மனித சுவாசப் பாதை மூக்கில் தொடங்கி, நுரையீரல் சிற்றறையில் முடிவடைகிறது. இதற்கிடையே, இது பல உட்பிரிவுகளாகப் பிரிகிறது. இந்த உட்பிரிவால் சுவாசப் பையின் பரப்பளவு பன்மடங்கு அதிகரிக்கிறது. சுவாசப் பையில், ஏறக் குறைய 300 மில்லியன் நுரையீரல் சிற்றறைகள் உள்ளன. ஒவ்வொரு சிற்றறையையும், நுரையீரல் தந்துகிகள் (capillaries) சூழ்ந்துள்ளன. பல இடங்களில் நுரையீரல் சிற்றறையில் உள்ள சுவாசக் காற்றுக்கும், தந்துகிகளில் உள்ள குருதிக்கும் இடையே மிக, மிக மெல்லிய திசுக்களே உள்ளன. நுரையீரல் தந்துகிகளுடன் தொடர்புடைய சிற்றறைச் சுவர்களின் மொத்த பரப்பளவு ஏறத் தாழ 70 ச.மீ. ஆகும். நுரையீரல் சிற்றறைச் சுவர்கள் இரண்டு வகையான புறச் சதப் படலச் செல்களால் (epithelial cells) ஆனவை. வகை I 1 செல்கள் தட்டையாகவும், அதிக அளவு திசுப்பாய்மம் (cytoplasm) பெற்றவையாகவும் இருக்கும். வகை II செல்கள், சிறிது தடிப்பாக இருக்கும். இந்த செல்கள் (surfactant) என்னும் நீர்மத்தை வெளியிடுகின்றன. இது நுரையீரல் சிற்றறையின் விரிவடையும் திறன் (stretchability) சீராக இருக்க, மிக இன்றியமையாதது. சுவாசித்த காற்று, நுரையீரல் சிற்றறையில் தந்துகிச் சுவர் வழியாக ஊடுருவிக் குருதியில் ஆக்சிஜனேற்றம் அடைகிறது. இந்த ஊடுருவல் திறன், செல் சவ்வின் இரு புறமும் உள்ள காற்றின் பகுதி அழுத்த (partial pressure) வேறுபாட்டைப் பொறுத்துள்ளது. செல் சவ்வின் பரப்பளவு, தடிப்பு நிலை போன்றவையும் இதனைப் பாதிக்கக் கூடும். நுரையீரல் தந்துகிகளில் உள்ள குருதி மிக அதிகமாக ஊடுருவும் பரப்பின் வழியாகச் செல்கிறது. எனவே, நுரையீரல் குருதிப்பாய்வு தந்துகிகளில் ஒரு நிமிட நேரத்திற்கும் குறைவாகவே இருந்தாலும், வளிமப் பரிமாற்றம் நிகழ்ந்து விடுகிறது. நுரையீரல் சிற்றறையில் உள்ள காற்றிலிருந்து, ஆக்சிஜன் தொடர்ந்து குருதி ஓட்டத்துள் ஊடுருவிக் கொண்டிருக்கும். இதற்கு மாறாகக் குருதி ஓட்டத்திலிருந்து, கார்பன் டை ஆக்சைடு நுரையீரல் சிற்றறையில் உள்ள சுவாசக் காற்றுக்குள் சென்று கொண்டிருக்கும். இதற்குக் காரணம், ஆக்சிஜன் பகுதி அழுத்தம் சிற்றறையில் உள்ள காற்றில், 100 மி.மீ. பாதரச அழுத்தமாகவும், குருதிப் பாய்வில் 40 மி.மீ. பாதரச அழுத்தமாகவும் இருப்பதேயாகும். மாறாக, கார்பன் டைஆக்சைடின் பகுதி அழுத்தம் சிரையில் மிகுதியாகவும், நுரையீரல் சிற்றறையில் குறைவாகவும் இருக்கும். இந்தப் பகுதி அழுத்த வேறுபாடே, ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றின் பரிமாற்றத்திற்குக் காரணமாகிறது. இந்தப் பரிமாற்றம் மூலம், நுரையீரல் சிற்றறையில் ஆக்சிஜன் அளவு குறைந்து கார்பன் டைஆக்சைடின் அளவு மிகுந்திருக்கும். வெளிச் சுவாசத்தின் போது, இந்த காற்று வெளியேற்றப் பட்டு, உட்சுவாசத்தின் போது, புதிய காற்று தொடர்ந்து நுரையீரல் சிரைக்கு வரும். —சி. ஆதித்தன் துணை நூல். Cyrill A. Kelle (Ed.), Wright's Applied Physiology , Thirteenth Edition, Oxford University Press, Oxford, 1982.