன்று வகைப்படுவர்.
நடுநிலக்கடல் தொன்மை இனத்தவர்கள்
வெளிர் பழுப்பு நிறம் முதல் வெண்பழுப்பு நிறம் வரையில் காணப்படுகின்றனர். கரிய மயிர் இவர்களிடையே அலை அலையாகவும் சிலரிடையே சுருண்டும் காணப்படுகிறது. இவர்கள் தலை நீண்டு குறுகி நடுத்தரமாக உள்ளது; மூக்கு குறுகியது; முகம் குறுகி நீள் வட்டமாகக் காணப்படுகிறது. இவ்வினத்தவர்கள் போர்ச்சுகல், இசுபெயின், பிரான்சு, இத்தாலி செருமனி, நடுதிலக்கடல் தாழ்நிலப்பகுதி ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர். வட ஆப்பிரிக்காவில் வாழும் எகிப்தியகும் மொரோக்கோ (Morocco), அரேபியா ஆகிய நாடுகளில் வாழும் பெர்பர் இனத்தவர்களும் இப்பிரிவில் அடங்குவர்.
அட்லாண்டிய நடுநிலக்கடல் இனத்தவர்கள்
கரிய தோலையும், கரிய அலை அலையான அல்லது சுருண்ட மயிரையும், நீண்டு குறுகிய அல்லது நடுத்தரத் தலையையும், நீண்ட முகத்தையும் பெற்றுள்ளனர். இவ்வகையினர் வட ஆப்பிரிக்கா, ஈராக்கு, பாலசுத்தீனம் போன்ற நாடுகளிலும் அரேபியா, இசுபெயின், போர்ச்சுகல் போன்ற நாடுகளில் சில பகுதிகளிலும் வாழ்கின்றனர்.
இந்திய–ஆப்கானிய நடுநிலக்கடல் இனத்தவர்
வெளிப்பு நிறத் தோலையும் அந்நிறத்தலை மயிரையும் உடல், முகம் ஆகிய இடங்களில் அடர்ந்த மயிரையும் குறுகிய மூக்கையும் கரிய கண்களையும் 161–178 செ.மீ. உடல் உயரத்தையும் கொண்டுள்ளனர். ஈராக்கு, ஈரான், ஆப்கானிசுத்தான், பலுச்சிசுத்தான், பாகிசுத்தான் ஆகிய நாடுகளிலும் வடமேற்கு இந்தியாலிலும் காணப்படுகின்றனர்.
நார்டிக்குகள்
சிவப்புக் கலந்த வெண்மை நிறத்தோலினர். இவர்கள் தலைமயிர் வளைவுடையது; மயிர் செம்பழுப்பு முதல் வெளிர் பழுப்பு, சாம்பல் பழுப்பு, மஞ்சள் பழுப்பு வரையில் காணப்படுகிறது. தலை நடுத்தரமானது; முகம் நீண்டு வலுவான எலும்புகளையுடையது; உதடுகள் நடுத்தரமானவை அல்லது மெலிந்தவை; கண் நீலம் அல்லது சாம்பல் நிறம் உடையது. இவர்கள் சராசரி 172 செ.மீ. உயரமுடையோர். இசுகாண்டிநேவியர்கள் (Scandi–navians) நார்டிக்கு இனத்தின் உருமாதிரிகளாவர். பால்டிக்குப் பகுதி, வட செருமனி, வடபிரான்சு, பிரிட்டிசுத் தீவுகள், நெதர்லாந்து, பெல்சியம் ஆகிய நாடுகளில் சில பகுதிகளிலும் இவர்கள் வாழ்கின்றனர். ஐக்கிய அமெரிக்காவிலும் ஆங்கிலேயக் குடியேற்ற நாடுகளிலும் இவர்கள் முதன்மையாகக் காணப்படுகின்றனர். ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் இவர்கள் பரவலாக உள்ளனர்.
ஆல்பைன் இனத்தவர்கள்
மஞ்சள் கலந்த பச்சை, மாநிற வெண்மை அல்லது வெண்கல நிறத்தோல் உடையவர்கள். தலைமயிர் நடுத்தரப் பழுப்பு அல்லது கரும் பழுப்பு நிறத்தில் நடுத்தரமான அல்லது மென்மையான வளைவுகள் உடையது; தலை குறுகி அகன்றது; மூக்கு குறுகியோ நடுத்தரமாகவோ இருக்கும்; நேராகவும் கரும் பழுப்பு அல்லது நடுத்தரப் பழுப்பு நிறமுடையதாகவும் கண்கள் உள்ளன. இவர்கள் சராசரி 165 செ.மீ. உயரம் பெற்றிருப்பர்.
ஆல்பைன் இனத்தவர்கள் நடு ஐரோப்பாவிலும் பிரான்சிலிருந்து ஊரல் (Ural) மலைத்தொடர் வரையிலும் பெரும்பான்மையாகக் காணப்படுகின்றனர். இவர்கள் பால்கன், தென்மார்க்கு (Denmark) வட இத்தாலி ஆகிய நாடுகளிலும் துருக்கி மலைத் தொடர்ப் பகுதியிலும் வாழ்கின்றனர். இவ்வினத்தவர்கள் ஐரோப்பாக் கண்டம் முழுவதிலும் மிகப் பரவலாக வாழ்கின்றனர்.
கிழக்குப் பால்டிக்கு இனத்தவர்கள்
பழுப்புக் கலந்த வெண்மை அல்லது இளமஞ்சள் வெண்மையான தோல் உடையர். இவர்களின் தலை நடுத்தரமானது; முன் மண்டை அகன்று உயரமாக இருக்கும்; பின் மண்டை தட்டையானது; கன்ன எலும்புகள் எடுப்பானவை; மூக்கு நடுத்தரமானது; கண்கள் இளநீலம் அல்லது சாம்பல் நிறமானவை. குட்டை உயரம் முதல் நடுத்தர உயரம் வரையில் உள்ளனர். இவர்கள் மிகுந்த எண்ணிக்கையில் வட கிழக்குச் செருமனி போலந்து, பால்டிக்கு (Baltic), உருசியா (Russia), பின்லாந்து ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர்.
தைனாரிக்கு இனத்தவர்கள்
மாநிறமானவர்கள், மயிர் வளைவாகவும் சுருளாகவும் இருக்கும். இவர்களின் தலை குறுகி, அகன்று உயர்ந்து காணப்படுகிறது. பின்மண்டை தட்டையானது; முன் மண்டை சாய்வானது; மூக்கு குறுகியது; முகம் குறுகி நீண்டது. இவ்வினத்தவர்கள் சராசரி 172 செ.மீ. உயரம் உடையவர்கள். இவர்கள் மிகுதியாக யூகோசுலேவியா, அல்பேனியா ஆகிய நாடுகளிலும் ஆசுத்திரிய தைரால் (Austrian Tyrol) மலைத்தொடர்ப் பகுதியிலும் காணப்படுகின்றனர்.
ஆர்மீனீய இனத்தவர்கள்
மஞ்சள் கலந்த பச்சை முதல் இளமஞ்சள் வெண்மை நிறம் வரையிலான நிறமுடையவர்கள். இவர்களுக்குக் கரும்பழுப்பு முதல் கருமை வரையிலான தலைமயிர் வளைவாகவும் சுருள்சுருளாகவும் இருக்கிறது. இவர்களின் தலை குறுகி அகன்றது; மூக்கு குறுகியது; முகம் குறுகி நீண்டது. இவ்வினத்தவர்கள் சராசரி 167 செ.மீ. உயரமுள்ளவர்கள். இவர்கள் துருக்கி, சிரியா, பாலசுத்தீனம் போன்ற நாடுகளில் மிகுதியாக வாழ்கின்றனர். இந்த இனத்தவர்கள் தொன்மை நடுநிலக்கடல் இனத்தவர்களின் பண்பையும்; ஆல்பைன், இந்திய ஆப்கானிய இனப்பண்பையும் கொண்டுள்ளனர்.
கெல்டிக்கு இனத்தவர்கள்
வெளிரிய வெண்மைத் தோல் உடையோர். இவர்களின் மயிர் நடுத்தரம் முதல் கரும்பழுப்பு வரையிலோ சிவப்பாகவோ இருக்கும்; மயிர் அமைப்பு வளைந்தோ சுருண்டோ இருக்கும்; தலை நடுத்தரமானது; மூக்கு குறுகி நீண்டுயர்ந்தது; மூக்கின் வடிவம் நேரானது அல்லது குவிந்தது; கண்கள் நீலமாகவோ சாம்பலாகவோ இருக்கும். கெல்டிக்கு இனத்தவர்கள் ஐசுலாந்து (Iceland), இசுகாட்லாந்து (Scotland), வேல்சு (Wales) ஆகிய நாடுகளில் பரவலாகவும் இங்கிலாந்து, மேற்கு ஐரோப்பியப் பகுதிகளில் மிக அருகியும் வாழ்கின்றனர்.
இலாப்பியர்கள்
சாம்பல் கலந்த மஞ்சள் முதல் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத் தோலுடையோர். நேரான அல்லது இலேசான வளைவுகள் உடைய இவர்களின் மயிர் கரும்பழுப்பு முதல் கருப்பு வரையிலான நிறம் பெற்றிருக்கும், உடலிலும் முகத்திலும் மயிர் குறைவாக உள்ளது; தலை குறுகி நீண்டது; மூக்கு நடுத்தரமானது; வடிவம் குழிந்தது; முன் மண்டை குறுகியது; உதடுகள் நடுத்தரத் தடிப்புள்ளன; கண்ணில் மங்கோலிய மடிப்பு ஒரு சிலரிடையே காணப்படுகிறது. இவர்கள் வட இசுகாண்டிநேவியா, சுவீடன், வட பின்லாந்து, நார்வே, வடகிழக்கு உருசியா போன்ற நாடுகளில் பரவியுள்ளனர். இவர்கள் மேற்கூறிய நாட்டு இனத்தவர்களின் பண்புகளையும் ஏற்றுக் கலப்பினத்தவராகக் காணப்படுகின்றனர். இவர்களுள் ஒரு குழுவினரை மங்கோலியர் எனவும் சில மானிடவியலார் கூறுவர். ஆனால், இவர்கள் காக்கேசிய இனப் பண்புகளையே பெரிதும் கொண்டுள்ளனர்.
இந்தோ–திராவிடர்கள்
இளம்பழுப்பு முதல் கரும்பழுப்பு நிறத் தோலுடையோர். கரிய மயிர் பொதுவாக வளைவுகளைக் கொண்டது. இவர்களின் தலை நீண்டு குறுகியது; முன்நெற்றி பொதுவாக வட்டமானது; மூக்கடி சற்று அழுந்தியிருக்கும். மூக்கு நேராகவும் நடுத்தரமாகவும் இருக்கும்; முகம் நடுத்தரமாக நீண்டிருக்கும். பெரும்பாலும் இவர்களுக்குக் தாடை இல்லை. இவர்கள் சராசரி 164 செ.மீ. உயரமுள்ளவர்கள். இந்தோ–திராவிடர்கள் தென்இந்தியாவிலும் நடுஇந்தியாவிலும் காணப்படுகின்றனர். இவர்கள் காக்கேசிய இனத்தவராகக் காணப்படினும் இவர்களிடையே தொன்மை நடுநிலக்கடல் இனத்தவர்களின் கூறுகளும் ஆசுத்திரேலியர் வெத்தர் (Veddoid) இனக்கூறுகளும் கலப்புற்றுள்ளன.
பாலினீசியர்கள்
இளம்பழுப்பு முதல் மஞ்சள் கலந்த பழுப்பு நிறம் வரை பெற்றிருப்பர். இவர்களின் மயிர் நேராகவும் கரும்பழுப்பு முதல் கருப்பு நிறம் வரையிலும் இருக்கும்; உடலிலும் முகத்திலும் குறைந்த அளவே மயிர் காணப்படுகிறது. பாலினீசியர்களின் தலையமைப்புப் பெரும்பாலும் குறுகி அகன்றதாயினும், நீண்டு குறுகிய தலையும் நடுத்தரத் தலையும் பரவலாகக் காணப்படுகின்றன; கண்கள் இளம்பழுப்பு முதல் கரும்பழுப்பு வரையிலான நிறம் உடையன. இவர்கள் சராசரி 178 செ.மீ. உயரம் உடையோர். பசிபிக்குக் கடலில் உள்ள நியூசிலாந்து, பிரண்டிலித்தீவு (Friendly Island), சமோவா, மர்குவாசாசு (Marquesas), அவாய் (Hawaii) ஆகிய பாலினீசியத் தீவுகளில் இவர்கள் வாழ்கின்றனர். இவர்கள் மங்கோலியர், நீக்கிரோக்கள் முதலானோருடன் கலப்புற்ற கூட்டினத்தவர் ஆவர்.
அய்னுகள்
வடசப்பானிலும், எசோ (Yezo), தென் சக்காலின் (South Sakhalin) முதலான பகுதிகளிலும் வாழ்கின்றனர். சப்பானின் தொன்மையான இனத்தவர்கள் இவர்களே, காக்கேசிய இனப்பண்புகள் கொண்டிருப்பினும், மங்கோலிய இனக் கூறுகளும் இவர்களிடையே காணப்படுகின்றன. அய்னு இனத்தவர் ஆசுத்திரேலிய முதுகுடிகளைப் பெரிதும் ஒத்திருக்கின்றமையால், இவர்களை ஆசுத்திரேலியர் எனவும் தொன்மைக் காக்கேசியர் எனவும் குறிப்பிடுவர்.
அய்னு மக்கள் இளம்பழுப்புக் கலந்த வெண்மை நிறத் தோல் உடையோர். இவர்களின் மயிர் கரும்பழுப்பு முதல் கரிய நிறம்வரை உடையது; உடலும் முகமும் மிகுந்த மயிர்களைக் கொண்டிருப்பதால் இவர்கள் மயிரடர்ந்த அய்னு (Hairy Ainu) எனப்படுவர். இவர்களின் தலை நடுத்தரமானது; மூக்கு நடுத்தரம் முதல் அகன்ற அளவு வரையில் இருக்கும்; இரப்பை அடிமடிப்பு இவர்களிடம் காணப்படுவதில்லை. இவர்களின் சராசரி உயரம் 158 செ.மீ. ஆகும்.
ஆசுத்திரேலியர் அல்லது தொன்மைக் காக்கேசியர்கள்
ஆசுத்திரேலிய இனத்தவர்கள் காக்கேசிய இனத்தவர்களுடன் பெருமளவில் ஒத்திருக்கின்றமையால், இவர்கள் காக்கேசியர்களின் கிளையினம் எனக் கருதப்படுகின்றனர். ஆசுத்திரேலிய இனத்தவர்கள் ஆசுத்திரேலிய முதுகுடிகள் (Australian Aborigines) எனவும் திராவிடர்களுக்கு முந்தையவர்கள் அல்லது ஆசுத்திரேலியர் அல்லது வெத்தர் (Pre–Dravidian or Australoid or Veddoid) எனவும் இரு பெரும் பிரிவுகளாகப் பகுக்கப்படுகின்றனர். ஒவ்வொரு குழுவும் மேலும் பல கிளைக் குழுக்களாகப் பகுக்கப்படுகிறது.
ஆசுத்திரேலிய முதுகுடிகள்
ஆசுத்திரேலியாவில் வாழும் தொன்மைக் காக்கேசிய இனப்பண்புகளையும் நீக்கிரோ பண்புகளுள் சிலவற்றையும் பெற்றுள்ளனர். பசிபிக்குப் பெருங்கடல் இனத்தின் பண்புகளும் மிகக்குறைந்த அளவில் இவர்களிடம் உள்ளன.
ஆசுத்திரேலிய முதுகுடிகள் கோகோ பழுப்பு நிறத் தோல் உடையோர். இவர்களின் மயிர் சுருளாகவும் வளைவாகவுமிருக்கும்; முகத்திலும் உடலிலும் மயிர் அடர்த்தியாக உள்ளது; தலை பெரும்பாலும் குறுகியது; கண் குழிவிளிம்பு பெரிதானது; மூக்கு அகன்றது; முகம் சிறியது; முக நீட்சி நடுத்தரமானது; கண்ணின் நிறம் நடுத்தரப் பழுப்பு முதல் கரும் பழுப்பு வரையிலானது. இவர்கள் சராசரி 165 செ.மீ. உயரமானவர்கள்.
திராவிடர்களுக்கு முந்தையவர்கள் அல்லது ஆசுத்திரேலியர் அல்லது வெத்தர்
சீரிலங்காவில் வாழும் வெத்தர்கள் (Veddoid) இக்குழுவின் பேராளிகளாவர். இவர்களின் தோல் நிறம் கரும்பழுப்பானது; கரிய மயிர் பெரும்பாலும் வளைவானது; தலை நீண்டு குறுகியது; முகம் குறுகி மூக்கு அகன்று இருக்கும். இவர்கள் சராசரி 152 செ.மீ. உயரத்தையே கொண்டுள்ளனர்.
திராவிடர்களுக்கு முந்தியவர்கள் இனத்தைச் சேர்ந்த இந்திய மக்கள் தென்னிந்தியாவிலும் நடு இந்தியாவிலும் காணப்படுகின்றனர். இவர்களுள் முதன்மையானவர்கள் காடர், பணியர், இருளர், பில்லர், கோண்டு (Gond), காண்டு (Khond) ஓராவான் (Oraon) ஆகியவர்கள். மலாய் முந்நீரகத்தில் வாழும் சகாய் (Sakai) அல்வது செனாய் (Senoi) மக்களும் ஆசுத்திரேலியக் கிளை இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மஞ்சள் கலந்த பழுப்பு முதல் கரும்பழுப்பு வரையிலான தோலையும், நடுத்தரத் தலையையும் முகத்தையும் கொண்டுள்ளனர். குள்ளமான இவர்களின் சராசரி உயரம் 152 செ.மீ. ஆகும்.
துணை நூல்கள்
Alland, A., Jr. Human Diversity, Anchor/Double–day, New York, 1973.
Coon, C.S., The Origin of Races, Alfred A. Knopf, New York, 1962.
Coon, C.S., S.M. Garn, J.B. Birdsell, Races: A study of the Problem of Race Formation in Man, Charles C. Thomas, Springfield, 1930.
Garn, S.M., Human Races, Charles C. Thomas, Springfield, Illinois, 1970.
Montagu, A., (Ed.) The Concept of Race, Free Press, London, 1964.
Osborne, R.H., (Ed.) The Biological and Social Meaning of Race, Freeman, San Francisco, 1971.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 594)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wwxbsx22/
தமிழ்“இனங்கள், மனிதர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wwxbsx22/APA
Oliyon Research. (2026). இனங்கள், மனிதர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wwxbsx22/MLA
"இனங்கள், மனிதர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wwxbsx22/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment