அலெக்சாந்தர், மகா
alekcāntar, makā
வரலாறு போற்றும் மாவீரர்; மாசிடோனிய மன்னர் இரண்டாம் பிலிப்பின் மைந்தர்; அசிசுடாட்டிலின் மாணவர்.
வரலாறு போற்றும் மாவீரர்; மாசிடோனிய மன்னர் இரண்டாம் பிலிப்பின் மைந்தர்; அசிசுடாட்டிலின் மாணவர். இவர் தாயார் ஒலிம்பியசு. இவர் பெற்ற வெற்றிகளின் விளைவாக வரலாற்றில் இவர் மாவீரர்
மகா அலெக்சாந்தர்
அலெக்சாந்தர் (Alexander, the Great) எனக் கூறப்படுகிறார்.
இளமை முதலே இவர் திறமைசாலியாகத் திகழ்ந்தார். தமது 16-ஆம் வயதில் தம் தந்தையார் பைசாண்டியத்திற்குச் (Byzantium) சென்றுவிட்ட காரணத்தால், இவர் ஆளுநராகப் பொறுப்பேற்றுத் திறம்பட ஆட்சிபுரிந்தார். அப்போது திரேசிலில் (Thrace) தோன்றிய கலகத்தை மிக எளிதாக அடக்கினார். தெமோசுதனிசின் (Demosthenese) பேருரையால் கவரப்பட்டுக் கிரேக்க நகரங்கள் பல இவரை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தபோது அவற்றையும் அடக்கினார். கி.மு. 336–இல் இவர் தந்தையார் கொலை செய்யப்பட்டதன் விளைவாக நாடெங்கும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதற்குத் தெசாலியர்களும் (Thessalians) தீப்சு (Thebes) மக்களும் பெரிதும் பொறுப்பாவர். சினங்கொண்ட அலெக்சாந்தர் அவர்களைப் போரில் தோற்கடித்தார். இப்பெரும் வெற்றிக்குப் பின்னர் மூன்றாம் அலெக்சாந்தரெனத் தம் படைத் தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். காரிந்தில் (Corinth) கூடிய கூட்டம் இவரை ஆசியா மீது படையெடுக்கப் படைத் தலைவராகவும் நியமித்தது. ஆசியாமீது படையெடுத்துத் திரும்பிய போது இவருக்குக் காரிந்தில் ஒரு சோதனை ஏற்பட்டது. பகைவர்கள் இவர் இறந்துவிட்டாரென்ற பொய்யைப் பரப்பிக் கிளர்ச்சியைத் தூண்டினர். தீப்சு மக்களும் ஆதென்சு மக்களும் இக்கிளர்ச்சிக்குத் துணை நின்றனர். சினங்கொண்ட அலெக்சாந்தர் தீப்சு மீது படையெடுத்து மக்களை அடிமைகளாக்கி விற்கவும் செய்தார். இவரது வீரச்செயல் கிரேக்க நாட்டையே பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தியது. கிரேக்கம் இவருக்கு அடிபணிந்தது.
வெற்றிவாகை சூடி மாசிடோனியாவிற்குத் திரும்பிய அலெக்சாந்தர், பாரசீகத்தைத் தாக்கத் துணிந்தார். கடலையும் பல வணிகத் தடங்களையும் உள்ளடக்கிய இப்பேரரசு பொருளியல் துறையில் மிகச் சிறந்து விளங்கியது. இவர் தந்தை ஆசியா மைனருக்கு அருகிலுள்ள பல கிரேக்க நகரங்களின் மீதும் படையெடுத்தார். ஆயினும், அதனால் எத்தகைய பயனும் ஏற்படாமற் போயிற்று. அதனைப் பயனுறச் செய்ய இவர் மீண்டும் அப்பகுதியின் மீது படையெடுக்கத் துணிந்தார்.
இவர் சிறப்புமிக்க ஆசியப் படையெடுப்பைக் கி.மு. 334–இல் மேற்கொண்டபோது 30,000 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் சிற்பிகளும் தாவரவியல் அறிஞர்களும் பொறியியல் வல்லுநர்களும் மெய் விளக்க அறிஞர்களும் இப்படையில் இடம்பெற்றதால், இவரது படையெடுப்பே முற்றிலும் மாறுபட்டுத் திகழ்ந்தது. இது பண்பாடுகள் இணைவதற்கு ஒரு வகைப் பாலமாக விளங்கியது. அலெக்சாந்தர் ஆசியா மைனரிலிருந்து சைலீசியக் கணவாய் வழியே பாரசீகத்தை அடைந்தார். இங்குக் கிராமிக்சு (Gramicus) என்ற ஆற்றங்கரையில் நிகழ்ந்த போரில் பெரும் வெற்றி பெற்றார். பாரசீக ஆதிக்கத்திலிருந்த அயோனிய கிரேக்கத் துறைமுகங்களில் தடையிலா வாணிகத்திற்கு வழிவகுத்தார். அந்நகரங்களுக்கும் விடுதலை வழங்கினார். அவை பாரசீகக் கொடுங்கோன்மையிலிருந்து தப்பின. மலைவாழ் மக்களையும் அவ்வாறே வென்று தமது பேரரசின் இணை உறுப்பினர்களாக்கிக் கொண்டார். கார்டினியர்களையும் (Cardenians) வென்று குடியுரிமையையும் அவர்களுக்கு வழங்கினார்.
இதுகாறும் அலெக்சாந்தர் தம் படைத்தலைவர்களின் அறிவுரையின் வழி நின்றார். மத்தியதரைக் கடலைக் கடந்து பாரசீகக் கப்பற் படைகளை இவர் கவர விரும்பியதை மூத்த படைத்தலைவர்கள் ஏற்கவில்லை. அதனைப் புறக்கணித்து, அப்பகுதியின் மீதும் படையெடுத்து, வளம் மிகுந்த சிரியாவின் பகுதிகளையும் வென்று, தமது பேரரசினை விரிவுபடுத்தினார். பாரசீக வேந்தனான மூன்றாம் தேரியசு (Darius III) என்பவனை இப்போரில் வென்றார்.
அலெக்சாந்தரின் தயர் (Tyre) முற்றுகை வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இப்பகுதி கடலில் அமைந்திருந்ததால் வெல்லுதற்கு அரிதாகியது. மாசிடோனியப் பொறியாளர்கள் சிறு குன்றுகளை நிறுவி அப்பகுதியினை அடைய வழி வகுத்தனர். ஏழு மாதம் கடும் முற்றுகை நடந்தது. இறுதியில் அது வீழ்ந்தது. பின்னர் எகிப்தியப் படைகளும் தோற்றன. இவர் எகிப்திற்கு வந்து அங்கு ஓய்வு கொண்ட நேரத்தில் இவரே எகிப்தின் பேரரசரென அந்நாட்டின் குறியுரை (Oracle) அறிவித்தது. எகிப்தும் கைப்பற்றப்பட்டது. இவரது பெயரால் இங்கு அலெக்சாந்திரிய நகரம் உருவாக்கப்பட்டது.
நைல் ஆற்றங்கரையில் தமது புதிய தலைநகரை அமைத்த பின்னர், கி.மு. 331–இல் இவர் மீண்டும் பாரசீகத்தின்மீது படையெடுத்தார். காகமேல (Gaugamela) என்ற இடத்தில் பாரசீகர் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டனர். பின்னர், பெர்சிபோலிசு (Persipolis) நகரமும் அழிக்கப்பட்டது. கி.மு. 330–இல் தேரியசும் கொல்லப்பட்டார். பாரசீகம் இவரது பேரரசின் பகுதியாயிற்று.
பாரசீக நிருவாகம் இவருக்குப் பெருந் தொல்லையாயிற்று. அந்நாட்டு நில நிருவாக முறையில் இவர் மாற்றம் ஏதும் செய்யத் துணியவில்லை. பாபிலோனியாவை மையமாகக் கொண்ட ஒரு புது நிருவாக முறையினை இவர் புகுத்தினார். படைத் துறையைச் சாராத சமூகத் துறைகளைப் படைத்துறையினின்றும் பிரித்தார். மசை என்ற பாரசீகச் செல்வர் ஒருவரை, அவ்வகை நிருவாக முறையின் தலைவராக்கினார். பின்னர், இவர் பாரசீக, மாசிடோனிய ஏவலர்களைப் பல முக்கியத்துறைகளுக்குப் பொறுப்பேற்குமாறு செய்தார். பாரசீகர்களை மாசிடோனியர்களுக்கு ஒப்பாக நடத்தியதை மாசிடோனியர்கள் வெறுத்தனர். சமயத் துறையிலும் இவர் எகிப்திய, பாரசீகச் சமயங்களை ஏற்று அவற்றை ஒருங்கிணைத்தார். தெய்வத்திற்கு ஒப்பாக மன்னனை மதிக்கும் பாரசீக மரபினையும் இவர் ஏற்றுக்கொண்டார். அதனை இவர்தம் வீரர்கள் ஏற்க மறுத்தனர். இவரைக் கொலை செய்யச் சதியும் நிகழ்ந்தது. அதில் பங்கேற்ற பிலிடாசு, பெர்மினியன் போன்ற படைத் தலைவர்களும் கல்லிதெனிசு (Callisthenes) என்ற மெய்விளக்க அறிஞரும் தூக்கிலிடப்பட்டனர்.
அலெக்சாந்தரின் இந்தியப் படையெடுப்பைப் பற்றிப் பண்டைய கிரேக்க அறிஞர்கள் மிகுதியும் குறிப்பிடாது விடுத்தனர். இவரது இந்தியப் படையெடுப்பிற்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். பாரசீகப் பேரரசினை வென்ற அலெக்சாந்தர் அதன் அருகில் அமைந்த இந்தியப் பகுதிகளை வெல்ல நினைத்திருக்கலாம். தமது படையிலிருந்த இந்திய வீரரான சிசிகோட்டர் (சசிகுப்தர்) வாயிலாக இந்தியாவையும், அதன் வளத்தையும் கேட்டு மகிழ்ந்து அலெக்சாந்தர் அதனை வெல்ல நினைத்திருக்கலாம். செர்சசு (Xerxes) தலைமையில் கிரேக்கத்தில் போரிட்ட இந்திய வீரர்கள் இந்தியாவிற்கு வரும் ஆவவைத் தூண்டினர். இந்தியாவைக் கவரவேண்டும் என்ற அலெக்சாந்தரின் தணியாத தாகமும் காரணமாக இருக்கக் கூடும். தட்சசீல மன்னரின் அழைப்பும் அவரது வருகையை விரைவுபடுத்தியது. பகை காரணமாக தட்சசீல அரசர், புரு மன்னனை எதிர்த்துப் படையெடுத்து வருமாறு இவரை வேண்ட, அதனைப் பயன்படுத்தி, இவர் இந்தியா வருவது எளிதாயிற்று. இந்தியாவில் நிலவிய குழப்பமும் இவருக்கு மேலும் நன்மையாகவே அமைந்தது. எர்குலிசு (Hercules) என்ற வீரரைப் போலத் திகழ வேண்டும் என விழைந்த அலெக்சாந்தர், இந்தியாவின்மீது படையெடுக்கத் துணிந்தார்.
அலெக்சாந்தர் கி.மு. 327–இல் இந்தகுசு (Hindukush) மலைப் பகுதியினைக் கடந்து 30,000 வீரர்களுடன் இந்தியாவிற்கு வந்தார். போர் நுட்பமறித்த இவர் தமது படையினை இரு கூறாகப் பிரித்து, ஒரு பகுதியினைப் பெர்டிகாசு தலைமையில் காபூல் வழியாக இந்தியாவை அடையுமாறு ஏவினார். சிந்துப் பகுதி வந்தவுடன் அதனைக் கடக்க வல்ல பாலம் அமைத்தல் அவரது பணியாக இருந்தது. மற்றொரு படைக்குத் தாமே தலைமையேற்று இந்தியா வரும் வழியில் உள்ள பகுதிகளை வென்று, அவற்றைத் தமதாக்கிக் கொள்வது இவரது திட்டம்.
கிரேக்கப் படையினைக் கண்ட தட்சசீல மன்னர் அம்பி, மகிழ்ந்து வரவேற்று முகமன் கூறி, அதனை இந்தியாவிற்குள் வழி நடத்தவும் ஒப்புக்கொண்டார். அலெக்சாந்தரின் வலிமையைக் கண்ட பல இந்தியச் சிற்றரசர்கள் இவரது மேலாண்மையை ஏற்றனர். புட்கலாவதியின் அரசரான அசுடசு இவரை எதிர்க்கத் துணிந்தார். அவர் முப்பது நாள்கள் இவருடன் போர் புரிந்து இறந்துபோனார்.
இந்தியாவை நோக்கி வந்த அலெக்சாந்தர் வழியில் பலரை வென்றார். மேற்கு அசுவகர்களை வென்றார். கிழக்கு அசுவகர்களையும் மசகா என்ற இடத்தில் சந்தித்தார். மசகா நகரம் பெரும் அரண்களாலும் ஆழமான அகழிகளாலும் பாதுகாக்கப்பட்டிருந்தமையால் அதனைக் கைப்பற்றல் அரிதாயிற்று. இருப்பினும், கிழக்கு அசுவகர்கள் வீழ்ந்தனர். பசரா, ஓரா போன்ற நகரங்கள் பிடிபட்டன. இதனால், சிந்து நதியின் நுழைவாயில் திறக்கப்பட்டது. அவருடன் நட்புப் பாராட்டிய நிசா என்ற நகரில் பத்து நாள்கள் தங்கி ஓய்வெடுத்த பின்னர், சிந்து ஆற்றங்-
அலெக்சாந்தர் படைகள் சென்ற வழியைக் காட்டும் படம்
கரையில் உள்ள ஒகிந்துப் பகுதியினை வந்தடைந்தார்.
சிந்து ஆற்றினைக் கடந்த அலெக்சாந்தரை அம்பி வரவேற்றார். தட்சசீலம் வந்த அலெக்சாந்தருக்கும் பெரும் வரவேற்புடன் பல விலையுயர்த்த அரிய பொருள்களும் பரிசாக வழங்கப்பட்டன. தட்சசீலத்திலிருந்த அலெக்சாந்தர், புரு மன்னனைத் தமக்குப் பணிந்து போகுமாறு அழைப்பு விடுத்தார். தம்மைப் போர்க்களத்தில் சந்திக்குமாறு புரு சூளூரைத்தார். 30 ஆயிரம் போர் வீரர்கள் அடங்கிய காலாட்படையோடும் 4000 பேர் கொண்ட குதிரைப் படையோடும் 300 இரதங்களைக் கொண்ட தேர்ப்படையோடும் 200 போர் யானைகளைக் கொண்ட யானைப் படையோடும் புரு போருக்கு ஆயத்தமானார். அலெக்சாந்தருக்கு எதிராகச் சீலம் ஆற்றங்கரையில் அவர் பாசறை அமைத்தார். புரு மன்னர் அறியாவகையில் அவர் பாசறைக்கு இருபத்தைந்து கல் தொலைவுக்கு அப்பால் பெருமுயற்சிக்குப் பின்னர் அலெக்சாந்தர் ஆற்றைக் கடந்தார். ஒவ்வொரு இரதத்திலும் இரண்டு வில் வீரர்களும் வாளொடு கேடயங்கள் தாங்கிய நான்கு வீரர்களும் போர் முறையில் சிறந்த இரண்டு தேரோட்டிகளும் இருந்தனர். போர் நடைபெறும்பொழுது இந்தத் தேர்ப்படை வீரர்கள் வில், வாள், ஈட்டி, கோடரி போன்ற போர்க்கருவிகளைப் பயன்படுத்த முடியும். அன்றிரவு பெய்த அடைமழை காரணமாகச் சேற்றில் இந்தத் தேர்ப்படை செம்மையாக இயங்க முடியவில்லை. பெரும் வில்வினைக் கொண்டிருந்த வில் வீரர்களும், வில்லினை மண்ணிற்பதித்து நிலை நிறுத்தி அம்பு எய்ய இயலவில்லை. நிலம் வழுக்கிய காரணத்தினால் அவர்களின் குறி தவறியது. அலெக்சாந்தர் குதிரைப்படைகள் எழுப்பிய பேரோசையைக் கேட்டு புருவின் யானைப் படைகள் மருண்டு, அவர்களின் படையினையே அழிக்கத் துவங்கின. புரு மிடுக்கோடும் தீரத்துடனும் போரிட்டும் பயனற்றுப் போயிற்று. தம் விரைந்து செல்லும் குதிரைப் படையால் புருவின் படையை அலெக்சாந்தர் தோற்கடித்தார். பெரும் விழுப்புண்கள் பெற்ற புரு தோல்விக்குப் பின்னர் அலெக்சாந்தர் முன் நிறுத்தப்பட்டார். எவ்- வாறு நடத்தப்பட வேண்டுமென அலெக்சாந்தர் புருவை வினவத் தம்மை ஓர் அரசனைப் போல நடத்த வேண்டுமெனக் கூறினார் புரு. பெரிதும் மகிழ்ந்த அலெக்சாந்தர் புருவை மீண்டும் அவர் பகுதிக்கே மன்னராக்கியதுடன் தாம் வென்ற 15 குடியரசுகளையும் 500 நகரங்களையும் ஈந்து நட்புப் பாராட்டினார். (கி.மு. 326)
பின்னர்ப் பீயாசுப் பகுதிகளை வெல்ல நினைத்தார்; அப்பகுதிகளையும் எளிதில் வென்றார். அதற்கப்பால் இவர் செல்ல முனைந்தபோது வீரர்கள் கலகம் செய்தனர். சீலம் நதிக்கே இவர் திரும்ப நேரிட்டது. வழியில் தம்மை எதிர்த்த மல்லர்களையும் சூத்திரகாக்களையும் வென்றார். பெருத்த புண்களுடன் அலெக்சாந்தர் இப்போரில் உயிர் தப்பினார். இறுதியில் இவர் படைகள் படலா என்ற இடத்தை அடைந்தன. இங்குத் தம் படைகளை முப்பெரும் பிரிவுகளாகப் பிரித்துத் தாயகம் திரும்புமாறு பணித்தார். ஒரு படை காந்தாரம் வழியாகவும், பிறிதொன்று செயிசுடன் வழியாகவும், மற்றொன்று பலுசிசுதானம் வழியாகவும் தாயகம் திரும்புவதென முடிவு செய்யப்பட்டது. இரண்டாம் படையோடு தாயகம் திரும்பிய அலெக்சாந்தர் கி.மு. 323–இல் பாபிலோனியாவில் காலமானார்.
அலெக்சாந்தர் படையெடுப்பின் நோக்கம் கிழக்கை கிரேக்கமயமாக்குவதேயாம் என்பர் பலர். எர்நீசு என்பாரும் கி.மு. 326–க்குப் பின்னர் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக இருந்தது, அலெக்சாந்தர் படையெடுப்பே என்பர். பியூரி என்பாரும் இக்கூற்றினை ஏற்றுக்கொண்டு வாணிக, பண்பாட்டுத் துறைகளில் இப்படையெடுப்பு பெரும் தாக்கத்தினை விளைவித்துள்ளது என்பார். உண்மையில் கிரேக்கப் படையெடுப்பினால் உடனடிப் பயன் மிகுதியுமில்லை, குறிப்பாக அரசியல் முறையில் இது நிலைத்த மாற்றங்கள் எவற்றிற்கும் வித்திடவில்லை. சில ஆண்டுகளில் இவ்வெற்றி மறைந்து விட்டது.
பன்னாட்டுத் துறையிலும் பெரிதும் மாற்றங்கள் நிகழ்ந்துவிடவில்லை. இந்தியா கிரேக்க மயமாக மாறாது இந்தியாவாகவே இருந்துள்ளது. தொடர்ந்து இந்திய நாகரிகம் தனித்தே நின்று வளர்ந்தது. இந்திய, புத்த, சமணச் சான்றுகள் இதுபற்றிக் குறிப்பிடாததே, இது நிலைத்த மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதற்குத் தக்க சான்றாகும்.
எனினும் இப்படையெடுப்பின் விளைவால் கிழக்கு மேற்கு நேரடித் தொடர்பு மிகுந்தது. இந்திய, கிரேக்க நாகரிகங்கள் ஒன்றையொன்று ஈர்த்தன; வாணிகம் தொடர்ந்தது; புவியியல் அறிவு மிகுந்தது. நேரடித் தொடர்பு மிகுந்து வாணிகத் தடங்கள் பல திறக்கப்பட்டன. இதனால் காபூல் வழியாக இந்தியாவிற்கு வருதல் எளிதாயிற்று.
இந்தியாவில் ஒரு பெரும் பேரரசு அமைய இது வழிகோலியது. சந்திரகுப்த மௌரியர் பெரும் பேரரசை இதனால்தான் நிலை நிறுத்த முடிந்தது. அலெக்சாந்தர் நிறுவிய குடியேற்றங்கள் முற்றிலும் மறைந்துவிடவில்லை. அதன்வழித் தொடர்பு தொடர்ந்தது. வானவியல், காந்தாரக்கலை, நாணயக்கலை ஆகியவற்றை இந்தியர்கள் கிரேக்கர்களிடமிருந்து கற்றனர். இந்தியத் தத்துவம், சமயம் ஆகியவை. கிரேக்கத்தைப் பெரிதும் ஈர்த்தன. இரு பண்பாடுகளும் வளர இப்படையெடுப்புத் துணையாயிருந்தது.பி.சு.
துணை நூல்கள்
Burn, Andreq R., “Alexander the Great and the Hellenistic Empire”, New York, 1948.
Fuller, J.F.C., “Generalship of Alexander the Great”, New Brunswick N.J., 1959.
Taru, William, W., “Alexander the Great”, Boton, 1956.
Robinson, Charles, A., “History of Alexander the Great” 2 vols., Providence R.E. 1963.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 881)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wqptzadk/
தமிழ்“அலெக்சாந்தர், மகா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wqptzadk/APA
Oliyon Research. (2026). அலெக்சாந்தர், மகா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wqptzadk/MLA
"அலெக்சாந்தர், மகா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wqptzadk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment