இது நண்டுகளின் மேல் ஒட்டியிருக்கும் கணுக்காலி ஒட்டுண்ணியாகும். ஒட்டுண்ணியாக இருப்பதால் உடல் உறுப்புகள் அனைத்தும் குறைவுபட்டிருக்கும். வளர்ந்த உயிரியில் கணுவாக்கம் இணை உறுப்புகள் புலனுறுப்புகள் உணவு மண்டலம் போன்ற கணுக்காலிப் பண்புகளில் எதுவும் இதில் இல்லை. இது ஒரு முட்டை வடிவப் பிதுக்கமாக நண்டின் பின் பகுதியில் ஒரு சிறிய தண்டின் மூலமாக அடி வயிற்றில் ஒட்டிக் கொண்டிருக்கும். ஒரு மெல்லிய பை போன்ற வெளிப் போர்வை, உள்ளுறுப்புத் தொகுதிகளையும் இணையுறுப்புகளையும் மூடியுள்ளது. பல ஆண்டுகள் இதை ஒரு விலங்கு என்றே எவரும் கருதவில்லை. இதனுடைய வளர்ச்சியில் நன்கு நீந்தக் கூடிய நாப்ளியஸ் (nauplius) இளவுயிரி இருந்ததைப் பார்த்த பிறகே இது ஒரு கணுக்காலி என்று முடிவு செய்தனர். இந்த இளவுயிரி, பிறகு சைப்ரிஸ் (cypris) உருமாறுகிறது. தன்னுடைய நுண் உணர் கொம்பின் (antennule) உதவியால் இளம் நண்டின் பின் பக்கத்தில் ஒட்டிக் கொள்ளத் தொடங்குகிறது. பின்னர், சைப்ரிஸ் இளவுயிரி தன்னுடைய உடல், இணையுறுப்புகள் அனைத்தையும் இழந்து ஒரு செல் திரட்சியாக மாறுகிறது. இதற்கு, கென்ரோஜன் இளவுயிரி என்று பெயர். இது ஓம்புயிரியின் உடலுள் புகுந்து சிறுகுடலுக்குக் கீழ் தங்கிக் கொள்கிறது. உள் ஒட்டுண்ணியாக மாறிய பிறகு பிதுக்கமாகத் தெரிகிறது. இது, மெல்ல, மெல்ல வேர்த்தூவிகளைப் போன்ற அமைப்புகளை நண்டினுள் செலுத்தி ஓம்புயிரியின் உடலிலிருந்து ஊட்டம் முழுமையும் உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது. செவுள்கள், இதயம், மூளை தவிர அனைத்துப்பகுதிகளுக்கும் இதன் உறிஞ்சும் வேர்த் தூவிகள் பரவுகின்றன. நண்டு தோலுரிக்கும் போது, உள்ஒட்டுண்ணியாக இருந்தது, வெளி ஒட்டுண்ணியாக மாறுகிறது. இப்போது, முட்டை வடிவப் பையாக, இனப்பெருக்கத் திறப்பு அல்லது பொது மலத் திறப்பு மூலம் வெளியே திறக்கிறது. இந்த ஒட்டுண்ணியால், ஓம்புயிரியில் பல இரண்டாம் நிலைப் பால் மாற்றங்கள் நிகழ்கின்றன. நுட்பமாக எத்தகைய விளைவை ஏற்படுத்துகிறது என்பது இன்னும் சரியாக அறியப்படவில்லை. —ஜி. எம். நடராஜன்