கி.பி. 1868–ஆம் ஆண்டுச் செப்டம்பர்த் திங்கள் பதினைந்தாம் நாள் பிறந்தார். தந்தையார் அரசப்பப்பிள்ளை; தாயார் பார்வதியம்மையார். சைவ வேளாளர், சோழவந்தான் என்னும் ஊரினர். இவர் துணைவியார் பெயர் காளியம்மை. இவர்தம் தொடக்கக் கல்வியினை அழகர் சாமி தேசிகரிடமும் தருக்கம் சோதிடம், இலக்கண இலக்கியக் கல்வி ஆகியவற்றைச் சிவப்பிரகாச சுவாமிகளிடமும் கற்றார். மதுரை, சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் கி.பி. 1890–இல் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். கி.பி. 1902 முதல் 1906 வரை பாண்டித்துரைத் தேவர் நிறுவிய தமிழ்ச் சங்கத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். வித்துவரத்தினம், தமிழமிர்த சஞ்சீவி, தொல்காப்பியத் தொண்டன் என்னும் சிறப்புப் பெயர்- களைக் கொண்ட இவர் செந்தமிழ், விவேகபானு, ஞானசாகரம், ஞானசித்தி, விவேகோதயம் என்னும் ஏடுகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் சொற்பொழிவு, நூலாய்வு, உரைகள், மறுப்புகள் ஆகிவற்றில் ஆர்வமும் முயற்சியும் காட்டினார். அரசஞ் சண்முகனார் டாக்டர் உ.வே. சாமிநாதையர், மறைமலையடிகள், பாண்டித்துரைத் தேவர், மு.ரா. அருணாசலக் கவிராயர், ரா. இராகவையங்கார், மு. இராகவையங்கார், பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார், ந.மு. வேங்கடசாமி நாட்டார், மு.ரா. கந்தசாமிக் கவிராயர் ஆகிய பெருமக்களுடன் நெருங்கிய நட்பும் தொடர்பும் கொண்டு தமிழ்த் தொண்டாற்றினார். 47 ஆண்டுகள் வாழ்ந்த இவர், 1915 சனவரி 11–ஆம் நாள் மறைந்தார். அரசஞ்சண்முகனார் படைப்புகளாவன: முப்பது கொச்சகக் கலிப்பாவிலான சிதம்பரவிநாயகர் மாலை, நோய்தீரும் வகையில் சொக்கலிங்கப் பெருமான்மேல் பாடிய பத்துப் பதிகங்கள், மாலை மாற்று மாலை, ஏகபாத நூற்றந்தாதி, நவமணிக் காரிகை நிகண்டு, தொல்காப்பியப் பாயிர விருத்தி, தொல்காப்பிய விருத்தி, இன்னிசையிருநூறு, வள்ளுவர் நேரிசை, பஞ்ச தந்திர வெண்பா, மதுரைச் சிலேடை நுண்பொருட் கோவை, திருக்குறளாராய்ச்சி, திருக்குறட் சண்முக விருந்தி, முதற்குறள் விருத்தி, மீனாட்சியம்மை சந்தத் திருவடி மாலை, சிதம்பர விநாயகர் மாலை, இசை நுணுக்கச் சிற்றுரை ஆகியனவாகும்.நா.ஜெ.