உண்டு வில்கெல்ம்
uṇṭu vilkelm
அறிவியல் சார் உளவியல் என்ற புதிய துறை உருவாவதற்குச் சிறந்த பங்காற்றியவர் உண்டு வில்கெல்ம் (Wundt, Wilhelm) என்னும் அறிஞர் ஆவார்.
அறிவியல் சார் உளவியல் என்ற புதிய துறை உருவாவதற்குச் சிறந்த பங்காற்றியவர் உண்டு வில்கெல்ம் (Wundt, Wilhelm) என்னும் அறிஞர் ஆவார். இவர் சோதனைசார் உளவியலுக்கு அடிகோலியவர் என்றும் சோதனைசார் உளவியலின் தந்தை என்றும் குறிப்பிடப்படுவர். மேலும், இவர் முதன் முதலில் உளவியலுக்காகச் சோதனைக்கூடத்தை ஏற்படுத்தியவர் என்பதாலும் உளவியல் துறையின் சிறப்பு மிக்கவராகக் கருதப்படுகிறார்.
உண்டு வில்கெல்ம் மேற்குச் செருமனியிலுள்ள நெக்காரோ (Neekarau) என்னுமிடத்தில் கி.பி. 1832–ஆம் ஆண்டு ஆகசுட்டுத் திங்களில் பிறந்தார். இவர் தம் படிப்பை ஐடல்பர்கு என்னும் பல்கலைக் கழகத்தில் முடித்தார். இப்பல்கலைக் கழகத்திலேயே பதினேழு ஆண்டுகள் உடலியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பிறகு கி.பி. 1874–ஆம் ஆண்டில் இலெப்பப்சிக்கு என்ற பல்கலைக் கழகத்தில் தத்துவத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றினார். இப்பல்கலைக் கழகத்தில்தான் கி.பி. 1879–ஆம் ஆண்டில் முதல் சோதனைக் கூடத்தைச் சோதனை உளவியலுக்காகத் (Experimental Psychology) திறந்து வைத்தார். இச்சோதனைக் கூடம் உளவியல் துறை வரலாற்றில் குறிப்பிடத்தக்கதொரு நிகழ்ச்சியாகும். இச்சோதனைக் கூடம் பல நாடுகளிலிருந்த மாணவர்களை ஈர்த்தது. இதுவே உளவியல் துறையைத் தத்துவத் துறையிலிருந்து பிரித்துத் தனித்தியங்கும் ஒரு புதிய துறையாக உருப்பெற வழி செய்தது.
இவரது முதல் ஆய்வறிக்கை ‘சிறு நீரில் சோடியயம் குளோரைடு’ என்பதாகும். ‘இயற்பியல்சார் தத்துவ ஆய்வு’ (Philosophische) என்ற திங்களிதழை கி.பி. 1881–ஆம் ஆண்டில் தொடங்கினார். இவ்விதழின் மூலம் தம் ஆய்வுகளையும் சோதனைக் கூடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட செய்திகளையும் வெளியிட்டார். ‘நாட்டுப்புற உளவியல்’ (Folk Psychology) என்ற தலைப்பில் பத்துத் தொகுதிகளை வெளியிட்டார்.
பெரும்பாலோர் உண்டு வில்கெல்மை ஓர் உளவியலறிஞர் என்று மட்டும் கருதினர். காரணம் இத்துறையின் மூலமாகவே இவர் பலருக்கும் தெரிந்தவரானார். ஆனால், இவர் தம்மை ஒரு தத்துவ அறிஞர் என்றும் பண்பாட்டு வரலாற்றாளர் என்றும் கருதினார். இவர் கி.பி. 1880–ஆம் ஆண்டிலிருந்து தாம் இறக்கும் வரை பல நூல்களை எழுதிக் கொண்டிருந்தார். தம் அளவையியல் (Logic) என்ற நூலை விரிவுபடுத்தி மூன்று தொகுதிகளாகப் பதிப்பித்தார். இவருடைய பெரிய படைப்புகளுள் இது சிறப்பானது. இதில் உளவியல்சார் சிந்தனை போன்ற கருத்துகள் கூறப்பட்டுள்ளன. அறநெறியியல் (Ethics), தத்துவ அமைப்பு முறை (System des philosophie) போன்ற பல நூல்களையும் இவர் எழுதினார். தம் ‘நாட்டுப்புற உளவியல்’ என்ற நூலில் மொழி, புனைகதைகள், சமயம், கலை, சமூகம், சட்டம், பண்பாடு, வரலாறு போன்ற பல கருத்துகளை விளக்கியுள்ளார். மனிதப் பண்பாட்டின் வரலாற்றை ஆய்வு செய்த இவர், மனிதனின் சிந்தனை இயல்பையும் உளச் செயல்களையும் அக நோக்கு முறையின் மூலம் சோதனைக் கூடத்திற்குள் ஆய்வு செய்வது இயலாது என்பதைக் கண்டார். ஆகவே, தம் ‘உடலியல்சார் உளவியல் கோட்பாடு’ என்ற நூலில் சிந்தனையைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
அமைப்பியல் கோட்பாடு (Structuralism) என்ற உளவியல் கோட்பாட்டை உருவாக்குவதற்குக் காரணமானவர் வில்கெல்ம் ஆவர். உளவியல் என்பது அனுபவத்தைப் பற்றி விளக்குவதாகும் என்று இவர் கருதினார்; அதாவது, தம் நனவுநிலை உளத்துடன் தொடர்புடைய அனுபவத்தைப் பற்றி விளக்குவதென்று கருதினார்; குறிப்பாக, மனத்தின் அமைப்புப் பற்றி விளக்குவதென்று கருதினார்; எந்த ஒரு சிக்கலையும் அறிய முற்படும்பொழுது அதைப் பல்வேறு பகுதிகளாகப் பிரித்து அப்பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று நினைத்தார்.
வில்கெல்மின் சோதனைகள் பெரும்பாலும் புலன் சார்ந்தனவாகவும் (Sensory) புலன்காட்சி இயங்கும் தன்மை பற்றியனவாகவும் இருந்தன. இதன் விளைவாகப் புலன் உணர்வுகள் (Sensations), உருவம் (Images), உணர்வுகள் (Feelings) ஆகிய மூன்று அடிப்படைக் கூறுகள் உள்ளன என்பதைக் கண்டறிந்தார்.
இவர் தம் சோதனைக் கூடத்தில் குறிப்பாக இரு குறிக்கோள்களின் அடிப்படையில் ஆய்வுசெய்தார். ஒன்று, புலன் உணர்வு (Sensations), புலன் காட்சி (Perception) ஆகியவை பற்றியதாகும். இதில் ஐம்புலன்கள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாய்விற்கு பெக்னரின் (Fechner) உள இயற்பியல் முறைகள் பின்பற்றப்பட்டன. மற்றொன்று, மறி வினையாற்றும் நேரத்தை அறிவதாகும். இதை இவர் கழித்தல் முறை (Subtractive Procedure) என்று குறிப்பிட்டார். இதன் மூலம் இவர் புலன் உணர்விற்கு 0.1 நொடிகள் தேவைப்படுகின்றன என்ற முடிவிற்கு வந்தார். இதே முறையில் அறிதல், இயைதல் போன்ற (Association), பிரித்தறிதல் ஆகியவை பலவற்றிற்கும் உரிய கால அளவைக் கண்டறிந்தார்.
உளவியல் வரலாற்றில் சிறப்பானவராகக் கருதப்படும் இவருடைய கருத்துகள் பலவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டு வந்தாலும் புதிய உளவியல் துறையின் அடிப்படைக்கு வித்திட்டவர் இவரே என்பது குறிப்பிடத் தக்கதாகும். வே.சு.
துணை நூல்கள்
Morris Charles, G., Psychology: An introduction, Prentice Hall, Englewood Cliffs, New Jersey, 1979.
Bourne, Lyle E., Ekstrand, Bruce K., Psychology, CBS College Publishing, New York, 1982.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 838)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w9tysdbf/
தமிழ்“உண்டு வில்கெல்ம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/w9tysdbf/APA
Oliyon Research. (2026). உண்டு வில்கெல்ம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w9tysdbf/MLA
"உண்டு வில்கெல்ம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/w9tysdbf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment