இனமேம்பாட்டியல்
iṉamēmpāṭṭiyal
சில தனிப்பட்ட அணுகுமுறைகளில் மனித இனத்தை மேம்படுத்தும் ஓர் அறிவியல் பிரிவாகும்.
சில தனிப்பட்ட அணுகுமுறைகளில் மனித இனத்தை மேம்படுத்தும் ஓர் அறிவியல் பிரிவாகும். இனமேம்பாட்டியல் (Eugenics) செயற்கை முறையில் தேர்ந்தெடுத்து உடலாலும் உள்ளத்தாலும் வலிமையான இனப் பெருக்கம் செய்வதை ஆதரிக்கிறது. அது, மரபு வழியில் குறைபாடுகள் கொண்ட எதிர்காலச் சந்ததியினரை உருவாக்குவதை ஆதரிக்கவில்லை. இதனால், இன மேம்பாட்டியல் தரமான வகையினை நிலை நிறுத்திக் குறைபாடுகளுடையவற்றை நீக்கி, மனித சமுதாயத்தை உருவாக்கவழிமுறைகளைக் காணுகிறதெனலாம். மனிதனின் மரபணுப் பொதுத் தேக்கத்தில் (Gent Pool) காணப்படும் கொல்லுந் தன்மையுடைய மரபணுக்களின் (Lethal Genes) நிகழும் எண்ணிக்கையைக் குறைக்கும் அணுகுமுறை இதில் ஒன்றாகும்.
இனமேம்பாட்டியல்
என்னும் இச்சொல்வழக்கு, கி.பி. 1883–ஆம் ஆண்டு சர் பிரான்சிசு கால்டனால் (Sir Francis Galton) ஏற்படுத்தப்பட்டது. இவரே மனிதர்களை ஆய்வு செய்யும் துறையில் ‘உடலளவையியல்’ (Biometry) என்னும் சொல்வழக்கையும் அறிமுகப்படுத்தினார். இவர் தலைமையிலேயே இனமேம்பாட்டியல் ஓர் அளவுசார்த்த அறிவியலாக (Quantitative Science) வளர்ந்தது. கிரேக்க மொழியில் ‘இனமேம்பாட்டியல்’ என்னும் சொல்லுக்கு ‘நன்றாகப் பிறத்தல்’ (Well-born) அல்லது ‘மேம்பட்ட மரபணுக்கள்’ (Eugenes) என்பது பொருளாகும். இவ்வியல், சமூகக் கட்டுப்பாட்டின் (Social Control) கீழ் மேம்பட்ட மரபுவழிக் குணாதிசயங்களால் எதிர்காலச் சந்ததியினரை உருவாக்கும் நிலைகளையும் அறிகிறது.
இனமேம்பாட்டியலின் தொன்மை முறைகள், திறனுள்ள உடலமைப்பைக் கொண்ட மனித இனத்தை உருவாக்குவதையே முதன்மையாகக் கொண்டிருந்தன. இக்கருத்தின்பால் கிரேக்கர்கள் நல்ல தெளிவான கருத்துகளைக் கொண்டிருந்தனர். ஆனால், இவர்கள் இருவகைக் கருத்தினைக் கொண்டிருந்தனர். கிரேக்க நாட்டில் இசுபார்ட்டா (Sparta) நகரத்து அறிஞர்கள், உடல் வளம் கொண்ட மக்களை உருவாக்குவதிலும் ஏதன்சு (Athens) அறிஞர்கள், அறிவுத் திறனுள்ள மக்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தினர். தொடக்க கால உரோமில் ஊனமுற்ற குழந்தைகளைத் தார்பீனியன் (Tarpenian) பாறைப் பகுதியில் தள்ளி அழித்தனர்.
மனிதன், விலங்கினத்தில் ஓர் உறுப்பினனாகவும் இருப்பதோடு ஏனைய விலங்குகளுக்கு உள்ளிட்ட மரபுசார் விதிகளையும் முறைகளையுமே கொண்டு செல்லவேண்டியவனாயுள்ளான் என்ற பொதுக்கருத்தினை இனமேம்பாட்டியல் ஏற்றுக் கொண்டுள்ளது. இவ்வியலின் முப்பெரும் பிரிவுகளான சூழ்நிலை மேம்பாட்டியல் (Euthenics), இனமேம்பாட்டியல் (Eugenics), மரபணுப் பொறியியல் (Genetic Engineering) ஆகிய அனைத்துப் பிரிவுகளுமே, மனிதனின் தகுதியினை நிலைநிறுத்தி, எதிர்காலத்தில் தன் இனத்தை நிலை பெறச் செய்ய முயலுகின்றன. இனமேம்பாட்டியல் இன்று மரபுசார் கூறுகளைப் பற்றிக் கருத்துரைக்கும் ஒரு பிரிவாகச் செயற்படுகிறது. இத்துறையில் மரபு வழிப் பண்பின் கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதால், இதன் வெளிப்பாட்டினை உரைப்பது தேவையாகிறது.
இனமேம்பாட்டியல் இரு வகைகளைக் கொண்டதாகும். ஒன்று எதிர்மறை இனமேம்பாட்டியல் (Negative Eugenics) அல்லது தடுக்கக் கூடியது (Preventive). மற்றொன்று ஆக்கமுறை இனமேம்பாட்டியல் (Positive Eugenics) அல்லது வளரக்கூடியது (Progressive), எதிர்மறை இனமேம்பாட்டியல் விரும்பத்தகாத உருவத்தோற்றத்தை (Phenotype) ஏற்படுத்தும். அது இணை மரபுக் கீற்றில் வளர்ச்சியைத் தடுப்பதற்கும் அல்லது இல்லாமல் செய்வதற்கும் முனைகிறது.
ஆக்கமுறை இனமேம்பாட்டியல், மேம்பட்ட குணங்களைக் கொண்டு செல்லும் மரபணுக்களை (Gene) மனித மரபணுப் பொதுத் தேக்கத்திலிருந்து (Gene Pool) குறையாமலிருக்கவும் அதனைப் பேணிக்காக்கவும் வழிவகைகளை மேற்கொள்கிறது. மரபியல் (Genetics) விதிகளின் அடிப்படையில், மனித இனத்தின் நல்ல மரபுகளை வளம் பெறச் செய்ய, இணக்கமான கலப்பினை மேற்கொள்ள இவ்வியலார் அறிவுறுத்துகின்றனர். இதற்கென இனமேம்பாட்டியலார் மனித சமுதாயத்தை வளப்படுத்தக் கீழ்வரும் முறைகளைக் குறிப்பிடுகின்றனர்.
1. இப்போது நிலைபெற்றிருக்கும் மனித இனத்தை வளம் பெறச் செய்ய மக்கள் வாழும் சூழ்நிலையை மேம்படுத்துதல், நல்ல சத்துணவு, நல்ல கல்வி, நல்ல மருத்துவ வசதி ஆகியவற்றை அளித்தல், துணையான சூழ்நிலை அமைத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளுதல்.
2. இன்றுள்ள மனிதர்களின் கருத்திசு ஊன்நீரை (Germ plasm) ஊக்கப்படுத்தி நல்ல எதிர்காலச் சந்ததியினரைப் பெறுதல்.
ஓர் உயிரியின் வளர்ச்சிக்கு, மரபுவழிக் காரணிகளும் சூழ்நிலைக் காரணிகளும் முதன்மையான பங்கினை ஆற்றுகின்றன. நல்ல கருத்திசு ஊன்நீர் கொண்ட மக்களின் (நல்ல பண்புகளைக் கொண்ட நடுத்தர மக்களின்) பிறப்பு விகிதம் குறைந்து கொண்டு வருவதும், குறைபாடுடைய கருத்திசு ஊன்நீரைக் கொண்ட (குறைபாடுடைய உடற்பண்புகள் கொண்ட) மக்களின் பிறப்பு விகிதம் பெருகி வருவதும் ஆகிய இவ்விரு காரணிகளுமே மனித இனத்தை வளப்படுத்துவதில் இடர்ப்பாடாய் அமைந்துள்ளன. இதனால், இனமேம்பாட்டியல் துணைக்கொண்டு, குறைபாடுடைய மக்களின் எண்ணிக்கையைக் குறைத்தலும் நல்ல பண்புகளடங்கிய மக்களின் எண்ணிக்கையை உயர்த்துதலும் செய்யலாம். அது இன்றியமையாதது. மணம் கொள்ள விருப்பமான இருவரைத் திருமணம் செய்து வைத்தலும் (ஆக்கமுறை இனமேம்பாட்டியல்) விருப்பமற்றவர்களை மணம் செய்து கொள்ளாமல் தவிர்த்தலும் (எதிர்மறை இனமேம்பாட்டியல்) இதனையடைய வழி செய்யும், இம்முறைகளை மேற்கொள்வதில் எந்தெந்தப் பண்புகள் தேவையற்றன என்று கண்டறிவதாகிய சிக்கல் காணப்படுகிறது. குறைபாடுகளையுடைய திறனற்ற பண்புகளை நீக்கும் எதிர்மறை இனமேம்பாட்டியல், சிறந்த பண்புகளையுடைய மக்களின்பால் கலப்பை ஊக்கப்படுத்தும் ஆக்கமுறை இனமேம்பாட்டியல் ஆகிய இரண்டிலுமே பல சிக்கல்கள் காணப்படுகின்றன. எர்மன் முல்லர் (Herman Muller) கருத்திசுத் தேர்வு (Germinal Choice) என்னும் முறையைக் கையாண்டார். இது ஆக்கமுறை இனமேம்பாட்டியல் சார்ந்த முறையாகும். உடல், உள்ளத்திறனுள்ள ஆண்களின் விந்தணுச் சேமிப்பினை (Sperm Bank) ஏற்படுத்தி, உடல்நலம் பெற்ற பெண்களுக்கு அதன்மூலம் செயற்கை முறையில் கருத்தரிக்கும் முறையினை அறிமுகப்படுத்தினார். இம்முறையில் வளமான பண்புகளையுடைய மனிதர்களைத் தேர்வு செய்வதிலும் கொல்லும் மரபணுக்களைக் (Lethal Genes) கண்டறிவதிலும் மிகுந்த சிக்கல்கள் காணப்படுவதால், செயற்கைக் கருத்தரிப்பு முறை செயல்முறைக்கு ஒவ்வாததாகிலிட்டது. இலெடர் பர்கு (Lederberg) இனமேம்பாட்டியலுக்கு மாற்றாகச் சூழ்நிலை மேம்பாட்டியல் என்னும் துறையை அறிமுகப்படுத்தினார். இவ்விரண்டுமே உருவத் தோற்றம் (Phenotype), மரபுத்தோற்றம் (Genotype) போன்றவையாகும். இனமேம்பாட்டியல் மரபுப்பண்பை மேம்படுத்தி, நல்ல மனித இனத்தை உருவாக்கும் இயலாகும்.
மரபியலின் கூற்றுப்படி, ஆண்களின் விந்தணுக்களைச் சேமித்து வைத்து, அதைப் பெண்களின் கருப்பையில் கருவுறச் செய்வதால் விந்தணு பெறப்பட்ட ஆணின் குணங்கள் வெளிப்படுவதில் வாய்ப்புக் குறைவாக உள்ளது. எடுத்துக்காட்டாக, ஓர் இசை வல்லுநரின் விந்தணுக்கனைச் செலுத்திப் பெறப்படும் குழந்தை, இசையில் சிறந்து விளங்காமலும் போகும். சூழ்நிலைக் காரணிகள், குழந்தைகள் வளரும்போது மாற்றிவிடுகின்றன. இதனாலேயே விந்தணுச் சேமிப்பு முறை சிறப்பிடம் பெறவில்லை.
இனமேம்பாட்டியலின் அடிப்படைக் கருத்துகளும் கொள்கைகளும் அறிவியல் முறையில் வளராமல் போனதற்கு நாசிச் செருமனியர் காரணமாயினர். மேம்பட்ட பண்புகளைக் கொண்டிராதவர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்களைக் கொன்றும் மலட்டுத் தன்மையாக்கியும் அழித்தனர். இவர்களின் அளவைகள் சமூக, பண்பாடு, மரபுப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டிராததாலும், மக்களை நேரடியாகத் துன்புறுத்தியதாலும் இந்த அறிவியலின் வளர்ச்சியில் மக்கள் ஈடுபாடு செலுத்தவில்லை. இங்கிலாந்தில் பல கல்வி நிறுவனங்களிலும் தங்கள் நூல்களிலும் பருவ இதழ்களிலும் இனமேம்பாட்டியல் என்னும் சொல்லை அறவே நீக்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உடல்வாகு, அறிவுத்திறன், உடல்நலம் முதலானவற்றில் சிறந்த பண்புகள் கொண்டோரை இணைத்தலின்வழி, நல்ல எதிர்கால இனத்தை உருவாக்க இயலும் என்னும் இத்துறையின் கொள்கைகள் சிக்கலானவையாகக் காணப்படுகின்றன. பண்புகளையும் சூழ்நிலைக் காரணிகளையும் தேர்ந்தெடுப்பதில் மக்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் இதன் பாதிப்புக் காணப்படுவதால் இத்துறையினரின் செயல்முறைகள் வெற்றி காண இயலவில்லை. எம்.சே.
துணை நூல்கள்
Eldon, J.G., Human Heredity, John Wiley, New York, 1983.
Mertens, T.R., Human Genetics, Wiley, New York, 1975.
Mertens, T.R., and Robinson, S.K., Human Genetics and Social Problems, MSS information, New–York, 1973.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 614)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wkpysyw5/
தமிழ்“இனமேம்பாட்டியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wkpysyw5/APA
Oliyon Research. (2026). இனமேம்பாட்டியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wkpysyw5/MLA
"இனமேம்பாட்டியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wkpysyw5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment