அரசியல் கலை
araciyal kalai
சமுதாய அமைப்பின் பொதுத் தன்மைகளைப் பற்றிய செய்தித் திரள் ஆகும்.
சமுதாய அமைப்பின் பொதுத் தன்மைகளைப் பற்றிய செய்தித் திரள் ஆகும். அரசு என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டம் அடங்கிய ஒரு வகைச் சமுதாய அமைப்பு. மனிதன் தன் இனத்தவரான மனிதரோடு கூடி ஒரு கூட்டமாக அல்லது ஒரு சமுதாயமாக வாழும் இயல்புடையவன்; இத்தகைய சமுதாய அமைப்புக்கு இன்றியமையாத தேவைகளை நிறைவு செய்வதற்காக அதிலுள்ள மக்களால் பின்பற்றப்படும் சட்ட விதிகள், செயல்கள், அதிகாரங்கள் ஆகியவையெல்லாம் அரசியலில் சேரும். ஆகையால், ஒருவகைப்பட்ட மக்கட் சமுதாயமாகிய அரசு என்ற சமுதாய அமைப்பின் பொதுத் தன்மைகளைப் பற்றிய செய்தித் திரளே அரசியல் (Politics) ஆகும். குடும்பம், சமய நிறுவனம் அல்லது திருச்சபை (Church), தொழிலாளர்கள் அமைந்துள்ள தொழிற் சங்கங்கள் (Trade Unions) போன்றவையும், சமுதாய அமைப்புகள் தாம் என்றாலும், இவைகளுக்கு இல்லாத ஒரு தனிப்பட்ட இயல்பு (Special Characteri- stic) அரசு என்னும் சமுதாய அமைப்புக்கு உண்டு. அதாவது தன் நில எல்லைகளுக்குள் வாழும் யாவரையும் தன் சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறு கட்டாயப்படுத்தக்கூடிய ஆற்றல் (Coercive power of Sovereignty) அரசு எனும் சமுதாய அமைப்பு ஒன்றுக்குத்தான் இருக்கிறது. அரசு எனும் சமுதாய அமைப்பு, பண்டைய கிரேக்க நாட்டிலிருந்ததைப் போன்று பரப்பளவிலும், குடிமக்கள் தொகையிலும் மிகச் சிறியதாக இருக்கலாம்; அல்லது இக்காலத்தில் காணப்படுவதைப் போன்று பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் மிகப்பெரியதாகவும் இருக்கலாம். எவ்வளவினதாயிருந்தாலும், அரசு என்னும் சமுதாய அமைப்புக்குத் திட்டவட்டமான நில எல்லை, குடிமக்களடங்கிய சமுதாயம், அரசாங்கம் என்னும் நிருவாக நிறுவனம், பிற அரசுகளினின்றும் சுதந்திரமாக இயங்கித் தன் சட்ட திட்டங்களுக்குக் கீழ்ப்படியுமாறு தன் குடிமக்களைக் கட்டாயப்படுத்தும் ஆற்றல் அல்லது இறைமை (Sovereignty) ஆகிய நான்கு இயல்புகளும் இன்றியமையாதன ஆகும். எனவே, அரசு என்னும் சமுதாய அமைப்பு, பல்வேறு சமுதாய அமைப்புகளைவிட உயர்வானதும், முழுவளர்ச்சி பெற்றதும், எப்பொழுதும் நிலைத்து நிற்கக்கூடியதுமான சமுதாய அமைப்பு என்று அரசியலைச் சமய நூல்களினின்றும் முதன்முதலில் பிரித்தறிந்து, சட்டம், நீதி, தனி ஆளுக்கும் அரசாங்கத்துக்குமுள்ள தொடர்புகள், அரசாங்கங்களின் வகைகள் (Types of Constitutions), அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட ஆட்சி அல்லது அரசாங்கம் (Constitutional Government) முதலிய கருத்துகளை எல்லாம் ஆராய்ந்து, தம் கோட்பாடுகளை இக்கால உலகத்துக்கு அளித்துச் சென்ற கிரேக்க அறிஞர் அரிசுடாட்டில் ஆவார். சுருங்கக் கூறின், அரசியல் கலை என்ற தொடருக்கு அரசு என்ற சமுதாய அமைப்பைப் பற்றிய எல்லாச் செய்திகளும் அடங்கிய ஓர் பாடத் துறை அல்லது கல்வித்துறை (Discipline} என்று பொருள் கூறலாம்.
அரசியல் கலை என்ற சொற்றொடருக்குப் பொதுவாக மேற்கூறியவாறு சுருக்கமாகப் பொருள் கொண்டபோதிலும், இக்காலத்தில், குறிப்பாக இரண்டாவது உலகப் போருக்குப் பிற்பட்ட காலத்தில்–பல்வேறு புதிய அணுகுமுறைகளின் விளைவாகப் புதிய கருத்துகள் அத்தொடரில் காணப்படுகின்றன. அரசு என்ற சமுதாய அமைப்புக்கு டபிள்யு. வில்சன் என்னும் ஆசிரியர், “ஒரு குறிப்பிட்ட நில எல்லைக்குள் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து வாழ்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டமே அரசு” என்று இலக்கணம் வகுக்கிறார். இவ்விலக்கணம் வகுக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகட்கு மேலாகிறது. இக்கால அரசை ஓர் முறையாசுக் (System) கருதி, அண்மையில் வாழ்ந்த மாக்சு வீபர் (Max Weber) என்ற செருமானியச் சமூக இயலாசிரியர், “ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதிக்குள் வல்லந்தத்தைச் (Force) சட்டபூர்வமான முறையில் கையாளுவதற்குத் தனி உரிமை பெற்றுள்ள ஒரு மனித சமூகமே அல்லது கூட்டமே அரசு” என்று இலக்கணம் வகுக்கிறார். அரிசுடாட்டில் அரசியல் கலையைச் சமய நூல்களிலிருந்து பிரித்து, பல ஆய்வு முறைகளை வகுத்த போதிலும், அவருடைய அணுகு முறையை (Approach) இக்கால அறிவியல் அணுகு முறையாகக் கருதுவதில்லை. அவருக்குப் பின்னர் அண்மைக் காலம் வரையில் இருந்த அரசியல் சிந்தனையாளர்களெல்லாம் (மாக்கியவெல்லி, Machiaveli), சேம்சு பிரைசு பிரபு (Lord James Bryce) முதலியோரெல்லாம் அரசியல் கலையைப் பழைய மரபார்ந்த அணுகு முறையை ஒட்டியே ஆய்வு செய்தனர்; பழைய மரபார்ந்த அணுகு முறையில் அரசியல் நிறுவனங்களை ஒப்பீடு செய்தல் மிகவும் குறைவாகவே கையாளப்பட்டது. நிறுவனங்களைப் பற்றிய விவரணங்களே (Descriptions) அதில் இடம்பெற்றன. அதில் ஒரு சில நாடுகள் அல்லது அரசுகளைப் பற்றிய ஆய்வே மிகுதியும் காணப்பட்டது. எடுத்துக்காட்டாகப் பாராளுமன்றக் குடியாட்சி முறையைப் பற்றிய ஆய்வுக்கு, பிரிட்டிசு ஆட்சிமுறை ஒன்றுதான் எடுத்துக் கொள்ளப்பட்டது. அரசியலோடு தொடர்பில்லாத நிறுவனங்களெல்லாம் பழைய அணுகு முறையில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் விடப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலாகப் பழைய அணுகு முறையிலே ஒழுக்கமுறை விதிகளை ஒட்டியே அரசியல் நிறுவனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. ஆனால் இதற்கு மாறாக இப்பொழுது புதிய அணுகு முறையில், உயிரியல் விஞ்ஞான இயல்களில் (Biological Sciences) கையாளப்படுகிற, முறை அமைவுப் பகுப்பாய்வு (System Analysis) கையாளப்படுகிறது. இதன் விளைவாக மானிதரின் நடக்கையைப் பற்றிய (Human Behaviour) ஒருமைப்படுத்தப்பட்ட பொது அமைவுகள் பகுப்பாய்வுக் கோட்பாடு (General Systems Theory) தோன்றிற்று. அதாவது, பல்வேறு இயல்களிலும் காணப்படுகிற சில பொதுவான பொருள்களை ஒழுங்குபடுத்தினால் ஒரு பொதுக் கோட்பாடு உருவாகும். அந்தப் பொதுக் கோட்பாடு ஒவ்வொரு பாடத்தின் சிக்கல்களை நன்கு அறிந்துகொள்ளவும், பல்வேறு பாடத் துறைகளும் ஒன்றோடொன்று தொடர்புகொள்ளவும், தீவிர ஆராய்ச்சிக்கு வழி காட்டுகிறது. இவ்வாறு புதிய அணுகு முறை, அரசியல் கலையின் பாட எல்லையை மிகவும் விரிவாக ஆக்கியுள்ளது. அதில், வளரும் நாடுகளின் (Developing Countries) அரசு முறைகளைப் பற்றிய ஆய்வும் அடங்கியுள்ளது. அதில் மனித அனுபவத்தை மட்டுமே வைத்து அரசியல் முறை அமைவுகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன; ஒழுக்க விதிகளை வைத்து மதிப்பீடு செய்யப்படுவதில்லை. இப்புதிய போக்கை, தேவிடு ஈசுட்டன் (David Easton) என்னும் அமெரிக்க ஆசிரியர் தாம் எழுதியுள்ள “அரசியல் வாழ்வைப் பற்றிய ஒரு முறை அமைவுப் பகுப்பாய்வு” (A System Analysis of Political Life by David Easton, 1965) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். எனினும், இவ்வாசிரியரே அரசியல் முறையமைவுப் பகுப்பாய்வுக்கு ஒழுக்க விதிக் கோட்பாடு ஓர் அளவு கோலாகும் என்று ஒப்புக் கொண்டுள்ளார். இலியோ இசுட்ராசு (Leo Strass) முதலிய இக்கால ஆசிரியர்களும் ஒழுக்க விதிக் கோட்பாட்டை அரசியல் ஆராய்ச்சிக்கு இன்றியமையாதது என்று கருதுகின்றனர். எவ்வாறாயினும் அரசியல் கலையின் ஆய்வு அளவு அல்லது எல்லை புதிய அணுகு முறையின் விளைவாக மிகவும் விரிவடைந்துள்ளதென்பதில் ஐயமில்லை. சமூக இயல் (Sociology), உயிரியல் (Biology), பொருளியல் (Economics), உள இயல் (Psychology) முதலிய பல்வேறு இயல்களிலிருந்தும் செய்திகள் கையாளப்படுகின்றன. எடுத்துக்காட்டாகச் சமூக வகுப்புகளைப் பற்றிய செய்திகளைச் சமூக இயலிலிருந்தும், மனிதரின் நடத்தை பற்றிய செய்திகளை (Human Behaviour) உளவியலிலிருந்தும், உள்ளீடு வெளிப்பாடு ஆய்வு முறையைப் (Input Output Analysis) பொருளியலிலிருந்தும், அரசு முறையின் அமைப்புப் பணி ஆய்வு முறையை (Structural Functional Analysis) உயிரியலிலிருந்தும் கையாண்டுள்ளனர். இவ்வாறு அரசியல் கலையின் எல்லையை இக்காலத்தில் விரிவாக ஆக்கிய ஆசிரியர்கள் தேவிடு ஈசுட்டன், கேபிரியேல் ஆல்மண்டு (Gabriel Almond), இவருடைய கோட்பாட்டின்படி, அரசியல் விஞ்ஞான ஆய்வுக்கு வழக்கமாக எடுத்துக் கொள்ளப்பட்ட சட்டமன்றம் (Legislature), நிருவாகத்துறை (Executive), நீதித்துறை (Judiciary) முதலிய நிறுவனங்கள் மட்டுமல்லாமல், அரசியல் அம்சமுடைய உறவுமுறை, சாதிமுறை, கொலை, ஆர்ப்பாட்டங்கள், அரசியல் கட்சிகள், தன்னலக் குழுக்கள் (Interest Groups) முதலியவெல்லாமே எடுத்துக் கொள்ளப்படுதல் வேண்டும்) காரல்டாசு (Karl–Dash), எரால்ட்டு லாசுவெல் (Herald Laswell), இராபர்ட்டு டால் (Robert Dohl), தேவிடு ஆப்டர் (David Apter) முதலியோர் ஆவர். இவர்களுடைய கருத்துப்படி அரசியல் என்ற சொல் ஆட்சித் தொடர்பான தீர்மானங்களைச் செய்தல் (Decision Making) என்ற கருத்தைக் குறிக்கிறது. அரசியல் என்ற சொல்லுக்கு அதிகாரத்தைப் பயன்படுத்துதல் என்று இராபர்ட்டு டால் என்பவரும், ‘தீர்மானம் எடுத்தல்’ என்று சூன் பிளாண்டல் என்பவரும், தகுதியுடையோர் செயல் தகவைப் பங்கீடு செய்தல் (Allocation of Political Values) என்று தேவிடு ஈட்டனும் குறிப்பிடுகின்றனர். இக்காலக் கருத்தின்படி, அரசு அல்லது அரசியல் முறையமைவு என்னும் இயந்திரம், மக்களிடமிருந்து கோரிக்கைகளைப் பெற்று (Inputs), அவற்றைத் தீர்மானங்களாகவும் செயல்களாகவும் மாற்றி, அவற்றை மக்கள் சமுதாயமாகிய சூழலுக்கே திரும்பவும் அளிக்கிறது. இத்தகைய உள்ளீடு வெளிப்பாடு முறை இக்கால ஒப்பீட்டு அரசியலில் ஓர் இன்றியமையாத பகுதியாக இருக்கிறது.
அரசியல் கலை (Politics)
என்ற பாடம் அல்லது பாடத்துறை, பல்வேறு அரசியல் தொடர்புடைய துறைகளைப் பற்றிய செய்திகளையும், அரசியல் கோட்பாடுகளையும் பற்றிய ஒரு கல்வித்துறை ஆகும். அதில் அரசாங்கம் அல்லது முறை அமைவு (Government or System), உட்பகுதி அரசியல் (Local Politics), அரசியல் விஞ்ஞானம் (Political Science), ஒப்பீட்டு அரசியல் (Comparative Politics) முதலிய பிரிவுகள் அடங்கும். இவை ஒவ்வொன்றின் செய்தித் திரளையும் நாம் சுருக்கமாகக் குறிப்பிடலாம். அரசியல் விஞ்ஞானம் என்பது. சர்வதேசச் சட்டம் (International Law), சர்வதேச உறவுகள் (International Relations), மனிதருடைய அரசியல் நடக்கை (Political Behaviour), அரசியல் கோட்பாடு (Political Theory), ஒப்பீட்டு அரசியல் (Comparative Politics), பொதுத் துறை ஆட்சி இயல் (Public Administration), பொது மக்கள் சட்டம் (Public Law) முதலிய துறைகளைக் குறிக்கும். இதில், அரசியல் கோட்பாடு என்ற துறையில் அடங்கிய கருத்துக் கோட்பாடுகள் அரசியலதிகாரம் (Authority), கருத்து ஒருமைப்பாடு (Consensus), குடியாட்சி (Democracy), குடிமக்களுடைய கடமைகள் (Duties), சமத்துவம் (Equality), சுதந்திரம் (Freedom), பொதுநல விருப்பம் (General Will), கொள்கைகள் (Ideologies). நீதி (Justice), பெரும்பாலோர் ஆட்சி (Majority Rule), தேசிய நலன் இயற்கைச் சட்டம் (Natural Law), இயற்கை உரிமைகள் (Natural Rights), அதிகாரம் (Power), பொறுப்பு (Responsibility), சமுதாய ஒப்பந்தம் (Social Contract), இறைமை (Sovereignty), அரசு (State), பழைமைக் கோட்பாடு (Conservation), அரசிலாக் கோட்பாடு (Anarchism), அரசியலமைப்புகள் (Constitutions), அரசியலமைப்பில் பற்றுடைமை (Constitutionalism), தாராளக் கோட்பாடு (Liberalism), மார்க்சிய அல்லது புரட்சி இயல்புடைய பொதுவுடைமைக் கோட்பாடு (Marxism), இராணுவக் கோட்பாடு {Militarism), அமைதிக் கோட்பாடு (Pacifism), பன்முகக் கோட்பாடு (Pluralism), சமதருமம் (Socialism), சருவாதிகாரக் கோட்பாடு (Totalitarianism), பயன்வழிக் கோட்பாடு (Utilitarianism) முதலியவை ஆகும்.
அரசாங்கம் என்ற பகுதியில் சட்டமன்றம் ஓரவை, ஈரவை மன்ற முறைகள், அமைப்பு, வாக்குரிமைத் தகுதிகள், உரிமைகள், சிறுபான்மையோர் பிரநிதித்துவம், சட்ட மன்றத்தின் அதிகாரங்களும் பணிகளும், நிருவாகம் அல்லது ஆட்சித்துறையின் வகைகள் (Types of Executive), பாராளுமன்ற அல்லது கேபினெட்டு வகை (Parliamentary or Cabinet Type), நிருவாகத்தின் இயல்புகள், பாராளுமன்றத்துக்கும் நிருவாகத்துக்குமுள்ள தொடர்புகள், நிருவாகத்தின் அமைப்பு, பணிகள், தலைவர் அல்லது சனாதிபதி வகை நிருவாகத்தின் இயல்புகள் (Characteristics of Presidential Type of Executive), இதன் அமைப்புப் பணிகள், அதிகாரங்கள், இதற்கும் அரசாங்கத்தின் மற்ற உறுப்புகளாகிய சட்டமன்றம் நீதிமன்றம் ஆகியவற்றுக்குமுள்ள தொடர்புகள், கழக முறை நிர்வாகத்தின் தனிப்பட்ட இயல்புகள் (Characteristics of Collegiate Type of Executive), அதன் அமைப்பு, அதிகாரம், பணிகள், மற்ற உறுப்புக்களோடு அதற்குள்ள தொடர்பு, நீதித்துறையின் அமைப்பு, அதிகாரங்கள், பணிகள், ஒற்றை அரசு முறையிலும் (Unitary State) கூட்டாட்சி முறையிலும் நீதித்துறையின் நிலை, நீதித்துறையின் சுதந்திரத்துக்காள கோட்பாடுகள், முதலியவையெல்லாம் கூறப்படுகின்றன.
உட்பகுதி அரசியல் என்ற பிரிவில் அரசின் அல்லது நாட்டின் பல்வேறு உட்பகுதிகளில் அமைக்கப்பட்டுச் செயற்படும் உள்ளூர் அரசாங்கங்களின் (Local Governments) அமைப்பு, அதிகாரங்கள், பணிகள், அவற்றின் வருமான ஆதாரங்கள், செலவினங்கள், உள்ளூரரசாங்கங்களுக்கும், மாநில அல்லது நடுவண் அரசாங்கத்துக்குமுள்ள தொடர்பு ஆகியவை கூறப்படுகின்றன.
ஒப்பீட்டு அரசியல் என்ற பிரிவு அரசியல் நடக்கையைப் போல (Political Behaviour) இக்காலத்தில் தோன்றியுள்ள ஓர் இயக்கமாகும் (Movement). இது அரசியலின் ஒரு துணைப் பகுதியாக ஆகுமென்பதைவிட, இது அரசியல் விஞ்ஞானத்திற்குப் பல புதிய செய்திகளை அளித்து அதை மேலும் விளக்கம் பெறச் செய்கிறது என்பதே சரி என்று கேபிரியேல் ஆல்மண்டு என்னும் இக்கால அரசியல் பேராசிரியர் ஒருவர் கூறுகிறார். இப்பிரிவு பற்றி அரிய கருத்துகளை அளித்துள்ள ஏனைய பேராசிரியர்களின் பெயர்கள் மேலே குறிப்பிடப்பட்டன.
அரசியல் ஒரு விஞ்ஞானமா அல்லது கலையா என்ற ஓர் ஆய்வு சிறிது காலம் வரை குறிப்பாக ஆசிரியர்களிடையே இருந்து வந்தது. விஞ்ஞானம் என்பது உயிரற்ற பொருள்கள், மனிதரல்லாத உயிரினங்கள் ஆகியவற்றின் தன்மைகளைப் பற்றிய சட்டங்களின் தொகுப்பு. இச்சட்டங்களினுதவியால் காரிய காரண ஆய்வுகளைத் துல்லியமாகச் செய்து, விளைவுகளை முன்னதாகக் கூறுதல் எளிது, ஆகையால் விஞ்ஞானச் சட்டங்கள் ஒரே சீராகவும், ஆய்வுக்குகந்தவையாகவும் இருக்கின்றன. ஆனால் இதற்கு மாறாக மனிதரின் நடக்கையைப் பற்றிக் கூறும் அரசியலில் காணப்படும் விதிகளும் கோட்பாடுகளும், சட்டங்களும், விஞ்ஞான விதிகளைப் போன்று ஒரே சீராகவும், விளைவுகளை முன்னதாக அறிவிக்கக்கூடிய அளவுக்குத் துல்லியமாகவும் இல்லை. ஏனெனில் மனிதருடைய நடக்கையைத் தூண்டும் காரணிகள் பலவாக இருக்கின்றன. எனவே, ஒரு சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில்தான் அரசியல் விதிகள் குறிப்பிட்ட விளைவுகளைத் தரும் என்று கூற இயலும். எனவேதான், விஞ்ஞானம் என்ற சொல் பௌதிகம், இரசாயனம், முதலியவற்றுக்கே பொருந்தும் என்றும், அரசியலுக்குப் பொருந்தாது என்றும் ஆங்கில அரசியல் ஆசிரியச் சர் எர்னசுட்டு பார்க்கர் (Sir Earnest Parker) என்பவர் கூறுகிறார். மேலும் இக்காலத்தில் அரசியலை ஓர் கலையாகக் கருதுவதற்குப் பல காரணங்களைக் கூறலாம். அரசியலில் கூறப்படும் செய்திகளின் தன்மையை வைத்து, அது அதிகாரத்தைப் பற்றிக் கூறும் (Power) ஒரு கல்விப் பிரிவு என்றும், பணிகளைப் பற்றிக் கூறும் (Functions) பாடம் என்றும், நடக்கையைப் பற்றிக் கூறும் பாடம் என்றும், தீர்மானம் எடுத்தலைப் பற்றி ஆய்வு செய்யும் கல்வி என்றும் (Decision–making) இக்கால ஆசிரியர்கள் கருதுகின்றனர். எனவே அரசியலை ஒரு கலையாகக் கொள்ளுதல் பொருத்தமுடையது.
இக்கல்வித் துறைக்குப் பழங்காலத்தில் பல அரிய கருத்துகளை அளித்த சிந்தனையாளர்கள் சாக்ரட்டீசு (Socrates), பிளேட்டோ (Plato), அரிசுடாட்டில் (Aristotle), சீனோ (Zeno), எபிக்யூரசு (Epicurus), சிசரோ (Cicero), பாலிபியசு (Polybius), செயின்ட் அகசுடின் (St. Augustine), செயின்ட் தாமசு (St. Thomas), அக்வினசு (Aquinas), மார்சிலியோ, தாந்தே (Dante), மாக்கிய வெல்லி முதலியோராவர். கி.பி.15-முதல் 20-ஆம் நூற்றாண்டு வரை இக்கல்வித் துறைக்குப் பல ஒப்பரிய கோட்பாடுகளை அளித்தோர் – சீன் போடின் (Jean Bodin) (இறைமை அதிகாரக் கோட்பாடு), இயூகோ குரோசியசு (Huge Grotius) (சர்வதேசச் சட்டம் பற்றிய கோட்பாடு), தாமசு ஆப்சு (Thomas Hobbes) (அரசாங்கக் கோட்பாடு), சான்லாக் (John Locke) (இயற்கை உரிமைகள்), (அரசியலமைப்புக்கு உட்பட்ட அரசாங்கம்), சீன் சாக் ரூசோ (Jean Jacques Rossueau) (மக்கள் இறைமை அதிகாரக் கோட்பாடும், குடியாட்சிக் கோட்பாடும்). சான் இசுடூவர்ட்டு மில் (John Stuart Mill) (பிரதிநிதித்துவ அரசாங்கம், சுதந்திரம்), பெந்தம் (Bentham) (பயன்வழிக் கோட்பாடு), மாண்ட்டசுக்யூ (சட்டம், அதி- காரப் பிரிவினைக் கோட்பாடு, ஏகல் (Hegel), டி.எச். கிரீன் (T.H. Green), (அரசு பற்றிய இலட்சியக் கோட்பாடு), காரல் மார்க்சு (Karl Marx) (பொதுவுடைமைக் கோட்பாடு), இமானுவல் கான்ட் (Immanual Kant) (அரசின் பணிகள்) முதலியோராவர். இருபதாம் நூற்றாண்டில் நுட்பமாகப் பல ஆய்வுகள் செய்த அரசியலாசிரியர்களும், அவர்கள் அளித்துள்ள புதிய செய்திகளும் வருமாறு: வால்ட்டர் பேசட் (Walter Pagehot) குடியாட்சி அரசாங்கம்; பென்ட்லி, லோவல் (Bentley, Lovell) அரசியல் குழுக்கள்; மெரியம் (Merriam) அரசியலதிகாரம்; கேய் (Key), இலின்ட்சே (Lindsay) அரசியல் கட்சிகள்; மிக்கேல்சு (Michaels), மோசுக்கா (Mosca), பரேட்டோ (Paretto), இரைசு (Rice), அரசியலில் உயர்ந்தோர் குழாம் பற்றிய கோட்பாடு (Elite Theory in Politics); கிரகாம் வாலசு; பன்முகக் கோட்பாடு; இலிப்மன்; பொது மக்கள் கருத்து (Public Opinion).
நெடுங்காலமாக அரசியல் என்பதற்குப் பொருத்தமான பாடச் செய்தித் திரள் (Subject matter) அமையாத காரணத்தால் அஃதொரு தனித்த, ஆராய்ச்சிக்குரிய பாடத் துறையாகக் (Autonomous discipline) கருதப்படாமலிருந்தது. ஆனால், இப்போது (இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர்) இந்நிலை மாறி, கோட்பாடுகளடங்கிய பாடத் துறையாகத் திட்டவட்டமான வடிவம் கொடுக்கப்பட்டுப் பல்வேறு பாடத் துறைகளையும் தழுவியதாக அமைந்துள்ளது. அரசியல் நிறுவனங்கள் எல்லாம் மக்கள் செயல்களின் வெளித் தோற்றங்களே அல்லது வெளிப்பாடுகளே என்று இக்கால அரசியற்கலை கருதுவதனால் அரசியற் கலை என்பது மனிதருடைய தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தைக் காட்டும் ஒரு நடக்கை இயல் (Behavioural Science) ஆசு விளங்குகிறது.பா.சூ
துணை நூல்
Appadorai, A., “A Substance of Politics”, Oxford University Press, 1972.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 687)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wamxyn57/
தமிழ்“அரசியல் கலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wamxyn57/APA
Oliyon Research. (2026). அரசியல் கலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wamxyn57/MLA
"அரசியல் கலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wamxyn57/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment