இது ஒரு காந்தப் பொருளின் காந்தமாக்கலுக்கும், அதன் கோண உந்தத்திற்கும் இடையில் உள்ள தொடர்பால் ஏற்படும் விளைவு அகும். காந்தப் பொருள்களின் சுழல் காந்தத் தகவை அளப்பதற்குச் சுழல் காந்த விளைவு (gyromagnetic effect) பயன் படுகிறது. இவ்விளைவை ஓர் எளிய ஆய்வு மூலம் காணலாம். அந்த ஆய்வில், தன்னிச்சையாகத் தொங்க விடப்பட்ட ஒரு காந்தப் பொருளின் மேல் ஒரு காந்தப் புலம் செலுத்தப்படுகிறது. காந்தப் புலத்தின் திசையை மாற்றினால், பொருளின் காந்தமாக்கலின் திசையும் மாற வேண்டும். இவ்வாறு நிகழ வேண்டுமானால், அணுக்களின் கோண உந்தமும் மாற வேண்டும். அமைப்பின் மேல், வெளி விசையிரட்டைகள் செயல்படவில்லையாதலால், அதன் மொத்தக் கோண உந்தம் மாறக் கூடாது. இவ்வாறு, பொருளில் ஓர் அளவிடக் கூடிய சுழற்சி ஏற்படும். இம்முறையில் சுழல் காந்தத் தகவை அளக்கலாம். இதற்கு ஐன்ஸ்டீன்-டி ஹாஸ் (Einstein-de Haas) முறை, பார்னட் (Barnett) முறை ஆகியவை பொதுவாகப் பயன்படுகின்றன. ஐன்ஸ்டீன் டி ஹாஸ் முறை. இம்முறை வழக்கமாக அயக் காந்தப் பொருள்களின் சுழல் காந்தத் தகவைக் கண்டு பிடிக்கப் பயன்படுகிறது. உருளை வடிவம் கொண்ட ஓர் அயக் காந்தப் பொருளை ஒரு முனையில் முறுக்க இழையைக் கட்டித் தொங்க விடுவதாகக் கொள்ளலாம். அப்போது, அந்த அமைப்பு ஒரு முறுக்க ஊசலாக அமையும். உருளையைச் சுற்றி அமைந்த கம்பிச் சுருளில், மின்னோட்டத்தைச் செலுத்துவதன் மூலம், உருளையின் அச்சுக்கு இணையான திசையில் காந்தப் புலம் செலுத்தப்படுகிறது. அயக் காந்தப் பொருள் இதன் காரணமாகக் காந்தப் புலத்தின் திசையில் காந்தமாக்கப்படும். காந்தப் புலத்தின் திசையைத் திடீரென நேர் எதிராக மாற்றினால், உருளையில் உள்ள காந்தமாக்கலின் திசையும் நேர் எதிராக மாறும். கூடவே அணுக்களின் கோண உந்தத்தில் ஏற்படுகிற மாற்றத்தை உருளையில் தோன்றும் ஒரு நிறை சுழற்சி சமன் செய்யும், இந்த நிறை சுழற்சியை, முறுக்க ஊசலின் இடப் பெயர்ச்சியின் வீச்சை அளந்து கணக்கிட முடியும். ஒரு காந்த அளவியின் உதவியால், காந்தமாக்கலில் ஏற்பட்ட மாற்றம் கண்டு பிடிக்கப்படுகிறது. காந்தமாக்கலில் உண்டான மாற்றத்திற்கும், கோண உந்தத்தில் உண்டான மாற்றத்திற்கும் இடையிலுள்ள தகவு காந்த இயக்கவியல் தகவு ஆகும். அது சுழல் காந்தத் தகவின் தலை கீழ் மதிப்புக்குச் சமம். பார்னட் முறை. இம்முறையில் ஒரு கம்பிச் சுருளினால் சூழப்பட்ட ஓர் அயக் காந்தத் .தண்டு அதன் அச்சைச் சுற்றி, விரைவாகச் சுழற்றப்படுகிறது. அதிலுள்ள அணுக்கள் சுழற்சித் திசையிலான கோண உந்தத்தைப் பெறுகின்றன. தண்டின் சுழற்சியைத் திடீரென நிறுத்தி, அப்போது அதைச் சுற்றியுள்ள கம்பிச் சுருளில் தூண்டப்படுகிற மின்னழுத்தத்தை அளப்பதன் மூலம், தண்டின் சுழற்சியினால் ஏற்பட்ட காந்தமாக்கலைக் கணக்கிடலாம். மின்னழுத்தத்தை அளப்பதற்காகக் கம்பிச் சுருள் ஒரு பாய அளவிச் (flux meter) சுற்றில் இணைக்கப்பட்டிருக்கும். இப்போது, சுழற்சியினால் சுழற்சிச் திசையின் தண்டில் காந்தமாக்குவதில் ஏற்பட்ட அதே அதிகரிப்பை, அதே திசையில் ஒரு காந்தப் புலத்தைச் செலுத்தியும், உண்டாக்க முடியும். தண்டு சுழன்று கொண்டிருந்த போது, L என்னும் ஒரு கோண உந்தம் சுழற்சி அச்சுக்கு θ கோணத்தில் சாய்ந்திருந்தால், அது LωSinθ, θ என்னும் விசையிரட்டையை உணரும். இதில் ω என்பது சுழற்சிக் கோணத் திசை வேகம். இந்த விசையிரட்டை, கோண உந்தத்தைச் சுழற்சி அச்சுக்கு இணையாகத் திருப்பி விட முயற்சி செய்யும். காந்தப் புலம் செலுத்தப்படுகிற போது, H என்னும் காந்தப் புலம், அதே திசையில் கோண உந்தத்தின் மேல் {[sfrac|1|υLHSinθ என்ற விசையிரட்டையைச் செலுத்தும். இங்கு 1/υ என்பது காந்த இயக்கவியல் தகவு. L/υ என்பது காந்தத் திருப்புத் திறன். இந்த இரண்டு நிகழ்வுகளிலும் உண்டாகும் காந்தமாக்கல் சமமாக இருந்தால், விசையிரட்டைகளும் சமமாக இருக்கும். எனவே, LωSinθ = LHSinθ அல்லது υ = H/ω இவ்வாறு காந்த இயக்கவியல் தகவு அளக்கப்படுகிறது. இதே போன்ற ஓர் ஆய்வின் மூலம், பார்னட் 1914இல் ஓர் அயக் காந்தப்' பொருளின் காந்த இயக்கவியல் தகவு, e/mc என்னும் மின், நிறை ஆகியவற்றுக்கு இடையிலான தகவுக்கு நெருக்கமான மதிப்பைக் கொண்டுள்ளது என்று கண்டுபிடித்தார். —கே, என். ராமச்சந்திரன்