சால்சிடொனி
cālciṭoṉi
இது குவார்ட்ஸ், சிலிக்கான் டைஆக்சைடு உடைய நுண் மணி இழை வகையாகும்.
இது குவார்ட்ஸ், சிலிக்கான் டைஆக்சைடு உடைய நுண் மணி இழை வகையாகும். இக்கனிமத்திலுள்ள தனி இழைகளை நுண்ணோக்கியால் மட்டுமே காணலாம். மாசுகளால் ஏற்படும் நிறத்தின் அடிப்படையில் சால்சிடொனி (chalcedony) பல வகை- யாக உள்ளது. பழங்காலத்தில் இது அருமணிப் பொருளாக மதிக்கப்பட்டது. அடர் சிவப்பிலிருந்து தெளிவான சிவப்பு நிறமுடைய, அரை ஒளி ஊடுருவும் கார்நெல்லியன் மணிக்கல், ஆரஞ்சு—பழுப்பு முதல் சிவப்புப் பழுப்பு நிறம் கொண்டது. சார்டு (sard) படிகக் கல், ஆப்பிள் பச்சை நிறமான கிரைசோபிரேஸ் (chrysoprase) கல் முதலியவை இதில் அடங்கும். சால்சிடொனி சில சமயங்களில் மரவடிவுடைய துகள்களைப் பெற்றுள்ளது. இரும்பு ஆக்சைடு (கார்நெல்லியன், சார்டு), நிக்கல் (கிரைசோபிரஸ்), மாங்கனீஸ் முதலிய மாசுகள் சால்சிடொனிக்கு நிறத்தை அளிக்கின்றன.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> சில சமயங்களில் இது புவியோடுகளாக உருண்டையான, திரட்சியான திராட்சைக்கொத்து (botryoidal surface) மேற்பரப்புகளுடன் காணப்படுகிறது. முடிச்சு மற்றும் படுகைச் செர்ட்டுகளின் முக்கிய உட்கூறுகளாகவும் காணப்படுகிறது. மோஸ் அளவில் இதன் கடினத் தன்மை 6.5—7; ஒப்படர்த்தி 2.57—2.64. சால்சிடொனியின் மிகுநுண் கட்டமைப்பில் நுண் படிகக் குவார்ட்சுடன் நுண் துளைகள் உள்ளனவாக எக்ஸ் கதிர் மற்றும் எலெக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் கண்டறியப்படுகிறது. படிகமற்ற சிலிக்கா துகள்கள் 10% க்குக் குறைவாகக் காணப்படுகின்றன. நுண் துளைகளால் ஏற்படும் ஒளிச் சிதறலால் மஞ்சள் நிறம் காணப்படுகிறது. தொல்லூழிக் கால (paleozoic) மற்றும் பழங்காலச் சால்சிடொனி இளம் சால்சிடொனியை விடப் பருவெட்டுப் படிகமாகக் (coarse crystal) காணப்படுகிறது.
புவியோட்டிலுள்ள சால்சிடொனி, மேற்பரப்பில் ஒரே மையத்தைக் கொண்ட தெளிவான அடுக்குகளைக் கொண்டுள்ளது. அகேட், பொதுவான முக்கியமான சால்சிடொனி வகையாகும். இதில் காணப்படும் அடுத்தடுத்த அடுக்குகள் (successive layers) நிறம், ஒளி ஊடுருவும் பண்பு ஆகியவற்றில் வேறுபடுகின்றன. சால்சிடொனி மற்றும் அகேட்டின் அடுத்தடுத்த அடுக்குகள் புரைமையில் (permeability) வேறுபடுகின்றன. நிறமுள்ள அகேட் செயற்கைச் சாயங்கள், கனிம வேதிக் கூட்டுப்பொருள்கள் முதலியவற்றால் நிறமேற்றப்பட்டு வணிக முறையில் விற்கப்படுகிறது. —இரா. சரசவாணி நூலோதி. A. V. Milovsky. Mineralogy and Petrography, First Edition, Mir Publishers, Moscow, 1982.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 135)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wee35vdt/
தமிழ்“சால்சிடொனி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wee35vdt/APA
Oliyon Research. (2026). சால்சிடொனி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wee35vdt/MLA
"சால்சிடொனி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wee35vdt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment